சிலர் தான் வணங்கும் தெய்வம் தவிர பிற தெய்வத்தை  கண்ணாலும் பார்க்க மாட்டார்கள்  இந்த  கதையில்  வரும்  நரஹரி அப்படிப்பட்ட  ஒரு வீர  சைவன்.    நரஹரி ரொம்ப கெட்டிக்கார பொற்கொல்லன்   மிகச்சிறந்த நகைகளை  தங்கத்தில் வடிப்பவன்.   நாணயமானவன் என்று   பேர் பெற்றவன்

பண்டரிபுரத்திலேயே இருந்தும்  விட்டலன் கோவில் கோபுரத்தைக்  கூட  நிமிர்ந்து பார்க்க மாட்டான்.   கோவிலுக்கு  அருகே  அவனுக்கு  ஏதாவது வேலை   இருந்தாலும் கோவிலுக்கு  பின் பக்கமாக சுற்றிக்கொண்டு தான் செல்வான்!   விடியற்காலையில்   பீமாரதி  நதியில்   குளித்துவிட்டு மல்லிகார்ஜுன  சுவாமியை  மனதார வழிபாட்டு  24  மணிநேரமும் சிவ சிவ  என்று  உச்சரித்துக்கொண்டே தன்  காரியங்களை பார்ப்பான். 

எவ்வளவு  அழகான பெண்ணாக   இருந்தாலும்   அவளை ஏறிட்டும்  பார்க்காமல் ஒரு   குழந்தை  எப்படி தன்   தாயிடம்  மட்டும் செல்லுமோ  அப்படியே நரஹரி மல்லிகார்ஜுனனை  மட்டுமே  ஏற்றுக்கொண்டு  சிறந்த ஒரு சிவபக்தனாக விளங்கினான்.

அதற்காக  அவன்   பாண்டுரங்கனை  தூஷித்தோ, விட்டல  பக்தர்களின்  மனம் புண்   பட எதாவது  பேசியோ,   நடந்தானா  என்றால், பாவம்,  அவன்  மீது  அபாண்டமாக ஒன்றும்  சொல்லக்கூடாது.   அவனை   எல்லோரும்  மதிக்கும்படியாகவே வாழ்ந்து வந்தான். 

பக்கத்து ஊரில் ஒரு   பணக்கார  வியாபாரி.  அவன்  மகளுக்கு  பல  முயற்சிகளுக்கு  பிறகு ஒரு   நல்ல  இடத்தில் சம்பந்தம் கிடைத்து.  வியாபாரிக்கு  மட்டற்ற மகிழ்ச்சி இருக்குமல்லவா?  அவன் ஒரு  விட்டல பக்தன்.   "விட்டலா,   உன்   அருளால் தான்  என்  பெண்  ஒரு  நல்ல  இடத்தில் மருமகளானாள்.

உன்  கருணைக்கு நான்  எப்படி கைம்மாறு செய்வேன்  என்று  அவன்  வேண்டிக்கொண்டிருக்கும்போது  விட்டலன்  சந்நிதியில்  அவன்   அருகில்  அப்போது  நின்றுகொண்டிருந்த ஒரு   முதிய பக்தர் 
"அப்பா,  நீ யார், எங்கிருக்கிறாய்?"  என்று கேட்டார்
"சுவாமி,  நான் பக்கத்து ஊர். 

அரிசி  பருப்பு  மண்டி வியாபாரம்"
"விட்டலன்  இடுப்பில் ஒரு  தங்க  ஒட்டியாணம்  செய்து  போடேன்   கண்ணுக்கு ஜக  ஜோதியாக இருக்கும்  பக்தர்கள் கண்டு மகிழ்வார்களே"

"ஆஹா,   இது   விட்டலனே  என்னிடம் நேரில்  வந்து  கட்டளை இட்டது போல்  படுகிறது.   உடனே அவ்வாறே   செய்கிறேன்"  என்றான்.   வீட்டில் மனைவியோடு கலந்து பேசினான்   பணத்தை திரட்டினான்.

முடிந்த  அளவு  தேவையான தங்கம்  வைரம், மரகதம்  முத்து  கோமேதகம்  பவழம் என்று   நிறைய வித  விதமான  ஆபரண கற்களும் வாங்கினான்.   யார்   யாரையோ விசாரித்தான்   பலர் "பண்டரிபுரம்   நரஹரியிடம் போ. சுத்தமானவன்  நாணயமாக  சரச  விலையில் செய்து கொடுப்பான்"  என்றார்கள்.    நரஹரி  வீட்டை விசாரித்து   அறிந்துகொண்டு வந்து கதவை தட்டினான் .

நரஹரி  சிவபூஜையில்  இருந்ததால்  காத்திருந்து பிறகு   பேச்சு தொடர்ந்தது.
"வாருங்கள்,  பூஜையில் இருந்ததால்   பாதியில் விட்டு விட்டு வரமுடியவில்லை. யார் நீங்கள்? என்ன வேண்டும்?"
"நரஹரி,  நான்  பக்கத்து ஊரில் வியாபாரம் செய்கிறவன். எனக்கு உங்களிடம் ஒரு காரியம்  ஆக வேண்டும்?"
"ஆஹா.  மல்லிகார்ஜுனன்  அருளால்  முடிந்தால் செய்கிறேன்."

"இந்த  பண்டரிபுரத்தில்  விடோபாவுக்கு ஒரு  தங்க  ஒட்டியாணம்  செய்து கொடுக்க வேண்டும்?"
" முடியாதே சுவாமி.  நான் ஹரி பக்தன்  அல்ல. மேலும் சிவன் கோவில்  அன்றி எந்த கோவிலுக்கும்     நான் செல்வதில்லையே "
"கேள்விப்பட்டேன்.  அதற்கு ஒரு வழியும் செய்து தான் வந்தேன். 

பாண்டுரங்கன் இடுப்பு  சுற்றளவு வாங்கி வந்திருக்குறேன்.   நீங்கள்  செய்து  கொடுத்தால்  அதை எடுத்து  சென்று கோவில்  அளிக்கிறேன்"
"அப்படியென்றால் ஒரு ஆக்ஷேபணையுமில்லை .

  இன்னும் ஒரு வாரத்தில் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்"
"இப்படியும் ஒருவனா?   பண்டரிபுரத்திலேயே இருந்தும்  கூட  விட்டலனை நேரில்  பார்க்காமல் ஒருவனா?  நமக்கென்ன?   நல்லவனாக இருக்கிறான்  வேலையில்  கெட்டிக்காரன் என்று சொல்கிறார்களே!"
ஒருவாரத்தில்  அருமையான ஒட்டியாணம் ரெடியானது
"இதை எடுத்துக்கொண்டு  சென்று  சரியாக  இருக்கிறதா என்று  போட்டு  பாருங்கள்.  நீங்கள்  கொடுத்த  அளவுக்கே செய்திருக்கிறேன்."

ரொம்ப  சந்தோஷத்தோடு  கற்கள்  மின்னும்  தங்க ஒட்டியாணத்தை  எடுத்துக்கொண்டு சந்திரபாகா நதியில் குளித்துவிட்டு  பூஜா  சாமான்களுடன்  கோவிலுக்கு சென்று   அர்ச்சகரிடம்  கொடுத்து  விட்டலனுக்கு இடுப்பில் பூட்டினான் வியாபாரி. 

பாதி இடுப்புக்கு கூட  ஒட்டியாணம் வரவில்லை!  அளவு எப்படி தப்பாக  செய்தான் நரஹரி?    அர்ச்சகரை  மீண்டும் அளவு எடுக்க சொன்னான். அளவு   சரியாகவே இருந்தது  அனால் ஒட்டியாணம் இடுப்பு  அளவுக்கு சுற்றிவரவில்லையே. 

மீண்டும்  நரஹரியிடம் வந்தான்   விஷயம்  அறிந்த நரஹரி   அவன்  புதிதாக கொடுத்த  அளவுக்கு   ஒட்டியாணத்தை நீட்டி  தந்தான்.  மீண்டும்  விட்டலன் இடுப்பில்   அணிவித்தபோது   இடுப்பில்  அது பெரியதாக   இருந்தது.  தொள தொள  வென்று நழுவியது   மீண்டும்  அளவெடுத்து நரஹரியிடம்  வந்தது.

  மூன்று  முறை  இதுபோல் ஒட்டியாணம்  பயணம் செய்தது
நான்  என்ன  அபசாரம் செய்தேன்?   ஏன்  என்னுடைய  காணிக்கையை  விட்டலன் ஏற்க வில்லை.  அளவு  சரியாக  இருந்தும்  ஏதேனும்  குறை தென்படுகிறதே. மனதில்  விசனத்தோடு  கண்களில்  நீரோடு நரஹரியிடமே ஓடினான்  வியாபாரி 

விஷயத்தை  அமைதியாக  கவலையோடு  கேட்டான் நரஹரி.  நீங்களே  நேரில்  வந்து  அளவெடுத்து  பூட்டினால்  தான்  ஒட்டியாணம் விட்டலன்  மேல் ஏறும் போல்   இருக்கிறது"
" சுவாமி நான்   ஏற்கனவே  சொல்லியிருக்கிறேனே.

  சிவனைத்தவிர  என்  கால் எந்த கோவிலுக்கும் செல்லாது  .கண்   எந்த தெய்வத்தையும் பார்க்காது"
பேச்சு தொடர்ந்தது   கடைசியில்  நரஹரி   கண்களை கட்டிக்கொண்டு  விட்டலன் ஆலயம்  சன்று  அவன் இடுப்பை  தானே அளவெடுத்து  ஒட்டியாணம்  சரி  செய்ய  ஒப்புக்கொண்டான். 

கை  நீட்டி  காசு  வாங்கியபிறகு  செய்யும்  வேலை  சுத்தமாக  இருக்க அவன்  இதற்கு ஒப்புக்கொள்ள நேரிட்டது
கண்ணைக்கட்டிக்கொண்டு அழைத்து  வரப்பட்ட  நரஹரியை பார்த்து  எல்லோரும்  சிரித்தார்கள். 

அவன்  லட்சியம் பண்ணவில்லை   உள்ளே சென்றான்   விட்டலன்  முன்னே நிற்க வைக்கப்பட்டான். அளவு   நூலை  கையில் எடுத்துக்கொண்டான். விட்டலன் உருவத்தை  தடவிப்பார்த்தான்.   இடுப்பில் மெத்து   மெத்தென்று  தோல் ச்பரிசப்பட்டது.   நன்றாக தடவினான்.   துணியில்லை தோல்  தான். 

இடுப்பை   சுற்றி தடவும்போது   நான்கு  கைகள்   இருப்பது  உணர்ந்தான்.   கவனத்தோடு தடவி  என்ன   என்று சோதித்தான்  ஒரு கையில்   டமருகம் ஒரு கையில் அக்னி,  ஒரு கையில்   சூலம் இது என்ன அதிசயமாக இருக்கிறதே?.   மீண்டும்  இடையில் கைவைத்தான்.  நிச்சயம் இது   புலித்தோல் தான். 

அவனுக்கு  வியர்த்துக்  கொட்டியது.  "என்   மல்லிகார்ஜுனனா இது. விட்ட லனிடம் அல்லவே அழைத்து  போகப்பட்டேன்?".   சந்தேகத்துக்கு  கையை  மேலே  கொண்டுபோனான்  நரஹரி.    கழுத்தில் ஒரு   பாம்பின்  உடல்  ச்பரிசமானது   இன்னும் மேலே கை  சென்றது தலை  முடி  ஜடை.   அதை தடவினான்.

  இன்னும்  மேலே.   இது  என்ன  வளைந்து " ஓ ஓ   பிறை சந்திரனா?   இது  என்ன  மீண்டும்  ஒரு  பாம்பு.  உத்ராட்க்ஷ மாலை. மேலே  கை   தலையை  சோதிக்கும்போது அவன்  முகம் விட்டலன்  அருகே இருந்ததல்லவா?.   கம்மென்று   பன்னீர் கலந்த  விபூதி  வாசனை மூக்கைத் துளைத்தது.   நரஹரிக்கு  பரிச்சயமான விஷயமாச்சே!.

  "ஓம் நமசிவாய   என்று   சொல்லிக்கொண்டே  கண்ணைக்கட்டியிருந்த துணியை   அவிழ்த்தான் நரஹரி.   ஆவலாக நோக்கின  அவன்  கண் முன்னே   சிரித்துக்கொண்டே இடுப்பில்  கை  கட்டி விட்டலன்  துளசி  மாலையோடு நின்று கொண்டிருந்தான்.

என்ன  இது  வேடிக்கை?  நான்  தான்   ஏதோ  எண்ணத்தில் சிவனை   எண்ணிக்கொண்டே அளவு எடுக்க வந்தேனா?     விட்டலனை  பார்த்த தன்   கண்களை மீண்டும் மூடிக்கொண்டான். கை அளவெடுக்க  ஆரம்பித்தது.  மீண்டு   அதே  பழைய அனுபவம்.

கண்களை  திறந்தால்  விட்டலன்.  மூடினால்  மல்லிகார்ஜுனன்.  " என்  பரமேஸ்வரா  இது  என்ன சோதனை  எனக்கு? "   பரமேஸ்வரன்  குரல் நரஹரிக்கு  மட்டும் கேட்டது "நானே விட்டலன்".  

கண்ணைக்கட்டிய துணியை   அவிழ்த்து  எறிந்தான்  சாஷ்டாங்கமாக  கீழே   விழுந்த நரஹரி

" ஹே,   விட்டலா!,  என்னை மன்னித்து விடு  என் பரமேஸ்வரனும்  நீயே, சகல தெய்வங்கலாக நீயே பரிணமிக்கிறாய் என உணர்த்தேன்  என்  அறியாமையில்  செய்த  தவறை மன்னித்து விடு திருந்தி  விட்டேன்" என்று  நெஞ்சம் உருகினான்   ஒட்டியாணம்  அளவு   கச்சிதமாக வந்தது.  அவன்   அன்போடு செய்த  ஒட்டியாணம்   விட்டலனால்  ஏற்கப்பட்டது

விட்டல விட்டல