ஏழுமலையான் கதை பகுதி 10 பகுதி-11 பகுதி 12

திருமலை ஏழுமலையான் வரலாறு தினமும் வெளியிடும் வரிசையில் இன்று

பகுதி 10,பகுதி 11 பகுதி 12 ஆகியவற்றை பதிவு செய்துள்ளோம். பகுதி 13, 14 ,15 பகுதி நாளை  ஏழுமலையான் திருவருளால் வளரும் மலரும் என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கின்றோம் .

திருப்பதி ஏழுமலையான் திருவடிகளே சரணம்

ஓம் நமோ வெங்கடேசாய ஓம் நமோ நாராயணாய

திருப்பதி மலைவாழும் வெங்கடேசா -திருமகள்

மனம் நாடும் சீனிவாசா ஏழுமலைவாசா

திருப்பதி மலைவாழும் வெங்கடேசா

அன்பென்னும் அகல் விளக்கை ஏற்றி வைத்தேன்

அதில் ஆசையென்னும் நெய்யை ஊற்றி வைத்தேன்

என் மனம் உருகிடவே பாடி வந்தேன்

உன் ஏழு மலை ஏறி ஓடி வந்தேன்

திருப்பதி மலைவாழும் வெங்கடேசா -திருமகள்

மனம் நாடும் சீனிவாசா ஏழுமலைவாசா

திருப்பதி மலைவாழும் வெங்கடேசா

ஏழுமலையான் பகுதி-10

சுவாமி! நான் கலியுகத்தில் மக்கள் படும் கஷ்டங்களை  துடைப்பதற்காக பூமிக்கு வந்தவன். நானும் நீங்களும் ஒன்றே. நாராயணனான நாம், மக்களின் நன்மை கருதி, பல்வேறு அவதாரங்கள் எடுத்தோம். தாங்கள் அவதாரம் முந்தைய யுகங்களைச் சார்ந்தது. அன்று மக்களிடம் ஒழுக்கம் இருந்தது. கலியுகத்தில், பாவம் செய்வோரே அதிகமாக இருப்பர். ஒழுக்கமாக இருக்க வேண்டும் என நினைப்போர் கூட சந்தர்ப்ப சூழ்நிலையால் பாவம் செய்வர். மகான்கள் அவர்களுக்கு நல்வழி காட்டினாலும் ஏளனமாகவே பேசுவர். இறைவழிபாடு பற்றி பேசுபவர்களை பைத்தியக்காரர்கள் போல் பார்ப்பார்கள். எனவே, அவர்களது பாவங்களைக் கழுவுவது எனது பணி. அதற்காகவே, நான் இங்கு அவதாரம் எடுத்து வந்துள்ளேன். இந்த அளப்பரிய பணியைச் செய்வதால், தாங்கள் இலவசமாகவே எனக்கு இடம் தந்து உதவ வேண்டும். அதற்குப்பதிலாக என்னை வணங்க வருவோர், தங்களை முதலில் வணங்கியபிறகே என்னை வணங்க வேண்டும் என்ற விதிமுறையை உருவாக்குகிறேன், என்றார்.வராஹசுவாமியும் லோகநன்மை கருதி இதற்கு சம்மதித்தார். பின்னர் சீனிவாசன், வராஹசுவாமி தங்கிய இடத்தின் அருகிலேயே கோயில் கொண்டார். இதனிடையே சீனிவாசன்திருமலையில் குடிகொண்டிருப்பதை அறிந்த லட்சுமி பிராட்டியார் அவரை அடைய வேண்டிய ஏற்பாடுகளை செய்தார். பூமியில் மானிட அவதாரம் எடுத்துள்ள சுவாமியை தானும் மானிட வடிவெடுத்தே அடைய முடியும் என்பதால் தாயாரும் அவ்வாறான வடிவமே எடுக்க முடிவெடுத்தாள். அவள் அவ்வாறு மானிடப்பிறப் பெடுக்க காரணமும் இருந்தது. ஒரு காலத்தில் பத்மமகாராஜன் என்ற மன்னன் தன் நாட்டை ஆண்டு கொண்டிருந்த போது குழந்தை இல்லாத காரணத்தால், தன் மனைவியோடு இணைந்து வரலட்சுமி விரதம் அனுஷ்டித்தான். இந்த விரதத்தின் பலனாக அவனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தாள். அவளுக்கு மாசுலுங்கி என்று பெயர் வைத்தான். இதற்கு களங்கமில்லாதவள் எனப்பொருள். அவள் வளர்ந்தாள். கல்யாணப் பருவத்தின் வாசலில் நின்றாள். அந்தப் பெண்ணின் அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.

அழகு என்றால் சாதாரண அழகல்ல. பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும் பேரழகு படைத்தவள். கவிஞர்கள் அவளை வர்ணிக்க ஆரம்பித்தால் உலகிலுள்ள ஏடுகள் போதாது. பரந்தாமன் பள்ளிகொண்டிருக்கும் உலகின் மிகப்பெரிய பாற்கடலை திரைச்சீலையாக விரித்து எழுதினால் கூட அதில் அடங்கிவிடுமா என்பதே சந்தேகம். அழகு தான் அப்படிப்பட்டதென்றால் குணம் தங்கம். பக்தி சிரத்தை மிக்கவள். எம்பெருமான் நாராயணனை மனதில் எண்ணி அவன் நாமத்தையே உச்சரித்தவள். ஒரு கட்டத்தில் மணந்தால் அந்த நாராயணனையே மணப்பது என்று முடிவெடுத்து விட்டாள்.மன்னன் பத்மராஜன் மகளைப் பார்த்து சிரித்தான்.அட பைத்தியமே! மானிட ஜென்மம் எடுத்தவள், நாராயணனை எப்படி பர்த்தாவாக அடையமுடியும்?தந்தையின் கேலியை அவள் பொருட்படுத்தவில்லை. அவளது பக்தி ஆழமானது. தன்னை மணம் முடிக்க அந்த நாராயணன் வந்தே தீருவான் என்பதில் உறுதியாக இருந்தாள். மாசுலுங்கியின் பேரழகு பற்றி கேள்விப்பட்ட மன்னர்கள் பெரும் பொருள் கொடுத்தேனும் அவளை திருமணம் செய்து கொள்வதென போட்டியிட்டனர். அவளை யார் மணம் முடிக்க முயன்றாலும், அவனை வென்றோ கொன்றோ நாம் மணம் புரிந்து விட வேண்டும் என்று மன்னர்களுக்குள் போட்டி ஏற்பட்டது. மகளை இன்னும் வீட்டில் வைத்திருப்பது நல்லதல்ல, அவளுக்கு உடனடியாக தகுந்த கணவனைத் தேர்வு செய்ய வேண்டும் என்று மன்னன்முடிவெடுத்தான்.இருப்பினும், தன் முடிவை விட மகளின் முடிவே அவளுக்கு பிரச்னையின்றி இருக்கும் என்பதால், தனக்குப் பிடித்த மணாளனை அவளே தேர்ந்தெடுக்கட்டுமென சுயம்வரத்துக்கு ஏற்பாடு செய்துவிட்டான். மன்னாதி மன்னர்களெல்லாம் குவிந்தனர். இலங்கை பேரரசன் ராவணன் அவளைப் பற்றி கேள்விப்பட்டு, அப்படிப் பட்ட பேரழகு பெட்டழகம் தன் அரண்மனையை மட்டுமே அலங்கரிக்க வேண்டும். நம்மை எதிர்ப்பாரும் பூமியில் உண்டோ என்ற ரீதியில் வானமார்க்கமாக இலங்கையில் இருந்து வந்து சேர்ந்தான்.

ராவணன் வந்திருக்கிறான் என்று தெரிந்ததுமே பல தேசங்களில் இருந்தும் வந்திருந்த மன்னர்கள் எல்லாரும், உயிர் பிழைத்தால் போதுமடா சாமி! இவனை எதிர்க்க யாருக்குத் துணிவுண்டு. ம்... அவன் கொடுத்து வைத்தவன். மாசுலுங்கியை மனைவியாக அடையும் பெரும் பாக்கியத்தைப் பெற்றுவிட்டான் என்றவர்களாய், சுயம்வர மண்டபத்தில் இருந்து ஓடிவிட்டனர்.ராவணன் மாசுலுங்கியிடமும் அவளது தந்தையிடமும் சென்று, பார்த்தீர்களா! பராக்கிரமம் என்றால் இதுவல்லவோ பராக்கிரமம். என்னை கண்டதும் உலகிலுள்ள அத்தனை அரசர்களும் ஓடிவிட்டார்கள் என்றால் என்னிலும் வலிமையானவன் உண்டோ! இந்த வீரத்துக்கு மதிப்பளித்து, மாசுலுங்கி எனக்கே சொந்தமாக வேண்டும். பத்மராஜா! உன் மகளை எனக்குத் திருமணம் செய்து வை, என்று அதிகார தோரணையுடன் கூறினான்.மாசுலுங்கியோ மறுத்து விட்டாள்.சீ ராட்சஷனே! உன்னை மட்டுமல்ல! இங்கு வந்திருந்த எந்த அரசனின் கழுத்திலும் நான் மாலை போட்டிருக்கமாட்டேன். அப்படியானால், ஏன் சுயம்வர மண்டபத்துக்கு வந்தாய் என நீ கேட்கலாம். ஸ்ரீமன் நாராயணன் எங்கும் இருப்பவர். என் பக்தியை பாராட்டி நிச்சயம் அவர் இங்கு வருவார் என்ற நம்பிக்கையுடனேயே இந்த மண்டபத்தில் கால் எடுத்து வைத்தேன். உன்னைப் போன்ற பெண் பித்தர் களுக்கு வாழ்க்கைப்பட மாட்டேன். மரியாதையாக ஓடிவிடு, என்றாள். ராவணனை தன் மகளுக்கு பிடிக்கவில்லை என்பதால், அவனை அவையில் இருந்து வெளியேறும் படி பத்மமகாராஜனும் கேட்டுக் கொண்டான். ஆனால், கொடிய ராவணன் விடுவானா! மாசுலுங்கியை பலவந்தமாக தூக்கிச் செல்ல அருகில் நெருங்கினான். பத்மராஜன், மகளை  காப்பாற்றும் நோக்கத்தில் ராவணனைத் தடுக்க வரவே, தன் வாளை உருவிய ராவணன் பத்மராஜனை வெட்டினான். பத்மராஜனின் தலை உருண்டது.அப்பா! மாசுலுங்கியின் அலறல் அரண்மனையையே நடுங்கச் செய்தது. மணவீட்டை பிணவீடாக்கிய கொலைகார ராவணன் அதைப் பொருட்படுத்தாமல், அவளை அடைய விரும்பி நெருங்கினான்.

ஏழுமலையான் பகுதி-11

மாசுலுங்கி அவனது பிடியில் இருந்து தப்பி ஓடினாள். நமக்கு ஆபத்து வரும் காலத்தில் ஹரி ஹரி ஹரி ஹரி என்று விடாமல் சொல்லிக் கொண்டே இருந்தால் அந்த ஆபத்தில் இருந்து தப்பிவிடலாம். அதையே மாசுலுங்கியும் செய்தாள். ஹரிநாமத்தை சொல்லியபடியே அவள் ஓடிச்சென்று, முனிவர்கள் வேதம் ஓதிக் கொண்டிருந்த ஒரு இடத்தை அடைந்தாள். அவர்கள் முன்னால் மயங்கி விழுந்தாள். அவள் யார் என்றும், பெயர், ஊரும் தெரியாதததால் முனிவர்களுக்கு அவளை என்ன சொல்லி அழைப்பதென தெரியவில்லை. தாங்கள் வேதம் ஓதும்போது அவர்கள் முன் வந்ததால்வேதவதி என பெயர் சூட்டினர். பின்னர் அவளுக்கு மயக்கம் தெளிவித்தனர். அவள் அவர்கள் இருந்த இடத்திலேயே தங்கி, தவம் செய்ய ஆரம்பித்தாள். சிலநாட்கள் அவள் இருந்த இடம் தெரியாமல் இருந்த ராவணன், வானமார்க்கத்தில் மிதந்து அவள் தவம் செய்து கொண்டிருந்ததைப் பார்த்து விட்டான். அவள் ஹரிநாமத்தை உச்சரித்தபடியே தியானம் செய்து கொண்டிருந்தாள். அவள் முன்னால் வந்த ராவணன் ஆசையுடன் அவளது கன்னத்தைத் தொட்டான். கண்களை மூடியிருந்தததால் அவன் வந்ததை அறியாத வேதவதி, தன் கன்னத்தில் ஏற் பட்ட ஸ்பரிசத்தை உணர்ந்து திடுக்கிட்டு விழித்தாள். அடியே! அங்கிருந்து ஓடிவந்து இந்த முனிவர்களின் பாதுகாப்பில் தங்கியிருக்கிறாயே! பலவீனர்களான இவர்கள் உன்னைக் காப்பாற்றுவார்கள் என நம்பி வந்தாயா? அது மட்டுமல்ல! இந்த ராவணனை எதிர்க்க எவரும் பூமியில் இல்லை என்பதை அறிந்துமா இப்படி செய்தாய்? என்று ஆணவத்தோடு அவனது பத்து வாய்களும் பேசின.நான் ஹரி பக்தை. அந்த ஹரி என்னைப் பாதுகாப்பார், என்று ஆணித்தரமாக பேசினாள் வேதவதி.

ராவணன் அதைப் பொருட்படுத்தாமல் அவளை அடைய முயன்ற போது,துஷ்டனே நில்! எவன் ஒருவன் பெண்களைத் துன்புறுத்துகிறானோ அவன் நன்றாக வாழ முடியாது. நீசனே! உன் நிலையும் அப்படித்தான் ஆகப்போகிறது. உன்னிடம் சிக்கிக்கொள்ள நான் விரும்பவில்லை. இதோ, முனிவர்கள் வளர்த்த ஹோமகுண்டத்தில் தீ எரிந்து கொண்டிருக்கிறது. அதில் விழுந்து உயிர்விடுவேனே தவிர, உன் இச்சைக்கு அடி பணியமாட்டேன். ஆனால், ஒன்றை நினைவில் வைத்துக் கொள், பெண்ணாசை பிடித்த உன்னுடைய அரசாங்கம் ஒரு பெண்ணால் வீழும் என்று சாபம் விடுக்கிறேன். இது சத்தியம், என்றபடியே அக்னி குண்டத்தில் குதித்தாள். அக்னிதேவன் அவளை ஏற்றுக் கொண்டு, பெண்ணே! என்னுள் விழுந்த நீ உலகத்தார் கண்களுக்கு மட்டுமே சாம்பலாகத் தெரிவாய். நீ உன் உடலுடன் தான் இருப்பாய். மகாவிஷ்ணு பக்தையான உனக்கு அவருக்கு சேவை செய்யும் காலம் வரை இப்படியே இரு. அவர் விரைவில் ராமாவதாரம் எடுக்கப்போகிறார். லட்சுமிதேவி சீதையாக பிறக்கிறாள். உன் சாபப்படி, ராவணனின் அழிவு நிகழும், என்றார். அது எப்படி அக்னிதேவா? என்றாள் வேதவதி. பெண்ணே! சீதையைக் கடத்த ராவணன் வருவான். அப்போது, நிஜமான சீதையை நான் என் பத்தினி ஸ்வாஹா தேவியிடம் ஒப்படைத்து விடுவேன். நீ சீதையைப் போல் உருமாறி, ஒரு குடிசையில் தங்கியிருப்பாய். உன்னை நிஜ சீதையென நினைத்து ராவணன் கடத்திச் செல்வான். மகாவிஷ்ணு ராமனாய் தோன்றி, உன்னை மீட்டுச் செல்வார், என்றதும், அவள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.அக்னிபகவான் சொன்னபடியே ராமாவதார காலத்தில் அனைத்தும் நடந்தேறின. சீதை வேடத்தில் இருந்த வேதவதியை ராமபிரான் மீட்டு, ராவணனை அழித்தார்.  அவரிடம் வேதவதி, ஸ்ரீராமா! உலகம் என்னை இப்போது தங்கள் மனைவியாகத் தான் அங்கீகரித்துள்ளது. தாங்கள் தயவுசெய்து என்னை மணம் செய்து கொள்ள வேண்டும். க்ஷத்தியர்கள் (அரசர்கள்) பல திருமணங்கள் செய்து கொள்ள அனுமதிக்கப்பட்ட ஒன்றுதானே! என்றாள்.

அவளிடம் ஸ்ரீராமர்,பெண்ணே! நான் இந்த அவதாரம் எடுத்ததன் நோக்கமே ஏகபத்தினி விரதத்தை நிறைவேற்றத்தான். இந்தப்பிறவியில், நான் இன்னொரு பெண்ணை ஏறெடுத்தும் பார்க்கமாட்டேன். கலியுகத்தில் நான் சீனிவாசனாக அவதாரம் செய்வேன். அப்போது நீ வேங்கடமலை பகுதியை ஆளும் ஆகாசராஜ மன்னனின் புதல்வியாகப் பிறப்பாய். அப்போது, உன்னை மணந்து கொள்கிறேன், என்றார். திருப்பதியில் இருந்து இருபது கல் (முப்பது கி.மீ.,) தொலைவில் நாராயணவனம் என்ற ஊர் இருந்தது. இப்போது அவ்வூர் நாராயணபுரம் என அழைக்கப்படுகிறது. அக்காலத்தில் அது மிகப்பெரிய நகரமாக இருந்தது. அவ்வூரை தலைநகராகக் கொண்டு, சுதர்மன் என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தான். மகாவிஷ்ணு பூமிக்கு வந்து புளியமரப் புற்றில் இருந்தபோது, பசு பால் கறந்ததன் காரணமாக சபிக்கப்பட்ட சோளராஜ மன்னன், விஷ்ணுவின் சாபத்தால் பேயாக அலைந்தான் அல்லவா? அவன் தனது சாபகாலம் நீங்கி, சுதர்மனுக்கு குழந்தையாகப் பிறந்தான். அந்தக் குழந்தைக்கு ஆகாசராஜன் என்று பெயர் வைத்தனர். ஒருநாள் சுதர்மன் திருவேங்கடமலையிலுள்ள கபில தீர்த்தத்தில் நீராடிக் கொண்டிருந்தான். அப்போது, நாகலோகத்தில் இருந்து ஒரு கன்னிகை அங்கு வந்தாள்.பேரழகு பெட்டகமான அவளைப் பார்த்தவுடனேயே சுதர்மனுக்கு அவள் மீது காதல் ஏற்பட்டது.தீர்த்தக்கரையிலேயே தன் காதலை அவளிடம் வெளிப்படுத்தி விட்டான். சுதர்மனும் நல்ல அழகன் என்பதால், அந்தப் பெண்ணும் அவனது காதலை ஏற்றாள். அவர்கள் கந்தர்வமணம் புரிந்து கொண்டனர். அவர்களுக்கு தொண்டைமான் என்ற மகன் பிறந்தான்.

ஏழுமலையான் பகுதி-12

ஒரு கட்டத்தில், நாககன்னிகை குழந்தையை சுதர்மனிடம் ஒப்படைத்து விட்டு தனது லோகத்துக்கு போய்விட்டாள். குழந்தை தொண்டைமானை அழைத்துக் கொண்டு சுதர்மன் அரண்மனை வந்து சேர்ந்தான். சுதர்மனின் இறுதிக்காலம் வந்தது. தொண்டைமானை ஆகாசராஜனிடம் ஒப்படைத்து, தன் உடன்பிறந்த தம்பியாக நடத்தும் படி கேட்டுக் கொண்டான். ஆகாசராஜனுக்கு முடி சூட்டப்பட்டது. பின்னர், ஆகாசராஜனுக்கு திருமணம் நடந்தது. தரணிதேவி என்ற மாதரசி, அவனது இல்லத் தரசியானாள். நாட்டின் மகாராணியானாள். அவள் மிகுந்த அன்புடையவள். நாட்டு மக்களை அவர்கள் தங்கள் குழந்தைகள் போல நடத்தினர். செங்கோலாட்சி செய்தனர். மக்களை தங்கள் குழந்தைகள் போல பாவித்த அந்த நல்லவர்களது வீட்டில் மழலைக் குரல் ஒலிக்கவில்லை. ஆகாசராஜன் பெருமாளிடம் தனக்கு குழந்தை வரம் கேட்டு தினமும் பக்திப்பூர்வமாக வணங்கி வந்தான். ஆகாசராஜனின் குல குருவே சுகப்பிரம்ம முனிவர். சுகம் என்றால் கிளி. அந்த முனிவர் கிளி முகம் கொண்டவர். வியாசரின் புத்திரர் அவர். அந்த மகாமுனிவர் ஒருநாள் அரண்மனைக்கு வந்தார். அவரை வரவேற்ற ஆகாசராஜன் தம்பதியர் தங்கள் மனக்குறையை அவரிடம் தெரிவித்தனர். சுகப்பிரம்மர் அவர்களிடம்,  அன்புச் செல்வங்களே! உங்கள் வீட்டில் மழலைச் செல்வம் தவழ்ந்து விளையாட, நீங்கள் புத்திர காமேஷ்டி யாகம் செய்ய வேண்டும். முன்னொரு காலத்தில் ஜனகமகாராஜா குழந்தை யில்லாமல் இருந்த வேளையில் இந்த யாகத்தைச் செய்து சீதாதேவியை மகளாக அடைந்தார். நீங்களும் அந்த யாகத்தை செய்தால் ஸ்ரீலட்சுமி நரசிம்மரின் அருளால் உங்களுக்கு புத்திர பாக்கியம் கிடைப்பது நிச்சயம், என்றார்.

மகான்களின் வாக்கு தவறுவதில்லை. அதிலும் தெய்வமுனிவரான சுகப்பிரம்மர் ஒன்றைச் சொல்லி அது மாறுமா என்ன! அவர் என்ன சாதாரணமானவரா! தவ வலிமை மிக்கவர் அல்லவா! குலகுருவின் யோசனையை கட்டளையாக ஏற்ற ஆகாசராஜனும், தரணி தேவியும் யாக ஏற்பாடுகளை  செய்தனர். யாகத்திற்குரிய நிலம் தேர்வு செய்யப் பட்டது. யாகம் செய்யும் இடத்தில் நிலத்தை சமப்படுத்து வதற்காக, ஆகாசராஜன் தங்கக்கலப்பை கொண்டு உழுதான். சரியாக சென்று கொண்டிருந்த கலப்பை ஒரு இடத்தில் டங் என்ற சப்தத்துடன் நின்றது. ஏதோ ஒரு பொருள் நிலத்துக்குள் இருக்கிறது என்பதை  தெரிந்து கொண்ட ஆகாசராஜன், அந்த இடத்தைத் தோண்டும்படி உத்தரவிட்டான். ஏவலர்கள் அதைத் தோண்டி, உள்ளிருந்து ஒரு பெட்டியை எடுத்தனர். ஆகாசராஜன் அதைத் திறந்து பார்த்தான். அந்தப் பெட்டியில் இருந்து பிரகாசம் கிளம்பியது, பெட்டியில் இருந்து மட்டுமல்ல! ஆகாசராஜன் தம்பதியரின் முகத்திலும் ஒளி வெள்ளம்! மகிழ்ச்சியில் அவர்கள் பூரித்துப் போனார்கள். அந்தப் பெட்டிக்குள் ஆயிரம் இதழ் கொண்ட தாமரைப் பூ இருந்தது. அதன் நடுவில் இருந்த ஒரு பெண் குழந்தை இவர்களைப் பார்த்து சிரித்தது. ஆஹா! பூமியில் இருந்து ஒரு பொக்கிஷத்தை யாகம் நடத்தும் முன்பே ஆண்டவன் தந்துவிட்டான், என்று அவர்கள் மனம் மகிழ்ந்து கூறினார்கள். சுகப்பிரம்மர், மற்ற முனிவர்கள் எல்லார் முகத்திலும் மகிழ்ச்சி தாண்டவமாடியது. தெய்வப்பிறவியல்லவா இந்த பெண்மகள், என்று அவர்கள் குழந்தையைக் கொண்டாடிக் கொண்டிருந்த வேளையில், ஆகாசவாணி (அசரிரீ என்னும் ஆகாயத்தில் இருந்து எழும் குரல். வானில் மிதந்தபடி ஒலி அலைகளை சுமந்து வருவதால் தான் நமது இந்திய வானொலிக்கு ஆகாசவாணி என்று பெயர் வைத்தனர்) ஒலித்தது. ஆகாசராஜா! நீ கொடுத்து வைத்தவன். உன் முன்ஜென்ம புண்ணியத்தின் காரணமாக நீ இந்தப் பெண்ணை மகளாகப் பெற்றாய். இந்தக் குழந்தையால் உன் வம்சமே புகழ்பெறபோகிறது, என்று சொல்லி மறைந்தது.

ஆகாசராஜன் மகிழ்வுடன் குழந்தையைக் கையில் எடுத்து உச்சி மோந்தான். பத்து மாதம் சுமக்காமல் பெற்ற பிள்ளையாயினும், தெய்வக்குழந்தையை வளர்க்கும் பாக்கியத்தைப் பெற்றேனே என தரணிதேவியும் ஆனந்தம் கொண்டாள். யாகம் ஆரம்பிக்கும் முன்பே குழந்தை பிறந்துவிட்டாலும் கூட, துவங்கிய யாகத்தை நிறுத்தக்கூடாது என அதையும் சிறப்பாக செய்து முடித்தனர். ன்னர் ஆகாசராஜன் சுகப்பிரம்மரிடம், குருவே! எங்கள் செல்லக் குழந்தைக்கு தாங்கள் தான் பெயர் சூட்டியருள வேண்டும், என்றான்.இந்தக் குழந்தை தாமரையில் இருந்து வந்தவள். தாமரையை பத்மம் என்பர். பத்மத்தில் இருந்து தோன்றிய இவள் பத்மாவதி எனப்பட்டால் பொருத்தமாக இருக்கும், என்றார் சுகப்பிரம்மர். அந்தக் கருத்தை சிரமேல் ஏற்ற ஆகாசராஜன் அந்தப் பெயரையே குழந்தைக்கு சூட்டினர். இருப்பினும், யாகத்தின்  பலனும் தரணிதேவிக்கு கிடைத்தது. சில காலம் கழித்து அவள் கர்ப்பமானாள். ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அவனுக்கு வசுதானன் என்று பெயரிட்டனர். பெண் குழந்தையும், ஆண் குழந்தையும் ஒரே நேரத்தில் கிடைக்க, பிள்ளையில்லாமல் இருந்த அந்த தம்பதிகள் ஆனந்தமாய் அவர்களை வளர்த்து வந்தனர். பதினைந்து ஆண்டுகள் உருண்டோடி விட்டன. செல்வச்சீமாட்டியாக வளர்ந்தாள் பத்மாவதி. பிறகென்ன! லட்சுமி புகுந்த வீட்டிலேயே செல்வம் செழிக்குமென்றால், லட்சுமி பிறந்த வீட்டில் செல்வ வளத்துக்கு என்ன குறை இருக்கும்! அவள் பட்டிலும், படாடோபத்திலும் புரண்டாள். அவளுக்கும் சுகப்பிரம்ம மகரிஷியே குருவாக இருந்து சகல கலைகளையும் கற்றுத்தந்தார். பதினைந்து வயது பருவமங்கை! அவளது அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.ஒருநாள் வெள்ளிக்கிழமை. புனிதமான ஆன்மிக நாள். அன்று பூஜைகளை முடித்த பிறகு, அரண்மனையின் அந்தப்புரத்தில் தன் தோழிகளுடன் பத்மாவதி விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது, கலகக்காரரான நாரத மகரிஷி அரண்மனைக்கு வந்து சேர்ந்தார்.

திருப்பதி ஏழுமலையான் திருவடிகளே சரணம் ஓம் நமோ வெங்கடேசாய ஓம் நமோ நாராயணாய

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!