திருமலை ஏழுமலையான் வரலாறு பகுதி 13 ,பகுதி 14, பகுதி 15 இன்று பதிவு செய்துள்ளோம். 16ம் பகுதி17 மற்றும் 18ம் பகுதிகள் ஏழுமலையான் கருணையால் வளரும் என்று பணிவுடன் தெரிவித்துக்கொள்கின்றோம் .  

ஆதிசேஷன் வடிவத்தில் இம்மலை இருப்பதால் சேஷாசலம் என்றும்,

அந்த மலையில் வேதங்கள் இருப்பதால் வேதாசலம் என்றும்,

பூலோகத்திற்கு இந்த மலையைக் கருடன் கொண்டு வந்ததால் கருடாசலம் என்றும்,

விருக்ஷன் என்ற அசுரன் இங்கு மோட்சம் பெற்றதால் விருக்ஷõத்ரி என்றும்,

அஞ்சனாதேவி தவம் செய்து அனுமனைப் பெற்றெடுத்த தலம் என்பதால் அஞ்சனாத்ரி என்றும்,

ஆதிசேஷனும். வாயுபகவானும் தங்கள் பலத்தை பரிசோதிக்க தேர்ந்தெடுத்த மலை என்பதால் ஆனந்தகிரி

பாவங்களைப் போக்கும் மலை என்பதால் வேங்கடாசலம் என்றும் அழைக்கப்படுகிறது.

திருப்பதி பெருமாளை வணங்குபவர்களின் பாவம் நீங்கும். இந்த சரிதத்தைப் படித்தவர்களின் இல்லங்களில் செல்வம் பெருகும். ஓம் நமோ நாராயணாய! கோவிந்தனே சரணம்!

திருப்பதி ஏழுமலையான் திருவடிகளே சரணம் ஓம் நமோ வெங்கடேசாய ஓம் நமோ நாராயணாய

ஏழுமலையான் பகுதி-13

நாரத முனிவரைப் பணிவுடன் வரவேற்றாள் பத்மாவதி.அப்போது அவளுக்கு பதினைந்து வயது. பருவத்துக்கு வந்துவிட்ட மங்கை. நம் வீட்டுக்கு வரும் அழகான மருமகளை எங்கவீட்டு மகாலட்சுமி என்று பெருமையுடன் சொல்வோம். ஆகாசராஜனின் மகளாக மகாலட்சுமியே வந்திருக்கிறாள். பிறகென்ன! கேட்கவா வேண்டும்! அழகு ரதமாகத் திகழ்ந்தாள் அவள். அவளைப் பார்ப்பவர்கள் அப்படியே மெய் மறந்து போவார்கள். அந்த பேரழகு பெட்டகத்துக்கு திருமணத்துக்குரிய நேரம் வந்துவிட்டது. அதைச் சொல்லத்தானே நாரதர் வந்திருக்கிறார். வழக்கமாக அவர் கலகம் செய்வார். தந்தையைக் கூட கலக்கி விடுவார். ஆனால், தன் தாயான மகாலட்சுமிக்கு அவர் திருக்கல்யாணம் நடத்திப் பார்க்க வந்திருக்கிறார். ஆனாலும், அதை வெளிக் காட்டாமல், குழந்தை பத்மாவதி! சீக்கிரமேவ கல்யாண பிராப்திரஸ்து, என்றார். பத்மாவதியின் தாமரைக் கன்னங்களில் செம்பருத்தியை பிழிந்து விட்டது போல அப்படி ஒரு சிவப்பு... வெட்கத்தில் குனிந்து நின்றாள். கால்கள் கோலமிட்டன. அவளை அருகில் அமர்த்தி, பத்மா! உன் இடது கையைக் கொடு, என்றார். பத்மாவதி பணிவுடன் கைகளை நீட்டினாள். ஆஹா.. இவ்வுலகில் உன் ஒருத்திக்கு மட்டுமே இப்படி ஒரு ரேகை! உன் கையிலுள்ள த்வஜ ரேகையும் மத்ஸ்ய ரேகையுமே சொல்லிவிட்டன! நீ அரண்மனையில் வாழப் பிறந்தவள் என்று! பத்மரேகையோ நீ செல்வவளமிக்கவள் என்பதையும், தன தான்ய பிராப்திமிக்கவள் என்பதையும் சொல்கின்றன. உன் ரேகைகளின் அடிப்படையைப் பார்த்தால், நீ எம்பெருமான் நாராயணனுக்கு மனைவியாகப் போகிறாய் என்பது தெளிவாகத் தெரிகிறது. சந்தோஷம் தானே, என்றார் புன்னகைத்தபடியே! பத்மாவதிக்கு வெட்கம் பிடுங்கித்தின்றாலும், அந்த நாராயணன் எனக்கு மணாளனாகப் போகிறாரா...ஆஹா.. நான் கொடுத்து வைத்தவள் என்ற எண்ண மேலீடு பரவசத்தையும் தந்தது.நாரதர் அவளை ஆசிர்வாதம் செய்து புறப்பட்டார்.

இதனிடையே, வகுளாதேவியின் பொறுப்பில் இருந்த சீனிவாசன், சுட்டிப்பிள்ளையாகத் திகழ்ந்தார். ஒரு பொழுதும் சும்மா இருப்பதில்லை. சேஷ்டை என்றால் சாதாரண சேஷ்டை இல்லை! காட்டுக்குப் போக வேண்டும், வேட்டையாட வேண்டும், இன்னும் பல சாகசங்கள் செய்ய வேண்டும் என்ற விருப்பம் வேறு! நல்ல பிள்ளைகள் தாயை மதித்தே நடப்பார்கள். தாயிடம் கெஞ்சிக் கூத்தாடியாவது தங்கள் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளவும் செய்வார்கள். சீனிவாசனும் அதையே செய்தார். இருபது வயது மதிக்கத்தக்க கட்டிளங்காளை அவர்! கட்டு மஸ்தான உடம்பு. நீலவண்ண மேக நிறம். உதடுகளில் சாயம் பூசி சிவப்பாக்கிக் கொண்டார். அங்கவஸ்திரத்துடன் அம்மா வகுளாதேவி முன் வந்து நின்றார். அம்மா,...பேச்சில் கடும் குழைவு. ஏதாவது, கோரிக்கை வைக்க வேண்டுமென்றால், நம் வீட்டுக்குழந்தைகள் அம்மாவிடம் குழைவார்களே! அதே குழையல்! என்னடா, நான் இன்றைக்கு காட்டுக்குப் வேட்டைக்குப் போக வேண்டும். மாலையே வந்து விடுகிறேன் அம்மா! இந்தக் காட்டில் நான் சுற்றாத இடமில்லை. எந்த இடமும் எனக்கு அத்துப்படி! போய் வருகிறேனே! என்றார் நளினமாக. என்ன! காட்டுக்கா... அதுவும் மிருக வேட்டைக்கா! வேண்டாமடா மகனே! நீ சுகுமாரன் அல்லவா! உனக்கு அது சரிப்பட்டு வருமா, என்றாள். சுகுமாரன் என்றால் சாந்த குணமுள்ளவன் என்று பொருள். காட்டுக்குப் போக வேண்டுமானால் பயப்படவே கூடாது, திடமனது வேண்டும், சாதுக்களுக்கு அங்கே வேலையில்லை. சீனிவாசன் இளைஞன். அவன் சேஷ்டைகள் செய்வான் என்றாலும், அதை ஊருக்குள் நிறுத்திக் கொள்வான்.

கிருஷ்ணாவதார காலத்தில் கோகுலத் திலுள்ள கோபியரை  கொஞ்சமாகவா படுத்தினான்!  இப்போது காட்டுக்குள் போக வேண்டும் என்கிறானே இந்த இளசு! இளங்கன்று பயமறியாது என்று சொன்னது சரியாகத்தான் போய்விட்டது போலும்! என்று எண்ணினாள் வகுளாதேவி. அம்மாவிடம் மீண்டும் கெஞ்சினார் சீனிவாசன். மனிதனாகப் பிறந்து விட்டால் பகவானுக்கே சோதனை வந்து விடுகிறது. காட்டுக்கும் நாட்டுக்கும் வீட்டுக்கும் அனைத்துக்கும் அவனே அதிபதியானாலும் கூட, ஒரு சின்ன விஷயத்துக்காக அம்மாவிடம் கெஞ்சுகிறான் அந்த பரந்தாமன்! அதாவது, தன்னை விட தன் பக்தனே உயர்ந்தவன் என்பதை இப்படிப்பட்ட நிகழ்வுகள் மூலம் எடுத்துக்காட்டுகிறான். பிள்ளைகள் கெஞ்சினால் பெற்றவளுக்கு பொறுக்குமா? இவள் பெறாத தாய் என்றாலும் கூட, அவளுக்கு தான் அவன் மீது கொள்ளைப் பிரியமாயிற்றே! சரி..சரி...போய் வா! மகனே! காட்டுக்குள் விலங்குகளிடம் கவனமாக நடந்து கொள். பத்திரமாக போய் வா! மாலையே வந்து விட வேண்டும்! இல்லாவிட்டால், நான் அங்கே வந்துவிடுவேன், என்று அன்பும் கண்டிப்பும் கலந்து சொன்னாள். சீனிவாசனுக்கு ஏக சந்தோஷம். அம்மாவிடம் ஆசி பெற்று புறப்பட்டார். மாணவர்கள் பள்ளி கல்லூரிக்கோ, நேர்முகத்தேர்வுக்கோ, பிற வகை பணிகளுக்கோ, வெளியூருக்குப் புறப்படும் போதோ, அம்மாவின் பாதத்தைத் தொட்டு நமஸ்கரித்து புறப்பட வேண்டும். அப்படி செல்லும் பணி நிச்சயம் வெற்றியடையும். கடமைக்காகவோ, பிறர் தன்னைப் பாராட்ட வேண்டுமே என்பதற்காகவோ, ஒரு சடங்காகக் கருதியோ மாத்ரு நமஸ்காரம் செய்பவர்களுக்கு வெற்றி கிடைக்காது. மனதார செய்ய வேண்டும். சீனிவாசனும் வேட்டையில் வெற்றி பெற புறப்பட்டார். காட்டுக்குச் சென்ற அவருக்கு புள்ளிமான் மட்டுமல்ல! அவர் மனதைக் கொள்ளை இன்னொரு மானும் ஒன்றும் கிடைத்தது.

ஏழுமலையான் பகுதி-14

சீனிவாசன் காட்டுக்குள் சென்று சிங்கம், புலி முதலானவற்றைக் கொன்று குவித்தார். யானைகளை விரட்டியடித்தார். முள்ளம்பன்றிகள் அவரது முழக்கம் கேட்டு மூலைக்கொன்றாக சிதறி ஓடின. அப்போது ஒரு யானை அவரை போக்கு காட்டி காட்டுக்குள் இழுத்துச் சென்றது. எவ்வளவு வேகமாகச் சென்றாலும், அந்த யானையைப் பிடிக்கவோ, அம்பு விடவோ சீனிவாசனால் முடியவில்லை. அது வெள்ளை நிறத்தில் இருந்தது. அதைப் பிடித்தே தீருவதென கங்கணம் கட்டிய சீனிவாசன், பிரம்மாவை நினைத்தார். பிரம்மா பணிவுடன் அவர் முன் வந்து நின்றார். அவரது தேவையை அறிந்து பறக்கும் வெள்ளைக்குதிரை ஒன்றைக் கொடுத்தார். அதன் மீதேறிச் சென்ற சீனிவாசன் யானையை கணநேரத்தில் மடக்கி விட்டார். அந்த யானை இந்திரனுக் குரியது. அதன் பெயர் ஐராவதம். சீனிவாசனின் தரிசனம் தனக்கு வேண்டும், அதுவும் நீண்ட நேரம் வேண்டும் என நினைத்த அந்த யானை அவரை இவ்வாறு போக்கு காட்டி இழுத்தடித்தது. அது தன் முன்னால் வந்து நின்ற சீனிவாசனை மண்டியிட்டு வணங்கியது. அதற்கு அருள் செய்தார் சீனிவாசன். பின்னர் அந்த யானை மறைந்து விட்டது. அது மட்டுமல்ல! அந்த யானை காரணத்துடன் தான் அங்கே அவரை இழுத்து வந்தது. தான் ஏறி வந்த குதிரைக்கு அருகில் இருந்த ஒரு குளத்தில் தண்ணீர் காட்டிய சீனிவாசன், தானும் தாகம் தணித்து மர நிழலில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, எங்கிருந்தோ இனிய கானம் ஒன்று கேட்டது. அது ஒரு பெண்ணின் குரல். ஆஹா...குரலே இப்படியென்றால், அந்தப் பெண் அதிரூப லாவண்யத்துடன் இருப்பாளோ! அவளைப் பார்த்தாக வேண்டுமே, என தனக்குள் சொல்லியபடியே குரல் வந்த திசை நோக்கி கவனித்தார் சீனிவாசன். அவள் பாடும் போது, இன்னும் பல பெண்கள் சிரிப்பை சிதறவிட்டபடியே அவளுடன் பேசுவது தெரிந்தது. நேரமாக ஆக, அவர்களின் குரல் அவர் தங்கியிருந்த அரசமரத்தை நெருங்கியது.

ஆனால், பல பேரழகுப் பெண்கள் புடைசூழ நடுவிலே தேவலோகத்து ரம்பை ஊர்வசி, திலோத்துமை இவர்களின் ஒட்டுமொத்த அழகையும் ஒன்றாகக் கோர்த்தது போன்ற பிரகாச முகத்துடன் ஒரு பெண் பாடிய படியே வந்து கொண்டிருந்தாள். சீனிவாசன் அசந்து விட்டார். அழகென்ற சொல்லே இல்லாதவர்களிடையே கூட கண்டதும் காதல் உருவாகி விடுகிறது. இவளோ பேரழகு பெட்டகம். சீனிவாசன் அவள் மீது காதல் கொண்டு விட்டார். அவர் தைரியமாக அவர்கள் முன் சென்றார். அவரைப் பத்மாவதியும் தோழிகளும் கவனித்து விட்டனர். யாருமே நுழைய முடியாத, என் தந்தை ஆகாசராஜனால் தடை விதிக்கப்பட்ட காட்டுப்பகுதிக்குள் வந்துள்ள இவர் யார் என்று விசாரித்து வாருங்கள், என தோழிகளுக்கு உத்தரவிட்டாள். அந்த சொப்பன சுந்தரிகள் அனைவரும் சீனிவாசனை நோக்கி வந்தனர். ஏ நீ யார்? இங்கே எதற்காக வந்தாய்? இது எங்களைத் தவிர பிறர் நுழைய தடை செய்யப் பட்ட இடமாக எங்கள் மகாராஜாவால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. உம்மைப் பற்றி விசாரிக்கச் சொல்லி அதோ! அங்கே நிற்கும் எங்கள் இளவரசியாரின் உத்தரவு! உம்...பதில் சொல்லும், என மிரட்டும் தொனியில் கேட்டனர். லோகநாயகனை மனிதர்கள் புரிந்து கொள்வதே இல்லை! கடவுளா, அப்படியென்றால் யார்? என்று தான் இன்றுவரை கேட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆண்டவன் அதுபற்றி கவலைப் படுவதில்லை. தன்னைப் பற்றிய ஆராய்ச்சி தொடர்கிறதே! அப்போதாவது, மனிதன் நம்மை நினைக்கிறானே என்று சொல்லிக் கொள்கிறான். கடவுள் என்றாலும் மானிட வடிவில் வந்துள்ளவனை அந்தச் சாதாரணப் பெண்கள் புரிந்துகொள்ளாமல் கேட்டார்கள். சீனிவாசன் பதில் சொன்னார். நான் யார் என்று எனக்குத் தெரியாது. நான் ஒரு தனி ஆள். எனக்கு தாயும் இல்லை, தந்தையும் இல்லை. இருப்பிடம் மட்டும் தெரியும்! நான் சேஷாசலத்தில் குடியிருக்கிறேன், என்று பதிலளித்தார் சீனிவாசன்.பத்மாவதியின் காதில் இந்தப் பதில் விழுந்தது.

அவள் மகாலட்சுமியின் அவதாரமல்லவா! அவர் மீது அவள் இரக்கம் கொண்டாள். அவள் சீனிவாசனின் அருகில் வந்தாள். சீனிவாசன் மிகுந்த ஆவலுடன் அவளைப் பார்த்தாள். பத்மாவதி அதைப் பொருட்படுத்தாமல், மகாபுருஷரே! உமக்கு பெற்றவர்கள் இல்லை என்கிறீர்! இங்கே யாரும் வரக்கூடாது என்ற உத்தரவு இருக்கிறது. நீர் இங்கிருப்பது என் தந்தை ஆகாசராஜனுக்கும், தாய் தரணீதேவிக்கும் தெரிந்தால் உம்மைத் தண்டித்து விடுவார்கள். இங்கிருந்து போய்விடும், என எச்சரித்தாள். சீனிவாசன் அதைக் காது கொடுத்தே கேட்கவில்லை. அந்த அழகு சிற்பத்தை அங்குலம் அங்குலமாக ரசித்த அவர்,பெண்ணே! அதெல்லாம் இருக்கட்டும்! நான் சொல்வதைக் கேள்! உன் கானம் என்னை ஈர்த்தது. அப்போதே நான் உன்னை அதிரூப சுந்தரி என நினைத்தேன். அதுவே நிஜமும் ஆயிற்று. உன் குரல் கேட்டவுடன் உன் மீது அன்பு பிறந்தது. உன் உருவம் கண்டதும் அது காதலாகி விட்டது. உன்னை விட்டுச் செல்ல எனக்கு மனமே வரவில்லை. உன்னை இனிபிரியவும் மாட்டேன். உன்னை மனதார காதலிக்கிறேன். இனி வாழ்ந்தால் பத்மாவதியான உன்னோடு தான், என்றபடியே குறும்பு சிரிப்பு சிரித்தார் அந்த மாயவன். பத்மாவதிக்கு கடுமையான கோபம். பின்னே இருக்காதா... முன்பின் தெரியாதவன். எளிய தோற்றத்தில் இருக்கிறான். வேடனைப் போல் வில் அம்புடன் வந்துள்ளான். ஒரு வேடன் தன்னைக் காதலிப்பதாவது! அவளது கண்களில் அனல் கொப்பளித்தது. அது வார்த்தைகளாக வெடித்தது.ஏ முரடனே! நான் இந்நாட்டின் இளவரசி எனத் தெரிந்தும் இப்படி பேசினாயா? உடனே ஓடி விடு. என் தந்தைக்கு இது தெரிந்தால் உன் உயிரைப் பறித்து விடுவார். பறவைகளையும், மிருகங்களையும் வேட்டையாடும் உனக்கு அவற்றின் புத்தி அப்படியே ஒட்டிக்கொண்டது போலும்! வேடனும் ராஜகுமாரியும் எங்காவது ஒன்று சேரமுடியுமா! புத்தி கெட்டவனே ஓடிவிடு, என கூச்சலிட்டாள்.

ஏழுமலையான் பகுதி-15

சீனிவாசன் அவளது பேச்சைக் கண்டுகொள்ளவே இல்லை. சற்றும் தயங்காமல் அவளை நெருங்கி காதல் மொழி பேசினார். சுந்தரியே! இனி என் சொப்பனத்தில் உன்னைத் தவிர வேறு எந்தப் பெண்ணும் இடம்பெற துணியமாட்டாள். மனதின் நினைவுகளே சொப்பனமாக வெளிப்படும். என் மனதின் ஆழத்திற்குள் சென்று விட்ட நீயே என் கண்களில் நிழலாடுவாய். உன்னிலும் உயர்ந்த அழகி இனி உலகில் பிறக்க முடியாது. நீயே எனக்கு மணவாட்டி. நான் அதை உறுதி செய்துவிட்டேன், என்றார். அவள் விலக விலக அவர் நெருங்கி நின்றே பதில் சொன்னார். அவரை விலக்குவதற்கு தோழிகள் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. அவரிடமிருந்து தப்பிக்க நினைத்த பத்மாவதி தன் தோழிகளிடம் ஜாடை காட்ட, அதைப் புரிந்து கொண்ட அவர்கள் கற்களை எடுத்து சீனிவாசன் மீதும் அவர் வந்த குதிரையின் மீதும் வீசினர். அந்தக் குதிரை வலி தாங்காமல் தன் ஜீவனை விட்டது. சீனிவாசனின் நெற்றியிலிருந்தும், உடலில் இருந்தும் ரத்தம் கொட்டியது. அதனால் ஏற்பட்ட வலி அதிகமாக இருந்தாலும், காதலின் முன்னால் அதன் துன்பம் தெரியவில்லை. அதற்கு மேலும் அங்கு நிற்காமல் அவர் அங்கிருந்து வீட்டுக்குச் சென்று விட்டார். காயமடைந்து வீடு திரும்பிய மகனைக் கண்டு வகுளாதேவி கலங்கினாள். சீனிவாசா! இதென்ன கோலம்! ஏன் நடந்தே வருகிறாய்! குதிரையை எங்கே? வேட்டைக்கு  போன இடத்தில் விலங்குகள் அதனைக் கொன்று விட்டனவா! உனக்கும் விலங்குகளால் தீங்கு ஏற்பட்டதா? விலங்குகள் உன்னைத் தாக்கியிருந்தால் உடலில் சிராய்ப்புக் காயங்கள் இருக்க வேண்டுமே! இவை ஆழமாக ஏதோ குத்தியதால் ஏற்பட்ட காயங்களாக உள்ளதே! என்னாயிற்று, என்றாள்.

சீனிவாசன் நடந்ததைச் சொன்னார். அம்மா! மன்னர் ஆகாசராஜரின் மகள் பத்மாவதியைக் காட்டில் சந்தித்தேன். அவளை பார்த்தவுடனேயே பூர்வஜென்ம நினைவு எனக்குள் வந்தது. ராமாவதாரம் எடுத்த போது, நான் சீதையுடன் காட்டுக்குச் சென்றேன். ராவண வதத்துக்காக, சீதையைப் போலவே மற்றொரு மாயசீதையைஉருவாக்கினார் அக்கினி பகவான். நிஜ சீதையை தன் மனைவி ஸ்வாகாதேவியின் பொறுப்பில் ஒப்படைத்து விட்டு, மாய சீதையான வேதவதியை ராவணன் கடத்திப் போகுமாறு செய்தார். ராவண வதம் முடிந்ததும் அவர் அவளை என்னிடம் அழைத்து வந்து, அவளைத் திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டார். நான் அந்த அவதாரத்தில் ஏகபத்தினி விரதம் ஏற்றிருந்ததால் அவளை சீனிவாசனாக அவதாரம் செய்யும் காலத்தில் மணப்பதாக உறுதி கொடுத்தேன். அந்த மாய சீதையே இப்போது பத்மாவதியாக வந்திருக்கிறாள். அவளை மணப்பதாக அளித்த உறுதிமொழியை நிறைவேற்றியாக வேண்டும், என்றார். வகுளாதேவி அவரிடம், மகனே! அவ்வாறே இருந்தாலும் கூட, மன்னன் மகளாகப் பிறந்து விட்ட அவளை நீ எப்படி சொந்தமாக்கிக் கொள்ள முடியும். ஏணியில் ஏறி வானத்தின் உச்சியைத் தொட நினைப்பது போல் அறியாமையில் மூழ்கிக் கிடக்கிறாயே! ஏழையான உன்னை ஆகாசராஜன் மனைவியாக ஏற்கவும் மாட்டான், பத்மாவதி ஒதுக்கத்தான் செய்வாள், என்று சொல்லி, அந்தக் காதலை மறந்து விடும்படி புத்திமதியும் சொன்னாள். இதனிடையே அரண்மனை திரும்பிய பத்மாவதியின் மனம் ஏனோ நிலையில்லாமல் தவித்தது. பாவம், அந்த இளைஞன்! அவன் அப்படியென்ன தவறு செய்துவிட்டான்! தன் காதலை என்னிடம் வெளிப்படுத்தினான், வேடனாயினும் அவன் அழகன். என் மனம் அவனிடம் சென்றுவிட்டது போல் தோன்றுகிறது. விலங்குகளை வேட்டையாட வந்தானா! அல்லது என் உள்ளத்தை வேட்டையாடிச் சென்றானா! அவனைச் சுற்றியே மனம் ஓடுகிறதே! அவனது குதிரையைக் கொன்று, அவனையும் கல்லால் அடித்தேன்! ரத்தம் சொட்டச் சொட்ட அவன் இல்லத்துக்குச் சென்றான். ஐயோ! வலிதாங்காமல் அழுவானோ! அவனது குடும்பத்தினர் என்னை நிந்திப்பார்களே! ஏன் என் மனம் அவனைச் சுற்றுகிறது! நிச்சயமாக, நான் அவனது காதல் வலையில் சிக்கிவிட்டேன் என்றே கருதுகிறேன், என்றவள் மனதுக்குள் அவனை நினைத்தபடியே குமைந்தாள்.

அவளுக்கு தூக்கம் போனது. உணவுண்ண மனமில்லை. கண்கள் எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன. அப்பாவிடமும், அம்மாவிடமும் காதலைச் சொல்ல பயம்! போயும் போயும் ஒரு வேடனைக் காதலிக்கிறேன் என்றா சொல்கிறாய், என்று பெற்றவர்கள் திட்டுவார்களே! இளைஞனே! நீ என் மனதைக் கொள்ளையடித்துப் போய் விட்டாயே! நீ எங்கிருக்கிறாயோ! உன் நினைவு என்னை வாட்டுகிறதே, என ஏக்கத்துடன் புலம்பினாள். அவளது உடல் மெலிந்தது. உணவு, உறக்கமின்றி தவித்த மகளைக் கண்டு பெற்றோர் கலங்கினர். அரண்மனை வைத்தி யர்கள் பத்மாவதியை சோதித்தனர். பல மருந்துகளும் கொடுத்தாயிற்று. ஆனால், பத்மாவதி எழவில்லை. காட்டில் காத்து கருப்பைக் கண்டு பயந்திருப்பாளோ! உடனடியாக மந்திரவாதிகள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் செய்த முயற்சிகளும் வீணாயின. தாய் தரணீதேவி மகளின் நிலை கண்டு கண்ணீர் வடித்தாள்.  எல்லா கோயில்களிலும் மகள் குணமாக வேண்டி சிறப்பு பூஜை செய்தாள். ஊஹூம்...பத்மாவதி எழவே இல்லை.உலகிலேயே தீர்க்க முடியாத வியாதி ஒன்று இருக்கிறதென்றால் அது காதல் வியாதி தான். பொல்லாத அந்த வியாதியின் பிடியில் சிக்கிய யார் தான் மீள முடியும்?இதே நிலை தான் வராக வனத்தில் தங்கியிருந்த சீனிவாசனுக்கும் ஏற்பட்டது.அவரும் படுக்கையில் புரண்டார்.தவறு செய்து விட்டோமே! வேடனின் வேடத்தில் சென்றால் எந்தப் பெண் தான் விரும்புவாள்! நாம் நம் சுயரூபத்தில் சென்றிருந்தால், அவள் நம்மை விரும்பியிருக்கக் கூடும். உம்... தப்பு செய்து விட்டோமே,  என புலம்பினார். மகனின் நிலை கண்ட தாய், சீனிவாசா! கவலைப்படாதே, நான் ஆகாசராஜனிடம் செல்கிறேன். பத்மாவதியை பெண் கேட்கிறேன். இருவருக்கும் நிச்சயம் திருமணமாகும். அமைதியாக இரு, என்று சொல்லி அரண்மனை நோக்கி புறப்பட்டாள்.

திருப்பதி ஏழுமலையான் திருவடிகளே சரணம் ஓம் நமோ வெங்கடேசாய ஓம் நமோ நாராயணாய