திருமலை ஏழுமலையான் கருணையினால் திருமலை ஏழுமலையான் புராணம் தொடர்ச்சி இன்று பகுதி 16.பகுதி 17,பகுதி 18 பதிவு செய்துள்ளோம். பகுதி 19,20,பகுதிகள் வெளியிட திருமலை ஏழுமலையான் கருணை செய்வார்  !செய்து அருளட்டும் !

திருப்பதி ஏழுமலையான் திருவடிகளே சரணம் ஓம் நமோ வெங்கடேசாய ஓம் நமோ நாராயணாய

வருக வருகவே திருமலை உறைந்திடும்

கருமுகிலே அருள் பொழிக பொழிகவே (வருக வருகவே)

மறையுடையோன் ஏறு விடையுடையோன் ஆறு

முகமுடையோன் பணியும் திருவுடையோன் (வருக வருகவே

மோகன முறுவல் முகம் கண்டு - பிறவி

சோகம் தவிர்க்கும் விழி அருளை உண்டு - உன்

தாள் மலர் தழுவிடத் தாகம் கொண்டு - நாளும்

தவித்திடும் எனக்கு உன் தரிசனம் தந்திட (வருக வருகவே)

ஏழுமலையான் பகுதி-16

தாய் பெண் கேட்டுச் சென்றாலும் மனம் பொறுக்காத சீனிவாசன், பத்மாவதியை அப்போதே பார்த்து விட வேண்டும் என்ற எண்ணத்திலும், அவளிடம் திருமண உந்துதலை உருவாக்க வேண்டும் என்பதற்காகவும் குறி சொல்லும் குறத்தியின் வேடமிட்டார். சிவப்பு நிற புடவையைக் கட்டிக் கொண்டார். கைகளில் பச்சை குத்திக் கொண்டார். கண்களில் மை தீட்டியாயிற்று. நெற்றியில் பெரிய குங்குமப் பொட்டு. இடுப்பில் ஒரு கூடை, கையில் மந்திரக்கோல் ஏந்தி புறப்பட்டார். பெருமாள் கோயில்களில் மோகினி அலங்காரத்தை நாம் விழாக்காலங்களில் பார்ப்போம். அவர் அலங்கார பிரியர். கண்ணபுரத்திலே அவர் சவுரி முடியணிந்து சவுரிராஜராக காட்சியளிக்கிறார். இப்போது, குறத்தி வேஷம் போட ஆசை வந்து விட்டது. அந்த மாயவன்(ள்) கிளம்பி விட்டான்(ள்). அந்தக் குறத்தி குறி பார்க்கலையோ குறி என்று கூவிக்கொண்டே நாராயணபுரத்தின் வீதிகளில் திரிந்தாள். அரண்மனை உப்பரிகையில் மகளின் நிலை குறித்து கவலையோடு நின்று கொண்டிருந்த ஆகாசராஜனின் மனைவி தரணீதேவியின் கண்களில் அவள் பட்டாள். மகளின் இந்த நிலைக்கு என்ன காரணம் என குறி சொல்பவள் மூலம் தெரிந்து கொள்வோமே என்று அவளை அழைத்து வரச்சொல்லி ஏவலர்களிடம் சொன்னாள். எவ்வளவு செல்வம் இருந்தென்ன பயன்! அரண்மனையில் வாசம் செய்வதால் என்ன பயன்! மனதுக்கு நிம்மதி வேண்டும், குறிப்பாக, குழந்தைகள் குறித்த விஷயத்தில் பல பெற்றவர்கள் தங்கள் நிம்மதியை இழந்து விடுகிறார்கள். தரணீ தேவிக்கும் இப்போதைய நிலை இதுதான்! நாம் நம் பிள்ளைகள் சரியாகப் படிக்கா விட்டாலோ, படித்த பின் நல்ல வேலை கிடைக்காவிட்டாலோ ஜாதகத்தைத் தூக்கிக் கொண்டு ஜோசியரிடம் ஓடுவதில்லையா! அதே போல, தரணீதேவி மகளின் நிலையறிய குறி சொல்பவளைக் கூப்பிட்டாள்.

குறி சொல்லும் வேடத்தில் வந்த சீனிவாசன். ராணிக்கு வணக்கம் செலுத்தினார். பெண்ணே! என் மகள் படுத்த படுக்கையாகக் கிடக்கிறாள். என்ன நோய் என்றே புரியவில்லை. இதற்கு காரணம் என்ன? இவளது எதிர்காலம் பற்றி சொல்லு, என்றாள். மகாராணியிடம் குறி சொல்பவள், அம்மா! உள்ளதை உள்ளபடி சொல்கிறேன், கேளுங்கள், என்று கணபதி, காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி, குமாரசுவாமியாகிய முருகக்கடவுள், சரஸ்வதி, லட்சுமி, கனகதுர்க்கா, வீரபத்திரர், அஷ்டதிக் பாலகர்கள், வனதேவதைகளைக் குறித்து வணங்கிப் பாடி, இவர்கள் மீது ஆணையாக நான் சொல்வதெல்லாம் உண்மை எனச்சொல்லி விஷயத்துக்கு வந்தாள். பத்மாவதியை அழைத்த அவள், இளவரசி! நீங்கள் உங்கள் மனதில் கொண்டுள்ள எண்ணம் எனக்கு விளங்கி விட்டது. சில நாட்களுக்கு முன்பு, காட்டில் நீங்கள் நீலமேகவண்ணன் ஒருவனைப் பார்த்திருக்கிறீர்கள். அவன் தன் மனதை உங்களிடம் கொடுத்து விட்டு, உங்கள் மனதைப் பறித்துக் கொண்டு போய்விட்டான். அவன் நினைவு இப்போது வாட்டுகிறது. அவனே உங்கள் மணாளனாக வேண்டும் என்பதே உங்கள் எண்ணம். உங்கள் கையில் தான் கல்யாண ரேகை ஓடுகிறதே! பிறகு, யார் அதை தடுக்க முடியும்! எத்தனை கோடி தேவர்கள் தடுத்தாலும், உங்களுக்கும், வேடனாக வந்தானே! அந்த வாலிபனுக்கும் திருமணம் நடந்தே தீரும். இதற்காக மனம் வருந்த வேண்டாம். நான் சொன்ன வாலிபன் இவன்தானா என பாருங்கள்,என்றவள், தன் மந்திரக்கோலை கூடைக்குள் ஒரு சுழற்று சுழற்றினாள்.கூடைக்குள் பத்மாவதியும், தரணீதேவியும் பார்த்தனர்.காட்டுக்குள் வேடனாக வந்த சீனிவாசனின் அழகு முகம் தெரிந்தது. அவன் இவர்களைப் பார்த்து சிரித்தான். அந்த மந்திரச்சிரிப்பில் சொக்கிப் போனாள் பத்மாவதி. விஷயம் அம்மாவுக்கு தெரிந்து விட்டதே என்று பயம் ஒரு புறம்! வெட்கம் ஒருபுறம் பிடுங்கித்தின்ன தனது அறைக்குள் ஓடிவிட்டாள்.

பின்னர் குறத்தி ராணியிடம், அம்மா! இந்த வாலிபனே உங்கள் மகளுக்கு மணாளாவான். இதைத் தடுக்க தங்களாலும், ஆகாசராஜ மகாராஜாவாலும் எக்காரணம் கொண்டும் முடியாது. தாங்கள் பரிசு கொடுங்கள். நான் புறப்படுகிறேன், என்றாள். அவளுக்கு பொன்னாபரணங்கள் பல கொடுத்து அனுப்பிய தரணீ தேவியைக் கவலை குடைய ஆரம்பித்து விட்டது. மகளிடம் இதுபற்றி கேட்டு கண்டித்தாள். தாயே! குறத்தி சொன்னது முற்றிலும் உண்மை. வாழ்ந்தால் அந்த அழகிய இளைஞனுடன் தான் வாழ்வேன். சூரியனும் சந்திரரின் பாதையில் கூட மாற்றம் ஏற்படலாம். ஆனால், அவரை மணப்பதென்ற என் நிலைப்பாட்டில் எந்த மாறுதலுமில்லை. அவர் யாரென விசாரித்து திருமணத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள், என்றாள். ஒரு வேடனுக்கு தன் மகளைக் கொடுப்பதாவது! பரம ஏழையான அவன் தன் மகளைத் திருமணம் செய்தால் நம்மை யாராவது மதிப்பார்களா! பத்மாவதிக்கு திருமணம் என அறிவித்து விட்டால், எல்லா தேசத்து இளவரசர்களும் ஓடி வந்து விடுவார்களே! அவர்களில் உயர்ந்த ஒருவனைத் தேர்ந்தெடுக் காமல் இவனுக்குப் பெண்ணைக் கொடுப்பதாவது! அவள் குழப்பத் துடன் கணவரின் அறைக்குச் சென்றாள். தங்கள் மகள் ஒரு வேடனைக் காதலிக்கிறாள் என்ற விஷயத்தை அவனது காதிலும் போட்டாள். ஆகாசராஜன் சிரித்தான். தரணீ! உனக்கென்ன பைத்தியமா! நம் செல்வமகளை சாதாரணமான ஒருவனால் எப்படி திருமணம் செய்ய இயலும்? அன்றொரு நாள், நாரதமகரிஷி நம் அரண்மனைக்கு வந்தார். அந்த ஸ்ரீமன் நாராயணனே அவளை  திருமணம் செய்வார் என்றல்லவா வாழ்த்திச் சென்றார். நாரதமகரிஷியின் வாக்கு எப்படி பொய்யாகும். நீ மனதை அலட்டாதே. நம் மகளுக்கு வந்திருப்பது பருவகால நோய் என்பது அறிந்த ஒன்று தானே! நாமும் அந்த வயதைக் கடந்து தானே வந்துள்ளோம், என்றான்.

ஏழுமலையான் பகுதி-17

இவர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருந்த போது காவலன் வந்து நின்றான். அரசே! தங்களைக் காண ஒரு அம்மையார் வந்திருக்கிறார். அவரது முகத்தில் நிறைந்த தேஜஸ் காணப்படுகிறது. கானகத்தில் வசிப்பவர் என்று அனுமானிக்கிறேன். துறவியும் இல்லத்தரசியும் கலந்த நிலையிலுள்ளவர். அவரை அனுப்பி வைக்கட்டுமா? என்றான். வரச்சொல், என்று ஆகாசராஜன் உத்தரவிட்டதும், தரணீதேவியும் அவனுடன் சென்று யார் வந்திருக்கிறார்கள் என பார்க்கச் சென்றாள்.சேஷாசல மலையில் இருந்து கிளம்பிய சீனிவாசனின் தாய் வகுளாதேவி தான் அவள். அந்த மாதரசியை மன்னரும் ராணியும் வரவேற்றனர். அவரை ஆசனத்தில் அமர்த்தி உபசரித்து, தாயே, தாங்கள் யார்! இந்தச் சிறியேனைக் காண வந்த நோக்கம் என்ன? தங்களைப் பார்த்தால் பெரிய தபஸ்வி போல் தெரிகிறது. நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்? என்றான். மலர்ந்த முகத்துடனும், புன்சிரிப்புடனும் ஆகாசராஜனையும், தரணீதேவியையும் வாழ்த்திய அந்த நடுத்தர வயது பெண்மணி, ஆகாசராஜா! நான் பெண் கேட்டு வந்துள்ளேன்! என்றாள். பெண்ணா! யாருக்கு யார் பெண்ணைக் கேட்டு வந்துள்ளீர்கள்? என்ற ஆகாசராஜனிடம், மகனே! என் மகன் சீனிவாசன். அவன் உன் மகளைக் காதலிக்கிறான். உன் மகள் நினைவாகவே இருக்கிறான். சகல வசதிகளும் பொருந்திய அவனை விட்டு செல்வம் தற்காலிகமாக விலகியிருக்கிறது. தரித்திரனாயினும் மிகுந்த தேஜஸ் உடையவன். இன்னொரு முக்கிய விஷயம்! அவன் ஸ்ரீமன் நாராயணனின் அம்சம், என்றாள். தங்களுக்கு வரப்போகும் மருமகன் அந்த ஸ்ரீமன் நாராயணனே என நாரதர் மூலமாக வாக்கு கேட்டிருந்ததும், குறத்தி சொன்ன குறியும். இப்போது இந்த அம்மையார் கேட்டதும் சரியாக இருக்கவே, ஆகாசராஜன் தம்பதியர் மகிழ்ந்தனர். தன் மகன் தரித்திரன் என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டது அவர்களுக்கு இன்னும் பிடித்திருந் தது. இருப்பினும், பெண்ணைக் கட்டிக் கொடுப்பவர்கள் யாரோ ஒருத்தி வந்து கேட்க மாப்பிள்ளையை பற்றி விசாரிக்காமல் கொடுத்து விடுவார்களா என்ன!

ஆகாசராஜன் அந்த அம்மையாரிடம், அம்மையே! நாங்கள் பெண்ணைப் பெற்றவர்கள். எங்கள் குல குருவிடம் ஆலோசனை கேட்டு அதன் பிறகு தங்களுக்கு முடிவைச் சொல்கிறோம், என்றான். அவ்வாறே ஆகட்டும். அவசரமில்லை, நீங்கள் பெண்ணைப் பெற்றவர்கள். கலந்தாலோசித்து செய்யுங்கள். ஆனால், உங்கள் பெண் ஸ்ரீமன் நாராயணனுடன் வாழப்போகிறாள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், என்ற வகுளாதேவி அவர்களிடம் விடைபெற்றாள்.வாசல் வரை வந்து அவளை வழியனுப்பிய ஆகாசராஜன்  தம்பதியர், தங்கள் குலகுருவாகிய சுகயோகியை ஆலோசனை செய்ய முடிவெடுத்தனர். ஆகாசராஜன் தன் தம்பியான தொண்டைமானிடம், சுகயோகியை அழைத்து வரும்படி சொன்னான். அவனும் ஆஸ்ரமம் சென்று தக்க மரியாதைகளுடன் அவரை அழைத்து வந்தான். அவருக்கு பாதபூஜை செய்த ஆகாசராஜன், தவசீலரே! எங்கள் குலத்தின் விடிவிளக்கே! ஆதிவராக ÷க்ஷத்திரத்தில் சீனிவாசன் என்ற இளைஞன் வசிக்கிறான். அவன் வகுளாதேவி என்ற தாயின் பராமரிப்பில் இருக்கிறான். அவனுக்கு தன் மகளை மணமுடித்துக் கொடுக்கும்படி அந்தத் தாய்என்னிடம் வந்து கேட்டாள். பத்மாவதியும் அந்த இளைஞனையே மணம் முடிப்பேன் என அடம் பிடிக்கிறாள். அவனோ வேடன், பரம தரித்திரன், என்பதால் அவனுக்கு ராஜகுமாரியை கட்டி வைக்க என் மனம் அஞ்சுகிறது. அரண்மனையில் திளைத்த  அரசிளங்குமரி, எப்படி அவனுடன் எளிய வாழ்வு வாழ முடியும்? அவனிடமிருந்த செல்வமெல்லாம் தற்காலிகமாக மட்டுமே விலகியிருப்பதாக அவனது தாய் சொல்கிறாள். தாங்கள் ஞான திருஷ்டியால் ஆராய்ந்து, என் மகளை அவனுக்கு மணம் முடித்து வைக்கலாமா என்பது பற்றி சொல்லுங்கள், என்றான். சுகயோகி ஆழ்ந்த ஆலோசனையில் ஆழ்ந்தார். சற்றுநேரத்தில் அவரது முகம் மலர்ந்தது.

ஆகாசராஜா! நீ கொடுத்து வைத்தவன், ஸ்ரீமன் நாராயணனுக்கு நீ மாமனாராகப் போகிறாய்! சீனிவாசன் அவரது அம்சம் என்பது நிஜமே. உன் மகள் பத்மாவதி நிறைந்த புண்ணியம் செய்தவள் என்பதாலேயே இது நிகழ்கிறது. அவளை சீனீவாசனுக்கு மணம் முடித்து வை. இதனால், உனக்கு ஜென்மசாபல்யமாகிய பிறப்பற்ற நிலையும் ஏற்பட்டு, அந்த நாராயணனுடன் கலந்து விடுவாய். நிச்சயதார்த்தத்துக்கு உடனடியாக நாள் குறித்து விடு, என்றார். குருவின் அனுமதியே கிடைத்து விட்டதால் மகிழ்ச்சியடைந்த ஆகாச ராஜன் தம்பதியர் சீனிவாசனுக்கும், பத்மாவதிக்கும் திருமணம் நடத்த முடிவெடுத்தனர். சுவாமி! அப்படியானால், தாங்களே நிச்சயதார்த்தம் மற்றும் முகூர்த்த நாட்களைக் குறிக்கும் ஏற்பாடுகளைச் செய்து விடுங்கள், என்றான் ஆகாசராஜன்.நாராயணனின் திருமணத்துக்கு தேவர்களின் குருவான பிரகஸ்பதியை வரவழைத்து நாள் குறித்தால் நல்லதென சுகயோகி கருதினார். பிரகஸ்பதியுடன் தேவாதி தேவர் களையும் வரவழைக்க முடிவெடுக்கப்பட்டது. பிரகஸ்பதியும் பூமிக்கு வந்தார். ஸ்ரீமன் நாராயணனின் திருமண நாளைக் குறிப்பதற்கு நான் என்ன புண்ணியம் செய்தேனோ என்ற பிரகஸ்பதி பஞ்சாங்கத்தை தீவிரமாக ஆராய்ந்தார். வைகாசிமாதம், வெள்ளிக்கிழமை, வளர்பிறை தசமி திதியில் முகூர்த்த தேதி நிர்ணயிக்கப் பட்டது. அந்த முகூர்த்த பத்திரிகை சீனிவாசனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் எழுதபட்டிருந்த வாசகம் இதுதான். ஸ்ரீஸ்ரீ சேஷாஸலவாசியான ஸ்ரீ ஸ்ரீனீவாஸனுக்கு ஆகாசராஜன் எழுதிய சுபமுகூர்த்த பத்திரிகை என்னவென்றால், பரமபுருஷனே! தங்கள் விஷயமெல்லாம் (பத்மாவதியுடனான காதல்) பெரியோர் சொல்ல சந்தோஷமடைந்தேன். ஆகையால், தங்களுக்கு என் மகள் சௌபாக்கியவதி பத்மாவதியை திருமணம் செய்து கொடுக்க ஸங்கல்பித்துள்ளேன் (உறுதியெடுத்தல்) தாங்கள் தங்கள் பந்து மித்திர ஸபரிவார ஸமேதமாக விஜயம் செய்து நான் அளிக்கும் கன்யா தானத்தை ஏற்றுக்கொள்ளும்படியாக வேண்டிக்கொள்கிறேன், இந்த முகூர்த்த பட்டோலையை சுகயோகியே, சீனிவாசனிடம் நேரில் சென்று கொடுக்கச் சென்றார்.

ஏழுமலையான் பகுதி-18

சுகமகரிஷி சேஷாசலத்தை அடைந்து சீனிவாசனைச் சந்தித்தார். சீனிவாசன் அவரைத் தக்கமரியாதையுடன் வரவேற்று அமரச் சொன்னார். சீனிவாசனிடம் அவர் முகூர்த்த பட்டோலையை வழங்கினார். அதைப் படித்ததும் சீனிவாசனுக்கு ஏற்பட்ட ஆனந்தத்தின் எல்லைக்கு அளவே இல்லாமல் போனது. நல்லசேதி கொண்டு வந்த சுகமகரிஷியை அவர் வாழ்த்தினார். பின்னர் ஒரு ஓலையில் ஆகாசராஜனுக்கு பதில் எழுதினார். ஸ்ரீ ஸ்ரீமன் மண்டலேச்வர ராஜாதிராஜன ராஜசேகரனான ஆகாசராஜன் அவர்களே! உங்கள் பத்மபாதங்களின் சன்னதிக்கு சேஷாசலத்தில் வசிக்கும் ஸ்ரீமன் நாராயணனாகிய சீனிவாசன் மிக்க நன்றி தெரிவித்து எழுதும் கடிதம் இது. மகாராஜாவே! தாங்கள் தயைகூர்ந்து அனுப்பிய முகூர்த்த பத்திரிகை கிடைத்தது. அதைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். தாங்கள் குறித்துள்ள லக்கின நாளுக்கேற்றவாறு, என் குடும்பபரிவார சமேதனாக வந்து தாங்கள் அளிக்கும் கன்யா தானத்தை சாஸ்திரப் பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன்... இவ்வாறு எழுதிய கடிதத்துடன், சுகமகரிஷி மீண்டும் நாராயணபுரத்தை அடைந்து ஆகாசராஜனிடம் ஒப்படைத்தார். ஆகாசராஜனுக்கு இந்த பணிவான பதில் பார்த்து மிக்க மகிழ்ச்சி. ஸ்ரீமன் நாராயணன், தனக்கு தகுந்த மரியாதை அடைமொழிகள் கொடுத்து அனுப்பிய கடிதமல்லவா! அந்தப் பணிவான வார்த்தைகளை அவன் மிகவும் ரசித்துப் படித்தான். இவ்வாறாக, இருதரப்பும் திருமண நிச்சயம் செய்ததும் நினைத்தவனே கணவனாகப் போகிறான் என பத்மாவதி மகிழ்ந்தாள். இந்நிலையில், சீனிவாசனுக்கு மனக்குழப்பம். திருமணம் நிச்சயித்தாயிற்று. மணமகளோ ராஜா வீட்டுப் பெண், இளவரசி. அவளை அவளது இல்லத்தில் செல்வச் செழிப்புடன் வளர்த்திருப் பார்கள்.

நம்மிடமோ காசு பணம் இல்லை. திருமணத்தை நல்லமுறையில் நடத்த வேண்டுமென்றால் பணம் வேண்டுமே! இங்கிருந்து கிளம்பும்போது, மணமகளுக்குரிய பட்டுப்புடவை, ஆபரணங்கள் உள்ளிட்ட சீதனங் களை எடுத்துச் செல்லாவிட்டால், தன்னைப் பிச்சைக்காரன் என உலகம் எண்ணாதா! பத்மாவதி தான் என்ன நினைப்பாள்! அவளது குடும்பத்தார் தன்னை இழிவாக எண்ண நேரிடுமே... இந்த சிந்தனையுடன் இருந்தபோது, நாராயண, நாராயண, நாராயண,என்ற குரல் ஒலித்தது. நாரதமகரிஷி அங்கு வந்தார். சீனிவாசா, உன் திருமண விஷயம் அறிந்தேன். உன்னைப் பார்த்து விட்டு செல்லவே வந்தேன், என்றார். சீனிவாசனின் முகம் வாடியது. நாரதர் அவரிடம், சீனிவாசா! புதுமாப்பிள்ளை சந்தோஷமாக இருக்க வேண்டும், உன் முகமோ வாடியிருக்கிறதே! என்ன பிரச்னை? என்றார். நாரதரே! திருமணத்தை நிச்சயித் தாயிற்று. ஆனால், லட்சுமியையே மார்பில் சுமந்த என் நேரம் சரியில்லை. திருமணச்செலவுக்கு பணம் வேண்டும், அது எப்படி கிடைக்குமென்று தான் தெரியவில்லை. இதனால், மனம் எதிலும் நாட்டம் கொள்ள மறுக்கிறது, என்று சீனிவாசன் சொல்லவும் நாரதர் சிரித்தார். சீனிவாசா! இதற்காக ஏன் கவலைப்படுகிறாய்? குபேரனிடம் ஏராளமாக பணம் இருக்கிறது. அவனிடம் கடன் வாங்கி கல்யாணத்தை முடி. பின்னர், கடனைத் திருப்பிக் கொடுத்து விடலாம்,என்றார். சீனிவாசனுக்கு இந்த யோசனை பிடித்துவிட்டது.உடனே கருடனை வரவழைத்தார். கருடா! நீ சென்று குபேரனை அழைத்து வா, என்றார். கருடனும் சென்று குபேரனை அழைத்து வந்தான். நாரதரே குபேரனிடம் பேசினார். குபேரா! ஸ்ரீமன் நாராயணன் மானிட அவதாரமாக சீனிவாசன் என்னும் பெயரில் பூலோகத்தில் இருப்பதை அறிவாய். இப்போது, லட்சுமிதேவி சீனிவாசனை விட்டுப் பிரிந்திருப்பதால், அவன் சகல ஐஸ்வர்யங்களையும் இழந்து நிற்கிறான். ராமாவதார காலத்தில் வேதவதி என்ற பெயரில் இருந்த நிழல் சீதை, இப்போது பத்மாவதியாகப் பூமியில் அவதரித்து, ஆகாசராஜனின் அரண் மனையில் வளர்கிறாள்.

அவளுக்கும், சீனிவாசனுக்கும் காதல் ஏற்பட்டது. இப்போது, திருமணமும் நிச்சயிக்கப் பட்டு விட்டது. ஆனால், ராஜா வீட்டுப் பெண்ணான அவளைத் திருமணம் செய்து கொள்ளுமளவுக்கு சீனிவாசனிடம் பணமில்லை. நீ அவனுக்கு கடன் கொடுத்து உதவினால், அவன் அசலும் வட்டியுமாக திருப்பியளிப்பான்.  அவனுக்கு எவ்வளவு வேண்டும், வட்டி விபரம், திருப்பித்தரும் கால அளவையெல்லாம் நீங்கள் கலந்தாலோசித்து கொள்ளுங்கள். சீனிவாசனுக்கு பணம் கொடுப்பதன் மூலம், நீ பிறந்த பலனை அடைவாய், என்று சிபாரிசு செய்தார். ஸ்ரீமன் நாராயணனின் திருமணத்துக்கு என்னிடமுள்ள செல்வம் உதவுமானால், அதை விட வேறு பாக்கியம் ஏது? தருகிறேன், என்ற குபேரன், 3ஆயிரத்து 364 ராம நாணயங்களைத் தந்தான். இந்தத்தொகை இன்றைய மதிப்புக்கு பல ஆயிரம் கோடிகளைத் தொடும். தொகைக்கான வட்டியை நிர்ணயித்து பத்திரம் எழுதினான். அதில், சீனிவாசன் கையெழுத்திட்டார். அன்புசார்ந்த குபேரனுக்கு, நீ கொடுத்த பணத்திற்கு கலியுகம் முழுமையும் வட்டி செலுத்துவேன், கலியுகம் முடியும் வேளையில் அசலையும், மீதி வட்டியையும் செலுத்திவிடுவேன், என உறுதியளித்தார். இப்போது, திருப்பதியில் ஆண்டு வருமானம் ஆயிரம் கோடியை எட்டிவிட்டது. இதை குபேரன் வட்டியாக  பெற்றுக் கொண்டிருப்பதாக ஐதீகம். வட்டியே இவ்வளவு என்றால், சீனிவாசன் பெற்ற கடன்தொகையின் அளவை கணக்கிட்டுக் கொள்ளுங்கள். கலியுகம் முழுவதும் கோடிக்கணக்கில் வட்டி கிடைக்கப்போகிறது என்றால் குபேரனுக்கு சந்தோஷம் ஏற்படாதா என்ன! அவன் மிகுந்த ஆனந்தத்தில் இருந்தான்.ஆனால், மனதுக்குள் ஒரு சந்தேகம்! ஏதுமே இல்லாத சீனிவாசன், இவ்வளவு பெரிய அசலுக்கு எப்படி வட்டி செலுத்துவார் என்று! குபேரனின் மனஓட்டத்தை அறிந்த சீனிவாசன் அதற்கு அளித்த பதில் குபேரனை வியப்பில் ஆழ்த்தியது.

பகுதி 19...20......வளரும்

திருப்பதி ஏழுமலையான் திருவடிகளே சரணம் ஓம் நமோ வெங்கடேசாய ஓம் நமோ நாராயணாய