திருப்பதி ஏழுமலையான் திருவடிகளே சரணம் ஓம் நமோ வெங்கடேசாய ஓம் நமோ நாராயணாய
திருப்பதி மலைவாழும் வெங்கடேசா
திருப்பதி மலைவாழும் வெங்கடேசா -திருமகள்
மனம் நாடும் சீனிவாசா ஏழுமலைவாசா
திருப்பதி...
அன்பென்னும் அகல் விளக்கை ஏற்றி வைத்தேன்
அதில் ஆசையென்னும் நெய்யை ஊற்றி வைத்தேன்
என் மனம் உருகிடவே பாடி வந்தேன்
உன் ஏழு மலை ஏறி ஓடி வந்தேன்
திருப்பதி மலைவாழும் வெங்கடேசா -திருமகள்
மனம் நாடும் சீனிவாசா ஏழுமலைவாசா
திருப்பதி...
நினைப்பதை நடத்தி வைப்பாய் வைகுந்தா
மறைத்ததை பறித்திடுவாய் கோவிந்தா
உரைத்தது கீதை என்ற தத்துவமே
அதை உணர்ந்தவர் வாழ்ந்திடுவார் சத்தியமே
திருப்பதி மலைவாழும் வெங்கடேசா -திருமகள்
மனம் நாடும் சீனிவாசா ஏழுமலை வாசா
ஏழுமலையான் பகுதி-2
ஒருவன் பசியால் மயக்கமடைந்து விட்டால், உடனே என்ன செய்வோம்? ஒரு உருண்டை சோறை எடுத்து அவன் வாயில் ஊட்டினால், அது தொண்டைக்குள் இறங்குமா? அதனால், முதலில் சிறிது தண்ணீரை அவன் முகத்தில் தெளிக்கிறோம். அவன் திடுக்கிட்டு கண் விழித்துப் பார்க்கிறான். உடனே சிறிது நீரை அவனுக்குப் புகட்டுகிறோம். இப்போது, அவன் பெருமூச்சு விடுகிறான். அதாவது, நிற்க இருந்த மூச்சு தண்ணீரின் தூண்டுதலால் மீண்டும் துளிர்த்தது. நாரம் என்றால் தண்ணீர். இந்தச் சொல்லில் இருந்தே நாரதர் என்ற வார்த்தை பிறந்தது. பாவம் செய் தவர்களின் ஆதிக்கத்தால், உலகம் தத்தளித்த போது உயிர் கொடுக்க வந்தவர் நாரதர்.அவர், கங்கைக்கரையில் வசித்த முனிவர்களில் தலை சிறந்தவரான காஷ்யபரைச் சந்தித்தார். அப்போது, காஷ்யபரின் தலைமையில் மிகப் பெரும் யாகம் நடந்து கொண்டிருந்தது. மிகப்பெரிய தபஸ்விகள் எல்லாம் இணைந்து, உலகத்தின் நலன் கருதி இந்த யாகத்தை நடத்திக் கொண்டிருந்தனர்.நாரதர் மிகுந்த ஆனந்தமடைந்தார்.காஷ்யபரே! தங்கள் தலைமையில் நடக்கும் இந்த யாகத்தின் நோக்கம் புனிதமானது. ஆனால், எனக்கொரு சந்தேகம், என்று தன் கலாட்டாவை ஆரம்பித்தார். நாரதர் பேச ஆரம்பித்தாலே கலகம் தானே!மகரிஷியே! தாங்கள் யாகம் நடத்துகிறீர்கள் சரி...இந்த யாகத்தின் பலனை எந்த தெய்வத்துக்கு கொடுத்தால், உலகம் ÷க்ஷமமடையும் என நினைக்கிறீர்கள்! யாராவது தேவருக்கு இதை அர்ப்பணிக்கப் போகிறீர்களா? அல்லது சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய முப்பெரும் தெய்வங்களில் யாருக்கேனும் தரப் போகிறீர்களா? உங்கள் யாகத்தின் குறிக்கோள் உலக அமைதி. அதைத் தரவல்லவர் யாரோ அவருக்கு இந்த யாகத்தின் பலனை அளித்தால் தானே சரியாக இருக்கும், என்றார்.
இந்தக் கேள்வியால், காஷ்யபரே சற்று மிரண்டு விட்டார் என்றால், மற்ற மகரிஷிகளின் நிலையைச் சொல்லவும் வேண்டுமோ?அவர்கள் பதில் சொல்லத் தெரியாமல் விழித்தனர்.முக்காலமும் அறிந்த முனிவரே! சர்வலோக சஞ்சாரியே! இந்தக் கேள்வியின் நாயகனான நீரே அதற்கும் பதிலும் சொல்லி விட்டால் நன்றாக இருக்கும், என்று அவர் தலையிலேயே பாரத்தைத் தூக்கி வைத்து விட்டார் காஷ்யப மகரிஷி.நாரதருக்கு சிண்டு முடிய சரியான சந்தர்ப்பம் கிடைத்து விட்டது.முனிவர்களே! கர்வம், கோபம், சாந்தம் என்ற மூன்று குணங்களில் சாந்தமே உயர்ந்தது. எவரொருவர் எந்தச் சூழ்நிலையிலும் கோபம் கொள்ளாமல், உணர்ச்சிவசப்படாமல் இருக்கிறாரோ, அவர் எந்தச் செயலிலும் வெற்றி வாகை சூடுவார். அவ்வகையில் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகியோரில் யார் சாந்தகுணம் மிக்கவரோ அவருக்கே யாகத்தின் பலனைக் கொடுங்கள், என்றார்.முனிவர்கள் சிக்கிக் கொண்டனர்.அதெப்படி முனிவரே! மூன்று ரத்தினங்கள், முக்கனிகள்...இவை நம் கண் முன் தெரிந்தால் எதை வேண்டாமென்று ஒதுக்க முடியும். அனைவருமே சமவல்லமை உடையவர்கள் என்பதை பல சந்தர்ப்பங்களில் அறிந்திருக்கிறோம். அப்படியிருக்க, இதில் யார் சிறந்தவர் என்று சோதித்துப் பார்த்தால், அது நெருப்போடு விளையாண்ட கதையாக அல்லவா இருக்கும், என்றனர்.ஆமாம்...இது கஷ்டமான காரியம் தான்! ஆனாலும், உங்கள் யாகம் வெற்றி பெற வேண்டுமே! அதற்கு இந்த பரீட்சையை செய்து தானே ஆக வேண்டும். அப்படி செய்தால் தானே ஏதாவது ஒரு தெய்வம் இந்த பூமிக்கு வரும். முந்தைய யுகங்களில் தெய்வங்கள் பல அவதாரங்கள் எடுத்து பூமிக்கு வந்தனர். தர்மத்தை நிலைநிறுத்தினர். கலியுகத்தில் இறைவன் அர்ச்சாவதாரம் (கடவுள் மனிதனாகப் பிறத்தல்) செய்ய வேண்டுமென்றால், அதற்கு தகுந்தவர் யார் என்பதைத் தெரியாமல் யாகம் செய்து என்ன பலன்? என்றார்.நாரதரின் பேச்சு முனிவர் களைக் குழப்பினாலும், அவர் சொல்வதிலும் ஏதோ அர்த்தமிருப்பதாகப் பட்டது.உடனடியாக, அவர்கள் தங்களில் சிறந்த ஒரு முனிவரை இந்த சோதனைக்காக அனுப்புவது குறித்து விவாதித்தனர்.
ஒரு பெரிய மனிதரைப் பார்க்க போக வேண்டுமென்றால், அவரைச் சென்று சந்திப்பவர் சகல ஞானங் களிலும் விபரம் அறிந்தவராக இருக்க வேண்டும். அந்தப் பெரிய மனிதர் ஏதாவது தவறாகச் சொன்னால் கூட, அவரை எதிர்த்து வாதிடும் திறமையும் இருக்க வேண்டும். மனிதனின் வாழ்வியலுக்கே இப்படியென்றால், மூன்று கடவுள்களைச் சந்திக்கச் செல்பவர் மகாதிறமைசாலியாக இருக்க வேண்டுமே! அதற்குத் தகுந்தவர் பிருகு என்னும் மாபெரும் தபஸ்வி என முடிவு செய்யப்பட்டது.பிருகு முனிவர் ஆனந்தமடைந்தார்.சில தபஸ்விகளுக்கே இத்தகைய யோகம் கிடைக்கும். தங்களைத் தரிசிக்க மகா தபஸ்விகளுக்கு இறைவன் அருளும் மாபெரும் பாக்கியம் அது.அதே நேரம், இந்த பிருகு முனிவர் எப்படிப்பட்டவர் தெரியுமா? மகா அகம்பாவி. யாரையும் மதிக்க மாட்டார். அவருடைய தவவலிமை உயர்ந்தது தான்! ஆனால், ஆணவம் இருக்குமிடத்தில் பக்திக்கு இடமில்லையே! அவருக்கு ஆணவம் ஏற்படக் காரணம் என்ன தெரியுமா? எல்லோருக்கும் முகத்தில் இரண்டு கண் இருக்கும். ஆனால், இவருக்கு காலில் ஒரு கண் இருந்தது. அது ஞானக்கண். பிறர் வாழ்வில் என்ன நடக்கப் போகிறது என்பதை முன் கூட்டியே உணர்த்தும் கண். இந்தக் கண்ணைப் பெற்றதால் அவருக்கு திமிர். எல்லார் வாழ்வும் தன் கையில் இருப்பது போன்ற ஒரு நினைப்பு.நாரதருக்கு பிருகு மீது மிகுந்த அன்புண்டு. மகாதபஸ்வியான இவர், ஆணவத்தால் அழிந்துவிடக் கூடாதே என்ற நல்லெண்ணத்தில், அவரது கர்வத்தை பங்கம் செய்யும் விதத்தில், பிருகு முனிவரே தெய்வலோகங்களுக்கு செல்லலாம் என ஒப்புக்கொண்டார். பின்னர், அங் கிருந்து விடை பெற்று, பிற லோகங் களுக்கு புறப்பட்டுச் சென்றார்.பிருகு முனிவரும் தெய்வலோகங்களுக்கு ஆனந்தமாகப் புறப்பட்டார்.
ஏழுமலையான் பகுதி-3
பிருகு முனிவர் சத்யலோகம் சென்ற போது, அங்கே அன்னை சரஸ்வதியுடன் உரையாடிக் கொண்டிருந்தார் பிரம்மா. அனர்கள் வெள்ளை பொற்றாமரை சிம்மாசனத்தில் வீற்றிருந்தனர். அங்கே ஏராளமான மகரிஷிகள் அமர்ந்திருந்தனர். தேவரிஷிகள், பிரம்மரிஷிகளும் அவர்களில் அடக்கம். அனைவரும் வேதத்தின் பொருளை பிரம்மா மூலம் கேட்டுக் கொண்டிருந்தனர்.பிருகு முனிவர் சோதிக்க வந்த வரல்லவா! பிரம்மாவுக்கு கோபமூட்டினாலும், தன்னை வரவேற்கிறாரா அல்லது எடுத்தெறிந்து பேசுகிறாரா என பரீட்சை வைக்கும் பொருட்டு, பிரம்மாவுக்கும், சரஸ்வதிக்கும் சம்பிரதாயத்துக்காக வணக்கம் கூட தெரிவிக்காமல், அங்கிருந்த ஆசனத்தில் மிகவும் கர்வத்துடன் அமர்ந்து கால்மேல் கால் போட்டுக் கொண்டார்.பிரம்மாவுக்கு கோபம். இந்த பிருகு வந்தான், ஒரு வணக்கம் கூட சொல்லவில்லை, எனக்குத்தான் சொல்ல வேண்டும், இங்கே அவனை விட உயர்ந்த விஸ்வாமித்திரர், வசிஷ்டர் போன்ற பிரம்மரிஷிகளெல்லாம் வீற்றிருக்கிறார்கள். அவர்களுக்கு சொல்லியிருக்கலாம். இவனது வாய் பேசுவதற்கு காரணமான சரஸ்வதிக்கு சொல்லியிருக்கலாம். இவனை ஒரு கை பார்த்து விட வேண்டியது தான் என்றெண்ணியவராய், முகத்தில் கடும் கோபத்தைத் தேக்கி, ஏ பிருகு! என் வம்சத்தில் பிறந்த நீ, பிறருக்கு மரியாதை செய்வது என்ற சாதாரண தர்மத்தைக் கூட பின்பற்றவில்லை. இப்படிப்பட்ட, உன்னால் மற்ற உயர்ந்த தர்மங்களை எப்படி காப்பாற்ற முடியும்? இங்கே இருக்கும் விஸ்வாமித்திரர், வசிஷ்டர் போன்றவர்களெல்லாம் நாராயணனையே வழி நடத்தியவர்கள். இதோ இருக்கிறாரே! அத்திரி! அவர் மும்மூர்த்திகளையும் குழந்தையாக்கிய பெருமையை உடையவர். இதோ இருக்கிறாரே! ஜமதக்னி! அவருடைய மகனாக பெருமாளே அவதரித்தார்.
பரசுராமராக இருந்து இவரது உத்தரவுக்குக் கட்டுப்பட்டு, பெற்றவளையே வெட்டித்தள்ளினார். இதோ இங்கே பவ்யமாக அமர்ந் திருக்கிறாரே, கவுதமர்! அவரது மனைவியை இழிவுபடுத்திய காரணத்துக்காக இந்திரனுக்கே சாபமிட்டவர்... இப்படிப் பட்ட உயர்ந்தவர்கள் முன்னால், நீ கொசுவுக்கு சமமானவன். அப்படியிருந்தும் இந்த சபையை அவமதித்தாய், என்று சத்தமாகப் பேசினார்.பிருகுவுக்கு வந்த வேலை முடிந்து விட்டது.ஆனாலும், அவர் பிரம்மனுக்கு ஒரு சாபத்தைக் கொடுத்தார்.நான் முனிவனாயினும் மனிதன், நீயோ தெய்வம்.. அதிலும் படைப்பவன். உனக்கு பொறுமை இல்லை. நான் ஒரு தேர்வுக்காக இங்கு வந்தேன், அந்தத் தேர்வில் நீ தோற்றாய், வருகிறேன், என்று கிளம்பினார்.அடுத்து அவர், சிவலோகத்தை அடைந்தார்.அங்கே நந்தீஸ்வரர் வாசலில் நின்றார். சிவபெருமான் தன் மனைவி பார்வதியுடன் தனித்திருந்தார். வாசலில் பூதங்களும், துவார பாலர்களான காவலர்களும் பாதுகாத்து நின்றனர். நந்திதேவர் வாசலை மறித்துக் கொண்டிருந்தார். பிருகுவோ, இவர்கள் யாரையும் மதிக்கவில்லை. அங்கே நடந்த தியான வைபவத்தை பார்வையிட்டபடியே, அத்துமீறி புகுந்தார். நந்தியிடமோ, பிற காவலர்களிடமோ அனுமதி பெறவில்லை. சிவன் கோபத்தின் பிறப் பிடமல்லவா! தாங்கள் தனித்திருந்த போது, உள்ளே நுழைந்த பிருகுவிடம், நீ பிரம்ம வம்சத்தில் பிறந்திருந்தும் தர்மங்களை அறியாமல் உள்ளே வந்து விட்டாய். தம்பதியர் தனித்திருக்கும் போது, அங்கே செல்லக்கூடாது என்ற எளிய தர்மம் கூட புரியாத உனக்கு தபஸ்வி என்ற பட்டம் எதற்கு? இதோ! உன்னைக் கொன்று விடுகிறேன், என்றவராய் திரிசூலத்தை எடுத்தார்.ஆனால், அன்னை பார்வதி சிவனைத் தடுத்து விட்டார்.நாம் தனித்திருக்கும் வேளையில் நம் பிள்ளை தெரியாமல் வந்துவிட்டது.உலக உயிர்கள் அனைத்துமே நம் பிள்ளைகள் தானே! அதிலும், பிருகு தவத்தால் உயர்ந்தவன். எந்நேரமும் இறைநாமம் சொல்பவன். அவன் தெரியாமல் ஏதோ செய்துவிட்டான் என்பதற்காக இப்படி சூலத்தை ஓங்குகிறீர்களே என்று பிருகுவுக்கு சாதகமாகப் பேசினாள்.ஆனாலும், பிருகு இந்த சமாதானத்தைக் கண்டு கொள்ளவில்லை. அவர் வந்த வேலை முடிந்து விட்டது. கோபப்படுவது போல் நடித்து, அங்கிருந்து வைகுண்டம் சென்றார்.
ஹரி ஓம் நமோ நாராயணாய என்ற மந்திரம் எங்கும் ஒலித்துக் கொண்டிருந்தது. அன்னை மகாலட்சுமியின் கடாட்சத்தால் எங்கும் நவரத்தினங்களின் ஒளி வெள்ளம் பாய்ந்தது. அது ஒரு அருமையான நகரம். அந்த நகரத்தில் மாளிகைகளெல்லாம் தங்கத்தால் எழுப்பப் பட்டிருந்தன. வைகுண்டத்திலுள்ள ஒரு அரண்மனையில் மகாவிஷ்ணு துயிலில் இருந்தார். மகாலட்சுமி அவரது திருவடிகளைப் பிடித்துக் கொண்டிருந்தாள்.பிருகு வந்தது மகாவிஷ்ணுவுக்கு தெரியும். ஆனாலும், அவன் மாயவன் ஆயிற்றே! எந்த பரீட்சை வைத்தாலும் தேறி விடுவானே! படிக்கிற குழந்தைகள் மகாவிஷ்ணுவை தினமும் வணங்க வேண்டும். அவர் கல்வியின் அதிபதியான ஹயக்ரீவராகத் திகழ்கிறார்.ஞானானந்தமயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம் ஆதாரம் சர்வ வித்யானாம் ஹயக்ரீவ முபாஸ்மகே என்ற ஸ்லோகத்தை தினமும் சொன்ன பிறகு, கேசவா...கேசவா...கேசவா என ஏழு தடவைகள் தொடர்ச்சியாக சொன்ன பிறகு கல்விக்கூடத்துக்கு கிளம்பும் குழந்தைகள் மிகப்பெரிய தேர்ச்சி பெறுவார்கள்.பெருமாள் கோயிலுக்குப் போனால் முதலில் தாயாரை வணங்க வேண்டும். அப்படி அல்லாமல், நேராகப் பெருமாளை போய் வணங்கினால் கோரிக்கை அவ்வளவு எளிதில் நிறைவேறாது. பிருகுவோ மகாலட்சுமியைக் கண்டு கொள்ளவே இல்லை. அது மட்டுமல்ல!ஏ நாராயணா! பிரம்மலோகத் துக்கும், சிவலோகத்துக்கும் போய் அவமானப்பட்டு உன் லோகம் வந்தேன். நீயோ, எழக்கூட இல்லாமல் தூங்கிக் கொண்டிருக் கிறாய். பக்தனின் கோரிக்கைகளை கவனிக்காமல் இப்படி உறங்கினால் உலகம் என்னாவது? எழுந்திரு, என கத்தினார்.மகாவிஷ்ணு அது காதில் விழாதது போல் இருந்தார்.எல்லாரும் பகவானின் திருவடி தன் மீது படாதா என நினைப்பார்கள். இங்கே, பகவானோ பக்தனின் திருவடி தன் மீது படாதா என காத்திருந்தார். இதோ! அது பட்டுவிட்டது.
திருப்பதி ஏழுமலையான் திருவடிகளே சரணம் ஓம் நமோ வெங்கடேசாய ஓம் நமோ நாராயணாய