ஏழுமலையான் கதை பகுதி-4 பகுதி-5 பகுதி-6

திருமலை திருப்பதி ஏழுமலையான் திருவடிகளை சரணடைந்து தொடர்ந்து ஏழுமலையான் வரலாறு பகுதி பகுதியாக வெளியிட்டு வருகின்றோம் . அந்த வரிசையில் ஏழுமலையான் பகுதி-4 பகுதி 5 ,பகுதி 6 பதிவு செய்துள்ளோம்.அருமையான வரலாறு படித்தாலோ கேட்டாலோ புண்ணியம்!

முன்னதாக ஏழுமலையான் காயத்திரி மந்திரம்

ஸ்ரீனிவாச காயத்ரி மந்திரம் :

‘ஓம் நிரஞ்ஜநாய வித்மஹே

நிராபாஸாய தீமஹி

தந்நோ ஸ்ரீநிவாஸஹ் ப்ரசோதயாத்’

பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பகவானை அறிவோம். பந்தங்களில் இருந்து விடுபடச் செய்யும், அந்த பரம்பொருளின் மீது தியானம் செய்வோம். ஸ்ரீனிவாசனான அவன் நம்மை காத்து அருள்புரிவான் என்பது இதன் பொருளாகும்.

திருப்பதி ஏழுமலையான் திருவடிகளே சரணம் ஓம் நமோ வெங்கடேசாய ஓம் நமோ நாராயணாய

ஏழுமலையான் பகுதி-4

ஆம்... பகவானின் மார்பில் எட்டி உதைத்தார் பிருகு. மகாலட்சுமி எங்கிருக்கிறாள்? பெருமாளின் மார்பிலே இருக்கிறாள். தந்தையை மிதித்தது கூட மன்னிக்கத் தகுந்த குற்றம், இங்கே தாயார் மிதி பட்டிருக்கிறாள். அவளை மிதித்தது கொடிய பாவம். தாயை அவமதிப்பவனுக்கு நிச்சயம் தண்டனை உண்டு. இங்கோ, அவளை மிதிக்கவே செய்திருக்கிறார் பிருகு. அவருக்கு கண் போய்விட்டது.ஐயையோ! அப்படியானால், எல்லாருமே கோபக்கார தெய்வங்கள் தானே! கண்ணைப் பறித்துக் கொண்டாரே பெருமாள், என எண்ணி விடாதீர்கள். பெருமாள் முகத்திலுள்ள கண்ணைப் பறிக்கவில்லை. பிருகுவுக்கு கால்களில் கண்கள் உண்டு. அது ஞானக்கண். அதன் மூலம், எதிர்காலத்தில் பிறருக்கு என்ன நடக்கப்போகிறது என்பதை அவர் கணித்துச் சொல்லி விடுவார். இதனால், எல்லார் ஜாதகமும் தன் கையில் என்ற மமதை தான் பிருகுவின் இந்த ஆர்ப்பாட்டங்களுக் கெல்லாம் காரணம். ஆனால், எல்லார் எதிர்காலத்தையும் தெரிந்து வைத்திருந்த அவர், தன்னைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் விட்டதுதான் இப்போது இந்த அவலத்துக்கு காரணம்.ஞானக்கண் இருப்பதால் தானே பிருகு ஆட்டம் போடுகிறான். பெற்ற தாய்க்கு சமமான, உலகத்துக்கே படியளக்கிற லட்சுமி தாயாரை எட்டி உதைத்தானே! இவனுக்கு எதற்கு ஞானக்கண்! மற்றவர்கள் சொன்னார் களே என்பதற்காக தெய்வங்களை இவன் சோதித்ததற்குப் பதிலாக, அவர்களில் எல்லாரையும் இறைஞ்சி, யார் முதலில் வருகிறாரோ, அவருக்கு யாகபலனைக் கொடுப்போம் என்று முடிவெடுத்திருந்தால் இவன் ஞானி! பதிலுக்கு, ஆணவத்தால் அறிவிழந்த இவனுக்கு இதுவே தக்க தண்டனை எனக்கருதி, பெருமாள், பிருகுவின் காலிலுள்ள கண்ணை அவர் அறியாமலேயே பறித்து விட்டார்.ஆனால், ஏதும் அறியாதவர் போல் சயனத்தில் இருந்படியே, முனிவரே! மன்னிக்க வேண்டும். தாங்கள் இங்கு வந்ததை நான் கவனிக்கவில்லை.

ஐயோ! தங்கள் திருப்பாதங்கள் என்னை மிதித்த போது, என் மீதுள்ள ஆபரணங்களால் தங்கள் கால்களில் காயம் ஏதும் ஏற்பட்டதா? அமருங்கள், அமருங்கள், எனது மஞ்சத்தில் அமரும் தகுதி தங்களுக்குண்டு. தாங்கள் வந்த விபரம் பற்றி தெளிவாகச் சொல்லுங்கள். ஆவன செய்கிறேன், என்று ஆறுதல் மொழி சொன்னார்.பிருகுவுக்கே என்னவோ போல் ஆகிவிட்டது.ஆஹா... இவரல்லவோ பொறுமையின் திலகம். இவரை எட்டி உதைத்து விட்டோமே! பதிலுக்கு இவரை யாகபலனை வாங்க வரும்படி யாசித்திருக்கலாமே! என நினைத்த போது, கண்ணைப் பிடுங்கிய இடத்தில் வலிக்க ஆரம்பித்தது.அவர் அம்மா... அப்பா... எனக் கதறினார்.அதே நேரம், இறைவனை மிதித்ததற்காக தனக்கு இந்த தண்டனையும் தேவை தான் என்றபடியே, லட்சுமி நரசிம்மரை துதிக்க ஆரம்பித்தார். மனிதனுக்கு ஒரு கஷ்டம் வந்து விட்டால், உடனே லட்சுமி நரசிம்மரை  பிடித்துக் கொள்ள வேண்டும். அவரை நினைத்து லட்சுமி நரசிம்மம் சரணம் பிரபத்யே எனச் சொன்னால், கஷ்டம் பறந்தோடி விடும். தன் பக்தன், பிரகலாதானுக்கு ஒரு கஷ்டம் என்றவுடன், எங்கும் பரவிநின்ற அவர், அவன் குறிப்பிட்ட தூணில் இருந்து வெளிப்பட்டு பாதுகாத்தவர். அப்படிப்பட்ட கருணாமூர்த்தி தன் கண்ணெதிரில் சயனித்திருக்க, லட்சுமி நாராயணான அவரை லட்சுமி நரசிம்மராகக் கருதிய பிருகு, லட்சுமி நரசிம்மா! அறியாமல் செய்த தவறுக்கு என்னை மன்னிக்க வேண்டும், என்றார்.மகாவிஷ்ணு அவரிடம் சமாதானமாக, கவலை வேண்டாம் முனிவரே! பக்தனின் பாதம்பட நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். தங்கள் பிரச்னையைச் சொல்லுங்கள், என்றார்.பிருகுவும் யாகபலனை பெற பூலோகம் வரவேண்டும் என்று சொல்ல, அவ்வாறே ஆகட்டும் என பெருமாள் அருள்பாலித்தார். பிருகு புறப்பட்டார்.

மகாலட்சுமிக்கோ கடும் கோபம்.இங்கே என்ன நடக்கிறது? இந்த முனிவர் என்னை எட்டி உதைக்கிறார்? நீங்கள் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கிறீர்களே! (முனிவரின் கண்ணைப் பறித்தது லட்சுமிக்கு தெரியாது) இவரை இதற்குள் அழித்திருக்க வேண்டாமா? நம்பி வந்த மனைவியைக் காப்பாற்றுவது கணவனின் கடமை. இந்த தர்மத்தைக் கடைபிடிக்காத உங்களுடன் வாழ எனக்கு விருப்பமில்லை. நான் பூலோகம் செல்கிறேன். என்னை அங்கு வந்து பாருங்கள், என்று சொல்லி விட்டு, சயனத்தில் இருந்து எழுந்து வேகமாக எழுந்தாள் லட்சுமி தாயார். பகவான் அவளைச் சமாதானம் செய்தார்.லட்சுமி! பொறுமைக்கு இலக்கணமான பெண்களுக்கு கோபம் வரக்கூடாது. பிருகு யார்? நம் பக்தன்! பக்தர்கள் நமது குழந்தைகள். பல குழந்தைகளை பூமிக்கு அனுப்பினோம். சிலர் நம்மை வணங்குகிறார்கள், சிலர் தூஷிக்கிறார்கள். நம்மை தூஷிக்கிற குழந்தைகளுக்கு தான் நாம் ஏராளமான செல்வத்தைக் கொடுக்கிறோம், அவர்களையும் கருணையுடன் பார்க்கிறோம். காரணம் என்ன! அவன் தூஷணையை கைவிட்டு, நற்கதிக்கு திரும்ப வேண்டுமே என்பதற்காகத் தான்! பிருகு, ஒரு சோதனைக் காகவே இங்கு வந்தான். அந்த சோதனையில் வெற்றி பெற நான் அவனுக்கு உதவினேன். நீயும் அவனை ஆசிர்வதிக்காமல் விட்டுவிட்டாயே, என்றார்.லட்சுமி அவரிடம், தாங்கள் சொல்லும் சமாதானத்தை ஏற்க முடியாது. கணவனிடம் என்று பாதுகாப்பு கிடைக்கவில்லை என ஒரு பெண் உணர்கிறாளோ, அதன் பின் அவனை நம்பிப் பயனில்லை. நான் தங்களை விட்டுப் பிரிகிறேன். மேலும். நீர் சந்தர்ப்பவாதி. எந்த விஷயமாக இருந்தாலும் சமாதானம் கூறி, மாயம் செய்து தப்பித்து விடுவீர்! என்னை அவமதித்த பிருகுவைத் தண்டித்தே தீருவேன், என சொல்லிவிட்டு, அங்கிருந்து கிளம்பி விட்டாள்.பூலோகத்திலுள்ள ஒரு புண்ணியத்தலத்துக்கு வந்தாள். ஊரின் பெயரிலேயே பேரழகு.... ஆம்... அவ்வூரின் பெயரிலேயே ஜீவகாருண்யம் இருந்தது... அதுதான் கொல்லாபுரம்.

ஏழுமலையான் பகுதி-5

லட்சுமி ஒரு இடத்தில் இருக்கும் வரை தான் யாருக்குமே மதிப்பு... நம் வீட்டிலேயே எடுத்துக் கொள்வோமே! வேலைக்கு போகும் வரை மனைவி கணவனை  கொண்டாடுவாள், பிள்ளைகள் ஒன்றாம் தேதியானால் சுற்றி சுற்றி வருவார்கள். வேலையில் இருந்து நின்ற பிறகு, பென்ஷன் வாங்கினால் ஏதோ கொஞ்சம் மதிப்பிருக்கும். ஒன்றுமில்லாவிட்டால்... கண்டு கொள்வார் யார்?லட்சுமி பிராட்டியார் பூலோகம் சென்று கொல்லாபுரத்தில் தங்கிவிட்டதால், வைகுண்டத்தின் செல்வச்செழிப்பு அகன்றது. ஸ்ரீதேவி சென்று விட்டதால், தரித்திர தேவி உள்ளே புகுந்தாள். தேவர்களெல்லாம் கலங்கினார்கள்.அவர்கள் திருமாலிடம், பெருமாளே! தாங்கள் லட்சுமி தாயார் எங்கிருந்தாலும் கண்டுபிடித்து, அவர்களைச் சமாதானம் செய்து மீண்டும் வைகுண்டம் அழைத்து வர வேண்டும். தேவலோகமே வறுமைக்கு ஆட் பட்டால், செல்வம் வேண்டி வணங்கும் நம் பக்தர்களுக்கு எப்படி வாரி வழங்குவது! உலக உயிர்களுக்கு படியளக்காவிட்டால், நமக்கு எப்படி மதிப்பிருக்கும்? என்றனர்.திருமாலும், அவர்கள் முன்னால் நாடகமாட ஆரம்பித்து விட்டார். ஆமாம்..ஆமாம்...லட்சுமி இங்கிருந்து செல்வதைத் தடுத்திருக்க வேண்டும். பிருகுவைக் கண்டித்திருந்தால், அவள் இங்கிருந்து சென்றிருப்பாளா? பின்விளைவுகளைப் பற்றி சிந்தியாமல் இருந்து விட்டேனே, என வருத்தப்படுவது போல நடித்தவர், பூலோக சஞ்சாரத்துக்குதயாராகி விட்டார்.லட்சுமி அங்கேயே இருந்திருந்தால், பூலோகத்தில் முனிவர்களின் கோரிக்கையை எப்படி நிறைவேற்ற முடியும்? கலியுகத்தில் நடக்கும் பாவங்களை எப்படி தடுக்க முடியும்? இந்தக் காரணத்தால், லட்சுமிக்கு கோபம் வரச் செய்த திருமால், அவளுக்கு பூலோகம் செல்லும் மனநிலையை உண்டாக்கி விட்டு, தானும் அங்கே செல்ல தயாரானார். தேவர்களே! லட்சுமி எங்கிருந் தாலும் நான் அழைத்து வருகிறேன். அதுவரை பொறுமை காக்க வேண்டும், என்றவர் அவள் மறைந்திருக்கும் இடத்தை தேடியலைவது போல் பல இடங்களிலும் சுற்றினார்.

சீதையைப் பிரிந்த ஸ்ரீராமன் காட்டில் எப்படியெல்லாம் தேடியலைந்தாரோ! செடி, கொடிகளிடம் எல்லாம் என் சீதையைப் பார்த்தீர் களா! என்று கேட்டு புலம்பினாரோ, அதுபோல திருமால், என்லட்சுமியைப் பார்த்தீர்களா! என்று செடி, கொடிகளிடமெல்லாம் கேட்டுக்கொண்டே நடந்தார்.எங்கு தேடியும் லட்சுமி கிடைக்காமல், ஏழு மலைகளை உள்ளடக்கிய திருமலை என்னும் மலைக்கு வந்தார். அப்பகுதியில் ஆதிவராஹர் குடியிருந்தார். திருமால் எடுத்த அவதாரங்களில் பன்றி முகம் கொண்ட வராஹ அவதாரமும் ஒன்று. வராஹமாக அவதாரமெடுத்து, பூமியைத் தோண்டி வேதங்களைக் கண்டெடுத்து பிரம்மாவிடம் ஒப்படைத்த பிறகு, அதே வடிவில் திருமலையில் அவர் குடியிருந்தார். ஆதியில் தோன்றியவர் என்பதால், அவர் ஆதிவராஹர் எனப்பட்டார். இதனால், திருமலையில் அவர் தங்கியிருந்த இடமும் ஆதிவராஹ ÷க்ஷத்ரம் எனப்பட்டது.இந்த தலத்தை ஆதிவராஹ நரசிம்ம ÷க்ஷத்ரம் என்றும் அழைப்பர். நரசிம்மரும் இதே மலையை ஒட்டிய அஹோபிலத்தில், தன்அவதார காலத்தை முடித்து விட்டு தங்கியிருந்தார்.திருப்பதி வெங்கடாசலபதியின் செல்வச்செழிப்புக்கு காரணமே இந்த நரசிம்மர் தான் என்ற கருத்தும் உண்டு.இங்கு வந்த திருமால், ஒரு புளியமரத்தில் இருந்த புற்றில் அமர்ந்து தவம் செய்ய ஆரம்பித்து விட்டார்.திருமால் ஒருபுறம், லட்சுமி ஒருபுறம் இருந்தால் உலக இயக்கம் என்னாகும்? இதை சரிசெய்ய எண்ணினார் கலக முனிவர் நாரதர். அவர், தன் தந்தையான பிரம்மாவிடம் சென்றார்.தந்தையே! பிருகு முனிவர் செய்த சோதனையால் கோபமடைந்த லட்சுமி தாயார் இப்போது கொல்லாபுரத்தில் இருக்கிறாள்.திருமாலோ, ஆதிவராஹ ÷க்ஷத்ரத்தில் தவத்தில் ஆழ்ந்து விட்டார். அவர் லட்சுமியைக் காணாமல் அன்னம் கூட புசிப்பதில்லை. இப்படியே போனால் என்ன செய்வது?முதலில் திருமாலுக்கு அன்னம் புகட்ட வேண்டும். அதற்கு தாங்கள் தான் ஏற்பாடு செய்ய வேண்டும், என்றார்.

பிரம்மா உடனடியாக சிவபெருமானிடம் சென்றார். நடந்த விஷயத்தைச் சொன்னார். மேலும், பெருமானே! நாம் இருவரும் பசு, கன்று வேடத்தில் செல்வோம்.அவருக்கு பால் புகட்டி வருவோம், என்று வேண்டுகோள் விடுத்தார்.மைத்துனருக்கு ஒரு பிரச்னை என்றால், சிவனுக்கு பொறுக்குமா? இப்போதும் கூட கிராமங்களில் மைத்துனன் இருந்தால் மலையேறி பிழைக்கலாம், என்பார்கள்.இதன் பொருள் தெரியுமா?மைத்துனரான திருமால் திருமலையில் இருக்கிறார். அவரது பசி போக்க கைலாயமலையில் இருக்கும் சிவன், திருமலையில் ஏறப்போகிறார். இதனிடையேநாரதர் பூலோகம் சென்று கொல்லாபுரத்தில் தவத்தில் இருந்த லட்சுமி தாயாரைச் சந்தித்தார்.நாராயணா என்ற திருநாமம் முழங்க வந்த அவரை லட்சுமி வரவேற்றாள்.தாயே! தாங்கள் சிறு பிரச்னைக்காக கோபித்துக் கொண்டு வந்து விட்டீர்கள். நீங்கள் இல்லாமல் திருமாலால் ஒரு கணமாவது வைகுண்டத்தில் இருக்க முடியுமா? அவர் உங்கள் மீது கொண்டுள்ள அன்பைக் குறைத்து மதிப்பிட்டு விட்டீர்களே! தாங்கள், அவரைப் பிரிந்த ஏக்கத்தால் அவர் மனம் பட்ட பாடு தெரியுமா? அவர் உங்களைத் தேடி காடுகள், மலைகள், குகைகளில் எல்லாம் அலைந்தார். எங்கும் கிடைக்காமல், இப்போது திருமலையிலுள்ள ஆதிவராஹ ÷க்ஷத்ரத்தில் தங்கியுள்ளார். தங்களை எண்ணி புலம்பி அலைந்த அவர், சாப்பாடு, உறக்கம் ஆகியவற்றை மறந்து, தாங்கள் கிடைக்க வேண்டுமென்பதற்காக ஒரு புளியமரப்பொந்தில் தவத்தில் ஆழ்ந்து விட்டார். தாங்கள் அவரைக் காப்பாற்ற உடனடியாக கிளம்ப வேண்டும், என்றார்.லட்சுமிக்கு பகீரென்றது.அவசரப்பட்டு விட்டோமே என வருந்திய அவள் திருமாலைக் காப்பாற்ற முயற்சி எடுத்தாள்.

ஏழுமலையான் பகுதி-6

தன் கணவருக்கு ஏற்பட்ட கஷ்டத்தை போக்குவதற்காக லட்சுமி மகேஸ் வரனிடம் சென்றாள். தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடை அவரிடம் சொல்லி தனது அவசரம் காரணமாக திருமால் பூலோகம் சென்று ஒரு புளியமரத்தின்கீழ் அன்ன பானமின்றி தவமிருப்பது பற்றி எடுத்துச் சொன்னாள். மகேஸ்வரன் அவளது கஷ்டத்தை போக்குவதற்கு வாக்களித்தார். பிரம்மாவை வரவழைத்தார்.பிரம்மனே! நாம் இருவரும் பசு, கன்றுவாக மாறி, நாராயணனின் இருப்பிடத்திற்கு செல்ல வேண்டும். நம்மை லட்சுமி சந்திரகிரி நாட்டின் அரசன் சோளராஜனுக்கு விற்றுவிடுவாள். நாம் அந்த நாட்டில் தவம் செய்து கொண்டிருக்கும் நாராயணனை தேடிச்சென்று அவரது பசி போக்க பாலூட்டுவோம்,  என்றார். லட்சுமி மகிழ்ச்சி அடைந்தாள். இதன்பிறகு பிரம்மா பசுவின் வடிவையும், மகேஸ்வரன் கன்றுக் குட்டியின் வடிவையும் அடைந்தனர். லட்சுமிதேவி அவற்றை மேய்ப்பவள் போல வேடமணிந்தாள். பசு, கன்றுகளை ஓட்டிக்கொண்டு சந்திரகிரிக்கு வந்துசேர்ந்தாள். அந்த பசுவும் கன்றும் அந்நாட்டு மக்களை கவர்ந்தன. இதுபோன்ற உயர்ந்த ஜாதி பசுவை நாங்கள் இதுவரை கண்டதில்லை. இதன் மடு மிகவும் பெரிதாக இருக்கிறது. ஒருமுறை பால் கறந்தால் உலகத்திற்கே போதும் என்கிற அளவிற்கு பெரிதாக மடு கொண்ட பசுவை அதிசயப்பிறவி என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. இது எங்கள் தேசத்திற்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம் என்றே கருதுகிறோம். இந்த மாட்டுக்கு சொந்தக்காரி பேரழகு பொருந்தியவளாக இருக்கிறாள். லட்சுமி கடாட்சம் இவள் முகத்தில் தாண்டவமாடுகிறது, என்று புகழ்ந்து பேசினர்.தங்கள் நாட்டிற்கு வந் திருக்கும் அதிசய பசு, கன்று பற்றிய தகவல் அரண்மனைக்கு சென்றது. மன்னன் சோளராஜன் அவற்றை பார்க்க விரும்பினான். இதை எதிர்பார்த்து காத்திருந்த லட்சுமி பிராட்டியார், பசுக்களை ஓட்டிக்கொண்டு அரண்மனைக்கு சென்றாள்.மன்னன் அந்த பசுக்களை பற்றி விசாரித்தான்.பெண்மணியே! உனது நாடு எது? எந்த நாட்டில் இதுபோன்ற உயர்ஜாதி பசுக்கள் இருக்கின்றன? இதன் சிறப்பம்சம் என்ன? தெளிவாகச் சொல், என கேட்டான்.

லட்சுமி பிராட்டி அவனிடம், மன்னனே! இந்த பசுக்களுக்கு உணவிட சாதாரண மனிதர்களால் முடியாது. இவை மிக அதிகமாக சாப்பிடும். ஆனால் உணவிற்கேற்ற பாலை இந்த ஊருக்கே தரும். நீ அரண்மனைவாசி. உன்னால் இதை வளர்க்கமுடியும். இந்த பசுக்களுக்கு தேவையான உணவை கொடுத்து வா. உன் நாடே வளமாகும், என தெரிவித்தாள். சோளராஜனுக்கும், அவனது மனைவிக்கும் அந்த பசுக்களை மிகவும் பிடித்துவிட்டது.உலகத்திற்கே படியளக்கும் லட்சுமி பிராட்டிக்கு பணம் கொடுத்து அந்த பசுக்களை வாங்கிக்கொண்டனர். அரண்மனை கொட்டிலில் அந்த பசுக்கள் அமைதியாக நின்றன. அவற்றை கட்டிப்போட வேண்டும் என்ற அவசியம் வரவில்லை. எந்தப் பிரச்னையும் செய்யாமல் சாப்பிட்டன. அதுவரை அப்படிப் பட்ட பசுக்களை பார்க்காத பராமரிப்பு ஊழியர்கள் ஆச்சர்யமும் ஆனந்தமும் கொண்டனர்.சோளராஜன் தலைமை பசு பராமரிப்பாளரை அழைத்து, சேவகனே! இந்த பசு கறக்கும் பாலை மட்டும் அரண்மனையில் ஒப்படைத்துவிட வேண்டும். இதன் பால் தெய்வாம்சம் மிக்கது என இதை என்னிடம் விற்ற பெண்மணி சொல்லியிருக்கிறாள். இவற்றை வேங்கடாசல மலைக்கு அழைத்து சென்று மேயவிடு. மிகவும் கவனமாக பார்த்துக்கொள், என சொல்லி அனுப்பினான். பராமரிப்பாளர்கள் அந்த பசுக்களை வேங்கடாசல மலைக்கு ஓட்டிச் சென்றனர். சேவகர்கள் மதியவேளையில் ஓய்வெடுக்கும் நேரத்தில் அந்த பசுக்கள் மந்தையைவிட்டு பிரிந்து மலையிலிருந்த புளியமரத்தின் அருகில் சென்றன. புற்றுக்குள் ஸ்ரீமந் நாராயணன் தவத்தில் இருந்தார். அவர்மீது அந்த பசு பாலை சொரிந்தது. திடுக்கிட்டு விழித்த நாராயணன், மேல்நோக்கி பார்த்தார். பால் வழிந்துகொண்டிருந்தது. வாய் திறந்து அந்த பாலை பருகினார். இப்படியாக தினமும் அந்த பசுக்கள் புற்றுக்கு சென்று அதனுள் அமர்ந்திருந்த ஹரிக்கு பாலை சொரிந்துவிட்டு வந்தன.

மிகுந்த எதிர்பார்ப்புடன் வாங்கப்பட்ட பசு, பால் கொடுக்காததால் அரண்மனையில் பிரச்னை ஏற்பட்டது. இவற்றை விற்கவந்த பெண்மணி அரசனையே ஏமாற்றிவிட்டாளோ என்று பேசிக்கொண்டனர்.மகாராணி பராமரிப்பாளனை அழைத்து, இந்த மாடு பால் கொடுக்கிறதா? இல்லையா? ஒரு வேளை நீயே இந்த பாலை குடித்துவிடுகிறாயா? உண்மையை சொல்லாவிட்டால் உன் தலையை எடுத்துவிடுவேன், என எச்சரித்தாள். அவன் பதறிப்போனான்.மகாராணி! எல்லா பசுக்களையும் போல இதையும் திருவேங்கடமலைக்கு ஓட்டிச் செல்கிறேன். எங்கள் பார்வையில்தான் இந்த பசுக்கள் மேய்கின்றன. மடு மிகவும் பெரிதாக இருக்கிறது. ஆனால் கறந்தால் பால் வருவதில்லை. இது என்ன அதிசயம் என்று எங்களுக்கு புரியவில்லை. மாயப்பசுக்களாக இவை உள்ளன, என்று சொல்லி அவளது காலில் விழுந்தான்.மகாராணிக்கு அவனது பேச்சில் நம்பிக்கை வரவில்லை.பொய்யனே! உன் பேச்சை நான் நம்பமாட்டேன். மிகச்சிறிய கன்றை ஈன்றுள்ள இந்த பசுவிற்கு எப்படி பால் இல்லாமல் போகும்? இன்று ஒருநாள் அவகாசம் தருகிறேன். நாளை முதல் எப்படியும் இந்த பசுவின்பால் அரண்மனைக்கு வந்தாக வேண்டும். இல்லாவிட்டால் உன்னை கொன்றுவிடுவேன், என மிரட்டி அனுப்பினாள்.என்ன செய்வதென அறியாத பராமரிப்பாளன் மறுநாள் அந்த பசுவின் மீது ஒருகண் வைக்க ஆரம்பித்தான். மதிய வேளையில் அவன் ஓய்வெடுக்கவில்லை. பசுக்கள் புற்றை நோக்கி சென்றன. பராமரிப்பாளன் பின்தொடர்ந்தான். புற்றின் அருகே சென்ற பசு, பால் சொரிய ஆரம்பித்தது. அவன் அதிர்ச்சியடைந்தான். கடும் கோபம் ஏற்பட்டது. தனது கையில் இருந்த தடியுடன் பசுவை அடிக்க பாய்ந்தான்.

ஏழுமலையான் பகுதி-7 ,8, 9 .. தொடரும்

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!