நாம் வேண்டுகோள் வைப்பதற்கு முன்பு நம் நிலை அவர் அறிவார் !அத்தகைய திருமலை ஏழுமலையான் புகழ் வரலாறு கதை பகுதி 7 ,பகுதி 8 பகுதி 9 பதிவு செய்துள்ளோம். நாளை பகுதி 10,11,12 புராணம் பகுதிகள் திருவருளால் பதிவு செய்ய உள்ளோம். திருப்பதி ஏழுமலையான் திருவடிகளே சரணம்
ஓம் நமோ வெங்கடேசாய ஓம் நமோ நாராயணாய
திருப்பதி சென்று திரும்பி வந்தால் ஓர்
திருப்பம் நேருமடா..
உந்தன் விருப்பம் கூடுமடா நீ
திறந்திட நினைக்கும்
தானே திறக்குமடா.. அந்த
வேங்கடம் அறியுமடா..நீ
உள்ளதை சொல்லி கருணையைக் கேட்டால்
உன் கடன் தீருமடா.. செல்வம்
உன்னிடம் சேருமடா..
திருப்பதி சென்று திரும்பி வந்தால் ஓர்
திருப்பம் நேருமடா..
சமநிலை கிடைக்குமடா உன்
எண்ணங்கள் மாறும் வண்ணங்கள் மாறும்
நனமைகள் நடக்குமடா- உள்ளம்
நல்லதே நினைக்குமடா..
அஞ்சலென்று கரம் தரும் வெங்கடேஸ்வரா..
தஞ்சமென்றவர்கள் நெஞ்சில்
அன்பு தரும் வெங்கடேஸ்வரா...வெங்கடேஸ்வரா..
திருப்பதி சென்று திரும்பி வந்தால் ஓர்
திருப்பம் நேருமடா..
ஏழுமலையான் பகுதி-7
பசு மேய்ப்பவன், அதை அடிக்கப் பாயவும், மரப் பொந்துக்குள் இருந்த ஸ்ரீமன் நாராயணன் அதைக் கவனித்து விட்டார். துள்ளி எழுந்தார்.ஏ கோபாலா! பசுவை அடிக்காதே, என்று துள்ளிக் குதிக்கவும், பசு அங்கிருந்து நகர்ந்தது. பசுவை நோக்கிப் பாய்ந்த தடியடி, நாராயணனின் தலையில் விழுந்தது. ரத்தம் கொப்பளித்து சிதறி, பசுவின் மீதும் பட்டது.பசு பராமரிப்பாளனான கோபாலன் நடுநடுங்கி விட்டான்.சுவாமி! தாங்கள் யார்? இந்த பொந்துக்குள் தாங்கள் தவமிருப் பது தெரியாமல் தங்களை அடித்து விட்டேனே! பசு வீணாக பாலைச் சொரிகிறதோ என நினைத்து, அறியாமல் செய்த என் தவறை மன்னித்தருள வேண்டும், என்று அவர் பாதங்களில் விழுந்து கெஞ்சியவன், அதிர்ச்சியில் அப்படியே மயக்கமடைந்து விட்டான். இதற்குள் பசு சோழராஜனின் அரண்மனைக்குள் புகுந்தது. அதன் உடலில் ரத்தக்கறையாக இருந்தது. அனைவரும் பசுவுக்கு என்னாயிற்றோ என கலங்கினர். அந்தப்பசு யாரையும் சட்டை செய்யாமல் சோழராஜனின் முன்னால் வந்து நின்றது.ராஜனும், அவன் தேவியும் கலங்கி விட்டார்கள். தங்கள் அன்புக்குரிய பசு, எங்காவது விழுந்து அடிபட்டு விட்டதோ! ஒருவேளை, பால் கொடுக்காத ஆத்திரத்தில் பசு மேய்க்கும் கோபாலன் அதை அடித்ததில் ரத்தம் வழிகிறதோ! இப்படி, பல்வேறு விதமான சிந்தனைகளுடன் பசுவின் உடலை அவர்களே கழுவினர். அது ரத்தக்கறை என்பதும், பசுவின் உடலில் இருந்து வழியவில்லை என்பதும் புரிந்தது. இருப்பினும், குழப்பம் தீராத அவர்கள், பசு மேய்ந்த இடத்துக்கே அவசரமாகத் தேரில் சென்றனர்.அங்கே, கோபாலன் மயங்கிக் கிடந்ததையும், திருநாமம் அணிந்த தபஸ்வி ஒருவர் ரத்தம் வழிய, வலி தாங்காமல் அரற்றிக் கொண்டிருந்ததையும் கண்டனர்.சுவாமி! நான் இந்நாட்டின் மன்னன் சோழராஜன். தாங்கள் யார்? தங்களுக்கு ஏன் இந்த அவலம் ஏற்பட்டது? எனக் கேட்க, ஸ்ரீமன் நாராயணன் கோபமாகப் பேசினார்.
மன்னா! உன் நாட்டில் பசுக்கள் பராமரிக்கப்படும் லட்சணம் இதுதானா? எந்த நாட்டில் பசுக்கள், பால் தந்தாலும், தராவிட்டாலும் புறக்கணிக்கப்படுகின்றனவோ அந்த நாட்டில் மழையே பெய்யாது. அங்கே வறுமை தாண்டவமாடும். சண்டையும் சச்சரவும் மிகுந்து உயிர்ப்பலி அதிகமாகும். எதிரிகள் அந்த நாட்டை வேட்டையாடுவார்கள். உன் நாட்டிலும், பசுக்களுக்கு பாதுகாப்பில்லை. இதோ! நான் தவமிருந்த இந்தப் புற்றுக்கு தினமும் வந்த ஒரு பசு, எனக்கு பாலைச் சொரிந்தது. ஒரு பசு ஒருவனுக்கு பால் கொடுப்பது உன் நாட்டில் பெரும் குற்றமா? அதற்காக, இந்த கோபாலன் அந்த மாட்டை அடிக்கப் பாய்ந்தானே? பசுக்களை அடிப்பது எவ்வளவு பெரிய பாவம்? பசுக்களை அடிக்கத் துணிபவன், அவற்றை மேய்ப்பதற்கே தகுதியற்றவ ஆயிற்றே! என்று கடிந்து கொண்டார். சோழராஜன், கோபாலன் செய்த தவறுக்காக அவரது பாதங்களில் விழுந்தான்.முட்டாளே! ஒரு வேலையில் தவறு நடந்தால் அதைச் செய்யும் சேவகனை விட, அவனை வேலைக்கு நியமித்தவனே பொறுப்பேற்க வேண்டும். அதிலும், பசுக்களை பராமரிக்க பொறுமை நிறைந்த ஒரு வேலைக்காரனைத் தேர்ந்தெடுக்காத நீ பிசாசாக மாறக் கடவாய், என சாபமிட்டார்.சோழராஜன் நடுநடுங்கி, சுவாமி! என் தவறுக்கு நானே பொறுப்பேற்கிறேன். இருப்பினும், அறியாமல் நடந்து விட்ட இந்த தவறை மன்னித்து சாபத்தை திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டுகிறேன், என மன்றாடினான்.அப்போது ஸ்ரீஹரி அவன் முன் சுயரூபம் காட்டி தரிசனம் தந்தார்.சோழராஜா! காரண காரியங் களுடனேயே எல்லாச் செயல்களும் நடக்கிறது. பசுக்களை பராமரிப்பதன் முக்கியத்துவத்தை உலகுக்கு எடுத்துக்காட்டவே, நான் இந்த லீலையை நிகழ்த்தினேன். என் சாபத்தை விலக்கிக் கொள்ள இயலாது. நீ சில காலம் பிசாசாக திரிந்து, அடுத்த பிறவியில் ஆகாசராஜன் என்ற பெயரில் பிறப்பாய். அப்பிறவியிலும் நீ மன்னனாகவே இருப்பாய். என் தேவி லட்சுமி, பத்மாவதி என்ற பெயரில் உனக்கு மகளாகக் கிடைப்பாள். அவளை எனக்கு மணம் முடித்து வைப்பாய், என்று அருள்பாலித்தார்.
ஸ்ரீமன் நாராயணா! பத்மநாபா! புண்டரீகாக்ஷõ! மதுசூதனா! கோபாலா! உன் தரிசனம் கிடைத்ததே போதும், இனி பேயாய் அலைந்தாலும் உன் நினைவுடனேயே திரிவேன், என்ற சோழராஜன் பேய் வடிவம் அடைந்து அங்கிருந்து அகன்றான்.இதன் பிறகு, மயக்கமடைந்து கிடந்த கோபாலன் எழுந்தான். அவன் தன் முன்னால் நாராயணன் நிற்பதைக் கண்டு ஆனந்தம் கொண்டு, ஹரிஹரி... ஹரி ஹரி... என்று சொல்லி வணங்கினான்.தெய்வமே! நான் செய்த மாபெரும் தவறுக்காக என்னை நரகத்துக்கு அனுப்பினாலும் அந்த தண்டனையை உளமாற ஏற்கிறேன். நாங்கள் அறிவொன்றும் இல்லாத ஆயர் குலத்தினர். படிப்பு எங்களுக்கு இல்லை. ராணியார் கொடுத்த நெருக்கடியால், இந்தத் தவறைச் செய்யும்படி ஆயிற்று. இருப்பினும், பசு ஏன் பாலைச் சொரிகிறது என்று நான் தெரிந்து கொண்டிருக்க வேண்டும். நீ தரும் தண்டனையை நான் ஏற்கிறேன், என்றான்.நாராயணன் சிரித்தார்.கோபாலா! இந்த பூலோகத்துக்கு நான் வந்து, இந்த மரப்புற்றில் தங்கினேன். எல்லோரும் என்னை பல்வேறு விதங்களில் வழிபடுவார்கள். நீ அடித்து வழிபட்டாய். பசு மேய்ப்பவர்கள் எனது பக்தர்கள். ராணியின் நிர்ப்பந்தம் காரணமாகவே நீ பசுவை அடிக்கப் பாய்ந்தாய். அதனால், தவறு உன் மீதல்ல. மேலும், பூலோகம் வந்த என்னை முதன்முதலாகத் தரிசித்தவனும் நீ தான்!எனவே, ஒரு சிறப்பான வாய்ப்பைத் தரப்போகிறேன். நான் இந்த வேங்கடமலையில் ஸ்ரீனிவாசன் என்ற பெயரில் தங்குவேன். என் கோயில் திறந்ததும், முதல் தரிசனம் உனது வம்சத்தவர்களுக்கே தருவேன், என்று அருள் செய்து மறைந்தார்.இப்போதும், திருப்பதி கோயிலில் கோபாலனின் வம்சத்தினரே, அதிகாலையில் முதல் தரிசனம் பெறுகிறார்கள். அடுத்து, ஸ்ரீனிவாசன் மானிட வடிவில், தான் அந்த மலையில் தங்குவதற்குரிய வேறு இடத்தைத் தேடி புறப்பட்டார்.
ஏழுமலையான் பகுதி-8
தலையில் ரத்தம் தொடர்ந்து வழிந்து கொண்டிருந்தது. காயம் அதிகமாக வலித்தது. அதை சகித்துக் கொண்டு, சீனிவாசன் நீண்ட தூரம் அந்தக் காட்டுக்குள் நடந்தார். அப்போது, தேவகுருவான பிரகஸ்பதி அங்கே வந்தார்.சீனிவாசனை வணங்கினார்.நாராயணா! கலியுகத்தில் மக்களைப் பாதுகாக்க தாங்கள் பூலோகம் வந்தீர்கள்! ஆனால், அந்தக் கலி, கடவுளாகிய உங்களையே விட்டு வைக்கவில்லையே! தங்கள் தலையில் ரத்தம் வழிவதைக் காண சகிக்காமல், தேவலோகத்தில் இருந்து ஓடோடி வந்தேன். எருக்கு இலையில் ஆலமரத்து பாலைக் கட்டி புண்ணிருக்கும் இடத்தில் வைத்துக் கட்டுங்கள். விரைவில் இந்தக்காயம் குணமாகி விடும், என்று சொல்லிவிட்டு விடை பெற்றார். பாருங்களேன்! கலியுகத்தில் பரமாத்மாவே அடிவாங்கி கஷ்டப் பட்டிருக்கிறார் என்றால், சாதாரண ஜனங்களான நமக்கு ஏற்படும் கஷ்டத்தைப் பற்றி ஆச்சரியப்பட என்ன இருக்கிறது!சீனிவாசன் நடையைத் தொடர்ந்தார்.காட்டில் ஓரிடத்தில் ஹரே கிருஷ்ணா! ஹரே கிருஷ்ணா! ஹரே கிருஷ்ணா என்று பாடும் குரல் கேட்டது. அது ஒரு பெண்ணின் குரல். சீனிவாசன், தன்னை யாரோ நினைத்துப் பாடுகிறார்களே என்று மகிழ்ச்சியுடன் குரல் வந்த திசை நோக்கி நடந்தார். ஒரு குடிசையில் விளக்கொன்று எரிந்து கொண்டிருக்க, நடுத்தர வயது பெண் ஒருத்தி, கிருஷ்ணகானம் இசைத்துக் கொண்டிருந்தாள்.தன்னை நினைத்துப் பாடும் அந்த பக்தை யாரென்று அந்த பரமாத்மாவுக்கு தெரியாமலா இருக்கும்!ஆனால், மானிட அவதாரம் எடுத்து வந்து விட்டாரே! அதற்கேற்ற வகையில் தன் இயல்பை மாற்றிக்கொண்ட அவர், தன்னிலை மறந்து ஏதும் அறியாதவராய், அம்மா, அம்மா என்று அழைத்தார்.இந்தக் குரலைக் கேட்டதும், உள்ளிருந்த அந்தப் பெண்மணிக்கு இதயத்தைப் பிசைவது போல் இருந்தது.ஆ... இது என் குழந்தையின் குரல் அல்லவா! துவாபராயுகத்தில் இவன் என் வயிற்றில் பிறக்காத பிள்ளையாக என் வீட்டில் வளர்ந்தானே! இவனைப் பெற்றவளை விட, என்னைத்தானே அந்த யுகத்திலும், இந்தக் கலியிலும் உலகம் கொண்டாடுகிறது! ஆ...அப்படியானால் அவன் தான் இவனா? அவள் வெளியே ஓடிவந்து பார்த்தாள்.
ஆம்!அதே முகம்! அதே நீல வண்ணம், இவன் தான்! நான் வளர்த்த கண்ணன் என்னும் செல்லப்பிள்ளை தான் இவன். எனக்கு அந்தப் பிறவியில் நடந்தது இவனைப் பார்த்ததும் முழுமையாக நினைவுக்கு வந்து விட்டது.கடந்த துவாபரயுகத்தில் இவன் மதுராபுரியில் பிறந்தான். இவனது தந்தை இவனைக் கூடையில் சுமந்து கொண்டு, யமுனை நதியை கடந்து மறுகரையில் இருந்த ஆயர்பாடியில் வசித்த என்னிடம் ஒப்படடைத்தார். இவன் நாராயணனின் அவதாரமென்று சொன்னார். இவன் நீல வண்ணத்தில் இருந்ததால், இவனுக்கு கிருஷ்ணா என்று பெயர் சூட்டினேன்.கிருஷ் என்றால் நீலமேகம் என்று பொருள். அந்த கிருஷ்ணனின் குழந்தைப் பருவ லீலைகளை நான் சுகித்தேன், என்று நினைத்தவள் அவரை உள்ளே அழைத்தாள். மகனே வா! உன்னைத் தாலாட்டி எத்தனை நாளாகிறது? பல்லாயிரம் ஆண்டுகள் கழிந்து இப்போது உன்னைப் பார்க்கிறேன். நான் யார் என உனக்குத் தெரிகிறதா? ஐயோ! இது என்ன ரத்தம்? என அலறினாள்.சீனிவாசனாகிய நாராயணன் சகலமும் அறிந்தவர் என்றாலும், மானிடப்பிறப்பாக வந்து விட்டதாலும், பக்தர்களுக்கு சோதனை தருவதில் இன்பம் கொண்டவன் என்பதாலும் ஏதுமே தெரியாதவர் போல் நடித்தார்.அம்மா! தாங்கள் யார்? நான் ஒரு வழிப்போக்கன். இந்தக் காட்டிலுள்ள புளியமரப் பொந்தில் தங்கி தவமிருந்தேன். இந்நாட்டு மன்னனின் பணியாள் என்னை அடித்து விட்டான். நான் இருப்பதை அவன் அறியவில்லை. அதனால் அவன் மீது தவறில்லை, என்றவர் நடந்த விபரங்களையும், பிரகஸ்பதி சொன்ன மருத்துவம் பற்றியும் சொன்னார்.சற்று நேரத்தில் அந்தப் பெண் எருக்கிலை பறித்து வந்து, ஆலம்பால் எடுத்து இலைக்குள் வைத்து, அதை சீனிவாசனின் நெற்றியில் கட்டினாள்.
ரத்தம் வழிவது குறைந்தது.அவரைத் தன் மடியில் படுக்க வைத்து, மகனே! நீ ஸ்ரீமன் நாராயணனாகவே என் கண்ணுக்குத் தெரிகிறாய். மேலும், கிருஷ்ணாவதாரம் எடுத்த போது, நான் யசோதை என்ற பெயரில் உன் தாயாக இருந்ததை அறிவாய் அல்லவா? என்றார்.சீனிவாசனை நெற்றியிலுள்ள காயம் வேதனைப்படுத்தினாலும், அவள் சொன்ன கதையை சுவாரஸ்யமாகக் கேட்பது போல நடித்த சீனிவாசன், வலி குறைந்து விட்டது போல் பாவனை காட்டினார்.மகனே! நான் அன்று கேட்ட வரத்தைக் கொடுக்கத்தானே இன்று வந்திருக்கிறாயா? என்றாள் அந்தப் பெண்.அம்மா! என் பெயர் சீனிவாசன். நான் யாரென்று எனக்கே புரியவில்லை. தாங்களோ துவாபரயுகத்தில் நடந்த ஏதோ ஒன்றைப் பற்றி பேசுகிறீர்கள்! தாங்கள் சொல்வது ஏதும் எனக்கு புரியவில்லையே! ஒருவேளை தலையில் அடிபட்டதில் நான் தங்களை யார் என்று மறந்திருப் பேனோ, என்று இன்னும் நடிப்புக்காட்டிய மகாவிஷ்ணுவான சீனிவாசன், அப்பாவி போல முகத்தை வைத்துக் கொண்டு அவள் என்ன சொல்லப்போகிறாள் எனக் கேட்கத் தயாரானார்.ஸ்ரீனிவாசன் என்று சொன்னால் என்ன! கிருஷ்ணன் என்றால் தான் என்ன! எல்லாம் ஒன்று தான். நீ லட்சுமி உன் மார்பில் இருக்க இடம் கொடுத்தவன். அதனால் தானே ஸ்ரீனிவாசன் என்ற பெயரே உனக்கு ஏற்பட்டது. ஸ்ரீ என்பது லட்சுமியைத் தானே குறிக்கும், என்றதும், ஸ்ரீனிவாசனின் முகம் வாடியது.அம்மா! இப்போது எல்லாம் என் நினைவுக்கு வந்து விட்டது. ஆனால், நீங்கள் நினைப்பது போல், நான் ஸ்ரீனிவாசன் என்ற பெயருக்கு அருகதை இல்லாதவன் ஆகிவிட்டேன். என் மனைவி லட்சுமி என்னை விட்டுப் பிரிந்து சென்று விட்டாள், என்றார்.என்ன! லட்சுமி உன்னைப் பிரிந்தாளா? அப்படியானால், நீ எனக்கு கொடுத்த வரம் என்னாவது? அவள் பதறினாள்.
ஏழுமலையான் பகுதி-9
அந்தப் பெண் இப்படி பதறிப் போவதற்கு காரணம் இருக்கிறது. ஏனெனில். கடந்த யுகத்தில் அவளே ஆயர்குலத்தில் யசோதையாக அவதரித்து, கண்ணனை வளர்க்கும் பாக்கியத்தைப் பெற்றவள். அவனைப் பெற்ற தாய் தேவகிக்கு கூட அவனது பாலப் பருவத்தைக் கண்டு ரசிக்க கொடுத்து வைக்காமல் சிறையில் அடைபட்டுத் தவித்தாள். ஆனால், வளர்த்தவளுக்கு அத்தகைய கிருபையைச் செய்தார் நாராயணன். அவள் தான் இந்தப் பிறவியில் இந்தத் தாயாகப் பிறந்திருக்கிறாள். இவளது பெயர் வகுளாதேவி.இவன் கோகுலத்தில் யசோதையிடம் வளரும் போது, செய்யாத சேஷ்டைகள் இல்லை. தெருவில் போகும் சண்டையை வீட்டுக்குள் இழுத்து வந்து விடுவான். கோபியரிடம் வம்பு செய்வான். பல பெண்களைத் திருமணம் செய்து கொண்டான். ஆனால், பால பருவத்தைக் கண்டுகளிக்கும் வாய்ப்பு கிடைத்த யசோதைக்கு அந்த திருமணங்களில் ஒன்றைக் கூட பார்க்கின்ற வாய்ப்பு கிடைக்கவில்லை.ஒருநாள், கண்ணனைப் பார்க்கின்ற வாய்ப்பு யசோதைக்கு கிடைத்தது.கண்ணா! சிறுவயதில் நீ என் வீட்டில் வளர்ந்தாய். அதன்பின் மதுராபுரி, துவாரகை, அஸ்தினாபுரம், இந்திரப்பிரஸ்தம் என சுற்றிக் கொண்டிருக்கிறாய். உன் பால பருவ லீலையைப் பார்த்த எனக்கு, பல கல்யாணங்கள் செய்தும் அதைப் பார்க்கும் பாக்கியம் கிடைக்கவில்லை. ஒரு திருமணத்தையாவது காணும் பாக்கியத்தைத் தரமாட்டாயா? எனக்கேட்டாள்.பகவான் கேட்காமல் என்ன வேண்டுமானாலும் தருவான். எதை எப்போது தர வேண்டும் என்பது அவனுக்குத் தெரியும், ஆனால், எதிர்பார்த்து சென்றால் அவ்வளவு எளிதில் எதுவும் கிடைப்பதில்லை. அதற்காக, சில யுகங்கள் வரை கூட காக்க வைத்து விடுகிறான். அந்த நிலை யசோதைக்கே வந்திருக்கிறது என்றால், சாதாரண பிறவிகளான நம் நிலையைக் கேட்கவா வேண்டும்? பெற்ற தாயான தேவகிக்கும், தந்தை வசுதேவருக்குமே தனது குழந்தைப் பருவ லீலைகளைக் காட்ட மறுத்த மாயாவி ஆயிற்றே அவன்.
இப்போது தன் திருமணத்தை தன் தாய்க்கு காட்டுவதற்கான நேரம் வந்திருக்கிறது. லட்சுமியை கோபப்பட வைத்து, அவளை பூலோகத்துக்கு அனுப்பிவிட்டு, அறியாப்பிள்ளை போல அவரும் பின்னால் வந்து விட்டார். ஆண்டவனிடம் நாம் வைக்கும் கோரிக்கைகள் வீண்போவதில்லை. பெரும் தாமதமாகுமே தவிர, நிச்சயம் கேட்டதைத் தருவான். நமது பொறுமையின் அளவு எவ்வளவு என்பதைச் சோதித்துப் பார்ப்பதில் அவனுக்கு அப்படி ஒரு ஆனந்தம்! பொறுமை பெருமை தரும் என்பது இதனால் தான்!பின்னர் வகுளாதேவி, சீனிவாசனை அழைத்து கொண்டு, அந்த மலையின் அதிபதியான வராஹ சுவாமியிடம் சென்றாள். அவரது ஆஸ்ரமத்தில் தான் வகுளாதேவி சேவை செய்து கொண்டிருந்தாள். இவர் யார் என்பது ஒரு கதை.பெருமாள் தசாவதாரம் எடுத்தாரே! அதில் பன்றியின் முகம் கொண்ட வராஹ அவ தாரமும் ஒன்று. பன்றியை வராஹம் என்பர். அவர் இந்த அவதாரம் எடுக்க என்ன காரணம் தெரியுமா?ஜெயவிஜயர் என்னும் வைகுண்டத்தின் பாதுகாவலர்கள் சனக, சனகாதி முனிவர்கள் வைகுண்டம் வந்த போது அவர்களைத் தடுத்து பின் னோக்கி தள்ளினர். தங்கள் தவவலிமையை மதிக்காத அவர்களை ராட்சஷர்களாக பிறக்கும்படி முனிவர்கள் சபித்தனர். அவர்கள் தங்களை மன்னிக்குமாறு வேண்டவே, மூன்று பிறவிகள் மட்டும் மகாவிஷ்ணுவுக்கு எதிரிகளாக இருந்து மீண்டும் வைகுண்டம் சேர வரமளித்தனர். அதன்படி அவர்கள் இரண்யகசிபுவாகவும், இரண்யாட்சனாகவும் பூலோகத் தில் ஒரு பிறவியை எடுத்தனர். இரணியன், மகாவிஷ்ணுவின் நரசிம்ம வடிவத்தால் மரணமடைந்தான். இரண்யாட்சன், பூமியைப் பாய்போல் சுருட்டி பாதாளத்துக்குள் ஒளித்து வைத்தான்.
தேவர்கள் இதுபற்றி மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர்.அவர் வராஹ அவதாரமெடுத்து, பூமியைத் தோண்டி உள்ளே சென்று இரண்யாட்சனை அழித்தார். பூமியை மீட்டு வந்தார். இதனால் தேவர்கள் அவரை பூவராஹசுவாமி எனப் புகழ்ந்தனர். அவர் தன் அவதாரத்துக்குப் பிறகு, திருமலையில் தங்கி விட்டார். (திருப்பதியில்வெங்கடாசலபதி கோயில்புஷ்கரணி (தெப்பக்குளம்) கரையில் அவரது கோயில் உள்ளது குறிப்பிடத்தக்கது).சீனிவாசனைப் பார்த்ததும், வராஹசுவாமி தன்னிலை மறக்காமல், அவரும் தானும் ஒன்றே என்பதை அறிந்தார். இருப்பினும், அதை பூலோகத்தார் கண் களுக்கு காட்டாமல், ஏதும் அறியாதவர் போல், அவர் யார், என்ன விபரமென விசாரித்தார்.சீனிவாசன் அவரிடம்,ஐயனே! நான் இத்தலத்தில் வசிக்க வேண்டும் என வந்திருக்கிறேன். தாங்கள் இடம் கொடுத்தால் இங்கேயே கோயில் கொள்வேன், என்றார்.அதற்கு வராஹசுவாமி, சீனிவாசா! உனக்கு என்ஆஸ்ரமத்தின் அருகிலுள்ள இடத்தையே தருகிறேன். ஆனால், நீ அதற்கு வாடகை தர வேண்டும், என்றார்.சீனிவாசன் அவரிடம், சுவாமி! என் கதையைக் கேளுங்கள். என் மனைவி லட்சுமி என்னிடம் இருந்த வரை நான் செல்வந்தன். இப்போது அவள் என்னை விட்டுப் பிரிந்து விட்டாள். பணம் நிலையாதது என்பது தாங்கள் அறியாததல்ல. இந்த நிமிடம் வரை பணத்தில் புரள்பவன், ஏதோ ஒரு அதிர்ச்சி தகவலால் மறுநிமிடமே ஒன்றுமில்லாதவனாகி விடுகிறான். பணத்தின் தன்மை அத்தகையது. லட்சுமி என்னிடம் இல்லாததால், என்னிடம் அறவே பணமில்லை. என்னால் வாடகையோ, இடத்திற்கு விலையோ தர இயலாது. ஆனால், ஒரு சகாயம் மட்டும் என்னால் செய்ய இயலும், என்றார்.அது என்ன? என்று கேட்டார் வராஹசுவாமி. நாளை பகுதி 10 ...11...12 தொடரும் !
திருப்பதி ஏழுமலையான் திருவடிகளே சரணம் ஓம் நமோ வெங்கடேசாய ஓம் நமோ நாராயணாய