திருத்தொலைவில்லிமங்கலம் அரவிந்த லோசனர் திருக்கோயில் (இரட்டை திருப்பதி)
இன்றைய திருக்கோயில் பதிவில் நாம் தரிசிக்க இருக்கும் திருக்கோயில் தரிசனம், நவதிருப்பதிகளில் கேது ஸ்தலமாக விளங்கும் திருத்தொலைவில்லிமங்கலம் (இரட்டை திருப்பதி), தூத்துக்குடி மாவட்டம்.

சிந்தையாலும் சொல்லாலும் செய்கை னாலும் தேவபிரானையேதந்தை தாய் என்றடைந்து வண்குரு கூரவர் சடகோபன் சொல்முந்தை ஆயிரத்துள்ளி இவை தொலை வில்லி மங்கலத்தைச் சொன்னசெந்தமிழ் பத்தும் வல்லர் அடி மை செய்வார் திருமாலுக்கே!!

திருத்தல அமைவிடம்: இந்த கேது ஸ்தலமான திருத்தொலைவில்லிமங்கலம் திருத்தலம், திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பாதையில், திருநெல்வேலியில் இருந்து சுமார் 39 km தொலைவிலும், மற்றொரு நவதிருப்பதியான பெருங்குளத்தில் இருந்து சுமார் 5 km தூரத்திலும், இன்னொரு நவதிருப்பதியான ஆழ்வார்திருநகரியில் இருந்து 2 km தொலைவிலும் அமைந்துள்ளது.

திருத்தலக் குறிப்பு:
தல இறைவன்: அரவிந்த லோசனர் (அமர்ந்த திருக்கோலம், கிழக்கு பார்த்த திருமுக அமைப்பு),
(உற்சவர்: செந்தாமரைக்கண்ணன்)
தல இறைவி: கருத்தடங்கண்ணி
தல தீர்த்தம்: வருணை தீர்த்தம், தாமிரபரணி
விமானம்: குமுத விமானம்
க்ரகம்: கேது ஸ்தலம்
திருத்தல வரலாறு: தேவர்பிரான் திருக்கோயிலில் யாகம் செய்து மனநிறைவுடன் வாழ்ந்து வந்த சுப்ரபர், தினப்படி திருக்கோயிலின் அருகில் அமைந்திருந்த திருக்குளத்தில் இருந்து தாமரை மலர்களை பறித்து, அவற்றை மாலையாகத் தொடுத்து தேவர்பிரானுக்குச் சூட்டி மகிழ்ந்தார். நம் கையால் மலர்களைப் பறித்து மாலையாகத் தொடுத்து இறைவனுக்குச் சூடிபார்க்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கும், மன நிறைவிற்கும் அளவே இல்லைதான். அத்தகைய மனநிறைவுடன் தன் வேலைகளை, சுவாமி கைங்கர்யங்களை அன்றாடம் செய்து வந்து கொண்டிருந்தார் சுப்ரபர். தனக்கு மாலை சூட்டி வணங்கும் சுப்ரபரின் பக்தியில் மனம் மகிழ்ந்த தேவர்பிரான், அவர் நாள்தோறும் எங்கிருந்து தனக்கு மலர் மாலை கொண்டுவந்து அணிவிக்கிறார் என்பதை அறிய ஆசைகொண்டு, முனிவர் பெருமான் தோட்டத்தில் உள்ள பொய்கைக்கு செல்லும் நேரம் பார்த்து அவரைப் பின்தொடர்ந்தார்.

அங்கு வந்த தேவர்பிரான், அந்தப் பொய்கையின் வளமையையும், பசுமையையும், குளிர்ச்சியான தோற்றப் பொலிவும் கண்டு, முனிவரை நெருங்கி அவரிடம், "முனிவரே, இந்த இடம் மிகவும் குளிர்ச்சி மிகுந்ததாகவும், மலர்கள் நிறைந்த இடமாகவும் இருக்கிறது, இங்குள்ள மலர்களைப் பொழியும் மரங்களின் மீது மலய மலையில் இருந்து வீசுகின்ற தென்றல் தவழ்ந்தோடுகிறது. இந்த இடம் என் மனதிற்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகிவிட்டது, அதனால் இந்த சுகந்தமான பொய்கையின் கரையிலேயே நான் வாசம் செய்ய விரும்புகிறேன், உமது யாகசாலையில் தேவநாதனாகவும், இந்தத் தூய்மையான தடாகத்தில் அரவிந்தலோசனாகவும் குடியிருக்கப் போகிறேன். இன்றிலிருந்து தடாகங்களின் கரையோரம் அமைந்துள்ள எனக்கும், எனக்குத் தெற்குப் பக்கமாக அமைந்துள்ள தேவர்பிரானையும் தாமரை மலர்களால் பூஜை செய்வீர்களாக", என்று சுப்ரப முனிவரிடம் கூறி அருளினார். அதுமுதல் இரட்டை திருப்பதியில் அமைந்துள்ள இரண்டு திருமாலுக்கும் தாமரை மலர்களால் அன்றாடம் அர்ச்சனை செய்து இறைவனடி சேர்ந்தார் சுப்ரப முனிவர்.

அரவிந்த லோசனர் அஸ்வினி தேவர்களுக்கு வரம் அளித்த வரலாறு:முன்னொரு காலத்தில் அஸ்வினி தேவர்கள் என இருவர் வாழ்ந்து வந்தனர். அவர்கள் மக்களுக்கு வைத்தியம் செய்து வாழ்ந்து வந்தனர். அவர்கள் பிரம்மதேவனிடம் சென்று, "உலகில் செய்யப்படும் வேள்விகளிலும், யாகங்களிலும் இருந்து தேவர்களுக்கு கிடைப்பதுபோல எங்களுக்கும் பங்கு வேண்டும்" எனக் கேட்டனர். மக்களுக்கு வைத்தியம் செய்யும் நீங்கள், உங்களுக்கும் யாகத்தில் பாகம் வேண்டும் என்று விரும்பினால் பூலோகத்திற்குச் சென்று அங்கு திருத்தொலைவில்லிமங்கலம் என்ற இடத்தில் வாசம் செய்யும் தேவநாதன், அரவிந்தலோசனர் என்னும் இரண்டு பெருமாளையும் வணங்கி தவமிருக்க, நீங்கள் வேண்டியது கிடைக்கும், என பிரம்மன் அருளினார்.

அதுபோலவே தொலைவில்லிமங்கலம் வந்த அஸ்வினி தேவர்கள், இத்தல தேவர்பிரானையும், அரவிந்தலோசனரையும் மனதார எண்ணி தவமியற்றினர். அவர்களது அன்பிற்கும், பக்திக்கும் மனமிரங்கிய பெருமான், அஸ்வினி தேவர்கள் முன் தோன்றி, அவர்களிடம் என்ன வரம் வேண்டும் எனக் கேட்டார். அதற்கு அஸ்வினி தேவர்கள்,"யாகங்களில் இருந்து தேவர்களுக்குக் கிடைப்பது போல பாகம் எங்களுக்கும் வேண்டும்" எனக் கேட்டனர். உடனே திருமால் தேவர்களைப் பார்த்து இவர்கள் என்மீது கொண்ட பக்தியின் பலனாக இவர்களுக்கும் இன்றிலிருந்து யாகத்தில் பாகம் தரவேண்டும் எனக் கட்டளை இட்டார். அஸ்வினி தேவர்கள் இருவரும் இங்குள்ள புண்ணிய தீர்த்தத்தில் நீராடி என் மீது தவம் இருந்த காரணத்தால் இன்று முதல் இந்த தீர்த்தம் அஸ்வினி தீர்த்தம் என அழைக்கப்படும்" என்றார் பெருமாள்.

அஸ்வினி தீர்த்த மகிமை:பல்லாயிரம் கோடி வருடங்களுக்கு முன்பாக இமயமலைக்குத் தென் புறமாக, கங்கை நதிக் கரையில் அகளங்கம் என்ற ஊரில் சத்தியசீலர் என்பவர் தனது மூன்று பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்தார். அவர்கள் வன்னிசாரன், விபீதகன், சுவர்ணகேது என மூன்று பேரும் ஆவர். இதில் விபீதகன் சரும நோயால் பாதிக்கப் பட்டிருந்தான். எத்தனையோ சிகிச்சைகள் மேற்கொண்டும் அவனது நோய் தீர்ந்தபாடில்லை. அந்த சமயத்தில் அங்கு வந்த நாரத பெருமானிடம், தனது பிள்ளை விபீதகன் இவ்வாறு நோயால் அவதிப்பட என்ன காரணம் எனக் கேட்டார். அதற்கு நாரதர், "இவன் தனது முற்பிறவியில் தனது குருவின் பசுவைத் திருடிவிட்டான், அதனால் அவனது குரு தந்த சாபத்தினால், இப்பிறவியில் விபீதகனுக்கு இந்த சரும நோய் பீடித்துள்ளது" எனக் கூறினார். மேலும், "தாமிரபரணி நதிக் கரையில் அமைந்துள்ள தொலைவில்லிமங்கலம் சென்று, அங்குள்ள அஸ்வினி தீர்த்தத்தில் நீராடினால் உன் உடல் உபத்திரவம் தீரும்" எனவும் கூறி அருளினார் நாரதர். அவ்வாறே விபீதகனும் அஸ்வினி தீர்த்தத்தில் நீராடி தனது நோயிலிருந்து விடுபட்டான். விபீதகன் அங்கேயே தங்கி தேவர்பிரானுக்கும், அரவிந்தலோசனருக்கும் சேவை புரிந்து முகுந்த பெருமானால் முக்தி பெற்றான்.

இந்தத் திருத்தலமும் வனத்திற்கு நடுவிலேயே அமைந்து மிகவும் அமைதியான சூழ்நிலையில் நிறுவப்பட்டுள்ளது. கோயிலுக்குள்ளேயே பசுமாடுகள் வளர்க்கப் படுகின்றன. வனங்களுக்கு இடையில் திருக்கோயில் அமைந்துள்ளதால் வீடுகள் அதிகம் இல்லாத காரணத்தால் திருக்கோயில் சிப்பந்திகளுக்கு திருத்தலத்திற்கு அருகிலேயே வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. திருக்கோயிலுக்கு உள்ளேயே பூங்காக்கள் அமைக்கப்பட்டு நன்றாகப் பராமரிக்கப்பட்டு வருகின்றன.