திருத்தொலைவில்லிமங்கலம் தேவர்பிரான் திருக்கோயில் (இரட்டை திருப்பதி)

திருத்தொலைவில்லிமங்கலம் தேவர்பிரான் திருக்கோயில் (இரட்டை திருப்பதி)
இன்றைய திருக்கோயில் பதிவில் நாம் தரிசிக்க இருக்கும் திருக்கோயில் தரிசனம், நவதிருப்பதிகளில் ராகு ஸ்தலமாக விளங்கும் திருத்தொலைவில்லிமங்கலம் (இரட்டை திருப்பதி), தூத்துக்குடி மாவட்டம்.

துவளில் மாமணி மாடம் ஓங்கு தொலைவில்லி மங்கலம் தொழும்இவளை நீர் இனி அன்னைமீர் உமக்கு ஆசை இல்லை விடுமினோதவள ஒண்சங்கு சக்கரம் என்றும் தாமரை தடங்கண் என்றும்குவளை ஒண் மலர் கண்கள் நீர்மல்க நின்று நின்ரு குமுருமே!!
- நம்மாழ்வார்

திருத்தலம் அமைவிடம்:
இந்த ராகு ஸ்தலமான திருத்தொலைவில்லிமங்கலம் திருத்தலம், திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பாதையில், திருநெல்வேலியில் இருந்து சுமார் 39 km தொலைவிலும், மற்றொரு நவதிருப்பதியான பெருங்குளத்தில் இருந்து சுமார் 5 km தூரத்திலும், இன்னொரு நவதிருப்பதியான ஆழ்வார்திருநகரியில் இருந்து 2 km தொலைவிலும் அமைந்துள்ளது

திருத்தலக் குறிப்பு:
தல இறைவன்: தேவர்பிரான் (நின்ற திருக்கோலம், கிழக்கு பார்த்த திருமுக அமைப்பு)
தல இறைவி: உபய நாச்சியார்கள்
தல தீர்த்தம்: வருண தீர்த்தம், தாமிரபரணி
விமானம்: குமுத விமானம்
கிரகம்: ராகு ஸ்தலம்
திருத்தல வரலாறு: திருப்புளியங்குடி என்ற புண்ணியமிகு திருத்தலத்திற்கு சற்று அருகாமையில் மலர்கள் நிறைந்த, நெல் வயல்களால் சூழ்ந்த, பசுமையும் இயற்கையின் வண்ணமும் நிறைந்த ஒரு திருப்பதியாக திருத்தொலைவில்லிமங்கலம் அமைந்துள்ளது. இந்த திருத்தலத்தில் பல காலங்களுக்கு முன்பாக ஆத்திரேய கோத்திரத்தில் தோன்றிய ஒரு முனிவர் வாழ்ந்து வந்தார். சுப்ரபர் என்ற திருநாமம் கொண்ட அந்த முனிவர் யாத்திரையாக பயணம் செய்து வந்து கொண்டிருந்த வேளையில், இந்த தொலைவில்லிமங்கலம் சேத்திரத்தை அடைந்தவுடன், இவ்விடத்தின் அழகான, எழிலான சூழ்நிலை கண்டு, இந்த இடத்தில் ஒரு யாகம் செய்ய எண்ணினார். அதனால் இந்த இடத்தை யாகம் செய்வதற்காக சுத்தம் செய்து உழுது பண்படுத்தினார். அவ்வாறு சுத்தம் செய்யும்போது அங்கே ஒரு தராசையும் வில்லையும் கண்டார். இங்கே எப்படி இவை வந்ததென்று எண்ணி வியப்படைந்தார். இவை எக்காலத்தில், யாரால் கொண்டுவரப்பட்டன என்று நினைத்துக்கொண்டே அவற்றை தன் கையால் எடுத்தார். அந்த முனிவரின் கை பட்டதும், அந்த தராசு ஒரு பெண்ணாகவும், அந்த வில் ஒரு ஆணாகவும் உரு மாற்றம் பெற்றன. அவர்கள் இருவரும் தங்களுக்கு ஏற்பட்ட சாபத்தில் இருந்து வெளி வந்தனர்.

அவர்கள் இருவரையும் பார்த்து முனிவரும், அவர் கூட இருந்த பக்த கோடிகளும், "நீங்கள் எப்போது, எதனால், யாரால் இதுபோல வில்லாகவும் தராசாகவும் உரு மாறினீர்கள்" எனக் கேட்டனர். அதற்கு அத்தம்பதியினர், "நான் வித்யாதரன், இவள் என் மனைவி, நாங்கள் இருவரும் குபேரனது சாபத்தால் இந்நிலையை அடைந்தோம், அவரிடமே எங்களுக்கு சாப விமோசனம் கேட்டோம், அதற்கு குபேரன், இவ்வாறு நீ வில்லாகவும், உனது பத்தினி தராசாகவும் வெகு காலத்திற்கு நிலத்தில் அழுந்தி இருக்க வேண்டும், சில காலம் சென்றபின் ஆத்ரேயசுப்ரபர் என்ற முனிவர் எந்த இடத்திலும் யாகம் செய்ய மனமில்லாமல் இந்த தலத்திற்கு வந்து சேர்ந்து யாகம் நடத்த நிலத்தை உழுவார். அந்த நேரத்தில் நீங்கள் சாபம் நீங்கப் பெறுவீர்கள்" என்று கூறினார்.

அன்றிலிருந்து நாங்கள் இந்த உருவத்திலேயே இந்நிலத்தில் புதைந்து கிடக்கிறோம். உங்கள் புண்ணியத்தால் சாபம் நீங்கப் பெற்றோம் என்று அந்த தம்பதியினர் கூறினர். அதன் பிறகு முனிவர்கள் யாகத்தை செய்து முடித்து விஷ்ணு பெருமானை ஆராதனை செய்தனர். அங்கு எழுந்தருளிய பெருமானை வணங்கி, "இத்தலத்தில் நீங்கள் தேவர்பிரான் என்ற பெயருடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்க வேண்டும்" என்று வேண்டினர். இந்த தலத்தில் வில்லும், துலை என்னும் தராசும் முக்தி அடைந்த காரணத்தினால், இவ்விடம் திருத்தொலைவில்லிமங்கலம் என்ற பெயருடன் விளங்க வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்தனர். ஆத்ரேயசுப்ரபர் கேட்ட இந்த வேண்டுகோளை ஏற்று அதனை அங்கீகரித்தார் விஷ்ணு பெருமான்.

இத்திருக்கோயிலின் கோபுரங்களில் சிவபிரானின் வடிவமான மரத்தின் அடியிலே அமர்ந்து தன் பக்தர்களுக்கு அருளிக் கொண்டிருக்கும் தட்சிணாமூர்த்தியும் இருப்பது ஒரு தனிச் சிறப்பு.

இந்த இரட்டை திருப்பதி தலத்தில் ராகுவுக்கும் கேதுவுக்கும் இரண்டு திருத்தலங்கள் அருகருகே அமைந்துள்ளன. இத்திருக்கோயிலின் அருகிலே வீடுகள் அதிகம் காணப்படவில்லை. வனங்களுக்கு நடுவிலேதான் இத்திருக்கோயில்கள் அமைந்துள்ளன. மிகவும் தூய்மையாக, சுத்தமாகத் திருக்கோயிலை பராமரித்து வருகின்றனர் இத்தலத்தை. தூய்மை இருக்கும் இடத்தில் இறைவன் குடியிருப்பான்.

வாயும் மனைவியர் பூமங்கையார்கள் எம்பிராற்கு ஆயுதங்கள் ஆழி முதல் ஐம்படைகள் தூயதொலைவில்லி மங்கலமூர் தோள் புருவமேனிமலையில் இமம் கலந்தவாள்!! 108 திருப்பதி அந்தாதி

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!