தமிழ் மாதங்களில் முக்கியமான மாதம் தனுர் மாதம் என்றழைக்கப்படும் மார்கழி. மார்கழி மாதம் மனிதனை உயர்வழிக்கு அழைத்துச் செல்லும் மாதம். அந்த மாதத்தில் எல்லோரும் அதிகாலையில் எழுந்து இறைவழிபாடு செய்வதென்பது தொன்றுதொட்டு வரும் பழக்கம்.

தேவலோகத்தில் வாழும் தேவர்களுக்கு தை மாதம் முதல் ஆனி மாதம் வரையில் பகல் பொழுதாகவும், ஆடியில் இருந்து மார்கழி மாதம் வரையில் இரவாகவும் கருதப்படுகிறது. இதில் பகலை உத்தராயணம் என்றும் இரவை தட்சிணாயனம் என்றும் அழைப்பார்கள். இவ்வாறு நோக்கும்போது மார்கழி மாதம், தேவலோகத்தின் விடியற்காலையாகும். அக்காலத்தையே பிரம்ம முகூர்த்தம் "உஷத் காலம்' என்கிறோம். ஆகையால் இம்மாதத்தில் அதிகாலையிலேயே எழுந்து நீராடி இறைவனை வணங்கினால் ஆரோக்கியத்துடன் குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருக வாழ, தேவர்கள் ஆசீர்வதிப்பர் என்பது நம்பிக்கை.

அறிவியலின்படி, மார்கழி மாதத்தில் தான் ஓசோன் படலம் பூமிக்கு அருகாமையில் காலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை உள்ளது. ஒசோனை சுவாசித்தால் உடல் நலத்திற்கு நல்லதென்ற காரணத்தாலேயே பெண்களை காலையில் கோலம் போடவும், ஆண்களை பஜனை பாடல்களை பாடவும் செய்தனர் எனலாம்.

மார்கழியின் பெருமையை ஆண்டாள் "மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்' என்ற பாடலில் விளக்குகிறார். மாணிக்கவாசகரும் திருவெம்பாவையில், "போற்றியாம் மார்கழி நீர் ஆடேலோர் எம்பாவாய்' - என்று மார்கழி நீராடலுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். மாதங்களில் நான் மார்கழி மாதம் என்று கீதையில் கண்ணன் கூறுகிறான். 

பெண்கள் அழகை பெற விரும்பினால் செய்யும் நோன்பு ஒன்றை விஷ்ணு புராணம் கூறுகிறது. இந்த நோன்பு மார்கழி மாதத்தில் நடை
பெறும் என்றும் அப்போது அவியுணவே கொள்ளுதல் வேண்டும் என்றும் அந்தப் புராணம் கூறுகிறது. மார்கழி மாதத்தில் ஆயர் மகளிர் காத்யாயினியை வழிபட்டு, அவியுணவு உண்டு கண்ணனை அடைந்தார்கள் என்று பாகவதம் கூறுகிறது. இதனைப் பின்பற்றியே ஆண்டாளும் காத்யாயனி நோன்பிருந்து மாலவனை கணவனாக அடைந்தாள். இந்நோன்பே பாவை நோன்பாகவும் கூறப்படுகிறது. இதனையே சங்க இலக்கியங்களும் குறிப்பிடுகின்றன.
இப்பெருமை பெற்ற மாதத்தை ஏன் சூன்ய மாதமென்று கூறுகிறோம்? சூன்யம் என்றால், ஒன்றுமில்லாதது எனப் பொருள். நம் வாழ்க்கை ஒன்றுமில்லாதது, நிலையற்றது. இந்த வாழ்வை அர்த்தமுள்ளதாக்கி கொள்ள வேண்டுமானால், சரணாகதி எனும் உயர் தத்துவத்தை (இறைவனைச் சரணடைதல்) கடைப்பிடிக்க வேண்டும். இதற்காகவே, ஆண்டாளும், மாணிக்கவாசகரும், திருப்பாவை, திருவெம்பாவை பாடி, நமக்கு வழிகாட்டியுள்ளனர். ஆண்டாள் தான் மட்டும் இல்லாமல் எல்லா தோழிகளையும் அழைத்து கூட்டு வழிபாடாக பாவை நோன்பை நோற்றது இங்கு குறிப்பிடத்தக்கது. நமது உடலையும் உள்ளத்தையும் நல்ல விதமாக ஆக்கிக் கொள்வதற்கு உரிய மார்கழி மாதத்தில் வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றால் இறைவழிபாடு பாதிக்கும் என்பதாலேயே, இம்மாதத்தில் சுப நிகழ்ச்சிகள் எதுவும் வீடுகளில் நடைபெறுவதில்லை.

இறைவனை அடையும் உயர்வழியே சரணாகதி. "உன்னைத் தவிர யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்  நீ வந்து என்னை ஆட்கொள்...' என, இந்தப் பூமியில் பிறந்த ஆண்டாள், முப்பது நாள் கடுமையான நோன்பிருந்து, எண்ணிய படியே இறைவனையும் துணைவனாக அடைந்து விட்டாள். உண்மையான பக்தியின் மூலம் ஆண்டவனை நிச்சயம் அடைய முடியும் என்று, இந்த கலியுகத்திலும் வாழ்ந்து காட்டியவள் ஆண்டாள்.

எல்லா வைணவத் திருக்கோயில்களிலும் கூடாரை வல்லி வைபவம் மார்கழி 27 ஆம் நாள் கொண்டாடப்படும். ஆனால், ஸ்ரீ வில்லிபுத்தூரில் மட்டும் தை முதல் நாள் கொண்டாடப்படுகிறது.

மகாவிஷ்ணுவிற்குரிய வைகுண்ட ஏகாதசியும், சிவனுக்குரிய திருவாதிரைத் திருநாளும் இம் மாதத்தில் வருகின்றன. அனுமன் அவதாரமும் மார்கழியில்தான் நடைபெற்றது. மகாபாரத யுத்தம் நடந்ததும் கீதை பிறந்ததும் இம்மாதத்தில்தான்.

மார்கழி மாத திருவாதிரையை இறுதி நாளாகக் கொண்டு, பத்துத் திங்கள் திருவெம்பாவை நோன்பு நோற்கப்படுகின்றது. சில சிவாலயங்களில் பகல் திருவிழாவும், ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழாவும் அன்று பின் இரவு அதிகாலை வேளையில் நடராஜப் பெருமானுக்கு விஷேச அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றுப் பத்தாம் நாள் சூரிய உதயத்தில் தரிசனம் நடைபெறும்.

மார்கழி மாத வியாழக்கிழமைகளில் மகாலட்சுமி பூஜையை ஆண், பெண் இருபாலரும் செய்வர். இதற்கு குருவார பூஜை எனப் பெயர். இப்பூஜை செய்வதால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.

ஒரு நாள் உமாதேவி ஈஸ்வரனிடம், இவ்வுலக மக்கள் பிறப்பு இறப்பின்றி முக்தி பெற என்ன வழி எனக் கேட்டாள். மார்கழி மாத அஷ்டமி தினத்தில் சிவாலய பிரதட்சணம் செய்தால் அப்பலன் பெறலாம் என்று கூறினார் என்கிறது ஸ்கந்தபுராணம். பாவங்கள் விலகி முக்தி தரும் பிரதட்சணம் இது. கன்னியர் இந்நோன்பிருந்து காத்யாயினி தேவியை வழிபட, தகுந்த கணவன் கிடைப்பான். சுமங்கலிகள் கடைப்பிடித்தால், தம்பதியர் ஒற்றுமை கூடும் இல்லறம் நல்லறமாக இருக்கும்.

ஒவ்வொரு மாதத்திற்கும் திருமாலின் திருநாமங்கள் உண்டு. அதில் மார்கழி கேசவன்  என்பது பெயர். கேசவன் என்பதற்கு, கூந்தல் என்னும் பெயர்கொண்ட அரக்கனை அழித்ததற்காகத் திருமாலுக்குப் பெயர். கேசவன் என்பதற்கு அறிவு தரும் தெய்வம் என்றும் பொருள். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் மார்கழியில் ஒன்பது நாள்கள் விழா நடைபெறும். அந்த நாள்களில் அம்மன் சித்திரை வீதியில் உலாவருவாள். திருவாதிரையன்று ஆருத்ரா தரிசனம் நடந்ததும் நடராஜர் மாசி வீதியில் வலம் வருவார். அஷ்டமியன்று அம்மன், சுவாமி இருவரும் ரிஷப வாகனத்தில் கோட்டை வீதியில் உலா வருவார்கள்.

கோலம் போடுவதால் மனதுக்கு உற்சாகம், நினைவாற்றல் எல்லாம் கிடைக்கிறது. மனஒருமைப்பாடு இருந்தால் தான் புள்ளிகளைச் சரியாக இணைத்துக் கோலம் போடமுடியும். மார்கழி மாதத்தில் கோலங்கள் இடப்படாத இல்லங்களில் கூட கோலமிட்டு, நடுவில் பசுஞ்சாண உருண்டையை வைத்து அதில் பரங்கி பூவினை வைப்பார்கள். பூக்கள் அதிகமாக பூக்காத இடங்களில் பரங்கி பூவிற்கு பதிலாக ஒரு பூசணிக்காய் பூவையாவது வைப்பதற்கு முயல்வார்கள்.

இப்பழக்கம் பாண்டவர்கள் காலத்தில் தோன்றியதாகக் கூறப்படுகிறது. மார்கழி மாதத்தில் பாரதப் போர் நடந்தபோது, பாண்டவர்கள் வீட்டையும் அவர்களைச் சார்ந்த போர்வீரர்களின் வீட்டையும் அடையாளம் தெரிந்துகொள்வதற்காக, அவர்கள் வீட்டு வாசலை சாணத்தால் மெழுகிக் கோலமிட்டு ஊமத்தம்பூ வைப்பதற்கு ஏற்பாடு செய்தார் வியாசர். அந்த அடையாளத்தைக் கண்டு அவர்கள் வீட்டிற்கு தகுந்த பாதுகாப்பை பகவான் கிருஷ்ணர் அளித்தார் என்று கூறப்படுகிறது. அன்று முதல் கோலத்தின் நடுவில் பூ வைக்கும் பழக்கம் தொடர்கிறது. தங்கள் வீட்டில் திருமண வயதுடைய பெண் இருக்கிறாள் என்பதைத் தெரிவிக்கும் அடையாளமாகவும் அக்காலத்தில் இவ்வழக்கம் கையாளப்பட்டது. மார்கழியில் பரங்கி மலர் வைக்க, தை மாதத்தில் திருமணம் கைகூடிவரும் என்பர்.

போகி பண்டிகையோடு முடிகிறது மார்கழி. மறுநாள் மங்களகரமான பொங்கல் திருநாள். இந்திரனுக்கு போகி என்றொரு பெயர் உண்டு. மேகத்தின் அதிபதி இந்திரன். வேதத்தில் இந்திரனை பற்றிய துதிகள் பல இடம் பெற்றுள்ளன. மழை பெய்தால்தான் பயிர்கள் செழிக்கும் உயிர்கள் வாழும் எனவே பண்டைய நாள்களில் இந்திரனை போகியன்று பூஜிக்கும் வழக்கமிருந்தது. முன்னோர்களுக்கு பூஜை, காக்கை முதல் அனைத்து உயிரினங்களுக்கும் உணவிடுவது போகிப் பண்டிகையின் விசேஷம்.       

மார்கழி முழுதும் அதிகாலை நீராடி இறைவன் நாமாவை ஒரு முறை ஜபித்தாலே கோடிமுறை ஜபித்த புண்ணியம் கிடைக்கும் என்பது பகவானே சொன்ன வாக்கு. மார்கழி மாதம் விரதம் இருந்து இறைவனை வழிபட்டால் தோஷங்கள் நீங்கி செல்வச் செழிப்பை பெறுவர். கன்னிப் பெண்களுக்கு திருமணத்தடை நீங்கும். மணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். தொழிலில் நஷ்டம் நீங்கி லாபம் பெருகும். இத்தகு பெருமை பெற்ற மார்கழியில் இறைவனை வணங்கி அவன் அருள் பெறுவோம்!

#mahavishnuinfo
#sarvamvishnumayam