பிரம்மனுக்கு திருமால் அனுப்பிய திருமண பத்திரிகை :

தென் திருப்பதி என்று அழைக்கப்படும் ஒப்பிலியப்பன் திருக்கோவில், 108 திவ்ய தேசங்களில் 13-வது திவ்ய தேசமாகும். ஆகாச நகரம், திருவிண்ணகர் என்ற பெயர்களும் இத்தலத்துக்கு உண்டு.

பக்தர்கள் நினைத்ததை நடத்தி வைப்பவர் ஒப்பிலியப்பன். மார்க்கண்டேய முனிவரின் தவத்தின் பயனால் பெருமாளும், பூமாதேவியும் இங்கு அவதரித்து நித்யவாசம் செய்வதால், ‘மார்க்கண்டேய ஷேத்திரம்’ என்றும் வழங்கப்படுகிறது.

பிரம்மனுக்கு திருமால் அனுப்பிய திருமண பத்திரிகை :

பூமாதேவியை திருமணம் செய்யமுடிவு செய்த ஒப்பிலியப்பன், அதற்கான திருமண பத்திரிகையை கருடனிடம் கொடுத்து, சத்திய லோகம் சென்று பிரம்மனிடம் கொடுத்துவிட்டு வரும்படி கூறினார். கருடனும், சத்தியலோகம் சென்று பிரம்மனை சந்தித்தார். எம் பெருமானுக்கும், பூமாதேவிக்கும் மார்க்கண்டேய ஷேத்திரத்தில் திருமணம் நடைபெற உள்ளது.

நீங்கள், இந்திரன் முதலிய தேவர்கள் அனைவரும் வந்து திருமணத்தை சிறப்புற நடத்தி தர வேண்டும் எனக்கூறி திருமண பத்திரிகையை கொடுத்தார். இதைக்கேட்ட பிரம்மன் மகிழ்ச்சி பொங்க அதனை பணிவுடன் பெற்று தலையில் வைத்து தேவர்களுக்கு எதிரில் பத்திரிகையை படித்தார்.

அதில் இடம் பெற்ற வாசகம் வருமாறு:-

மங்களம்.. பிரம்மனே! தேவர்களுக்கு தலைவனாய், நாமகளுக்கு நாயகனான உனக்கு நாராயணன் எனப் பெயர் பூண்ட யான் மனமார வாழ்த்து கூறுகிறேன். யான் எப்பொழுதும் நலமுடன் இருக்கிறேன். நீயும் அங்ஙனமே இருப்பாயென நம்புகிறேன். திருமகள் பூமாதேவி என்ற பெயருடன் பூவுலகில் துளசி வனத்தில் மார்க்கண்டேய முனிவருக்கு பெண்ணாகப் பிறந்துள்ளார்.

அம்முனிவர் என்னை மருமகனாகப் பெற வேண்டும் என்று கடும் தவம் புரிந்தார். யானும் அதற்கிணங்கி வருகிற ஐப்பசி மாதத்து திருவோண திரு நட்சத்திரத்தில் பூமாதேவியை மணம் புரிந்து கொள்ள நிச்சயித்திருக்கிறேன். நீ எல்லா தேவர்களுடனும் துளசி வனத்துக்கு வந்து திருமணத்தை நடத்தி மணமக்களைக் கண்டுகளித்து ஷேமமாய் உறைவிடம் சேர்வாயாக.

நல்லவர்களை காக்கவும், தீயவர்களை அழிக்கவும், அடியார்களுக்கு அருளவும் யுகந்தோறும் இந் நிலவுலகில் அவதரிப்பேன்.

இங்ஙனம்,

உன்னிடம் அன்புள்ள

திருமகள் நாயகன்,

துளசி வனம்.

கும்பகோணம் திருநாகேஸ்வரம் திருவிண்ணகர் ஸ்ரீ ஒப்பிலியப்பன் பெருமாள் திருவடிகளே சரணம் ... !!!

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!