இறைவன் மிகப்பெரியவன்...
பாகுபாடற்றவன் என்பதை மனித குலத்திற்கு உணர்த்த செய்த திருவிளையாடல்களில் ஒன்று திருப்பாணாழ்வார் வரலாறு.
இந்த மாலையின் ஒவ்வொரு பூவும் ஒவ்வொரு மணம் வீசும் வலைப்பூவிலிருந்து பறிக்கப்பட்டது... மாலையாக்கி அரங்கனுக்கு சூட்டியது மட்டுமே அடியேன் கைங்கர்யம்...
பெயர் : திருப்பாணாழ்வார்
காலம் - 8ம் நூற்றாண்டு ( 750 - 780 கி.பி.)
மாதம் - கார்த்திகை
திருநட்சத்திரம் - கார்த்திகை
ஊர் - உறையூர்.
பன்னிரு ஆழ்வார்களில் பதினோராவது ஆழ்வார்...
வேறு பெயர்கள்
பாணர் ,முனிவாகனர் ,யோகி – வாஹனர் ,கவீஸ்வரர்
அம்சம் - ஸ்ரீவத்சம் (ஸ்ரீமன் நாராயணனின் மார்பில் இருக்கும் மச்சம்)
திருப்பாணாழ்வார் திருச்சி உறையூருக்கு அருகில் உள்ள திருக்கோழி என்னும் கிராமத்தில் வாழ்ந்த, பாணர் என்னும் தீண்டத்தகாத இனத்தைச் சேர்ந்த, ஒரு தம்பதியரால் வளர்க்கப்பட்டார். இவருடைய இயற்பெயர் தெரியவில்லை. பாணர் என்பவர்கள் பாண் என்னும் இசைக்கருவியினால் இறைவனையும், மன்னனையும்பற்றி இனிமையான பாடல்களைப் பாடி, கேட்போர் அனைவரையும் அகிலம் மறக்கச் செய்வர். அப்படிப்பட்ட ஒரு பாணர் எப்படி ஆழ்வார் ஆனார் என்பதே இக்கதை....
திவ்ய தேசங்களில் தலையாயதாக விளங்கும், திருவரங்கம் காவேரித் தாயின் கரையில் உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே! திருப்பாணாழ்வார் வாழ்ந்த காலத்தில், காவிரியின் மறுகரைக்கு, அதாவது அரங்கன் அருள் பாலிக்கும் திருத்தலத்திற்கு, பாணர் இனத்தைச் சேர்ந்தவர்கள் வர அனுமதியில்லை. அதனால், தினமும் மறுகரையில் நின்று கொண்டே, மாலவனை மனதிற்குள்ளேயே நினைத்து மதுரமான பாடல்களை பாண் என்னும் இசைக்கருவியிலே பாடிப் பாடி பரவசம் கொள்வார்.
ஒருநாள் வழக்கம் போல் ஆழ்வார் தன்னை மறந்து அரங்கனை அந்தரங்கமாய் தரிசித்துக் கொண்டிருந்த வேளையில், திருவரங்கத்தின் அர்ச்சகர் இலோக சாரங்க முனி என்பவர், திருவரங்கப் பெருமானுக்குத் திருமஞ்சனம் செய்வதற்காகக் காவிரியில் நீர் எடுக்க வந்தார். அப்பொழுது, திருப்பாணாழ்வார் கரையில் நின்று கொண்டிருந்தார். அவரைத் தீண்டாமல், சென்று நீர் கொணர வேண்டும் என்பதற்காக பல முறை, அந்த அர்ச்சகர் அவரை விலகச் சொல்லி கடிந்து கொண்டார்.
ஆனால், திருப்பாணாழ்வார் பக்தியில் மூழ்கியிருந்த படியால் அவர், அந்த அர்ச்சகர் அழைத்ததை அறியவில்லை. எனவே, கோபம் கொண்ட அர்ச்சகர், ஒரு கல்லை எடுத்து திருப்பாணாழ்வார் மேலெறிந்தார். பாணர் நெற்றியில் இரத்தம் வழிந்தது. பாணர் கண்களைத் திறந்து பார்த்தார். ‘ஐயோ, அரங்கனுக்குத் திருமஞ்சனம் கொண்டு செல்லும் இம்முனிவரின் கைங்கர்யத்துக்குத் தடங்கலாக இருந்து விட்டோமே’ என்று வருந்தி விலகிச் சென்றார்..
பிறகு திருமஞ்சன தீர்த்தம் எடுத்துக்கொண்டு, குடை, சாமரம், மேளதாளங்களோடு கோவில் சன்னதிக்குச் சென்றார் லோகசாரங்கர். அங்கே கண்ட காட்சி அவரைத் திடுக்கிடச் செய்தது. திருவரங்கனின் திருநெற்றியில், அதாவது எந்த இடத்தில் திருப்பாணாழ்வாருக்கு அடிப்பட்டதோ அந்த இடத்தில் இறைவனுக்கு இரத்தம் கசிந்தது. பெருமாளின் திருமுக மண்டலத்தில் இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. லோகசாரங்கர் பெருமானின் நிலைகண்டு பதறினார். மிகுந்த மனப் பாரத்துடன் வீடு திரும்பினார். இரவு முழுதும், தான் ஏதோ பெரிய பாவம் செய்து விட்டதாய் பரிதவித்த அர்ச்சகரால் உறங்க முடியவில்லை. அன்று இரவே, திருவரங்கப் பெருமாள் அர்ச்சகரின் கனவில் தோன்றி, 'திருப்பாணாழ்வாரை உன் தோளில், அவர் தாழ்ந்த இனத்தைச் சேர்ந்தவர் என்ற எண்ணம் எள்ளளவும் இல்லாமல் ஏற்றிக் கொண்டு வா! இதுவே நீ செய்த பாவத்திற்கு பரிகாரமாக அமையும்' என்று கூறினார்.
மறுநாள் காலையிலேயே, திருப்பாணாழ்வாரிடம் சென்று, நடந்தவற்றைக் கூறி அவரைத் தன் தோளில் ஏறிக் கொள்ளுமாறு பணிவுடன் வேண்டிக் கேட்டுக் கொண்டார். ஆனால், திருப்பாணாழ்வாரோ, தான் தாழ்ந்த இனத்தைச் சேர்ந்தவர். தங்கள் தோளில் நான் செல்வது சரியாகாது' என்று மிகவும் பிடிவாதமாக மறுத்தார். ஆனாலும் அர்ச்சகர் விடாபிடியாக அவரைத் தன் தோள் மேல் தூக்கி வைத்துக் கொண்டு, திருவரங்கக் கோயிலுக்குள் சென்றார். அக்காட்சியைப் பார்த்த ஊர்மக்கள் அனைவரும் அதிசயித்துப் போயினர்.
கோயில் கருவறைக்குள் நுழைந்ததும், தன் தோளில் இருந்து ஆழ்வாரை இறக்கிவிட்ட அர்ச்சகர், ஒரு ஓரமாக பணிவாக நின்று நடப்பதை எல்லாம் கவனித்தார். கோயிலில் முதல் முறையாக கால் வைத்த திருப்பாணாழ்வார், கருவறையில் அவர் முதன் முதலில் கண்டது, இறைவனின் திருப்பாதம் தான்.
அவர் படிப்படியாக இறைவனின் திருவடி முதல் திருமுடி வரை ஒவ்வொன்றாகக் கண் குளிரத் தரிசித்தார். அத்துடன் அவர் நின்று விட வில்லை.
தன் கண்ணால் கண்டு, உயிருருக அனுபவித்த இன்பத்தை, பத்து பாசுரங்களில் இறைவனின் திருவடி, தூய ஆடை, உந்தி(தொப்புள்), திருமார்பு, கண்டம்(கழுத்து), பவளவாய், கமலக்கண்கள், திருமேனி உட்பட பெருமாளைப் பற்றிய ஒவ்வொரு அழகையும் அமலனாதிபிரான்... என்று துவக்கத்தில் வைத்துப் பாடி பரவசமடைந்தார்.
ஒவ்வொரு பாசுரத்திலும் பெருமானின் ஓர் அங்கத்தின் அழகை வருணிக்கிறார். இவர், இறைவனைக் கண்ட பொழுதிலேயே, தன் ஊண் உருக, உயிர் கசிய இறைவனின் பேரருளையும், புறத்தோற்ற அழகையும் கண்டு பாடிய பாடல்களே அமலனாதிபிரான் ஆகும். அமலனாதிபிரான், அமுதத்திரட்டில், முதலாயிரத்தின் ஆறாம் திரட்டாக உள்ளது.