🔯ஓம் நமோ நாராயணா என்பது அட்டாட்சரம். இதில் ஓம் என்பது ப்ரணவம். நமோ என்பது பல்லாண்டு. நாராயணா என்பது நமது பகவானின் திருநாமம்.
🔯இந்த அட்டாட்சரம் வேண்டியன அனைத்தையும் தரவல்லது. வேண்டுதலின்றியும் அன்றாடம் நாம் இந்த மந்திரத்தை பாராயணம் செய்யலாம்.
🔯இந்த மூன்று சொற்களின் பொருளினை விளக்குவதற்கும் நினைவில் நிறுத்துவதற்கும் ஸ்ரீ இராமாயணத்தின் மூன்று கதாபாத்திரங்களை எடுகோலாக கூறலாம்.
🔷லக்ஷ்மணன்.
🔷பரதன்.
🔷சத்ருக்கனன்.
🔯லக்ஷ்மணனின் பிறப்பின் பயனாக அவன் என்ன செய்தான்?பரதனின் பிறப்பின் பயனாக என்ன நிகழ்த்தினான்?சத்ருக்கனன் என்ன நிகழ்த்தி காட்டினான்?
🔯அவர்களின் செயல்களை புரிந்து கொண்டாலே ஓம் நமோ நாராயணா என்பதை இலகுவாக புரிந்துக்கொள்ள இயலும்.
🔴சேஷத்வம்
🔴பாரதந்த்ரியம்
🔴கைங்கர்யருசி
சேஷத்வம்
🔯பெருமானுக்கு அடிமைப்பட்டிருத்தல். நான் எம்பெருமானுக்கே அடிமை என்று இருத்தல். ஆதிசேஷன் என்று கூறுகிறோமே. நான் எல்லா வகையிலும் பெருமானுக்கு அடிமை என்று அவனை சேஷியாக அதாவது ஆண்டானாக நாம் சேஷனாக அதாவது அடிமையாக இருத்தல்.
பாரதந்த்ரியம்
🔯நான் பகவானையே சார்ந்திருப்பவன். அவராலேயே காப்பாற்றப்படுபவன். அவரே தஞ்சம்.எனக்கு நான் பிரதானமல்ல. எனக்கு பகவானே பிரதானம். நான் என்னை காப்பாற்றிக்கொள்ள எந்த முயற்சியும் செய்வதில்லை. அதை பகவானே செய்கிறார். பகவான் சுதந்த்ரர். நாம் பாரதந்த்ரர் என்று வாழுதல்.
கைங்கர்யருசி
🔯தொண்டு செய்வதில் பேரார்வம். பகவானுக்கும் பகவத் அடியார்க்கும் தொண்டு செய்வதே கடன் என்று வாழுதல்.
🔯இம்மூன்று தத்துவங்களையும் ஒருவர் புரிந்து கொண்டாலே பெரும் வேதாந்த இரகசியம் வெளிச்சமாகிவிடும். பின் நாமும் இறைவனுக்கு அருகே செல்லப்போகின்றோம். அதுதானே நம் அனைவரினதும் அவா.
🔯இங்கே ஓம் நமோ நாராயணா என்ற அட்டாட்சரத்தில்
ஓம் : சேஷத்வம்
நமோ : பாரதந்த்ரியம்
நாராயணா : கைங்கர்யருசி
என்றவாறு கொள்ள வேண்டும்.
🔯இதில் இராமன் பகவான். லக்ஷ்மண, பரத, சத்ருக்கனர்கள் எவ்வாறு இத்தத்தவத்தை விளக்கினர் என காண்போம்.
🔯முதலில் லக்ஷ்மணன். இராமபிரானுக்கு அடிமையாகவே இருந்தார். வனவாசம் என்றதும் கூடவே சென்றார். பதினான்கு ஆண்டுகள் ஊன், உறக்கமில்லை. தன்னை இராமபிரானின் அடிமையாகவே எண்ணி பணி செய்தார். இது சேஷத்வம்.
🔯அடுத்தது பரதன். நாட்டில் இரு என்றால் இருந்தார். காட்டிற்கு வா என்றால் வந்தார். இராஜ்யத்தை கவனிப்பாயாக என்றால் கவனித்தார். அவர் இராமபிரானிடம் எந்த பிடிவாதமும் பிடிக்கவில்லை. நானும் உடன் காட்டுக்கு வருவேன் என அடம் பிடிக்கவில்லை. எல்லாம் அவன் சொல்வதே சரி.நான் ஒன்றும் செய்வதில்லை. அவன் சொல் என் கடமை என்று வாழ்ந்தார். இது பாரதந்ரியம்.
🔯இறுதியாக கைங்கர்யருசி. சத்ருக்கனன் பரதனுக்கு தொண்டன். கைங்கர்யம் செய்வதே கடன். பகவானுக்கோ அல்லது பகவானின் அடியவனுக்கா. அதனால் பரதனின் தொண்டனாக வாழ்ந்தான் சத்ருக்கனன். பரதனின் உடைவாளைப்போல நிழலைப்போல எப்போதும் தொண்டாற்றினான்.
🔯ஆக இப்போது கூறுங்கள் ஓம் என்பதற்கு லக்ஷ்மணன் வாழ்வே சாட்சி. நமோ என்பதற்கு பரதனே சாட்சி. நாராயணா என்பதற்கு சத்ருக்கனன் சாட்சி.
🔯இப்போது இம்மூன்றையும் சேர்த்து நாம் தினம் பாராயணிக்கையில் நாம் பகவானிடம் என்ன சொல்கிறோம்.
🔯நான் உன் அடிமை. நான் உன்னையே சார்ந்திருக்கிறேன். நான் உனக்கு அடிமையாவது போலவே உன் அடியாருக்கும் அடிமை என்று கூறுகின்றோம்.
இனி பொருள் தெரிந்து உள்ளார்ந்த மனதோடு உறுதியோடு சொல்வோம்.....
ஓம் நமோ நாராயணா.