நூற்றி இருபது ஆண்டு காலம் வாழ்ந்த ஸ்ரீராமானுஜரின் மூன்று திருமேனிகள் புகழ் பெற்றவை ஆகும். அவரது காலத்திலேயே அவருக்கு அடியார்கள் கோவில் கட்டி வழிபட்டார்கள். அவை,
தமர் உகந்த திருமேனி(மேல்கோட்டை என்ற திருநாராயணபுரம், )
தானுகந்த திருமேனி(ஸ்ரீபெரும்புதூர்)
தானான திருமேனி(ஸ்ரீரங்கம்)
தமர் உகந்த திருமேனி:
கர்நாடக மாநிலத்தில், மாண்டியா மாவட்டத்தில் அமைந்துள்ள மேல்கோட்டை என்ற திருநாராயணபுரத்தில் இத்திருமேனி நிறுவப்பட்டது.
அங்கே ஸ்ரீராமானுஜர் பன்னிரண்டு ஆண்டுகள் தங்கி கைங்கர்யம் செய்தார்.
தாழ்த்தப்பட்டவர்களை கோவிலுக்குள் அழைத்துச் சென்று புரட்சி செய்ததும் இத்திருத்தலத்தில்தான்.
அவரது எண்பதாவது வயதில் தானே ஒரு சிற்பியைக் கொண்டு தம்மை உகந்தவர்களுக்காக அவரது சிலை வடிக்கப்பட்டது.
ஸ்ரீராமானுஜர் கைகூப்பி அனைவரிடமும் விடைபெறும் கோலத்தில் அமைந்த இந்தச் சிலையில் தம் தெய்வீக சக்தியை ஏற்படுத்தி தன் சீடர்களிடம் ஒப்படைத்தார். பின்பு திருநாராயணபுரத்திலிருந்து ஸ்ரீரங்கம் சென்றார்.
இந்தச் சிலையை “தமர் உகந்த திருமேனி” என்பர். இன்றும் மேல்கோட்டையில் இத்திருச்சிலை வழிபடப்படுகிறது.
தானுகந்த திருமேனி:
தமிழ் நாட்டில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீபெரும்புதூரில் நிறுவப்பட்டது. இராமானுஜர் தம் 120 ஆவது வயதில் ஸ்ரீரங்கத்தில் தங்கியிருந்தார்.
அந்த நேரத்தில் ஸ்ரீபெரும்புதூரில் வாழ்ந்த சில சீடர்கள் ஶ்ரீஇராமானுசரின் திருஉருவ சிலை வைக்க ஆசைப்பட்டார்கள்.
ஶ்ரீஇராமானுசரின் ஆலோசனைப்படி அவர் உருவம் தாங்கிய செப்புச்சிலை ஒன்றை செதுக்கினார்கள். அச்சிலையை அரவணைத்து, தனது தெய்வீக ஆற்றலை அந்தச் சிலைக்குள் செலுத்தினார். இதனால் அந்தச் சிலை “தாம் உகந்த திருமேனி” (இராமானுஜர் தாமே உகந்து அளித்த திருமேனி) என்று புகழ் பெற்றது.
அந்தச் சிலை ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் நிறுவப்பட்டு தனிச்சந்நிதியில் வழிபடப்படுகிறது. இத்திருச்சிலையில் விலா எலும்பு, காது மடல் உள்ளிட்டவை 120 வயது இராமானுஜரின் தோற்றத்தினை தெளிவாகக் காட்டுகிறது.
தானான திருமேனி:
ஶ்ரீஇராமானுஜர் 120 ஆவது வயதில்(கி.பி. 1137), தாம் பிறந்த அதே பிங்கள வருடம் மாசி மாதம் வளர்பிறை தசமி திதியில், சனிக்கிழமை நண்பகலில் பத்மாசன நிலையில் அமர்ந்து, ஸ்ரீரங்கத்தில் பரமபத நிலை எய்தினார்.
அவரது பூதவுடலை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் (முன்னாள் வசந்த மண்டபம் என்றழைக்கப்பட்ட இடத்தில்) திருப்பள்ளிப்படுத்தி அதன் மேல் எழுப்பப்பட்டது தான் தற்போதைய உடையவர் சந்நதியாகும்.
இன்றும் நாம் அவருடைய பூத உடலை தரிசிக்கலாம். இவரின் திருமேனியில் தலைமுடி, கை நகம் போன்றவற்றைக் கூட எளிதாகக் காண இயலும். ஸ்ரீரங்கத்தில் இராமானுசரின் சன்னதியில் எழுந்தருளியுள்ள திருமேனிக்கு தானான திருமேனி என்று பெயர்.
ஒவ்வொரு வருடமும் சித்திரை, ஐப்பசி மாதங்களில் பச்சை கற்பூரம் மற்றும் சில மூலிகைகள் அரைத்து அவரது திருமேனியில் பூசப்படுகிறது. ஆயிரம் ஆண்டுகளாக ஸ்ரீராமானுஜர் திருமேனி பாதுகாக்கப் படுவதாக ஆன்மிகப் பெரியோர்கள் சொல்கின்றனர்.
பெருமாளுக்கு அடியார்கள் அனைவரும் ஒன்றுதான் என்ற புரட்சிக் கருத்தினைக் கூறிய ஸ்ரீராமானுஜரை வணங்கி வழிபடுவோம்.
ஶ்ரீராமானுஜர் காயத்ரி
ஓம் ராமாநுஜாய வித்மஹே
ஸ்ரீ தாசரதாய தீமஹி
தன்னோ சேஷ ப்ரசோதயாத்
ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ.