மஹாவிஷ்ணுவின் ஐந்து நிலைகள்

மஹாவிஷ்ணுவுக்கு ஐந்து நிலைகள் உண்டு.

பரம்
வியூஹம்
விபவம்
அந்தர்யாமி
அர்ச்சம்

முதல் நிலையான #பரம் என்பது பரமபதம், வைகுண்டம், மோட்சம், நித்ய விபூதி  என்றெல்லாம் அழைக்கப்படும் நிலை. இது எல்லா உலகங்களையும் கடந்த ஓர் வெளியில் அமைந்துள்ளது. இங்கே மஹாவிஷ்ணு பரவாசுதேவன் என்ற பெயரில் விளங்குகிறார். ஆயிரம் தலைகள் கொண்ட ஆதி சேஷனை இருக்கையாகக்கொண்டு ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி என்ற மூன்று தேவியருடனும், நித்யசூரிகள் என்று அழைக்கப்ப்படும் அமரநிலை அடைந்தவர்களுடனும் விளங்குகிறார். நித்யசூரிகளில் அஷ்ட திக் பாலர்கள் (எண்திசைக்காவலர்கள்), 8 துவாரபாலகர்கள் (வாயில் காப்போர்கள்), விஷ்வக்சேனர் முதலியோர் அடங்குவர்.

மண்ணுலக  வாழ்க்கை முடிந்து வைகுண்டம் அடையும் பேறு பெற்றவர்கள்  வந்து சேரும் இடம் இதுதான்.

பகவானுக்கு #ஆறு_குணங்கள் உண்டு.(ஆதிசங்கரரின் அத்வைதத் தத்துவப்படி பரம்பொருள் குணங்கள் அற்றவர் - நிர்க்குணப் பிரம்மம் என்று கருதப்படுகிறார். ஆனால் ராமானுஜரின் விசிஷ்டாத்வைதத் தத்துவப்படி பகவான் கல்யாண குணங்கள் எனப்படும் உயர்ந்த குணங்களைக் கொண்டவர்.)

1) ஞானம் - எல்லாம் அறிந்திருத்தல்
2) ஐஸ்வர்யம் - எல்லாச் செல்வங்களையும் தன்னிடம் கொண்டிருத்தல்
3) சக்தி - எதையும் செய்யக் கூடிய ஆற்றல்
4) பலம் - எல்லாவற்றையும் தாங்கிப் பிடிக்கும் (காக்கும்) வலிமை
5) வீரியம் - சக்தி சிறிதும் குன்றாத தன்மை
6) தேஜஸ் - தன்மயமான,  முழுமையான நிலை மற்றும் எல்லாவற்றையும் விஞ்சி நிற்கும் தெய்வாம்சம்.

பர வாசுதேவர் இந்த ஆறு குணங்களையும் தன்னிடம் கொண்டவராக விளங்குகிறார்.

இரண்டாவது நிலை #வியூஹம். இங்கே பகவானுக்கு நான்கு உருவங்கள் உண்டு. வாசுதேவன், சங்கர்ஷணன், ப்ரத்யும்னன், அநிருத்தன் என்ற பெயர்களுடன் இவர்கள் முறையே கிழக்கு,தெற்கு, மேற்கு மற்றும் வடக்கு திசைகளை நோக்கி உள்ளனர்.

வியூஹ வாசுதேவன் பர வாசுதேவன்தான். வியூஹ வாசுதேவனிடமிருந்து அறிவு, பலம்  என்ற இரண்டு குணங்களைப் பெற்று சங்கர்ஷணர் விளங்குகிறார். அறிவைக்கொண்டு அவர் சாஸ்திரங்களை உருவாக்குகிறார். பலத்தைக்கொண்டு பிரளய காலத்தில் உலகின் அழிவுக்கு வழி வகுக்கிறார்.

சங்கர்ஷணரிடமிருந்து ப்ரத்யும்னரும், ப்ரத்யும்னரிடமிருந்து அநிருத்தரும் உருவாகிறார்கள். ப்ரத்யும்னர் வீரம், வீரியம் (ஆற்றல்)  என்ற இரு குணங்களைக்கொண்டு எல்லா உலகங்களையும் உருவாக்கி, அங்கே தர்மம் நிலைபெறச் செய்கிறார்.

ப்ரத்யும்னரிடமிருந்து அநிருத்தர் உருவாகி, சக்தி, தேஜஸ் என்ற இரு குணங்களைக் கொண்டவராக விளங்குகிறார். உலகைக் காத்தல், அறநெறிகளையும், உண்மைகளையும் போதித்தல் என்ற இரு பணிகளுக்குக் காரணராக விளங்குகிறார்.

இவற்றைக் கோர்வையாகப் பார்க்கும்போது, படைத்தல், காத்தல், அழித்தல், உலகில் தர்மம் நிலை பெறச் செய்தல் ஆகியவற்றை பகவான் விஷ்ணு செயல் படுத்துகிறார் என்று விளங்கும். சங்கர்ஷணர், ப்ரத்யும்னர், அநிருத்தர் என்ற மூன்று வடிவங்களில் இந்தப் பணிகளைச் செய்கிறார் என்பதும், குறிப்பிட்ட பணிகளுக்கு ஏற்ப ஒவ்வொருவரும் இரண்டு குணங்களைச் சுவீகரித்துக் கொண்டு செயல்படுகிறார்கள் என்றும் புரிந்து கொள்ளலாம்.

உலகில் உள்ள எல்லாவற்றையும் ப்ரக்ருதி, மஹத், அகங்காரம் என்று மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.

#ப்ரக்ருதி என்பது புலன்களால் அறியப்படுபவற்றைக் குறிக்கும். நம் உடல், நிலம், நீர், காற்று போன்றவை ப்ரக்ருதி என்ற வகையில் அடங்கும்.

உலகில் நம் கண்ணுக்குப் புலப்படாமல் செயல்படும் சக்திகள் #மஹத் என்று அறியப்படுகின்றன. புவி ஈர்ப்பு விசை, இயற்கை விதிகள், அற நெறிகள் போன்றவற்றை மஹத் என்று கூறலாம்.

மூன்றாவது அகங்காரம். இது தனிப்பட்ட மனிதர்களின் உணர்வுகள், விருப்பு வெறுப்புகள் ஆகியவற்றைக் குறிக்கும்.

சங்கர்ஷணர் ப்ரக்ருதிக்கும், ப்ரத்யும்னர் மஹத்துக்கும், அநிருத்தர் அகங்காரத்துக்கும் பொறுப்பு வகிக்கின்றனர்.

மஹாவிஷ்ணுவின் மூன்றாவது நிலை #விபவம்.  விபவம் என்பது பகவானின் அவதாரங்களைக் குறிக்கும்.

முதல் இரண்டு நிலைகள் நம்மால் அணுக முடியாதவை. நாம் அணுக முடியாத நிலையில் பகவான் இருப்பதில் நமக்கும் பயனில்லை, அவருக்கும் பயனில்லை! ஆகவேதான் நம்முடன் நெருக்கமாக இருக்கும் பொருட்டு இவ்வுலகில் அவதரித்தார் விஷ்ணு.

'அவதாரம்' என்ற சம்ஸ்க்ருதச் சொல்லுக்கு 'இறங்கி வருதல்' என்று பொருள். நம்மால் அணுக முடியாத நிலையில் இருக்கும் கடவுள் நம் மீதுள்ள கருணையால் கீழே இறங்கி இவ்வுலகில் அவதரிக்கிறார்.

விஷ்ணுவின் அவதாரங்கள் மொத்தம் பத்து. இதுவரை அவர் எடுத்துள்ள அவதாரங்கள் ஒன்பது. பத்தாவது அவதாரமான கல்கி அவதாரத்தைக் கலியுக முடிவில் எடுப்பார்

நான்காவது நிலை அந்தர்யாமி. நம் அனைவருக்குள்ளும் அந்தராத்மாவாக பகவான் விளங்குவதுதான் அந்தர்யாமி என்ற நிலை. ஆம். கடவுளைத் தேடி நாம் வெளியே எங்கும் போக வேண்டியதில்லை. அவர் நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறார்.

நம் உடலுக்குள் உயிர் இருக்கிறது. அதுபோல் உயிருக்கு உயிராக இருப்பவர் பகவான் விஷ்ணுதான் - அந்தராத்மாவாக. வேறு விதத்தில் சொல்வதென்றால், நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருப்பது ஜீவாத்மா. ஜீவாத்மாவுக்கே ஆத்மாவாக இருப்பது பரமாத்மா.

நமக்குள் அந்தர்யாமியாக பகவான் இருப்பதை நாம் உணர்ந்து கொண்டால், நம் வாழ்க்கை ஆனந்தமயமாக ஆகி விடும்.

ஐந்தாம் நிலை அர்ச்சம் என்று அழைக்கபடுகிறது. இவ்வுலகில் பல திருத்தலங்களில் விக்கிரக வடிவில் இருந்து பகவான் நமக்கு அருள் புரிவதைத்தான் அர்ச்சம் என்ற நிலை குறிக்கிறது. எல்லோரும் எளிதாக வணங்கி மகிழும் நிலை அர்ச்சம். அவதார காலங்களில் வாழும் வாய்ப்பு இல்லாத நமக்கு பகவானை தரிசித்து மகிழும் வாய்ப்பை அர்ச்சம் வழங்குவதால், பகவானின் இந்நிலை அர்ச்சாவதாரம் என்று வழங்கப் படுகிறது.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!