ஏகாதசி விரதம்

வைகுண்ட ஏகாதசி விரதம் பக்தியிலும், புண்ணியத்திலும் உயர்ந்து சிறந்து விளங்குகிறது. ”மார்கழி மாதம் ஏகாதசி விரதம் இருந்து வழிபடுவோருக்கு யாம் வைகுண்ட பதவி அளித்து ஆட்கொள்வோம்” என்பது திருமால் வாக்கு. இதனால் இவ்விரதம் மகிமை வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஆண், பெண் அனைவரும் பின்பற்ற வேண்டிய பெருமை மிக்க விரதமானது வைகுண்ட ஏகாதசி விரதம்.

பதினைந்து நாட்கள் கொண்ட ஒரு காலப்பகுதியை ஒரு பக்ஷம் என்கிறோம். கிருஷ்ண பக்ஷம் (தேய்பிறை), சுக்லபக்ஷம் (வளர்பிறை) ஆகிய இந்த இரண்டு பக்ஷங்களில் ஒவ்வொன்றிலும் 11வது நாளின் (திதியில்) வருவது ஏகாதசி ஆகும். இதில் மார்கழி மாத சுக்லபக்ஷ (வளர்பிறை) ஏகாதசியை நாம் வைகுண்ட ஏகாதசியாக வணங்குகிறோம்.

கர்மேந்திரியங்கள் ஐந்து, ஞானேந்திரியங்கள் ஐந்து, மனம் ஆகிய இந்த பதினொரு இந்திரியங்களால் செய்யபடும் தீவினைகள் எல்லாம் இந்த பதினோராவது திதியில் ஏகாதசி விரதம் இருந்தால் அழிந்து விடுவது உறுதி என்று முன்னோர்கள் கூறுவர்.

காயத்ரியை காட்டிலும் சிறந்த மந்திரம் இல்லை. தாயை விஞ்சிய தெய்வம் வேறு இல்லை. காசியை விஞ்சிய புண்ணிய தீர்த்தம் இல்லை. ஏகாதசியை விஞ்சிய வேறு விரதம் இல்லை. அந்த அளவிற்கு ஏகாதசி விரதம் மகத்துவம் வாய்ந்தது.

இராவணனின் இன்னல்களை சகிக்க முடியாத தேவர்கள் பிரம்மாவுடன் வைகுண்டம் சென்று மார்கழி மாத சுக்லபக்ஷ (வளர்பிறை) ஏகாதசியன்று நாராயணனை வணங்கித் தங்கள் துன்பங்களை கூறினர். பகவானும் பிரம்ம தேவர்களுக்கு தரிசனமளித்து அவர்களை காத்தருளினார். முக்கோடி தேவர்களின் துன்பத்தை போக்கியதால் வைகுண்ட ஏகாதசிக்கு “முக்கோடி ஏகாதசி என்ற பெயரும் உண்டு.

தேவர்களும் அசுரர்களும் அமுதம் பெற வேண்டி இரவும், பகலும் விரதம் இருந்து பாற்கடலை கடைந்த போது அமுதம் வெளிப்பட்டது. துவாதசியன்ற மஹாலட்சுமி சமுத்திரத்தில் இருந்து வெளியே வந்து தேவர்களுக்கு, திருக்காட்சி அளித்து அவர்களுக்கு அருளாட்சி புரிந்தார்.

அன்று முதல் ஏகாதசி அன்று இரவும், பகலும் விரதம் இருந்து மஹாவிஷ்ணுவை துதிப்போருக்கு இந்தப் பிறவியில் நிலைத்த புகழ், நோயற்ற வாழ்வு, நன்மக்கட்பேறு முதலியவற்றை பகவான் அளிப்பதோடு, மறுபிறவியில் வைகுண்டவாசம் “சொர்க்கவாசல்” வழங்குவதாக புராணங்களில் கூறப்படுகிறது.

புராணங்கள் சொல்வது என்ன?
ஏகாதசி விரத மகிமை பற்றி பத்ம புராணத்தில் கூறப்படும் கதை வருமாறு : திரேதாயுகத்தில் “முரன்’ என்ற பெயரில் ஒரு கொடிய அரக்கன் வாழ்ந்து வந்தான். அவன் தேவர்களுக்கும், தவ முனிவர்களுக்கும் பல கொடுமைகள் செய்தான். அவனது தொல்லைகளைத் தாங்க முடியாத தேவர்களும், முனிவர்களும் திருமாலிடம் சென்று முறையிட்டனர். அரக்கன் முரனை அழித்து தேவர்களைக் காக்க திருமால் முடிவு செய்து சக்கராயுதத்துடன் முரனுடன் போருக்கு புறப்பட்டார்.

அசுரனுக்கும், திருமாலுக்கும் கடும்போர் நடந்தது. ஆண்டவனின் சக்கராயுதத்திற்கு முன் அரக்கன் சக்தியற்றுப் போனான். இருந்தாலும் அவன் பல மாய வடிவங்களில் போர் புரிந்து வந்தான். தினமும் காலையில் சூரிய உதயத்தில் இருந்து சூரிய அஸ்தமனம் ஆகும்வரை போர் நடக்கும். தினமும் போர் முடிந்ததும் திருமால் வத்திரிகாசிரமத்தில் உள்ள ஒரு குகைக்கு சென்று இளைப்பாறுவார். பொழுது விடிந்ததும், அரக்கனுடன் போர் புரிய போர்களத்திற்கு செல்வார். ஒரு நாள் ஆசிரமத்தில் திருமால் படுத்து இருந்த போது அங்கு வந்த முரன், அவரை திடீரென்று தாக்கத் தொடங்கினான். அப்போது பெருமாளின் உடலில் இருந்து ஒரு மகத்தான சக்தி, பெண் வடிவில் எழுந்து அரக்கன் முன் வந்து நின்றாள். அழகியைக் கண்டதும் அவளது அழகில் அரக்கன் மயங்கினான். ஆனால் படைக்கலங்களுடன் விசுவரூபத்துடன் தோற்றமளித்த அந்தப் பெண் ஆங்காரத்துடன் அரக்கனை அழித்தாள்.

இதனால், திருமால் மனம் மகிழ்ந்தார். தமது எதிரில் நின்ற சக்தியை நோக்கி, “”சக்தியே, அசுரனை அழித்த உனக்கு ஏகாதசி என்று திருநாமம் சூட்டுகிறேன். அரக்கன் முரனை அழித்த இம்மார்கழி மாதத்தில் உன்னை விரதம் இருந்து வழிபடுவோருக்கு, யாம் வைகுண்ட பதவி அளித்து ஆட்கொள்வோம்.” என்று கூறினார். திருமால் கொடுத்த வரமே ஏகாதசியின் மகிமைக்கு காரணமாயிற்று. அரக்கனை வென்று சக்தி வெளி வந்த மார்கழி மாதம் பதினோராவது நாளாக இருந்ததால், திருமாலின் சக்திக்கே “ஏகாதசி’ என்ற பெயர் ஏற்பட்டது.

தேவர்களும், முனிவர்களும் ஏகாதசியன்று விரதம் இருந்து இழந்த தங்களது சக்தியை மீண்டும் பெற்றனர்

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!