ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

ஐந்து வேளைகள்/செயல்கள்:

அபிகமநம் – ப்ரஹ்ம முஹூர்த்தத்திற்கு முன்பு எழுந்திருந்து நம்மைத் தயார் செய்து கொள்ளுதல் – மல ஜலம் கழித்தல், பல் விளக்குதல், நீராடுதல், ஸந்த்யா வந்தனம் செய்தல் முதலியன.

உபாதானம் – திருவாராதனத்திற்குத் தேவையான பொருட்களைச் சேகரித்தல்

இஜ்ஜா (யாகம்) – சேகரித்த பொருட்களைக் கொண்டு திருவாராதனம் செய்தல் – பொதுவாக மதிய நேரத்தில் செய்யப்படுவது

ஸ்வாத்யாயம் – அவரவருடைய வர்ணத்துக்குத் தகுந்தபடி வேதம், வேதாந்தம், திவ்ய ப்ரபந்தம் முதலியவற்றைக் கற்றல், கற்பித்தல்

யோகம் – ஆத்மாவை பரமாத்மாவில் ஒன்றவிடும் த்யானம் மற்றும் ஓய்வெடுத்தல்
இங்கே, இஜ்ஜா என்பது தேவ பூஜையைக் குறிக்கும். ஸ்ரீவைஷ்ணவர்கள் தங்கள் க்ருஹத்தில் இருக்கும் எம்பெருமான்களுக்கு திருவாராதனம் செய்தல் வேண்டும். திருவாராதனத்துடன் பகவத் விஷயத்தைக் கற்றல், பகிர்தல் மற்றும் த்யானித்தலும் செய்வர்கள்.

பெரியவாச்சான் பிள்ளை பெருமாள் திருமொழி 1.7 “மறம் திகழும்” பாசுர வ்யாக்யானத்தில், “இரு முப்பொழுது” என்பதற்கு “பஞ்ச காலங்கள்”

முதலில் தயார் செய்ய வேண்டியது

நீராட்டம் (தலை உள்பட)

த்வாதஸ ஊர்த்வ புண்ட்ர தாரணம் – 12 திருமண் ஸ்ரீசூர்ணம் அணிதல் (குருபரம்பரை ச்லோகம், ஆசார்யர்கள் தனியன்கள், பெருமாள் மற்றும் தாயாரின் த்வாதஸ நாம மந்த்ரங்களை ஜபித்துக் கொண்டு செய்தல்).

ஸந்த்யா வந்தனம்.
மாத்யாந்ஹிகம் (வேளையைப் பொறுத்து) – பொதுவாக திருவாராதனம் மதிய நேரத்திலேயே செய்யப்பட வேண்டும். ஆனால் வேலைக்குப் போகும் பலருக்கும் இது சாத்தியப்படாது. நாம் முடிந்தவரை சாஸ்த்ரத்தின் படி நடக்க முயல வேண்டும், முடியாத நேரத்தில் எம்பெருமானிடம் அபராத க்ஷாமணம் பண்ணிக்கொள்ள வேண்டும்.

பஞ்ச பாத்ரம் (வட்டில்கள்), தூபம், தீபம், திருவிளக்கு, புஷ்பம், தீர்த்தம், தீர்த்த பரிமளம் (ஏலம்/க்ராம்பு பொடி) போன்றவற்றைத் தயார் செய்து கொள்ளவும்.

ஆசார்யன் ஸ்ரீ பாத தீர்த்தம் – ஆசார்யனின் பாதுகைகளையோ திருவடிகளில் வைத்து எடுத்த வஸ்த்ரத்தையோ திருவாராதனத்தில் எழுந்தருளப் பண்ணிக்கொள்ளவும்.

குரு பரம்பரா மந்த்ரம் (அஸ்மத் குருப்யோ நம:, …) மற்றும் ஆசார்யர்களின் தனியன்களைச் சொல்லிக் கொண்டு தீர்த்தத்தைப் பாதுகையிலோ திருவடி வஸ்த்ரத்திலோ சேர்க்கவும். பின்பு தான் அதை ஸ்வீகரித்துக் கொள்ளவும். இது திருவாராதனத்தில் ஒரு முக்கியமான அங்கம்.

க்ருஹத்தில் இருப்பவர்கள், பெண்கள் உட்பட அனைவரும் திருவாராதனத்தில் பங்கு கொள்ளலாம் – புஷ்பம் தொடுத்தல், இடத்தைச் சுத்தம் செய்தல், போகம் (தளிகை) தயாரித்தல் முதலான கைங்கர்யத்தில் ஈடு படலாம்.

முறை

வட்டில்களும் அதன் உபயோகங்களும்

1 – அர்க்க்யம் – எம்பெருமானின் திருக்கை விளக்கும் நீர்
2 – பாத்யம் – எம்பெருமானின் திருவடி விளக்கும் நீர்
3 – ஆசமனீயம் – எம்பெருமான் உட்கொள்ளும் நீர்
4 – கண்டூஷம் (எம்பெருமான் திருவாய் கொப்பளிக்கும் நீர்), ஸ்நாநீயம், மதுவர்க்கம், பாநீயம், கண்டூஷம் – முறையே ஒவ்வொரு ஆஸனத்துக்கும்
5 – சுத்த உதகம் – எம்பெருமானுக்கு சமர்ப்பிக்கும் வஸ்துக்களை சுத்தி செய்ய உதவும் நீர்
6 – படிக்கம் – எம்பெருமானுக்கு சமர்ப்பித்து புனிதமான நீரைச் சேகரிக்கும் பாத்திரம்
7 – ஆசார்யனுக்குச் சமர்ப்பிக்கும் தீர்த்தம்
8 – திருக்காவேரி – திருவாராதனத்துக்கு உபயோகப்படுத்த வேண்டிய நீர் இருக்கும் பாத்திரம்
ஒருவர் திருவாராதனம் செய்யும்போது தம்முடைய ஆசார்யனே திருவாராதனம் செய்வதாகவும், தாம் தம்முடைய ஆசார்யனின் கரணமாக இருந்து எம்பெருமானுக்குத் திருவாராதனம் செய்கிறோம் என்றும் எப்போதும் எண்ண வேண்டும்.

நம் பெரியோர்கள் எம்பெருமானுக்கும் பிராட்டிகளுக்கும் திருவாராதனம் செய்வதற்குமுன் தன்னுடைய ஆசார்யன், மாமுனிகள், எம்பெருமானார், பராங்குச பரகாலாதி ஆழ்வார்கள், விஷ்வக்ஸேனர் மற்றும் திருவநந்தாழ்வான், கருடாழ்வார், ஸுதர்சனாழ்வார், பாஞ்சஜந்யாழ்வார் ஆகிய நித்யஸூரிகளுக்கும் திருவாராதனம் செய்யவேண்டும் என்று பணித்துள்ளார்கள். ஆசார்யன் திருவாராதனத்துக்கு தனி வட்டில் வைத்துக் கொள்ள வேன்டும். போகம், புஷ்பம், சந்தனம் முதலியவை முதலில் எம்பெருமானுக்கு சமர்ப்பித்து அவன் சேஷத்தை விஷ்வக்ஸேனர் மற்றும் நித்யஸூரிகள், நம்மாழ்வார் தொடக்கமான ஆழ்வார்கள், ஆசார்யர்கள் இறுதியில் தன்னுடைய ஆசார்யனுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

பின்வரும் பகுதியில் திருவாராதன முறையைச் சுருக்கமாகக் காணலாம். இது முழுமையானது அல்ல. மேலும் திவ்ய தேசம், திருமாளிகை, குடும்பம் போன்றதற்கு ஏற்ப மாறுபாடும் இருக்கலாம். பெரியோர்களிடம் கேட்டு அறியவும்.

திருவாராதனத்துக்கு அதிகாரம் உள்ளவர்கள் செய்ய வேண்டிய முறையைச் சுருக்கமாக மேலே காண்போம்.

“துளஸ்யம்ருத ஜந்மாஸி” ச்லோகத்தைச் சொல்லி வணங்கி, திருத்துழாயைப் பறிக்கவும்

பொதுத் தனியன்கள், வையம் தகளியா, அன்பே தகளியா, திருக்கண்டேன் பாசுரங்கள் சொல்லிக்கொண்டு திருவிளக்கு ஏற்றவும்

பஞ்ச பாத்ரங்களை வரிசைப்படி வைக்கவும்.

திருக்காவேரியில் தீர்த்தம் சேர்க்கவும்.

திருக்காவேரியிலிருந்து தீர்த்தத்தை எடுத்து திருத்துழாயைக் கையில் த்வயத்தின் உத்தர வாக்யத்தைச் (ஸ்ரீமதே நாராயணாய நம:) சொல்லிக்கொண்டு எல்லா வஸ்துக்களிலும் ப்ரோக்ஷிக்கவும்.

வட்டில்களில் தீர்த்தத்தைச் சேர்க்கவும்.

“ஜிதந்தே” முதல் இரண்டு ஸ்தோத்ரங்களும், “கௌசல்யா ஸுப்ரஜா “, “கூர்மாதீந் திவ்ய லோகாந்” ச்லோகங்களும், “நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய“, “மாரி மலை முழைஞ்சில்“, “அன்று இவ்வுலகம் அளந்தாய்” மற்றும் “அங்கண்மா ஞாலத்து அரசர்” பாசுரங்களைச் சொல்லிக் கொண்டு, கையால் ஓசைப் படுத்தி விட்டு, கோயில் ஆழ்வார் திருக்காப்பு  நீக்கவும் (கதவைத் திறக்கவும்).

ஸாஷ்டாங்கமாக விழுந்து சேவிக்கவும்.

ஒவ்வொரு ஆஸனத்திலும், முதலில், அர்க்க்ய பாத்ய ஆசமனீயம் முதலியவைகளை திருக்காவேரியில் இருந்து வட்டில்களில் சேர்த்து ஸங்கல்ப்பிக்கவும் (மனதால் இருப்பதாக நினைக்கவும்). அர்க்க்ய பாத்ய ஆசமனீயம் முதலியவைகள் ஸமர்ப்பித்தபின் திருவொத்துவாடை ஸமர்ப்பிக்கவும் (ஒரு வஸ்த்ரத்தால் ஈரத்தைத் துடைத்தல் செய்யவும்).

மந்த்ராஸனம் – எம்பெருமானை திருவாராதனம் ஏற்றுக்கொள்ள அழைத்தல்

“உடுத்துக் களைந்த” பாசுரத்தைச் சொல்லிக் கொண்டு முந்தைய நாள் சூட்டிய மலர்களைக் களையவும்.

அர்க்க்ய பாத்ய ஆசமநீயங்களை சமர்ப்பிக்கவும். ஓம் அர்க்ஹ்யம் ஸமர்ப்பயாமி, ஓம் பாத்யம் ஸமர்ப்பயாமி, ஓம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி என்றோ திருக்கைகள் விளக்கியருள வேண்டும், திருவடிகள் விளக்கியருள வேண்டும், ஆசமனம் கண்டருள வேண்டும் என்றோ கூறிக்கொண்டு ஸமர்ப்பிக்கவும்.

108 திவ்ய தேச எம்பெருமான்களை திருவாராதனம் கண்டருள அழைக்கவும்.
எம்பெருமானிடம் இந்த திருவாராதனம் தன்னுடைய ஆசார்யன் செய்வதாகவும், தான் அவன் கரணங்களாக இருந்து செய்வதாகவும் விண்ணப்பிக்க வேண்டும்.
ஸ்நாநாஸனம் – எம்பெருமானை நீராட்டுதல்

எம்பெருமான்களை திருமஞ்சன வேதிகையில் எழுந்தருளப்பண்ணவும்
அர்க்க்ய பாத்ய ஆசமநீயங்களை சமர்ப்பிக்கவும்.

ஓம் ஸ்நாநீயம் ஸமர்ப்பயாமி என்றோ ஸ்நாநீயம் கண்டருள வேண்டும் என்றோ கூறிக்கொண்டு ஸ்நாநீயம் சமர்ப்பிக்கவும்.

புருஷ ஸூக்தம், நாராயண ஸூக்தம், விஷ்ணு ஸூக்தம், ஸ்ரீ ஸுக்தம், பூ ஸூக்தம், நீளா ஸூக்தம் (நேரத்திற்கு ஏற்றார் போல்) சேவித்துக் கொண்டு திருமஞ்சனம் செய்யவும். “வெண்ணெய் அளைந்த குணுங்கும்” பதிகமும் திருமஞ்சன கால பாசுரங்களையும் சேவித்து முடிக்கவும்.

அர்க்க்ய பாத்ய ஆசமநீயங்களையும் தூபம், தீபம், பால், பழங்கள் போன்றவற்றையும் சமர்ப்பிக்கவும்.

வட்டில்களில் இருக்கும் தீர்த்தத்தை படிக்கத்தில் சேர்க்கவும்

அலங்காராஸனம் – எம்பெருமானை அலங்கரித்தல்

எம்பெருமான்களை ஆஸ்தானத்தில் எழுந்தருளப்பண்ணவும்
அர்க்க்ய பாத்ய ஆசமநீயங்களை சமர்ப்பிக்கவும்.

சாத்துப்படி (சந்தனம்) மற்றும் புஷ்பம் சமர்ப்பிக்கவும் – “கந்தத்வாராம் துராதர்ஷாம்” ச்லோகத்தையும் “பூசும் சாந்து என் நெஞ்சமே” பாசுரத்தையும் விண்ணப்பிக்கவும். குறிப்பு: பொதுவாக சாளக்ராம எம்பெருமான்களுக்கு திருமண் காப்பு சாற்றுவதில்லை, சந்தனக்காப்பு சாற்றுவதே வழக்கம்.
“தூர்வஸ்ய” ச்லோகத்தைச் சொல்லிக்கொண்டு தூபம் சமர்ப்பிக்கவும், “உத் தீப்யஸ்ய” ச்லோகத்தைச் சொல்லிக்கொண்டு தீபம் சமர்ப்பிக்கவும்.

மந்த்ர புஷ்பம், வேதாரம்பம்.

த்வாதஸ நாம அர்ச்சனை.

திவ்ய ப்ரபந்தம் சேவித்தல்

“ஸ்ரீசைலேச தயாபாத்ரம்” தொடக்கமான பொது தனியன்கள்.
திருப்பல்லாண்டு, திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவை, அமலனாதிபிரான், ஸ்தலப் பாசுரம் (நாம் பிறந்த மற்றும் இருக்கும் திவ்ய தேசப் பாசுரம்), கண்ணிநுண் சிறுத்தாம்பு, கோயில் திருவாய்மொழி, இராமானுச நூற்றந்தாதி, உபதேச ரத்தின மாலை, முதலியன.

குறிப்புகள்:

இருக்கும் நேரத்திற்குத் தகுந்தாற்போல் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சேவிக்கலாம்

இராமானுச நூற்றந்தாதி ப்ரபந்ந காயத்ரி/ஸாவித்ரி என்று கூறப்படுகிறது –

மாமுனிகள் எப்படி ப்ராஹ்மணன் தினமும் காயத்ரி மந்திரத்தைச் சொல்லுகிறானோ அது போல ப்ரபந்நன் இத்தை தினமும் அநுஸந்திக்க வேண்டும் என்கிறார்.

4000 திவ்ய ப்ரபந்த பாசுரங்களையும் சுழற்சி முறையில் ஒவ்வொரு மாதமும் சேவிக்கும் வழக்கமும் உள்ளது.

இந்நேரத்தில் போகம் (தளிகை) தயார் செய்யலாம். எம்பெருமானின் தளிகைக்குத் தனியாக பாத்திரங்கள் வைத்துக் கொள்ளவும். மேலும், தளிகை சமைத்த பாத்திரத்திலேயே வைத்து எம்பெருமானுக்குக் கண்டருளப் பண்ணக் கூடாது. வேறு பாத்திரங்களில் மாற்றியே கண்டருளப் பண்ண வேண்டும். இந்தப் பாத்திரங்களை நாம் உபயோகப்படுத்தாமல் எம்பெருமானுக்கு என்றே வைத்துக் கொள்ள வேண்டும்.

போஜ்யாஸனம் – தளிகை சமர்ப்பித்தல்

அர்க்க்ய பாத்ய ஆசமநீயங்களை சமர்ப்பிக்கவும்.

போகத்தை எம்பெருமான் முன்பு வைக்கவும்.

போகத்தின் மேல் தீர்த்தம் ப்ரோக்ஷித்து, திருத்துழாய் சேர்க்கவும்.

கூடாரை வெல்லும் சீர், நாறு நறும்பொழில், உலகமுண்ட பெருவாயா பாசுரங்களையும் யா ப்ரீதிர் விதுரார்பிதே ச்லோகத்தையும் சொல்லிக் கொண்டு எம்பெருமானுக்கு போகத்தை கண்டருளப் பண்ணவும்.

எம்பெருமானுக்கு சுருளமுது (வெற்றிலை பாக்கு), சாத்துப்படி (சந்தனம்) சமர்ப்பிக்கவும்.

எம்பெருமானின் ப்ரசாதத்தை ஆழ்வார் ஆசார்யர்களுக்குக் கண்டருளப் பண்ணவும்.

இப்போது போகம் ப்ரசாதமாகிவிட்டது – இவற்றை வேறு இடத்திற்கு மாற்றிவிடவும்.

புநர் மந்த்ராஸனம் – மங்களாசாஸனம்/சாற்றுமுறை

அர்க்க்ய பாத்ய ஆசமநீயங்களை சமர்ப்பிக்கவும்.

“தத் விஷ்ணோர் பரமம் பதம்…” சொல்லிக் கொண்டு ஆரத்தி சமர்ப்பிக்கவும்.
கோயில், திருமலை, பெருமாள் கோயில், திருநாராயணபுரம் எம்பெருமான்கள், ஜகந்நாதன், பெருமாள் (ஸ்ரீ ராமன்), பார்த்தஸாரதி எம்பெருமான்கள், ஆண்டாள், நம்மாழ்வார், கலியன், எம்பெருமானார், மணவாள மாமுனிகள், ஸர்வ ஆசார்யர்களுக்கும் மங்களம் ஸ்தோத்ரங்களைச் சேவிக்கவும்.

சாற்றுமுறை பாசுரங்கள், திருப்பல்லாண்டு பாசுரம், வாழி திருநாமங்கள் ஆகியவற்றைச் சேவிக்கவும்.

திருவாராதனம் செய்பவர், தீர்த்தம் ஸ்வீகரித்துக் கொண்டு மற்றவர்களுக்கும் வழங்கவும்.

ஸ்ரீ பாத தீர்த்தத்தை மற்றவர்களுக்கு வழங்கவும்.

திருவாராதனத்தின் போது பெருமாள் திருவடிகளில் சேர்த்த திருத்துழாயைத் தானும் ஸ்வீகரித்துக் கொண்டு மற்றவர்களுக்கும் வழங்கவும்.

ஒவ்வொரு நாளும், அந்நாளின் திருநக்ஷத்ரத்தில் அவதரித்த ஆழ்வார் ஆசார்யர்களின் வாழி திருநாமத்தைச் சேவிக்கவும்.

பர்யங்காஸனம் – எம்பெருமானை ஓய்வெடுக்கச் செல்லும்படி ப்ரார்த்தித்தல்

“பந்நகாதீச பர்யங்கே“, “க்ஷீர ஸாகர” ஸ்லோகங்களை சேவிக்கவும்
ஸாஷ்டாங்க ப்ரணாமம் செய்து, “உபசாராபதேசேந” ஸ்லோகத்தை சேவிக்கவும். இந்த ச்லோகத்தால், திருவாராதனத்தின் போது நாம் செய்த தவறுகளுக்கு மன்னிப்புக் கேட்கிறோம்.

“உறகல் உறகல் உறகல்“, “பனிக்கடலில் பள்ளி கோளை பழகவிட்டு” பாசுரங்களைச் சொல்லிக் கொண்டு கோயில் ஆழ்வார் திருக்காப்பு சேர்க்கவும் (கதவை மூடவும்).

அநுயாகம் – யாகம்/திருவாராதனத்தை நிறைவு செய்தல்

அவரவர் ஆசார்யன் மடம்/திருமாளிகை வழக்கப்படி தேவராஜ அஷ்டகமோ வரவரமுனி பூர்வ/உத்தர தின சர்யைகளோ வானமாமலை ஜீயர் ப்ரபத்தி/மங்களாசாஸனங்களோ சேவிக்கவும்.

ஸ்ரீவைஷ்ணவ அதிதிகளுக்கு ப்ரசாதம் அளிக்கவும்

தாங்களும் ப்ரசாதம் ஸ்வீகரிக்கவும்

அதிகப்படி விஷயங்கள்:

அநத்யயன காலம்

அநத்யயன காலத்தில் நாம் ஆழ்வார் பாசுரங்களைச் சேவிப்பதில்லை. கோயில் ஆழ்வார் திருக்காப்பு நீக்கும்போது ஜிதந்தே  ஸ்தோத்ரம் (முதல் 2 ச்லோகங்கள்), கௌசல்யா ஸுப்ரஜா ச்லோகம், கூர்மாதீந் ச்லோகம் ஆகியவற்றைச் சொல்லி கதவைத் திறக்கலாம். ஆழ்வார் பாசுரங்களை வாயால் கூறுவதில்லையே தவிர மனதால் நினைக்கலாம்.

திருமஞ்சன காலங்களில், ஸூக்தங்களுடன் நிறுத்திக் கொள்ளவும்.

மந்த்ர புஷ்பத்தில், “சென்றால் குடையாம்” சேவிக்கும் இடத்தில் “எம்பெருமானார் தரிசனம் என்றே” சேவிக்கவும்.

சாற்றுமுறையில், உபதேச ரத்தின மாலை மற்றும் திருவாய்மொழி நூற்றந்தாதி பாசுரங்களைச் சேவித்து, “ஸர்வ தேச ஸதா காலே…” தொடங்கி வாழி திருநாமங்கள் வரை சேவிக்கவும்.

லகு திருவாராதனம் (30 நிமிடங்களுக்கும் குறைவு)

கோயில் ஆழ்வார் திருக்காப்பு நீக்கவும்

அர்க்க்ய பாத்ய ஆசமநீயங்களை சமர்ப்பிக்கவும்.

திருமஞ்சனம்

திருப்பல்லாண்டு, திருப்பாவை, முதலியன – இருக்கும் நேரத்தில் முடிந்த வரை. அநத்யயன காலத்தில், திவ்ய ப்ரபந்த தனியன்கள், உபதேச ரத்தின மாலை, முதலியன.

எம்பெருமான் ஆழ்வார் ஆசார்யர்களுக்கு போகம் கண்டருளப்பண்ணவும்.

சாற்றுமுறை

ஸ்ரீ பாத தீர்த்தம்

கோயில் ஆழ்வார் திருக்காப்பு மூடவும்

முக்கியக் குறிப்புகள்:
பூர்வ/உத்தர தினசர்யைகளில் காண்பித்தபடி மூன்று வேளை திருவாராதனம் செய்தல் வேண்டும். நாமும் முடிந்த வரை செய்யலாம்.

காலை ஸந்த்யாவந்தனத்திற்குப் பிறகு சுருக்கமான திருவாராதனம்

மாத்யாஹ்நிகத்திற்குப் பிறகு விரிவான திருவாராதனம்

ஸாயம் ஸந்த்யாவந்தனத்திற்குப் பிறகு சுருக்கமான திருவாராதனம்

ஏகாதசி அன்று பொதுவாக விரிவான தளிகை செய்வதில்லை. குழந்தைகள், வயதானவர்களின் இருப்பு போன்ற குடும்ப நிலைமையைப் பொறுத்து பழங்கள் மற்றும் சுருக்கமான போகம் செய்து சமர்ப்பிக்கலாம்.

த்வாதசி அன்று திருவாராதனம் சீக்கிரமாக செய்து தீர்த்தம், திருத்துழாய் மற்றும் ப்ரசாதம் ஸ்வீகரித்து, பாரணம் (வ்ரதத்தை முடித்தல்) செய்யவும்.

அநத்யயன காலத்தில், 4000 திவ்ய ப்ரபந்தங்கள் சேவிப்பதில்லை. பூர்வாசார்ய ஸ்தோத்ரங்கள், உபதேச ரத்தின மாலை, திருவாய்மொழி நூற்றந்தாதி, ஆழ்வார்/ஆசார்யர்கள் தனியன்கள், வாழி திருநாமங்கள் முதலியன சேவிக்கவும். மார்கழி மாதம் பிறந்த பின், திருப்பள்ளியெழுச்சி மற்றும் திருப்பாவை தினமும் சேவிக்கவும்.

யாத்ரைகள் செல்லும்போது, எம்பெருமானையும் உடன் எழுந்தருளப் பண்ணிக் கொண்டு செல்லுதல் உசிதம். அல்லது நம் க்ருஹத்தில் வேறு ஸ்ரீவைஷ்ணவர் திருவாராதனம் செய்ய ஏற்பாடு செய்யலாம். அதுவும் இல்லாமல் போனால், எம்பெருமானை, திருவாராதனம் செய்யும் வேறு ஸ்ரீவைஷ்ணவர் க்ருஹங்களில் எழுந்தருளப் பண்ணலாம்.

தீட்டு காலங்களில் எம்பெருமானுக்குத் திருவாராதனம் செய்ய மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

முடிவாக, எம்பெருமான் நம் க்ருஹத்தில் எழுந்தருளியிருக்க நாம் திருவாராதனம் செய்யாமல் இருத்தல், வீட்டிற்கு வந்த விருந்தாளியை நாம் கவனியாமல் இருப்பது போன்றது.

சாஸ்த்ரத்தில் விதித்தபடியும், நம் பூர்வாசார்யர்களின் திருவுள்ளப் படியும் எம்பெருமானிடம் ஈடுபாட்டுடன் திருவாராதனம் செய்பவர், பகவத் பாகவத ஆசார்ய கைங்கர்யத்தில் முழுமையாகவும் இயற்கையாகவும் ஈடுபடுவதன் மூலம் எம்பெருமானுக்கும், ஆழ்வார் ஆசார்யர்களுக்கும் தன்னுடைய ஆசார்யனுக்கும் மிகவும் விரும்பத்தக்கவராக ஆவர்.