Thiruppavai pasuram 1 | திருப்பாவை பாடல் 1

 ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவை (1)

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர்! போதுமினோ நேரிழையீர்!

சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன்

ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்

நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.

செல்வம் நிறைந்துள்ள திருவாய்ப்பாடியில் கைங்கர்ய ஸம்பத்தையும் இளம் பருவத்தையும் உடைய பெண்கள்! விலக்ஷணமான பூஷணங்களை அணிந்துள்ளவர்களே ! (மாதங்களிற் சிறந்த) மார்கழி மாஸமும் பூர்ண சந்திரோதயத்தையுடைய (சுக்கில பக்ஷத்திய) நல்லநாளும் (நமக்கு வாய்த்து நின்றன.)  கூர்மை பொருந்திய வேலாயுதத்தை உடையவனும்
(கண்ணபிரானுக்குத் தீங்கு செய்யவரும் நீச ஜந்துக்கள் பக்கலிலும் சீறிக் கொடுமைத் தொழிலைப் புரிபவனுமான நந்தகோபனுக்கு பிள்ளையாய்ப் பிறந்தவனும், அழகு நிறைந்த கண்களை உடையளான யசோதைப்பிராட்டிக்கு
சிங்கக்குட்டி போலிருப்பவனும், காளமேகத்தோடொத்த திருமேனியையும்
செந்தாமரைப் பூப்போன்ற திருக்கண்களையும் ஸூர்யனையும் சந்திரனையும் போன்ற திருமுகத்தை உடையனுமான ஸ்ரீமந் நாராயணன் தானே (‘அவனால் பேறு’ என்றிருக்கிற) நமக்கே பறையை கொடுக்குமவனாயிற் நின்றான், ஆதலால், இவ்வுலகத்தவர்கள் கொண்டாடும்படி (இந்நோன்பிலே)ஊன்றி நீராட வர விருப்பமுடையீர்களே ! வாருங்கள் ஏல் ஓர் எம்பாவாய் ! ஆயர் சிறுமிகள் “நாம் நோன்பு நோற்பதற்கீடாக நமக்கு இங்ஙனே விலக்ஷணமானதொரு காலம் நேர்பட்டபடி என் !” என்று காலத்தைக் கொண்டாடி மார்கழி நீராட்டத்தில் விருப்பமுடைய பெண்களை விளிக்குமாறு கூறுவது, இப்பாட்டு.
பகவத் கீதையில் கண்ணபிரான் “மாஸங்கள் அனைத்தினுள்ளும் மார்கழி மாதமாகிறேன் நான்” என்று இம்மாதத்திற்குள்ள வீறுபாடு தோற்ற அருளிச் செய்தமையால் அம்மாதம் வாய்க்கப் பெற்றவர்கள் அதனைக் கொண்டாடாதிருக்க வல்லரல்லரே. இராமபிரானை முடிசூட்டப் பாரித்து முயன்றபோழ்து வஸந்தருதுவில் முதன்மையான மாதம் தன்னடையே நேர்பட, அதனை அங்குக் கொண்டாடினாற்போல், இவர்களும் நோன்பு நோற்கமுயலத் தன்னடையே வாய்த்த மார்கழி மாதத்தை நினைந்து நெஞ்சு கனிகின்றனர்.  

நற்காரியங்கள் செய்ய விரும்பினார்க்குச் சாஸ்திரங்களில் விதிக்கபட்ட சுக்லபக்ஷமும் இவர்கட்கு நினைவின்றி வாய்த்தபடியால், அதனையும் கொண்டாடுகின்றனர் மதி நிறைந்த நன்னாள் என்று. ஒருவரை ஒருவர் முகங்கண்டு அநுபவித்தற்கும், எல்லாருங் கூடிச் சென்று கண்ணபிரானை உணர்த்துவதற்கும் பாங்காக நிலா நேர்பட்டமையால் மகிழ்ச்சி மிக்கது. இவர்கள் கண்ணபிரானோடு ஸம்ச்லேஷிப்பதற்கு ஊரார் விரோதிகளயிருக்கும் காலத்தில் “நந்தகோபாலன் கடைத்தலைக்கே நள்ளிருட்கண் என்னை உய்த்திடுமின்” என்று நள்ளிருளை வேண்டுவர்கள்; இப்போது அங்ஙனன்றி க்ருஷ்ண ஸம்ச்லேஷத்திற்கு ஊராரே இசைந்து நின்றமையால் இருளை வெறுத்து நிலவைக்கொண்டாடுகின்றனரென்க.

விஜயலஷ்மி ராஜ் அவர்கள் வழங்கிய
திருப்பாவை பாடல் மற்றும் விளக்கம்
ஆடியோ வடிவில்

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!