ஓங்கி உலகு அளந்த உத்தமன் பேர் பாடி* நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீர் ஆடினால்*
தீங்கு இன்றி நாடு எல்லாம் திங்கள் மும்மாரி பெய்து* ஒங்கு பெருஞ் செந்நெலூடு கயல் உகளப்*
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்* தேங்காதே புக்கு இருந்து சீர்த்த முலை பற்றி-
வாங்கக்* குடம் நிறைக்கும் வள்ளற் பெரும் பசுக்கள்* நீங்காத செல்வம் நிறைந்து - ஏலோர் எம்பாவாய்.
ஸ்ரீஆண்டாள் திருப்பாவை(3)
ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தத்தை எத்தனை அழகாக திருப்பாவையின் பாசுரங்களில் செதுக்கி இருக்கிறாள் என்பது இந்த பாசுரங்களின் அமைப்பை பார்த்தால் விளங்கும்.
இந்த சிந்தாந்தம், கர்ம ஞான பக்தி யோகங்களை மோக்ஷ சாதனமாக சொல்லவில்லை. ப்ரபத்தி அதாவது சரணாகதியையே மோக்ஷ சாதனமாக சொல்கிறது. அதையும் அர்ச்சிராதி மார்க்கங்கள் வழியாகவே சரணாகதி செய்து ப்ரஹ்மத்தை அடைய வேண்டும் என்று சொல்கிறது. இதையே முதல் பாசுரத்தில், நாராயாணன் என்று பரமபத நாதனை சொன்னாள். இரண்டாவது பாசுரத்தில், பாற்கடலில் பையதுயின்ற பரமன் என்று வியூஹ மூர்த்தியை சொன்னாள். இந்த பாடலில், ஓங்கி உலகளந்த உத்தமன் என்று விபவ அவதார மூர்த்தியை சொல்கிறாள்!
மேலும் த்ருவிக்ரமாவதாரத்தை சொன்னதற்கு ஒரு உயர்ந்த அர்த்தம் இருக்கிறது. இந்த அவதாரம் கருணையின் வடிவம். இந்த அவதாரத்தில் மஹாபலி சக்ரவர்த்தி – அசுரனான போதும், அவன் தேவர்களை வருத்திய போதும் அவனை கொல்லாமல் வாழ்வளித்த அவதாரம். இந்த அவதாரத்தில்தான், நல்லவன், தீயவன், ஆஸ்திகன் – நாஸ்திகன் என்று எந்த வித பாரபட்சமுமில்லாமல் எல்லோர் தலையிலும் தன் பாத ஸ்பர்சம் வைத்த அவதாரம். அதனால் சர்வ வ்யாபகத்வம், சர்வக்ஞத்வம் தோன்ற ஓங்கி உலகளந்த உத்தமன் – புருஷோத்தமன் என்று அழைக்கிறாள் ஆண்டாள்.
பகவான் கட்டிப்பொன்போலே – அவன் நாமம் ஆபரணம் போலே என்று அவன் நாமத்துக்கு ஏற்றம் சொல்வர்கள் பூர்வாசார்யர்கள்; உத்தமன் பெயர் என்று திருமந்திரமான ஓம் நமோ நாராயணாய என்ற திருவஷ்டாக்ஷரத்தை ஆண்டாள் குறிப்பிடுகிறாள். இது முதல் பாசுரத்தில் சொன்ன நாராயண நாமத்திலிருந்து தேறும். அந்த நாமத்தை இடைவிடாது அனுசந்தித்து வந்தால் என்னென்ன நன்மைகளெல்லாம் ஏற்படும் சொல்லப் புகுகிறாள் ஆண்டாள். அந்த வகையில் இந்த பாடல் ஒரு மங்களாசாசனம். இந்த பாடலுக்கு வியாக்யானம் எழுதிய பூர்வாசார்யர்கள், ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி நீராடினால் என்றும் கொண்டு விளக்கம் சொன்னதுண்டு.
மழை என்பது நிறைய பெய்தாலும் தீங்கு – பெய்யாமல் விட்டாலும் தீங்கு – துர்பிக்ஷம், பஞ்சம் போன்ற தீங்குகள் நீங்க மழை தேவை. இந்த புருஷோத்தமனின் நாமத்தை சொல்லி நீராடி பாவை நோன்பிருந்தால் தீங்குகள் நீங்க தீங்கில்லாமல் மாதம் மும்மாரி பொழியும் என்று வாழ்த்துகிறாள். அந்த திருவிக்கிரமனின் பாதத்தை நோக்கி ஓங்கி வளர்ந்தது போல் நெற்பயிர்கள் வயல் வெளியெங்கும் நிறையும். அந்த வயல் வெளிகளில் ஊடே ஓடும் ஓடைகளில் மீன்கள் துள்ளி விளையாடும். பூங்குவளை போது – போது என்றால் தளிர் – அந்த குவளை மலர்களின் துளிரில் வண்டுகள் தூங்கும்.
இங்கே சொல்லப்படும் உருவகங்கள் சுட்டுவது, அந்த பரமனின் கருணையால் ப்ரபன்னர்கள் மத்தியில் ஞானம் ஓங்கி வளர்ந்த பயிரைப்போல் செழித்து இருக்கிறது.
அதில் ஆசார்யர்களை அண்டிய சிஷ்யர்கள், துள்ளும் கயல்களைப்போலே அந்த ஞானம் தந்த இன்பத்தினால் களிப்பர். ஆசார்யர்கள் மிகுந்து ஞானம் தழைத்திருப்பதால் குவளைப்போதில் துயின்ற வண்டைப்போல், பாகவதர்களின் ஹ்ருதய கமலத்தில் அந்த பரமன் உறங்குகிறான்.
அத்தகைய செழிப்பில், பெரிய பசுக்கள் வள்ளலைப்போல் குடம் குடமாக பாலை நிறைக்கின்றன. அவைகளின் மடி பெருத்து இருப்பதால் ஒரு கையால் பாலைக்கறக்க இயலாது.. முலை ‘பற்றி’ என்று இருகைகளாலும் பசுக்களின் மடியை பற்றித்தான் பாலை கறக்க முடியும்… இதற்கும் தேங்காதே என்று தயங்காமல் புகுந்து பாலை கறக்க சித்தமாக ஆய்பாடி இடையர்கள் இருப்பார்களாம்.
இங்கே பசுக்கள் ஒரு உருவகம். அந்த பகவானின் உருவகம். வள்ளன்மை அவன் குணம். அவன் எவ்வளவு கொடுத்தாலும் குறைவில்லாத வள்ளல். அத்துடன் பாலை கன்று குட்டிகளும், இடையர்களும் கொள்ளாவிடில் பசு எப்படி தவியாய் தவிக்குமோ அதுபோல் பரமனும் ஜீவாத்மாக்கள் அவனை கொள்ளாவிடில் தவித்து போகிறான். ஜீவாத்மாக்கள் முக்தி பெற்று அவனை எவ்வளவு அனுபவிக்கிறார்களோ அதே போல் அவனும் அவர்களை கொண்டு சுகிக்கிறான் என்பது தேறும்.
ஓங்கி உலகளந்த உத்தமனின் பெயரை சொல்லி பாடி நீராடி நோன்பிருந்து இத்தகைய செல்வங்களை எந்த நாளும் விட்டு நீங்காமல் பெற்று நிறைவோம் என்று ஆண்டாள் மங்களாசாசனம் செய்கிறாள்.
விஜயலஷ்மி ராஜ் அவர்கள் வழங்கிய
திருப்பாவை பாடல் மற்றும் விளக்கம்
ஆடியோ வடிவில்
திருப்பாவை பாடல் மற்றும் விளக்கம்
ஆடியோ வடிவில்