ஆழி மழைக் கண்ணா! ஒன்று நீ கை கரவேல்* ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்து ஏறி* 
ஊழி முதல்வன் உருவம்போல் மெய் கறுத்து* பாழியந் தோள் உடைப் பற்பநாபன் கையில்* ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்று அதிர்ந்து* தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல் 
வாழ உலகினில் பெய்திடாய்* நாங்களும் மார்கழி நீர் ஆட மகிழ்ந்து - ஏலோர் எம்பாவாய்.

ஸ்ரீஆண்டாள் திருப்பாவை(4)

ஆழி மழைக்கண்ணா! என்று பர்ஜன்ய தேவனை அழைக்கிறாள். ஆழி என்றால் முன் பாசுரத்தில் சொன்னபடி மும்மாரி பெய்யும் மழை – மண்டல வர்ஷம் என்பர். இந்த இடத்தில் பர்ஜன்ய தேவனை அழைத்து பாடியதற்கு விசேஷங்கள் சில சொல்வர் பூர்வாசார்யர்கள் – பர்ஜன்ய தேவனை பாடுவது போல், அவனிலும் அந்தர்யாமியைத்தான் ஆண்டாள் குறிப்பிடுகிறாள். அதேபோல், மற்ற தேவதைகளான யமன் முதலான பேர்கள் அழிக்கும் தொழிலை கொண்டு ஹிம்சிக்க புகுகிறார்கள். பர்ஜன்யனான வருணன் மட்டுமே உலகம் உய்ய நீரைத்தருகிறான். நீரின்றி அமையாது உலகு அல்லவா? இந்த பர்ஜன்ய தேவன் நாரணனைப்போலே, படைத்தல் – அழித்தல் தொழில்களை விட்டு ரக்ஷிக்கும் தொழிலை கைக்கொண்டிருக்கிறான் என்று ஒற்றுமை சொல்லி நமக்கு உணர்த்துகிறாள் ஆண்டாள்.

ஹே பர்ஜன்ய தேவனே! நீ உன் அனுகிரஹத்தை நிறுத்தி விடாதே – கை கரவேல் – பாரபட்சம் பார்க்காதே – ஆழியுள் புக்கு முகர்ந்து – இங்கே ஆழி என்பது சமுத்திரத்தை குறிக்கும் – சாதாரணமாக நாடு நகரங்களில் உள்ள குளங்கள் ஏரிகளிலிருந்து நீரை முகர்ந்து அதே நாடு நகரங்களின் மேல் வர்ஷிப்பது வ்யர்த்தம் – ஆழ்கடலுக்குச் சென்று – உள் புக்கு – ஆழ்கடலினுள்ளேயே புகுந்து முகர்ந்து – உன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு முகர்ந்து ஆர்த்தேறி – நன்றாக சத்தம் எழுப்பி இடி இடித்துக்கொண்டு மேகமாக அந்த நீரை தூக்கி வந்து எங்கள் மேல் கை கரவாமல் பொழி!

ஆர்த்தேறி என்பதற்கு பூர்வாசார்யர்கள் ‘இராமடம் ஊட்டுவார்போலே!’ என்கிறார்கள் – அதாவது அந்த காலத்தில் பிள்ளைகள் வீட்டில் கோபித்துக்கொண்டு ஊர்க்கோடியில் சத்திரங்களில் போய் படுத்துக் கொள்ளுமாம் – இரவில் வீட்டிலிருப்போர் பிள்ளைகள் பசி பொறுக்காதே என்று இரங்கி அன்னத்தை கையில் எடுத்துக்கொண்டு முக்காடிட்டு சத்திரங்களுக்கு சென்று குரலை மாற்றிக்கொண்டு ‘அன்னம் கொணர்ந்துள்ளோம்’ என்று ஆர்த்து கூவி அழைத்து அந்த பிள்ளைக்கு அடையாளத்தைக் காட்டிக்கொள்ளாமல் ஊட்டுவர்களாம்… அதே போல் பர்ஜன்ய தேவனும் தன்னை அடையாளம் காட்டிக்கொள்ளாமல் எல்லோருக்கும் உணவளிக்கிறான்!

ஆழியுள் புகுந்து நீரை முகர்ந்து வரும் மேகங்களை பார்க்கையில் ஆண்டாளுக்கு உடனே நாராயணன் நினைவுக்கு வருகிறான். நாராயணனும் தனது உதார குணத்தினால் கருமையாகி நீலமேக ஸ்யாமளனாக இருக்கிறான். இதில் ஒரு வித்தியாசம் – மழை பொழிந்த உடன் மேகம் வெளுத்து விடும் – ஆனால் அவனோ கொள்ள குறைவிலன் – எவ்வளவு அனுக்ரஹித்தாலும் குறைவின்றி இருப்பான் – அதனால் பர்ஜன்ய தேவனைப்பார்த்து ‘அவனைப்போலே’ நீயும் கருமை கொள் என்கிறாள் ஆண்டாள். அடுத்ததாக பாற்கடலில் துயிலும் பத்மநாபனின் திருத்தோள்களில் உள்ள சுதர்சனாழ்வான் மின்னுவது போலே மின்னலை ஏற்படுத்திக்கொண்டு, அந்த பத்மநாபனின் சங்கொலிபோல் நின்று அதிர்ந்து இடி இடித்து, அவனது சார்ங்கம் எனும் வில் எப்படி சரமழையை பொழிந்ததோ அப்படி – தாழாதே என்றபடி தயங்காமல் பொழிந்து நாங்கள் சுபிக்ஷத்துடன் வாழ பெய்திடாய் – அதை எண்ணி நாங்களும் மகிழ்ந்து மார்கழி நீராட போகிறோம் என்கிறாள்.

இதில் ஊழி என்பது காலத்தை குறிக்கிறது – ஊழி முதல்வன் எனும்போது அந்த கால தத்துவத்திற்கும் முந்தையவனாய் முதல்வனாய் பத்மநாபன் இருப்பதை சொல்கிறாள். வெறுமனே சுதர்சனத்தை சொல்லி அதைப்போல் மின்னல் என்று சொல்லாமல் பத்மநாபன் என்ற நாமத்தை சொல்லி சம்பந்தப்படுத்துவது ஏனெனில் – ஊழிமுதல்வனான நாராயணன் தன் நாபியிலிருந்து ‘பத்மம்’ எனும் தாமரை மலரை தோன்ற செய்து அதில் ப்ரம்ம தேவனை பிறப்பித்தான் – ப்ரம்மன் அதனால் நாராயணனின் பிள்ளை – பிள்ளையை பெற்றதற்கு அவன் பெரிய தன்மையால் தன் மகிழ்ச்சியை காட்டிக்கொள்ளவில்லை ஆனாலும் சுதர்சனாழ்வான் தானும் மகிழ்ந்து மின்னி அந்த மகிழ்வைக்காட்டினான் என்பது உட்பொருள்.

பாழி அம் தோளுடைய – என்று பரமனுடைய அழகிய தோள்களை பாடுகிறாள் – கொள்ள குறைவிலா அனுக்கிரஹம் செய்யக்கூடியவனான பெருமான் ‘ஒதுங்கின ரக்ஷ்ய வர்க்கம் அளவுபட்டு, ரக்ஷிப்பவனுடைய காவல் துடிப்பேமிக்கிருக்கை’ எனும்படி அளவில்லாத மேன்மை பெற்ற தோள்! ‘பிள்ளைகளைத் தொட்டிலிலே வளர்த்துப் புற்பாயிட்டுப் பூரித்து ஆயுதங்கொண்டு நோக்கியிருப்பரைப்போலே’ தன் ஸ்ருஷ்டிக்கு ஸோபாதிக காரணனாய் ப்ரம்மாவை பெற்று திருத்தோள்களால் ரக்ஷித்துக் கொண்டிருக்கிற பத்மநாபன் என்பது பொருள்! தோளென்று அவயத்தை சொன்னபோது ‘தோள் கண்டார் தோளே கண்டார்’ என்று ராமனை நினைத்துக்கொள்கிறாள் போலும் – அதனால் சரமழையை சார்ங்கம் பெய்த சரமழையை உதாரணமாக சுட்டுகிறாள்!

இந்த பாட்டு முழுவதுமே அவனுடைய ரக்ஷகத்துவத்தை தெள்ளிய முறையில் மழையுடன் ஒப்பிட்டு மகிழ்கிறாள். ஒருவரை ரக்ஷிக்க வேண்டுமானால் முதலில் அதற்கு உதார மனம் தேவை. மனமிருந்தால் மட்டும் போதாது ரக்ஷிக்கக்கூடிய சக்தியும் தேவை. ஜனமேஜயன் யாகம் செய்து பாம்புகளை அழித்தபோது தக்ஷகன் எனும் ராஜ நாகம் இந்திரனிடம் சரணாகதி பண்ணியது – ஆனால் இந்திரனோடு சேர்த்து யாகத்தீயில் வீழ்க என்று யாகத்தில் மந்திரங்கள் விநியோகம் ஆனவுடன் தானும் அழிவோமே என்று இந்திரன் தக்ஷகனை விட்டு அகன்றான் – அங்கே கருணை இருந்தது சக்தி இல்லை. தசரதன் பரசுராமனிடம் தன்னை கொல்ல வேண்டாம் என்று சரணாகதி செய்தான் – ஆனால் பரசுராமனிடம் சக்தி இருந்தும் கருணை இல்லை. அதனால் இரண்டு சரணாகதிகளும் பலிக்க வில்லை.

பகவான் அப்படி இல்லை – இலங்கையை போரிட்டு வெல்லும் முன்பே விபீஷணாழ்வானுக்கு முடிசூட்டினான் – பதினோரு அக்ஷோணி சேனையை ஒருபக்கமும் தானோருவன் மட்டும் மறுபக்கமும் நின்று எதிர்த்து ஜெயத்தை கொடுத்தான் – அவன் அளவற்ற வலிமையுடயவன் – சரணாகதி செய்யத் தகுந்தவன் – சங்கம், சக்ரம், சார்ங்கம் என்று அவன் ஆயுதங்களை சொல்வது அவன் வலிமையை உதாகரித்து சரணாகதி செய்ய சொல்லுவதே ஆகும்!

விஜயலஷ்மி ராஜ் அவர்கள் வழங்கிய
திருப்பாவை பாடல் மற்றும் விளக்கம்
ஆடியோ வடிவில்