பெரிய பெருமாள் ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளின நாள் சித்திரை மாதம் ரேவதி நக்ஷத்திரம் .

ப்ரம்ம லோகத்தில், ப்ரம்மாவால் ஆராதிக்கப்பட்டு பின் அவர் மூலமாக இக்ஷ்வாகு குலத்தினருக்கு வழங்கப்பட்டு, அக்குலத்தில் தோன்றிய பலராலும் காலம் காலமாக ஆராதிக்கப்பட்டு வந்தார் பெரிய பெருமாள். அக்குலத்தில் உதித்த தசரத சக்ரவர்த்தியினாலும், பின் நம்பெருமான் தானே அவதரித்த ஸ்ரீ ராமரும் அவரை
வழிபட்டுவந்தார்கள். 

இந்நிலையில் இலங்கையில்  போர்
முடிந்து ஸ்ரீ ராமரும் அயோத்திக்கு எழுந்தருளி பட்டாபிஷேகம் கண்டருளினார். பட்டாபிஷேக வைபவத்திற்கு வந்திருந்த விபீஷ்ணன், அங்கு ஏள்ளப்படிருந்த பெரிய பெருமாளைப் பார்த்து, மிக ஆனந்தித்து தன்னிடம் அவரைக் கொடுத்தருளும்படி ராமரிடம் வேண்டினான். ஸ்ரீ ராமரும் உகந்து பெரிய பெருமாளை அவருக்கு அளித்து, பெருமாளுக்கு நித்ய கைங்கர்யங்கள் செய்வது பற்றி எடுத்துக் கூறினார்.

பெரிய பெருமாளுடன் அயோத்தியிலிருந்து புறப்பட்ட விபீஷ்ணன் , இலங்கைக்குத் திரும்பும் வழியில் சாயரக்ஷை நேரத்தில் மாலை சந்தியா வந்தனம் பண்ண வேண்டி, ஸ்ரீரங்கம் காவிரிக்கரையில் பெருமாளை ஏளப் பண்ணினான். நித்ய கர்மானுஷ்டானங்களை முடித்துக் கொண்டு மீண்டும் இலங்கைக்குக் கிளம்பும் வேளையில், அவனால் பெருமாளை அவ்விடத்திலிருந்து எழுந்தருளப் பண்ண முடியவில்லை. 

எவ்வளவு முயற்சி செய்தும் முடியாத காரணத்தால் , எம்பெருமான் திருவுள்ளம் ஸ்ரீரங்கத்திலேயே இருக்க விரும்புகிறது என்பதனை அறிந்து கொண்டு பெருமாளை அவ்விடத்திலேயே இருத்திவிட்டு அவன் இலங்கைக்கு சென்று விட்டான். அன்று முதல் பெரிய பெருமாள் யுகம் யுகங்களாக அங்கேயே பள்ளி கொண்டு, பக்தர்களுக்கு பரவசமிக்க காட்சி கொடுத்துக் கொண்டும், அருள் பாலித்துக் கொண்டும் வருகிறார்.

ஶ்ரீ பெரிய பெருமாள் திருவடிகளே சரணம்