முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று* கப்பம் தவிர்க்கும் கலியே துயில் எழாய்* 
செப்பம் உடையாய் திறல் உடையாய்* செற்றார்க்கு- வெப்பம் கொடுக்கும் விமலா துயில் எழாய்* 
செப்பு அன்ன மென் முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்* நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்* 
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை* இப்போதே எம்மை நீர் ஆட்டுஏலோர் எம்பாவாய். 

ஸ்ரீஆண்டாள்  திருப்பாவை (20)

இதற்கு முந்தைய பாசுரத்தில் பகவான் ரக்ஷகத்வத்துக்கும், பிராட்டியின் புருஷகாரத்துக்கும் அவர்களுக்குள்ளேயே போட்டி ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தடுத்துக் கொண்டிருப்பது தத்துவமன்று என்று துவங்கிய ஆண்டாள் இந்த பாசுரத்தில் அதன் தொடர்ச்சியாக அந்த திவ்ய மிதுனமான தம்பதிகளை போற்றி மங்களாசாசனம் செய்கிறாள்.

இங்கே இந்த திவ்ய தம்பதிகளுக்குள் போட்டியென்றெல்லாம் சொல்வது நமக்கு தத்துவத்தை விளக்கவதற்காகத்தான் – ஒரே ப்ரஹ்மம் – நிர்விசேஷமாக சின் மாத்ரமாக – அத்வதீயமாக ஒன்றாகவே இருக்கிறது – அதுவும் நிர்குணமாக இருக்கிறது என்று சொல்வது ப்ரஹ்மத்தின் குணங்களைச் சொல்லுகிற அனேக வேத வாக்யங்களை தள்ளி வைப்பது போல் ஆகும். அது தத்துவம் அன்று. பகவானும் பிராட்டியும் திவ்ய மிதுனமாக – இரட்டையாகவே இணை பிரியாமல் இருக்கிறார்கள். வேதம் பகவானின் அனந்தமான கல்யாண குணங்களைச் சொல்லுகிறது. இப்படி குண சம்ருத்தி உள்ள ப்ரஹ்மத்திடம் குணக்லேசம் உடைய நாம் எப்படி சென்று சேர்வது? அதற்குத்தான் பிராட்டி புருஷகாரம் – சிபாரிசு செய்கிறாள்.

இப்படி இரண்டு பேர்கள் இருப்பதால் உடனே நம் மனதில் ஐயம் எழ வாய்ப்பிருக்கிறது – இரண்டு பேர் என்றால், அதில் யார் பெரியவர்? ஒருவர் செய்யும் செயலை மற்றவர் தடுப்பரோ? என்றெல்லாம் தோன்றக்கூடும். அது தத்துவமன்று என்கிறாள் ஆண்டாள். பகவானுக்கு செப்பமுடையவன்! திறலுடையவன்! என்றெல்லாம் அவன் வீர பல பராக்ரம ப்ரக்யாதிகளை சொல்கிற ஆண்டாள், பிராட்டியைச் சொல்லும்போது, மென்முலையாள், செவ்வாய் சிறுமருங்குல் நப்பின்னை நங்காய்! என்று அவள் ஸ்த்ரீத்வ பூர்த்தியை சொல்கிறாள். நங்காய் என்பது பூர்ணமான பெண்ணே! என்று பொருள். பகவானே ஸ்ருஷ்டி – ஸ்திதி – ஸம்ஹார வ்யாபாரங்களை எடுத்துக் கொண்டிருக்கிறான். பிராட்டி அதில் அவனோடு சேர்ந்து அவனுக்கு உற்ற துணையாகவும் அவனுக்கு சந்தோஷத்தை – பூர்த்தியை தரக்கூடியவளாகவும் இருக்கிறாள் என்பதை இங்கே சுத்தாந்த சித்தாந்தமாக ஸ்தாபனம் செய்கிறாள்.

முப்பத்துமுவர் என்று ஆதி தேவர்களான ஏகோதச ருத்ரர்கள், த்வாதச ஆதித்யர்கள், அஸ்வினி தேவர்கள் இருவர் – என்று முப்பத்து மூன்று தேவர்களுக்கும், அவர்கள் வம்சத்து தேவர்களுக்கும் ஒரு கெடுதி ஏற்பட்டால் உடனே ஓடிப்போய் முன்னே நிற்கிறான். கப்பம் என்பது கம்பனம் என்ற கஷ்டத்தை – சிரமத்தை குறிக்கும். இப்படி ஓடி ஓடி தேவர்களது துயர் துடைப்பவனே! எங்கள் குரல் கேட்டு உறக்கம் தவிர்த்து எழுந்திராய்! எங்களுக்கு அமரரைப்போல் ராஜ்யங்கள், ஐஸ்வர்யங்கள் வேண்டாம். உன் பக்தர்களான எங்களுக்கு பயமும் இல்லை. உன் கடாக்ஷத்தையே எதிர்ப்பார்த்து இருக்கிறோம்.

செப்பம் உடையாய்! இனிமை, எளிமை, கருணை, தைரியம் என்று எண்ணற்ற குணங்களால் பூர்ணமாக இருப்பவன்! திறலுடையாய்! சாமர்த்யம் உடையவன். இந்த இடத்தில் அவனது திறல் – பராபி பவந ஸாமர்த்யம் என்று பூர்வாசார்யர் அருளுகிறார். ஆஸ்ரித விரோதிகளாக இருப்பவர்கள் அவனை உணர்ந்து கொள்ளவே முடியாதவனாக இருக்கிறானாம்!

தேவர்கள் ப்ரஹ்மத்தை அண்டினால் அது அவர்களுக்கு சில படிகள் மேலானதாக இருக்கிறது. தேவர்களை விட உயர்ந்த ப்ரஜாபதிகள் ப்ரஹ்மத்தை அண்டினால் அது அவர்களுக்கும் சில படிகள் மேலே இருக்கிறது. இவர்களுக்கெல்லாம் உயர்ந்த ப்ரம்மா இந்த ப்ரஹ்மத்தை அண்டினால் அது அவருக்கும் மேலே சில படிகள் உயர்ந்து இருக்கிறது. இவர்களெல்லாரையும் விட தாழ்ந்த ஜீவர்களுக்கும் அது சில படிகளில் எட்டிப்பிடிக்குமாப்போலே தென்படுகிறது. அணோர் அணீயான்! மஹதோ மஹீயான்! என்று அணுவுக்குள் அணுவாக, பெரியவற்றுக்கும் மிகப்பெரியதாக இருக்கும் ப்ரஹ்மத்தின் சாமர்த்யத்தை திறலுடையாய்! என்று ஆண்டாள் சொல்கிறாள்.

செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்! – அவன் ஆஸ்ரித விரோதிகளை தன் சினத்தினால் தண்டிக்கிறான் – ஆஸ்ரிதர்களுக்கோ காருண்யத்தால் அதன் குளிர்ச்சியால் நனைக்கிறான்! இப்படி சில ஜீவர்களை தண்டிப்பதும், சில ஜீவர்களை ரக்ஷிப்பதும் அவனுக்கு குறையாகாதோ? என்றால் இல்லை – அவன் விமலன்! மலம் என்றால் தோஷம் – அவன் குற்றங்கள் அற்றவன் – விபீஷண சரணாகதியின் போது, அங்கே இருந்த சுக்ரீவன் முதலானவர்கள் எல்லோரும் தடுக்க, ராமன் சொல்கிறான் – அந்த ராவணனே என்னிடம் சரணடைய வந்தாலும் அபயம் தருவேன் என்று சொல்லும் போது அவனது கல்யாண குணங்கள் வெளிப்படுகிறது. அத்தகைய உயர்ந்த ப்ரஹ்மத்தை உணராமல் தம்மை தாமே தரம் தாழ்த்திக்கொள்கிறார்களே தவிர அவன் ஒருவரையும் விலக்குவதில்லை.

அடுத்து பிராட்டியை அவள் பெருமைகள் தோன்ற மங்காளாசாசனம் செய்கிறார்கள். செப்பென்ன மென்முலை செவ்வாய் சிறுமருங்குல் என்று நாயகனான பகவான் உகந்து பிராட்டியும் உகப்பிக்கும் அவயவ லக்ஷணங்களைச் சொல்லி அவர்களுக்குள் நெருக்கத்தைச் சொல்லி, திருவே! துயிலெழாய்! என்று அந்த மஹாலக்ஷ்மியே இங்கே நப்பின்னை என்று திருப்பள்ளியெழுச்சி பாடுகிறார்கள்.

உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை இப்போதே எம்மை நீராட்டு! – இங்கே பூர்வாசார்யர்கள் ‘உக்கமும் தந்து, தட்டொளியும் தந்து, உன் மணாளனையும் தந்து’ என்று அர்த்தம் சொல்கிறார்கள். இது மனித உறவாக இருந்தால், மனைவியிடமே கணவனைக் கொடு என்று ஒரிருவரல்ல, பஞ்ச லக்ஷம் கோபிகைகளும் போய் நின்று கேட்க முடியுமா! இது தெய்வீக சம்பந்தம். எல்லோருக்கும் துளி துளி எடுத்துக் கொடுத்தாலும் அப்போதும் அது பூரணமாக இருக்கும் ப்ரஹ்மமாயிற்றே!
எப்படி தசரதன் ராமனை ‘தந்தேன்!’ என்று விஸ்வாமித்திரரிடம் எடுத்துக்கொடுத்தானோ அப்படி உன் மணாளனை தூக்கி எங்களிடம் கொடுத்து விடு என்கிறார்கள். அது பகவானிடம் பிராட்டிக்கு உள்ள உரிமையையும் எடுத்துக்காட்டுகிறது. அசேதனங்களை எடுத்துக்கொடுப்பது போல், பகவானையும் தூக்கி பக்தர்களிடம் சேர்ப்பிக்கக் கூடியவள் அவள். உக்கம் என்பது விசிறி, தட்டொளி என்பது முகம் பார்க்கும் கண்ணாடி. ஒன்று கைங்கர்யத்துக்கு. ஒன்று ஸ்வரூபத்தைக் காட்டுவதற்கு. கைங்கர்யமும், ஸ்வரூப ஞானத்தையும் பிராட்டியிடம் கேட்டுப் பெற்று ப்ரஹ்மத்தை அடைவதே மோக்ஷம். அதை தரவேண்டும் என்று மஹா லக்ஷ்மியான நப்பின்னையிடம் வேண்டுகிறார்கள்.

விஜயலஷ்மி ராஜ் அவர்கள் வழங்கிய
திருப்பாவை பாடல் மற்றும் விளக்கம்
ஆடியோ வடிவில்