மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்* சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து* 
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி* மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்* 
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா* உன்- கோயில் நின்று இங்ஙனே போந்தருளி* கோப்பு உடைய- 
சீரிய சிங்காசனத்து இருந்து* யாம் வந்த - காரியம் ஆராய்ந்து அருள் ஏலோர் எம்பாவாய்.

ஸ்ரீஆண்டாள்  திருப்பாவை (23)

இதற்கு முந்தைய ‘அங்கண் மாஞாலத்தரசர்’ பாசுரத்தில், ஆண்டாள் இதர பாகவத பெண்பிள்ளைகளோடு, பிராட்டியை முன் வைத்து, பகவானை நெருங்கி உன் சிவந்த கண்களை சிறிது சிறிதாக திறந்து எங்கள் மேல் உன் கடாக்ஷத்தை – கடைக்கண் பார்வையை செலுத்த வேண்டும் என்று கேட்க, பகவான் எழுந்திருக்கிறான். இந்த பாசுரத்தில் அவன் எழுந்திருக்கும் அழகை, தன் பெடையொடு குகையிலே படுத்திருக்கும் சிங்கம் எழுந்து வருவதை உபமானமாகச் சொல்லி ரசிக்கிறார்கள்.

இங்கே சிங்கத்தை சொன்னது யாதவ சிம்ஹமான க்ருஷ்ணன், தன் பராபி பவந சாமர்த்தியம் தோற்ற, வீரம் வெளிப்பட எழுவதை சிறப்பாக எடுத்துரைக்கிறது. மாரி – மழை பெய்கிறது – அதுவும் பனியே மழைபோல் பெய்யும் மார்கழிக்காலம் – ஆண்டாள் முன்னமே ஒரு பாட்டில் – பனித்தலை வீழ என்று சொன்னபடி பனிவிழும் மார்கழியாம். முழைஞ்சில் என்பது குகை. அப்படி குளிர் நடுக்குகிற, பனி – மழை போல் பெய்து கொண்டிருக்கிற மார்கழி மாத காலத்தில், தன் குகையில் – மன்னிக் கிடந்துறங்கும் – சோம்பலை அள்ளி பூசிக்கொண்டு தன் பெடையொடு அணுஅளவும் விலகாமல் படுத்துத் தூங்குகிறதாம் சிங்கம்.

அது மழைக்காலம் முடிந்த நிமித்தங்கள் கண்டு, அறிவுற்று – அதுவரை அசையாமல் இருந்தது – திடீரென்று உயிர் வந்ததுபோல் அசைந்து, தீவிழித்து – உறங்கிய பின் பார்க்கிற முதல் பார்வையாகையால் சிறிது சிவந்து விழித்த விழிகள் – வேரிமயிர் பொங்க – ஜாத்யுசித பரிமளம் என்கிற விலங்கு ஜாதிக்குரிய மணம் கமழ – தனது வாசனையுள்ள பிடரி மயிர்களை உதறி, வெப்பாடும் பேர்ந்து உதறி மூரி நிமிர்ந்து – உடம்பில் இன்னமும் ஒட்டியிருக்கும் சோம்பலை உதறுகிறதாம். முன்னங்கால்களை நீட்டி உடம்பை எவ்வளவு இழுக்க முடியுமோ அவ்வளவு இழுத்து, பின் பின்னங்கால்களை நீட்டி மறுபடியும் உடம்பை இழுத்து சோம்பலை உதறுகிறதாம். பிறகு முழங்கி – கர்ஜித்து புறப்பட்டு போதருமா போலே வேட்டையாடக் கிளம்பும் சிங்கத்தைப்போலே என்று சொல்லவும் பகவான், நான் என்ன சிங்கம் மாதிரி கருணை இல்லாமலா இருக்கிறேன் என்று பார்க்க, சிங்கம் உன் காம்பீர்யத்துக்கு மட்டுமே உதாரணம் – உன் செளகுமாரத்தன்மை எங்களுக்கு தெரியாதா? பூவைப்பூவண்ணா! என்கிறாள்.

இப்படி படுக்கையறையிலேயே இருக்காமல், உன் கோயிலில் இங்ஙனே போந்தருளி – இங்கே ஸபா மண்டபத்துக்கு வந்து, கோப்புடைய சீரிய சிங்காதனத்தில் இருந்து, நாங்கள் வந்த காரியத்தைக் கேட்கவேண்டும் என்று சொல்கிறாள் ஆண்டாள். அவனது சிம்மாசனம், ‘தர்ம ஜ்ஞானாதிகளாலும், அதர்ம ஜ்ஞானாதிகளாலும் கோப்புடைய ஸிம்ஹாசனம் என்றுமாம்’ என்றார்கள் பூர்வாசார்யர்கள். இப்படி தர்மம், அதர்மம், ஜ்ஞானம், அஜ்ஞானம் என்று எல்லாவற்றையுமே சட்டம் கட்டி, சிம்மாசனம் அமைத்து அதில் அமர்ந்தவன் என்று அவன் சாமர்த்தியத்தை சொல்கிறார்கள்.

இத்தனை நேரம் பள்ளி எழுப்பப் பாடியவர்கள், அது ஏன் எழுந்து சபா மண்டபத்துக்கு வரச் சொல்கிறார்கள்? பூர்வாசார்யர் சொல்கிறார், “நடையிலே ரிஷபத்தினுடைய வீறும், மத்தகஜத்தினுடைய மதிப்பும், புலியினுடைய சிவிட்கும், ஸிம்ஹத்தினுடைய பராபிபவந சாமர்த்தியமும் தோற்றியிருக்கை’ என்று. இப்படி ரிஷப கதி, கஜ கதி என்று பலவிதங்களில் அவன் நடையழகை காண ஆசைப்பட்டு சொல்கிறார்கள். அத்துடன் திருப்பாவை மொத்தமுமே ஸ்ரீரங்கநாதனை நினைத்து பாடியது தானே! (ஆண்டாள் அரங்கற்கு பன்னு திருப்பாவை…). அப்படி அரிதுயில் கொண்டே இருக்கிற ஸ்ரீரங்க நாதன் எழுந்து வந்தால் அந்த சேவை எப்படி இருக்கும் என்று ஆச்சர்யப்பட்டு சொல்கிறார்கள்.

நாங்கள் இதற்கு முன்னமே எழுந்திருந்து பலகாலும் உன் பேர்பாடி, ஒவ்வொரு பாகவதர்களாக எழுப்பி, உன் வாயில் காப்போர்களை அண்டி அனுமதி பெற்று, நந்த கோபர், யசோதை ஆகியோர்களை எழுப்பி, உன் பிராட்டியை எழுப்பி நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு உன்னை வந்து சேர்ந்திருக்கிறோம்! ப்ரபத்தி என்பது எல்லாம் அவன் அருள் என்று சும்மாக் கிடைப்பதல்ல, அதன் அளவில் அதுவும் ஒரு போராட்டமே! என்று குறிப்பால் உணர்த்துகிறாள். இப்படி நாங்கள் கஷ்டப்பட்டு உன்னை அடைந்திருக்கிறோம். இப்படி நாங்கள் கஷ்டப்பட நீயன்றோ காரணம்! ஆகையால் இப்படி நாங்கள் வந்ததை நீ ஆராய்ந்து, அறிவுற்று பார்த்தால், அருளுவாய் என்று சொல்கிறாள். இன்னும் இவர்கள் தாம் வந்த காரியத்தை சொல்லவில்லை. அதை சிற்றஞ் சிறுகாலே பாட்டில் வைத்தார்கள். இங்கே எழுந்து வந்து நாங்கள் வந்த காரியத்தை ஆராய வேண்டும் என்று ப்ரார்திக்கிறார்கள்.

விஜயலஷ்மி ராஜ் அவர்கள் வழங்கிய
திருப்பாவை பாடல் மற்றும் விளக்கம்
ஆடியோ வடிவில்