அன்று இவ் உலகம் அளந்தாய் அடி போற்றி* சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி* 
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி* கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி* குன்று குடையா எடுத்தாய் குணம் போற்றி* வென்று பகை கெடுக்கும் நின்கையில் வேல் போற்றி* 
என்று என்று உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்* இன்று யாம் வந்தோம் இரங்கு ஏலோர் எம்பாவாய்.

ஸ்ரீஆண்டாள்  திருப்பாவை (24)

அன்றும் இன்றும் என்றென்றும் என்று முக்காலத்தையும் ஒரு பாசுரத்தில் ஆண்டாள் அடக்கி விட்டாள். இதற்கு முந்தைய பாசுரத்தில் சீரிய சிங்காதனத்தில் அமர்ந்து யாம் வந்த காரியத்தை ஆராயவேண்டும் என்று கேட்ட ஆண்டாள், அதன் படியே பகவான் படுக்கையறையினின்று எழுந்து வந்து சபா மண்டபத்துக்கு நடக்கவும், அவன் நடையழகை ரசித்து அனுபவிக்கிறாள். பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளையாயிற்றே இவள்! அதனால் அவரது பல்லாண்டு பாசுரத்தையும் விஞ்சி நிற்கும் தன்மையாய் இங்கே பகவானுக்கு மங்களாசாசனம் செய்கிறாள்!

அதென்னவோ ஆண்டாளுக்கு இந்த த்ரிவிக்ரமாவதாரத்தின் மீது ஒரு அதீத ப்ரேமை. திருப்பாவையை ஆரம்பிக்கும் போதும் ஓங்கி உலகளந்த உத்தமன் என்றாள். நடுவில் பதினேழாம் பாசுரத்தில், அம்பரமூடறுத்து ஓங்கி உலகளந்த உம்பர் கோமானே! என்றாள். இங்கே அன்றிவ்வுலகம் அளந்தாய் என்று த்ரிவிக்ரமனை மூன்று முறை அனுசந்தித்திருக்கிறாள்.

அன்று மஹாபலியை அடக்க மூன்று உலகத்தையும் ஈரடிகளால் அளந்தாய். நடந்த கால்கள் நொந்தனவோ எனும்படியாக அந்த பாதங்கள் காடுமேடுகளெல்லாம், துஷ்டர்கள் சிஷ்டர்கள் மீதெல்லாம் படர உலகளந்தாயே! அந்த திருப்பாதங்கள் போற்றி! ஆஸ்ரித விரோதிகளான ராவணாதிகளை அவர்கள் இடத்திற்கே சென்று ஜெயித்தாயே ! உன் திறல் போற்றி! அசுரன் சகடத்தில் ஆவேசித்த போது, சகடத்தை பொன்ற உதைத்தாயே! ‘தாயுங்கூட உதவாத தஸையிலே அனாயாஸேன திருவடிகளாலே ஸகடாசுரனை அழித்த புகழ்!’ என்று பூர்வாசார்யர்கள் போற்றுகிறார்கள்.

வத்ஸாசுரன், கபித்தாசுரன் எனும் இரு அரக்கர்கள் கன்றுக்குட்டியாகவும், விளா மரமாகவும் வந்து நிற்க, கன்றையே கோலாகக்கொண்டு விளாமரத்தை அடித்து இரண்டு அரக்கர்களையும் முடித்தான். மாரீசனைப்போல் உயிர்பிழைத்துப் போக விடாமல் வருகிற அரக்கர்களையெல்லாம் மிச்சம் வைக்காமல் அழித்தான். ஆனால் இவர்களுக்கோ வயிறுபிடிக்கிறது – கவலையுறுகிறார்கள். ‘ஸத்ருவையிட்டு ஸத்ருவையெரிந்தால் ஸங்கேதித்து வந்து இருவருமொக்க மேல்விழுந்தார்களாகில் என் செய்யக்கடவோம்’ என்று பதைத்தார்களாம். இந்த அரக்கர்களை அழித்த வ்ருத்தாந்தத்தை ஆசார்யர்கள் இப்படி அனுபவிக்கிறார்கள், கன்றை பிடித்துக் கொண்டு தானும் சுழன்று கன்றை வெகுவேகமாக விட்டெறிந்தானாம் – அப்போது ஒரு காலை குஞ்சித்த பாதமாக தூக்கியபடியால் சிவந்த பாதங்கள் கண்ணில் பட, கழல் போற்றி என்றார்கள்.

அடுத்து அவன் குண விசேஷத்தை சொல்கிறார்கள். இந்த்ர பூஜையை க்ருஷ்ணனுக்கு செய்தது பிடிக்காத இந்திரன், ‘கையோயுந்தனையும் வர்ஷிக்க’ என்றபடி விடாது மழை பொழிவிக்க, கண்ணன் கோவர்த்தன கிரியை குடையாக பிடித்து கோபாலர்களை காத்தான். ஆஸ்ரிதர்களுக்குள் விரோதமேற்பட்ட காலத்தில், தனது ஆந்ருஸம்ஸய குணம் வெளிப்பட (பெருந்தன்மையுடனான கருணை), இந்த்ரனை அழிக்கப்புகாமல் பொறுத்தான். அந்த குணம் போற்றி என்று பாடுகிறார்கள்.

பல்லாண்டு ப்ரபந்தத்தில் பெரியாழ்வார், வடிவார் சோதிவலத்துறையும் சுடாராழியும் பல்லாண்டு என்பது வரை சொன்னவர் ஐயகோ! நம் கண்ணே பட்டுவிடும் போலிருக்கிறதே! என்று முகத்தை திருப்பிக்கொண்டாராம். படைபோர் புக்குமுழங்கும் ‘அப்’பாஞ்சசன்னியமும் பல்லாண்டே! என்றார். முகத்தை திருப்பிக்கொண்டு ‘அந்த’ பாஞ்சசன்னியமும் பல்லாண்டு என்று சொன்ன பக்த சிரோமணி அவர். அவர் மகளான ஆண்டாள், இங்கே அதே பாவத்தில், பகைவரை வென்று கெடுக்கும் வேல் போற்றி!
என்று அவன் ஆயுதத்தை போற்றுகிறாள். அவன் புகழை வேலுக்கும் ஏற்றிச் சொல்கிறாள். கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரனல்லவா! அதனால் இவனும் கூர்வேல் பிடித்த கையன் தான்.

பகவானின் நடையழகை ரசித்தபடி பாடிவந்த ஆண்டாள், முத்தாய்ப்பாக ‘உன் சேவகமே யேத்திப்பறை கொள்வான் வந்தோம் இன்று இரங்கு’ என்று சொல்லி முடிக்கிறாள். இப்படி உன்னை போற்றி பாடுவதையே பரம ப்ரயோஜனமாக கொள்ள வந்தோம், நீ அதற்கு இரங்கி அருளுவாய் என்று கேட்டு முடிக்கிறாள்.

விஜயலஷ்மி ராஜ் அவர்கள் வழங்கிய
திருப்பாவை பாடல் மற்றும் விளக்கம்
ஆடியோ வடிவில்