கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா* உன்தன்னைப்- பாடிப் பறைகொண்டு யாம் பெறு சம்மானம் 
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்* சூடகமே தோள்வளையே தோடே செவிப் பூவே* 
பாடகமே என்று அனைய பல் கலனும் யாம் அணிவோம்* ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு* 
மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்* கூடியிருந்து குளிர்ந்து ஏலோர் எம்பாவாய். 

ஸ்ரீஆண்டாள்  திருப்பாவை (27)

‘பாலன்ன வண்ணத்துன் பாஞ்சசன்னியம் போல்வன.. ஆலினிலையாய் அருள்’ என்று இதற்கு முந்தைய பாசுரத்தில் பகவானிடம் ஸ்வரூப ஸித்தியை ப்ரார்திக்க, அவனும் இவர்களுக்கு தன்னையே போன்றதான ஸ்வரூபத்தை, சாரூப்ய நிலையை அருளுகிறான். இவர்கள் அதைவிட உச்ச நிலையான சாயுஜ்ய நிலையை இந்த பாசுரத்தில் கேட்கிறார்கள். நோன்பின் கடைநிலையை நெருங்கிவிட்ட இவர்கள் அவனிடம் சென்று சேர்வதான கல்யாண நிலையை – ஜீவனும் பரமனும் இணையும் கல்யாணத்தை – எண்ணி மகிழ்ந்து தம்மை தயார் படுத்திக் கொள்கிறார்கள்.

நெய்யுண்ணோம், பாலுண்ணோம் என்று சொன்னவர்கள் மூட நெய் பெய்து முழங்கை வழிவார உன்றன்னைப் பாடிப்பறை கொண்டு கூடியிருந்து உண்போம் என்று நோன்பினால் உன்னை அடைகிறோம் – அதனால் நோன்பின் பூர்த்தியாக உன் ப்ராஸாதங்களை நீ அருளியவற்றை அனுபவிக்கிறோம் என்கிறார்கள்.

கூடாரை வெல்லுஞ் சீர்க் கோவிந்தா! ஆண்டாள் இந்த பாசுரத்தைச் சேர்த்து இனி வரும் இரண்டு பாசுரங்களிலுமாக கோவிந்த நாமத்தை மூன்று முறை அனுசந்திக்கிறாள். கூடாரை என்றால் – இவனை வணங்கமாட்டேன் என்று த்வேஷிக்கிற பேர்களை வெல்லுகிற கோவிந்தா என்கிறாள். அப்படியானால் த்வேஷிக்காத பேர்களிடம் தோற்பான் என்று அர்த்தமாகிறதே என்றார்கள் பூர்வாசார்யர்கள். சரி த்வேஷமும் இல்லை, அத்வேஷமும் இல்லை… அவனை வணங்கவும் இல்லை, இகழவும் இல்லை… இப்படி இருப்பவர்கள் கதி? ஆண்டாள் இந்த பாசுரத்தின் முதல் ஒற்றை வரியில் பற்றியுமே சொல்லி விடுகிறாள்.

கூடாரை என்றால் வெறுக்கிற பேர்வழிகள். வெறுப்பாலேயே சதா அவனைப்பற்றி நினைத்துக் கொண்டிருப்பவர்கள். ஹிரண்யாக்ஷன் – ஹிரண்யகசிபு, ராவணன் – கும்பகர்ணன், சிசுபாலன் – தந்த வக்ரன் என்று வெறுப்பின் மூல முடிச்சாக, ஆணி வேறாக – இதற்கு மேலாக வெறுக்க முடியாது என்ற அசுரேந்த்ரர்களாக, த்வேஷ திலகமாக இருப்பவர்களை தோற்கப்பண்ணுகிறானாம்! அவர்கள் கருத்தைப் பிழைப்பித்து வெல்கிறான்.

கூடாத பேர்களை வெல்லுவான் என்றால், அவனை விரும்பிக் கூடுகிற பேர்களிடம் தோற்றுப்போகிறான் என்றுதானே ஆகிறது. பாண்டவர்கள் சரணாகதி செய்தார்கள். அவர்களுக்காக அவன் இரங்கி வந்து தூதனாக தாஸனாக அவர்களுக்கும் கீழ்நிலையை உகந்து ஏற்றவனல்லவா!

சரி வெறுக்கவும் இல்லை, விரும்பவும் இல்லை அவர்களுக்கு? என்றால் அதற்குத்தான் கோவிந்தா என்ற பதத்தை ஆண்டாள் ப்ரயோகித்தாள். கோவிந்த: என்ற பதத்திற்கு இப்படி விளக்கம் சொல்கிறார்கள்: கோ என்றால் பசு. பசுதனம் லபதே விந்ததி இதி கோவிந்த: என்றார்கள். பசுக்கள் அவனை எங்களை ரக்ஷிக்க வா.. எங்கள் பின்னால் வா என்று அழைக்கவில்லை. அப்படி வருவதால் நாங்கள் கேட்காமலே வந்தாயே என்று கொண்டாடப் போவதுமில்லை. இப்படி இருக்கிற பசுக்கள் பின்னாடியும் போனானே! அவைகள் கேட்காமலே ரக்ஷித்தானே என்று அந்த அர்த்ததில் ரக்ஷிப்பவன் கோவிந்தன் – வெறுப்பில்லாமல் இருப்பதே போதும் என்று கொண்டிருப்பவன் கோவிந்தன் என்று கோவிந்தா என்ற பதத்தை ஆண்டாள் ப்ரயோகித்தாள்!

அடுத்து சொல்கிறாள், கோவிந்தா! உன்றன்னைப் பாடிப்பறை கொண்டு யாம் பெறும் சம்மானம் நாடு புகழும் பரிசு என்றாள். கோவிந்தா என்று ஒருமுறை சொன்னாலே நாடு புகழும் பரிசு கிடைக்குமாம். இவர்கள் இவனை பாடிப் பறையை – கைங்கர்ய பலப்ராப்தியை சம்மானமாகப் பெற்றதோடு அல்லாமல் அதற்கு மேலாக நாடு புகழும் பரிசு வேண்டும் என்று கேட்கிறார்கள். நாங்கள் பாடியதோடு அல்லாமல் நாடே எங்களை பாடுமாறு ஒரு பரிசு வேண்டும் என்கிறார்கள். சரி அப்படி என்ன வேண்டும் என்று அவன் யோசிக்க ஒரு பெரிய பட்டியலையே கொடுக்கிறார்கள்.

சூடகமே, தோள்வளையே, தோடே, செவிப்பூவே, பாடகமே என்றனைய பல்கலனும் – கேசாதி பாதமாக எல்லா அங்கங்களிலும் அணியும் பல்கலனும் நீ தரவேண்டும். சூடகம் என்னும் கைவளை, தோள்வளை, தோடு, செவிப்பூ என்னும் செவிக்கு மேலே அணிகிற நகை, பாடகம் என்றால் பாதத்தில் அணிகிற கழற்காப்பு என்று இவற்றை தரவேண்டும் என்கிறார்கள். இவர்கள் பரமனை நெருங்கவும், அவனும் இவர்களும் வியாமோஹத்தால் ஒருவரை ஒருவர் அணைக்க, முதலில் ஸ்பர்சிக்கும் அணி கைவளை. அடுத்து அவன் இவர்களை நெஞ்சார, அவனை விட்டு பிரிந்ததால் நலிந்த தோள்களை அணைக்க அங்கே தோள்வளை என்ற நகையை அணிகிறார்கள். தோடு என்ற காதில் அணியும் ஆபரணத்தை அவன் தானே வந்து அணிவிக்க வேண்டும் என்று ஆசைப்படுவனாம். செவிப்பூ என்ற காதணி, அவன் நாசியினால் முகர்ந்து பார்த்து உகப்பனாம். இப்படி இவர்களை ஆலிங்கனம் பண்ணி, விரஹத்தால் இவர்கள் காலை பிடிக்க அங்கே பாடகம் அணிந்தார்கள். இப்படி எல்லா வகையிலும் இதை அவன் ரசிப்பானே… இதை அவன் உகப்பானே என்று எண்ணி எண்ணி அணிகிறார்கள்.

இதற்கு உட்பொருளாக, சூடகம் என்கிற கைவளை இவர்களது பக்திக்கு காப்பு – ரக்ஷை. தோள்வளை என்பது சமாஸ்ரயணம் – தோளில் பதித்த சங்க சக்ர முத்திரைகள் – பாகவதனுக்குரிய திரு இலச்சினைகள். தோடு என்பது திருவஷ்டாக்ஷர மந்திரம். செவிப்பூ என்பது த்வய மந்திரம். பாடகம் என்பது சரம ஸ்லோகத்தைக் குறிக்கும்.

கோவில்களில் அர்ச்சா மூர்த்தியாக பெருமானை சேவிப்பதற்கு ஒரு முறை இருக்கிறது. முதலில் அவன் திருமுகத்தைப்பார்த்து ஓம் நமோ நாராயணாய: என்கிற திருவஷ்டாக்ஷர மந்திரத்தை த்யானிக்க வேண்டும். பிறகு திரு உறையும் மார்பைப் பார்த்து ஸ்ரீமன் நாராயண சரணெள சரணம் ப்ரப்த்யே! ஸ்ரீமதே நாராயணாய நம: என்கிற த்வய மந்திரத்தை அனுசந்திக்க வேண்டும். பிறகு திருப்பாதங்களை தரிசித்து ‘ஸர்வ தர்மான் பரித்யஜ்ய: மாமேகம் சரணம் வ்ரஜ: அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாசு ச:’ என்று அவன் நென்னலே வாய்நேர்ந்த சரம ஸ்லோகத்தை ஸ்மரிக்க வேண்டும். இப்படி எல்லாவற்றையும் செய்து, ஸ்ரீவைஷ்ணவனுக்கு ஆபரணங்களாகக் கொண்டு இவற்றை அணிந்து எங்களுடைய ஸ்வாபாவிகமான ஜ்ஞான, பக்தி, வைராக்ய லக்ஷணங்களுடன் உன்னிடம் வருவோம் என்கிறாள் ஆண்டாள்.

ஆடையுடுப்போம் என்று சொல்லும்போது, இவர்கள் இதற்கு முன் ஆடை உடுத்தாமல் இல்லையே என்றால், இப்போது இவர்களுக்கு உயர்ந்த நிலை வந்துவிட அதைக் கொண்டாட, உடுத்து களைந்த நின் பீதகவாடை என்று பெரியாழ்வார் பாடியதுபோல், அவனுடைய ஆடையையும் இவர்கள் எடுத்து அணிகிறார்கள். மேலே சொன்ன அலங்காரங்களுக்கெல்லாம் அடிப்படையாக அவன் இவர்களுக்கு கொடுத்த சேஷத்வ ஞானத்தை ஆடையாக அணிவோம் என்பது உட்பொருள்.

அதன்பின்னே பால்சோறு, மூட நெய்பெய்து முழங்கை வழிவார என்று வ்ரத பூர்த்தியாக, பால் சோறும், முழங்கை வரை வழியும் அளவுக்கு நெய்யுமாக அவனுக்கு சமர்பித்து தாங்களும் அனுபவித்து கூடியிருந்து குளிர்வோம் என்கிறாள். பாலில் சோறு கலந்தார்போல், பாலில் நெய் கலந்தார்போல் என்று ஒன்றோடு ஒன்று கலந்து புதிய நறுசுவையுடன் உண்போம். அவனில் நாமும், நம்மில் அவனுமாக கலந்து கரைந்து, அஹமன்ன என்று நாம் அவனுக்கு உணவாகவும், அஹமன்னாத: என்று நமக்கு அவன் உணவாகவும் உண்டு களித்து – உன்னுடன் நாங்கள் சாயுஜ்ய பதவி அடைந்து நீயும் நாமுமாக கலந்து என்றென்றும் புதியதாக நித்யமாக கூடியிருந்து இன்பத்தை பெறுவோம் என்று ஆண்டாள் முடிக்கிறாள் .

விஜயலஷ்மி ராஜ் அவர்கள் வழங்கிய
திருப்பாவை பாடல் மற்றும் விளக்கம்
ஆடியோ வடிவில்