கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்*  அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க் குலத்து*  உன்தன்னைப்- 
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்*  குறைவு ஒன்றும் இல்லாத கோவிந்தா*  உன்தன்னோடு- 
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது*  அறியாத பிள்ளைகளோம் அன்பினால்*  உன்தன்னைச்- 
சிறுபேர் அழைத்தனவும் சீறியருளாதே*  இறைவா நீ தாராய் பறை ஏலோர் எம்பாவாய்.

ஸ்ரீஆண்டாள்  திருப்பாவை (28)

கோவிந்தா! உன்றன்னைப் பாடிப்பறை கொள்ள வந்தோம் என்று சொன்ன ஆண்டாளிடம், க்ருஷ்ணன் லீலா விநோதனாக விளையாட்டுப் பேச்சு பேசுகிறான். அப்படி நான் உங்களுக்கு நீங்கள் கேட்டதையெல்லாம் அளிக்கிறேன், பதிலுக்கு நீங்கள் என்ன கொண்டு வந்திருக்கிறீர்கள் என்று கேட்க ஆண்டாள் தனது ஆகிஞ்சன்ய குணத்தை (கைமுதல் இல்லாமையை) வெளிப்படுத்தி தனது நிலையை விளக்குகிறாள். இந்த பாசுரம் மிக உயர்ந்த அர்த்த செறிவு கொண்டது. வைஷ்ணவத்தில் ரஹஸ்ய த்ரயங்களுள் ரத்னமாக விளங்கும் த்வய மந்திரத்தை இந்த பாசுரத்துடன் சாம்யப் படுத்தி பூர்வாசார்யர்கள், இந்த பாசுரமும், ‘சிற்றம் சிறு காலே’ பாசுரமும் த்வய மந்திரத்தின் இரு பாகங்களை சொல்வதாக அருளியிருக்கிறார்கள்.

கறவைகள் பின்சென்று கானஞ் சேர்ந்துண்போம் என்றால், எங்களிடம் பெரிதாக ஆசார்ய சம்பத்தோ, சத் சங்க ப்ராப்தியோ இல்லை. நாங்கள் கறவைகள், பசுக்கள் பின்னாலே சென்று மாடு மேய்ப்பவர்கள். காட்டில் போய் சேர்ந்து உட்கார்ந்து உண்போம். பிறகு மாலையில் வீட்டுக்கு பசுக்களை ஓட்டி வருவோம். இப்படியே பொழுது போக்கினோம். எங்களுக்கு புண்ணியம் எது பாபம் எது என்று எதுவும் அறியாத பிள்ளைகளோம் என்றாள். சரி நீங்கள் தான் இப்படி, உங்கள் பூர்வர்கள் நல்ல காரியங்கள் ஏதாவது செய்திருக்கிறார்களா என்று கண்ணன் கேட்க, அப்படி எங்கள் குலத்திலேயே வழக்கமில்லை. எங்கள் குலம் அறிவொன்றுமில்லாத ஆய்க்குலம். இப்படியாக புண்ணியமோ, பாபமோ எதுவுமே இல்லை எங்களிடம்.

எங்களிடம் இருப்பதெல்லாம், யாதவ மணியாக நீ வந்து உதிக்கப் பெற்றோமே அந்த பேறு ஒன்றுதான் இருக்கிறது. உன்றன்னைப் பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம். இவர்கள் புறத்தில் பார்க்க ஞான பக்தி யோகங்களெல்லாம் இல்லாதவர்களானாலும் இவர்களுக்கு ஒரு பெரும் சிறப்பு இருக்கிறது. ஸர்வஜ்ஞனான பகவான் ஸஹஜனாக இவர்களுடன் வந்து பிறந்தானே! அந்தப் பேறொன்று போதாதா? அறிவொன்று மில்லாத ஆய்க்குலம் என்று இவர்கள் ஆகிஞ்சன்யத்தை தெரிவித்தாலும், பகவானை உணர்ந்து கொண்டார்கள். அவனது செளலப்ய செளசீல்யாதி குணங்களை புரிந்து கொண்டார்கள். தெய்வத்தை தமக்குள் உணர்ந்தார்கள்.

கண்ணா, எங்களிடம் நீ குறை என்று பார்க்க ஆரம்பித்தாயானால் அது அளவிலடங்காமல் இன்னமும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இப்படி நீ எங்களை, எங்கள் தகுதியைப்பார்த்து நீ ஏற்றுக் கொள்ள நினைக்காதே! நீ எங்களோடு ஒருவனாக வந்து பிறந்த உனக்கேது குறை! குறைவொன்றுமில்லாத கோவிந்தா! எங்கள் அறியாமை பாதாளம் வரை ஆழமுள்ள பள்ளம் என்றால் அதையும் நிறைக்கக்கூடிய மலையளவு கருணை கொண்ட பர்வதமாகவன்றோ நீ இருக்கிறாய்! அதோடு நாங்கள் எதையாவது வைத்திருந்து அதை விட்டு விட்டு உன்னிடம் வந்தோம், நாங்கள் ஒரு தியாகத்தை செய்தோம், பதிலுக்கு நீ பரிசு கொடுத்தாய் என்று உன் கருணையிலே குறை காண்பதற்கு இடமில்லை. எல்லாமே உன்னுடையது. எங்களிடம் எதுவும் இல்லை. அதனால் உனக்கு அந்த குறையும் வரப்போவதில்லை. உன் கருணைக்கும் எங்கள் அறியாமைக்கும் நேராகிவிட்டது.

அதோடு உனக்கு வேறொரு நிர்பந்தமும் உண்டு – அது எங்களோடு உனக்கு உண்டான சம்பந்தம்! உன்றன்னோடு உறவேல்! நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது! – இனி அந்த உறவை அறுத்துக் கொள்ளவே முடியாது. எங்களை இந்த ஜகத்தில் வந்து பிறக்கப்பண்ணியவனே நீதானே! நீ காரணம்.. நாங்கள் காரியம். இது ஆத்ம சம்பந்தம். ‘நீ எங்கள் கையில் தந்த மூலப்ரமாணத்தில் முதலெழுத்தைப் பார்த்துக் கொள்ளாய்!” என்றார்கள் பூர்வாசார்யர்கள். என்னை ஆஸ்ரயித்தவனை நான் என்று கைவிடாமல் ரக்ஷிக்கிறேன் என்று சத்யம் செய்ததை நினைவு கொள் என்கிறார்கள்.

உன்னை எங்களுக்கு நடுவே பிறக்கப் பெற்ற புண்ணியம் தவிர வேறு எதுவும் இல்லை என்பது நன்றாக தெரிகிறது. ஆனால பாவங்கள்? இமைக்கிற பொழுதில் எண்ண முடியாத அளவுக்கு பாவத்தை சேர்த்துக் கொள்கிற ஜீவன் மனிதன். அப்படி ஏற்படுகிற பாபத்துக்கு அபராத க்ஷமாபனமாக சொல்கிறார்கள். அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்றன்னைச் சிறுபேரழைத்தனவும் சீறி அருளாதே! கோவிந்தா என்று கூப்பிட்டது வரைக்கும் நிறைய பாவங்களை செய்திருக்கிறோம். மஹதோ மஹீயனான உன்னை – பெரியவற்றுக்கும் பெரியவனான உன்னை எளிமையாக கோவிந்தா என்று சிறு பேர் கொண்டு அழைத்திருக்கிறோம். அழைத்தனவும் எனும் போது, இம்மாதிரி பலவாறும் குறைவுள்ள மனிதர்களோடு சமப்படுத்தி சிறு பேர் சொல்லி அழைத்திருக்கிறோம். இது அறியாமையாலும், பால்ய வயதினாலும், அன்பினால் ஏற்படுகின்ற சுவாதீனத்தாலும் ⁴5ஏற்பட்ட பிழைகள், இவற்றைக் கண்டு கோபம் கொள்ளாமல் மன்னித்துவிடு என்று கேட்கிறார்கள்.

அடுத்து, எங்கள் குறைபார்க்காது, குறைகளை மன்னித்து, எங்களை ஏற்று இறைவா! நீ தாராய் பறை! என்றார்கள். இறைவா! என்ற பதத்தில் இவர்களது நைச்ய பாவம் வெளிப்படுகிறது. இதுவரை மாலே! மணிவண்ணா! கோவிந்தா! என்றெல்லாம் பல பெயர்கள் சொன்னவர்கள், இறைவா என்று அவன் இறைமையை சொல்கிறார்கள். நீ பெரியவன், நாங்கள் சிறியவர்கள். நீ காரியமாயிருக்க நாங்கள் காரணமாயிருப்பவர்கள். நாங்கள் சரீரமாயிருக்க நீ சரீரியாய் இருக்கிறாய். நீ இன்றி நாங்கள் இல்லை. உன் உடலில் நாங்கள் ஒரு சிறு பகுதியைப்போல. பாவங்களை தன் கை செய்தது, தன் கால் செய்தது என்று ஒருவன் சொல்லுவனோ! நீ உடமைக்காரன் – ஸ்வாமி! நாங்கள் உன் உடமை – சொத்து! ‘உடமையையிழக்கை உடையவனிழவன்றோ. அன்றி அந்த உடமைக்கிழவன்றே!’ என்றபடி நீ எங்களை இழந்தால் அது உனக்குத்தான் இழப்பே தவிர உன் சொத்தான எங்களுக்கு இழப்பில்லை. ஆதலால், குற்றம் குறைகளை மன்னித்து, பொருட்படுத்தாது, நாங்கள் விரும்புவதை அளித்து எங்களை ஏற்றுக் கொள் என்று கேட்கிறார்கள்.

விஜயலஷ்மி ராஜ் அவர்கள் வழங்கிய
திருப்பாவை பாடல் மற்றும் விளக்கம்
ஆடியோ வடிவில்