கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு* மேய்வான் பரந்தன காண் மிக்கு உள்ள பிள்ளைகளும்*
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து* உன்னைக்- கூவுவான் வந்து நின்றோம்* கோதுகலம் உடைய-
பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு* மா வாய் பிளந்தானை மல்லரை மாட்டிய*
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்* ஆவா என்று ஆராய்ந்து அருள் ஏலோர் எம்பாவாய்.
ஸ்ரீஆண்டாள் 🔹 திருப்பாவை(8)
இப்போது ஆண்டாள் தன் குழுவான கோபிகைகளுடன் எழுப்ப செல்லும் பெண் ஒரு சிறந்த ஞானி. பகவானான கண்ணனுக்கு ப்ரியமானவள். அதனால் கோதுகலமுடைய பாவாய்! என்று அன்போடு அழைக்கிறாள். இங்கேயும் அந்த பெண்ணுடன் ஆண்டாள் ஒரு சம்பாஷணையில் ஈடுபடுகிறாள். ‘கீழ்வானம் வெளுத்து அருணோதயம் ஆகிறது… இன்னும் நீ எழுந்திருக்க வில்லையா?’ என்கிறாள் ஆண்டாள். இங்கே கீழ்வானம் என்பதில் வானம் என்று ஆகாசத்தை குறிக்கிறது… ஆகாசம் என்பது ஒவ்வொரு ஜீவாத்மாவினுள்ளும் தஹாராகாசம் என்னும் மனத்தின் உள்வெளியை குறிக்கிறது. தஹாராகாசம் வெள்ளென்று சுத்தமாக இருந்தால்தான் சுடர்விட்டொளிரும் பரமாத்மாவை கண்டு கொள்ள முடியும் என்று பொருள் சொல்வர் பெரியோர்.
ஆண்டாள் கேட்ட கேள்விக்கு, உள்ளே இருந்த பெண் “இன்னும் பொழுது விடியவில்லை… கிருஷ்ணனை சென்று சேர்வதற்காக எப்போது பொழுது விடியும் விடியும் என்று கிழக்கே பார்த்து பார்த்து உங்கள் முகத்தினொளியின் ப்ரதிபலிப்பே உங்களுக்கு கீழ்வானம் வெளுத்தது போல் தோன்றுகிறது…” என்று சொல்ல, ஆண்டாள் சொல்கிறாள் “எருமைகள் சிறுவீடு மேய கிளம்பி விட்டது… வந்து பார்.” என்கிறாள். சிறு வீடு மேய்வது என்பது பனித்துளி படர்ந்த புற்களை மேய விடிந்தும் விடியாத காலையில் எருமைகள் புறப்படுமாம். ஆண்டாளுக்கு எப்படி எருமைகள் சிறுவீடு மேய்வது போன்ற மாடு மேய்க்கும் இடையர்களுக்கு தெரிந்த விஷயங்களெல்லாம் தெரிந்தது? அவள் தன்னையே ஒரு கோபிகையாக பாவித்துக்கொண்டு கண்ணனை மனதார விரும்பியதுதான் காரணமாக இருக்கவேண்டும்.
அதற்கு அந்த பெண் சொல்கிறாள், ‘கோகுலத்தில் எருமை மட்டுமா இருக்கிறது… ஆடுகள், பசுக்கள், எருமைகள் எல்லாம்தான் இருக்கின்றன.. எருமை மட்டும் சிறு வீடு மேய கிளம்பிவிட்டது என்று நீங்கள் அன்யதா ஞானத்தினால் – விபரீத ஞானத்தினால் தவறாக புரிந்து கொண்டு சொல்கிறீர்கள்… உங்கள் முகத்தின் ஒளியில் இருள் விலக உங்களுக்கு எருமை நகர்வதுபோல் தோன்றுகிறது” என்கிறாள். “மிக்குள்ள பிள்ளைகளும் போவான்” – என்று ஆண்டாள், “நீ இப்படியே பேசிக்கொண்டிருக்கிறாய்…, ஆய்பாடியிலுள்ள மற்ற பிள்ளைகள் எல்லாம் கிளம்பிவிட்டார்கள்” என்கிறாள்.
இது தொடர்பாக ஒரு விஷயம். முதலில் எருமை சிறுவீடு மேய போவதை சொன்னது – எருமைகள் மிக மெதுவாக நகரும் – நடுவில் காணப்படும் சிறு குளம் குட்டை எல்லாவற்றிலும் விழுந்து எழுந்து போக வேண்டிய இடத்துக்கு போய் சேரும். இது போலே, இதர தேவதாந்தரங்களை நாடுபவர்கள், கண்ட வழிகளில் நுழைந்து தாமதித்து கடைசியாக மோக்ஷத்தை அடைகிறார்கள். ஆனால் பரமனான வாசுதேவனை அண்டிய அடியார்களோ நேரே ‘மிக்குள்ள பிள்ளைகளை போல’ சுலபமாகவும் சீக்கிரமாகவும் மோக்ஷத்தை அடைகிறார்கள். அதற்கு பரமனின் க்ருபையும் கிடைக்கிறது.
இங்கே உள்ளே இருக்கிற கோபிகைப்பெண், “ஆய்ப்பாடியிலுள்ள மற்ற பிள்ளைகள் கிளம்பிவிட்டார்களா? இனிமேல் நான் வந்து என்ன செய்ய? நீங்கள் போங்கள்” என்கிறாள். ஆண்டாள், “போகின்றாரை போகாமல் காத்து உன்னைக் கூவுவான் வந்து நின்றோம்! கோதுகலமுடைய பாவாய்!” – “க்ருஷ்ணனுக்கு குதூகலத்தை கொடுக்கக் கூடியவளான உன் புருஷகாரம் இல்லாது நாங்கள் எங்கே அவனை சென்று காண்பது… பாவாய், அதனால் நீ வரவில்லை என்று போகிறவர்களிடம் சொல்ல, த்ருக் என போகாமல் அனைவரும் நின்றார்கள்… உனக்காகவே எல்லோரும் காத்திருக்கிறோம்” என்றாள். அதாவது மற்ற கோபிகைகள் “திருவேங்கட யாத்திரை போலே, போகையே பரயோஜனமாகப் போகா நின்றார்கள்” என்றபடி எல்லோரும் இணைந்து செல்வோம் என்று சொல்லிவிட்டு, கடைசியில் க்ருஷ்ணனையே லட்சியமாக நினைத்து மற்ற எல்லாவற்றையும் மறந்து கிளம்பிவிட்டார்கள். “இந்த கோபிகை வரவில்லையே! இவள் க்ருஷ்ணனுக்கு மிகவும் பிடித்தமானவளாயிற்றே! மேலும், செய்யாதன செய்யோம் என்று சொன்னோமே, க்ருஷ்ணானுபவத்தை கூடியிருந்து குளிர்ந்து அனுபவிப்பது இருக்க இந்த கோபிகையை விட்டுவிட்டு போகலாமா?” என்று கேட்டு அவர்களை தடுத்து விட்டோம் என்கிறாள்.
“கோதுகலமுடைய பாவாய்! எழுந்திராய்!”, “மாவாய் பிளந்தானை, மல்லரை மாட்டிய தேவாதி தேவனை சென்று நாம் சேவித்தால், அவன் நீ வந்திருக்கிறாயா என்று ஆராய்வன். அப்போது உன்னுடன் சேர்ந்து அவனை பாடி பறை கொண்டு வருவோம்”, என்கிறாள். கேசி என்கிற அசுரன் குதிரை உருக்கொண்டு வந்தான். பகாசுரன் என்னும் அசுரன் கொக்கு வடிவம் கொண்டு வந்தான். க்ருஷ்ணன் இவர்களை வாயை கிழித்து கொன்றான். கம்சன் அவையில் மல்லர்களை வென்றான். அத்தகைய தேவாதி தேவனை சென்று நாம் சேவித்தால், “நாம் இவர்களை தேடிச்சென்று ரக்ஷிப்பது இருக்க, இவர்களே நம்மை தேடி வந்துவிட்டார்களே! என்று ஹாஹா என்று ஆச்சரியப் பட்டு அருளுவன்” என்கிறாள். அந்த பெண்ணும் இவர்களுடன் சேர்ந்து கொண்டாள் என்பது சரித்ரம்.
விஜயலஷ்மி ராஜ் அவர்கள் வழங்கிய
திருப்பாவை பாடல் மற்றும் விளக்கம்
ஆடியோ வடிவில்
திருப்பாவை பாடல் மற்றும் விளக்கம்
ஆடியோ வடிவில்