அபச்சாரங்கள் இரண்டு வகைப்படும்.
அவை
பகவத் அபச்சாரங்கள்
( நாம் இறைவனிடம் செய்யும் தவறுகள் ) ,
பாகவத அபச்சாரங்கள்
( பகவானின் அடியார்களிடம் , நாம் செய்யும் தவறுகள் ) இந்த இரண்டு அபச்சாரங்களும் பெரிய பாவங்களை நமக்கு உண்டாக்கிவிடும்.
பகவான் தன்னிடம் , நாம் செய்கின்ற அபச்சாரங்களைக்கூட மன்னித்து விடுவான், அடியார்களிடம் செய்யும் அபச்சாரங்களை மன்னிக்கவே மாட்டான்.
பகவத் அபச்சாரங்கள்
எம்பெருமானிடம்,
ஸ்ரீ வைஷ்ணவர்கள் செய்யக் கூடாத தவறுகள்
1, எல்லா இடங்களிலும் வியாபித்து நிறைந்து உள்ள,
ஸ்ரீமந் நாராயணனுக்கு இணையாகவோ அல்லது உயர்வாகவோ மற்ற தெய்வங்களை கொண்டாடுவது.
2 , சாதாரண தேவதைகளைப் போன்று
ஸ்ரீமந் நாராயணனை நினைப்பது.
3 , ராமனாகவும் கிருஷ்ணனாகவும் அவதாரம் செய்த எம்பெருமானை,
சாதாரண மனிதப் பிறவியாக நினைத்து குறைவாக மதிப்பிடுவது,
வாலிவதம் போன்ற நிகழ்ச்சிகளை ஆராய்ச்சி செய்வது, அதில் குறைகளை காண முயல்வது.
4 , அர்ச்சாவதாரமாக கோவில்களிலும் வீடுகளிலும் எழுந்தருளி இருக்கும் பரமாத்மாவை ஐம்பொன் சிலைதானே என்றும், கற்சிலைதானே என்றும் குறைவாக எண்ணுதல் ,
வீடுகளில் உள்ள சாளக்கிராமங்களை சாதாரண கல்லாக நினைப்பது.
5 , கோவில்களில் அர்ச்சகரிடம்
"இந்த சிலை எதனால் செய்யப்பட்டது?"
என்று கேட்பது ,
இந்த விக்கிரஹம் எதனால் செய்யப்பட்டு இருக்கும் என்று மற்றவர்களோடு கலந்து ஆலோசிப்பது .
6 , பெருமாளைத் திட்டுவது, வெறுப்பது, கேலி பேசுவது, இல்லை என மறுப்பது
7 , புனிதமான கோவில்களையும் கோவில் குளங்களையும் அசுத்தம் செய்வது.
8 , எம்பெருமான் உற்சவ காலங்களில் திருவீதி உலா வரும்போது,
அந்த உற்சவ முர்த்திகளுக்கு உரிய மரியாதை தராமல் இருப்பது,
உற்சவ முர்த்திகளைக் கண்டவுடன் நிலத்தில் விழுந்து வணங்காமல் இருப்பது, அலட்சியம் செய்வது ,
கேலி செய்வது.
9 , ஆத்மாவை இறைவனின் சொத்து என்று நினைக்காமல், நமது என்று நினைத்து சுயநலத்தோடு நடந்து கொள்வது.
10 , உயிருள்ள பொருள்களிலும் (சித்),
உயிரற்ற பொருள்களிலும் (அசித்)
அனைத்திலும் எம்பெருமான் நீக்கமற நிறைந்துள்ளான் என்பதில் சந்தேகம் கொள்வது .
11 , தினமும் எம்பெருமானுக்கு நிவேதனம் செய்யாமல் தான் மட்டும் உணவை உண்பது.
12 , பெருமாளின் கல்யாண குணங்களை விவரிக்கும் ராமாயணம், மஹாபாரதம், நாலாயிர திவ்யப்ரபந்தம் போன்ற
புனித நூல்களை, மாத இதழ்களைப் படிப்பது போல அலட்சியமாக படிப்பது.
13 , எம்பெருமானைப் பற்றிய உபந்யாசங்களை கேட்கும்பொழுது,
பக்தியுடன் கேட்காமல் இருப்பது,
உபந்யாசத்தை கேட்டுக் கொண்டு இருப்பவர்களுக்கு இடையூறாக இருக்கும்படி மற்றவர்களோடு சத்தமாக பேசிக்கொண்டு இருப்பது சிரிப்பது.
புகை பிடித்துக் கொண்டோ, கால்களில் காலணி அணிந்து கொண்டோ கேட்பது,
புதிதாக இப்பொழுது இதையும் சேர்த்துக்கொள்ளவேணும்...... இடையிடையே செல்போனில் பேசிக்கொண்டே கேட்பது.
இவை அனைத்தும் பகவத் அபச்சாரங்கள்
உண்மையான ஸ்ரீவைஷ்ணவன்,
மேலே சொன்ன
பகவத் அபச்சாரங்களை செய்யாமல் இருக்கவேண்டும்.
இதற்கு அடுத்தபடியாக
பாகவத அபச்சாரங்கள்
(அடியார்களிடம் செய்யும் தவறுகள்),
எம்பெருமான் தன்னிடம் தவறுகள் செய்கின்றவர்களை கூட மன்னித்து விடுவான், தன் அடியார்களிடம் தவறுகளை செய்கின்றவர்களை மன்னிக்கவே மாட்டான்.
ஆகவே அவை எவை என்று பார்ப்போம்.
பாகவத அபச்சாரங்கள்
(அடியார்களிடம் செய்யும் தவறுகள்),
1, அடியவரின் ஜாதியைப்பற்றி கேட்பது, இகழ்வது.
2, கருப்பு, வெளுப்பு போன்ற உடல் நிறங்களை வைத்து பேதம் பார்ப்பது.
3, சரீர பேதம் பாராட்டுதல்,
அதாவது ஆண்தான் உயர்ந்தவர்,
இவள் பெண்தானே என்று நினைப்பது, இது விலங்குதானே, இது பறவைதானே என்று அலட்சியப்படுத்துவது.
( பக்தி செலுத்துவதில் எல்லோரும் சமமே , எம்பெருமான் கஜேந்திர யானைக்கும், ஜடாயு கழுகுக்கும், குயவனுக்கும், குயவனுடைய மண்பாண்டத்திற்கும் கூட , பரமபத பிராப்தி கொடுத்தவன் ,
ஸ்ரீவைஷ்ணவத்தில்
குரங்கும் ஸ்ரீவைஷ்ணவனே
( ஹனுமான், சுக்ரீவன்)
கரடியும் ஸ்ரீவைஷ்ணவனே
( ஜாம்பவான்)
யானையும் ஸ்ரீவைஷ்ணவனே
(கஜேந்திராழ்வான்)
ராக்ஷசனும் ஸ்ரீவைஷ்ணவனே
( விபீஷணன்)
பாம்பும் ஸ்ரீவைஷ்ணவனே
( ஆதிசேஷன்)
பறவையும் ஸ்ரீவைஷ்ணவனே
( கருடாழ்வார், ஜடாயு )
சரீர பேதமே கிடையாது.
4, குழந்தை, வாலிபம், கிழப்பருவம் ஆகியவற்றைக் காட்டி வேற்றுமை பாராட்டுவது. ( குழந்தையான பக்தபிரகலாதனுக்கும், துருவனுக்கும், கிழவியான சபரிக்கும், தும்பையூர் கொண்டிக்கும் அனுக்ரகம் செய்தான் )
5, பிரம்மச்சாரி, இல்லறத்தான், முனிவன், துறவி என்று வேறுபடுத்துவது ( யாராக இருந்தாலும் பரமபதத்திற்கு செல்ல முடியும், தேவை முமுக்ஷுத்வம் மட்டுமே )
6, நொண்டி, முடம், பார்வை அற்றவர்கள் என்று உடற்குறை காட்டி அவமானப்படுத்துதல்.
7, ஆசாரகுறைவு என்று ஒதுக்குதல்.
8, திருப்பதியில் வசிக்கும் வைஷ்ணவர்கள் உயர்ந்தவர்கள், குப்பத்தில் வசிக்கும் வைஷ்ணவர்கள் தாழ்ந்தவர்கள் என்று நினைப்பது.
9, உறவினர்களில் உண்மையான வைஷ்ணவர் இருந்தால்,
அவரை வெறும் உறவுக்காரராக மட்டும் நினைத்து அவரை குறைவாக எண்ணுதல்.
10, ஆசார்யர்களுக்கு தரும் மதிப்பை, சாதாரண வைஷ்ணவர்களுக்கு தராமல் இருப்பது.
11, கோவிலிலேயே ஒருவர் செய்யும் தொழில் உயர்ந்தது என்றும், மற்றொருவர் செய்யும் தொழில் தாழ்ந்தது என்றும் எண்ணுவது.
12, வைஷ்ணவர்களை ஞானம் இல்லாதவர்களாக நினைத்துக்
கேலி செய்வது.
13, அடியவர்களை நிந்தித்தல்,
இகழ்தல், சண்டையிடுதல்,
அவர்களை அடித்தல்.
14, அடியவர்களின் மனம்
புண்படும்படியாக பேசுதல்,
அவர்களின் பொருள்களைத் திருடிக்கொள்தல்.
15, எம்பெருமானின் திருவடிகளான திருமண்காப்பு தரித்திருப்பவர்களைப் பார்த்து கேலிபேசுதல், ஏசுதல்,
நிந்தனை செய்தல், அவற்றை அழித்தல் , புனிதச்சின்னங்களை அசுத்தமாக்குதல்.
16, வைஷ்ணவர்கள் ஏமாற்றுக்காரர்கள் என்று பிரச்சாரம் செய்தல்.
17, எங்கள் ஆசார்யன்தான் உயர்ந்தவர்,
உங்கள் ஆசார்யன் தாழ்ந்தவர்
என்று மற்றவர்களிடம் கூறுவது
இவை அனைத்தும் பாகவத அபச்சாரங்கள்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஆண்டாள் ஆசார்யார் திருவடிகளே சரணம்