சுவாமி! அவர் உங்களைத்தானே தேடி வந்தார், என்றார் தஞ்சமாம்பாள். சரியம்மா! எனக்கு உணவைக் கொடுங்கள். நான் சாப்பிட்டு விட்டு கிளம்புகிறேன். பெருமாள் கைங்கர்யத்துக்கு அவசரமாக செல்ல வேண்டும். எக்காரணம் கொண்டும் அது தாமதமாகக் கூடாது, என்றார்.

திருக்கச்சிநம்பி, எதற்காக அவசரப்படுகிறார் என்பது தஞ்சாம்பாளுக்கு புரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, அவர் வேகமாக உணவைப் பரிமாறினார். திருக்கச்சிநம்பி, பெயருக்கு சாப்பிட்டு விட்டு, அவர் கையாலேயே இலையை எடுத்து வெளியே போட்டு விட்டு, ராமானுஜர் வீட்டுக்கு வருவதற்குள் வெளியேறி விட்டார். 

பிராமணர் அல்லாத ஒருவர் தன் வீட்டில் சாப்பிட்டதால், தஞ்சமாம்பாள் வழக்கம் போல, அவர் சாப்பிட்ட இடத்தைக் கழுவிவிட்டு, மிச்சம் மீதியை வெளியே கொட்டிவிட்டு, மீண்டும் ஒருமுறை குளித்து, புதிதாக சமையலை தொடங்கி விட்டார். வெளியே சென்ற ராமானுஜர், அவசர அவசரமாய் வீடு திரும்பினார்.

தஞ்சா...தஞ்சா...நம்பி இங்கு வந்தாரா? அவசர அவசரமாகக் கேட்டார். ஆமாம் சுவாமி! அவர் உணவருந்தி விட்டு, அவசரமாக பெருமாள் கைங்கர்யம் இருப்பதாக சொல்லி சென்றுவிட்டார். அவர் சாப்பிட்ட இலையை அவர் கையாலேயே தூக்கி வீசிவிட்டார். வேளாளருக்கு போட்ட மிச்சத்தை உங்களுக்கு எப்படி பரிமாறுவது? அதை வேலைக்காரிக்கு கொடுத்து விட்டு, வீட்டைக்கழுவி, புதிதாக தங்களுக்கு சமைத்துக் கொண்டிருக்கிறேன், என்றார். ராமானுஜருக்கு கோபமே வந்து விட்டது.

அடிப்பாவி! என்ன காரியம் செய்தாய்? அவர் சாப்பிட்ட எச்சத்தை தின்றாவது, அவருக்கு சீடனாக முயன்றேனே! அத்தனையையும் கெடுத்து விட்டாயே! அவர் எவ்வளவு பெரிய மகான். ஜாதியில் வேளாளராயினும், பெருமாளிடமே நேரில் பேசுபவராயிற்றே. பெருமாளே ஒருவரிடம் பேசுகிறார் என்றால், அவருக்கு ஏதடி ஜாதி! அவர் அமர்ந்த இடத்தை கழுவிவிட்டதாகச் சொல்லி தீராத பழி தேடிக் கொண்டாயே! என திட்டித் தீர்த்தார் பின்னர் வருத்தத்தில் வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.

இங்கிருந்து தப்பிய திருக்கச்சிநம்பி, நேராக வரதராஜனிடம் சென்றார். பெருமாளே! பேரருளாளா! இதென்ன சோதனை! நான் காலமெல்லாம் உனக்கு ஆலவட்டம் வீசி சேவித்துக் கொண்டிருக்க விரும்புகிறேன். நீயோ, என்னை ராமானுஜருக்கு குருவாக்க விரும்புகிறாயே! அவர் சாதாரணமானவரா? ராமபிரானின் தம்பியான லட்சுமணனின் அவதாரம் அல்லவா? அவருக்கு குருவாகும் தகுதி எனக்கேது? அவர் என்னை வீட்டுக்கு வரழைத்து, நான் உண்ட எச்சத்தை சாப்பிட்டு, என்னை குருவாக ஏற்று, பெரிய மனிதனாக்க பார்க்கிறார். 

உன் அடியவர்களுக்கு தொண்டு செய்ய விரும்பும் என்னை ஒரு அடியவனாக்கி, எனக்கு தொண்டு செய்ய ராமானுஜர் விரும்புகிறாரே! இனி கொஞ்சநாள் நான் இங்கிருக்கக்கூடாது. திருமலையில் வேங்கடாஜலபதியாய் காட்சி தரும் உன் திருமுகத்தை சேவித்தபடி, அங்கேயே சில காலம் தங்கி விடுகிறேன். 

அதற்கு அனுமதி கொடு, என்று பெருமாளிடம் பிடிவாதமாய்க் கேட்டார். பெருமாள் தான் இவரிடம் பேசுபவர் ஆயிற்றே. இவரது சொல் கேட்க மறுத்தால், பக்திக்கே களங்கமாகி விடும் என்பதை அவர் அறியாதவரா என்ன? அந்த மாயக்காரன் அனுமதி கொடுத்து விட்டான்.

சரி...நம்பி, எங்கிருந்தாலும், நீர் எனக்கு தான் சேவை செய்யப் போகிறீர். திருமலைக்கு வாருமே, என பச்சைக்கொடி காட்டிவிட்டார். திருக்கச்சிநம்பியும் திருமலைக்கு சென்றுவிட்டார். ராமானுஜர் நம்பி திருமலைக்கு சென்ற தகவல் அறிந்து, அவர் வருகைக்காக காத்திருந்தார். இதனிடையே காஞ்சிபுரத்தில் கடும் வெயில், பேரருளாளன் வரதராஜனும் வெப்பத்திற்கு தப்பவில்லை. 

நம்பி திருமலைக்கு போய் ஆறுமாதம் கழிந்து விட்டது. ஒருநாள் வேங்கடவன் அவரிடம், நம்பி! நீ காஞ்சிபுரத்துக்கே வா. இங்கே நான் கடும் வெயிலால் அவதிப்படுகிறேன். இச்சமயத்தில், நீ என் அருகில் இருந்து ஆலவட்டம் வீசினால், வெப்பத்தின் பிடியில் இருந்து தப்புவேன் அல்லவா? என்றார். குளிர்ந்த மேனியைக் கொண்ட அந்த கள்வனின் நாடகத்தைத்தான் பாருங்களேன். பொறுக்குமா நம்பிக்கு...ஆ...வரதராஜா! இதோ, இந்தக் கணமே கிளம்பி விடுகிறேன். அவர் கிளம்பி விட்டார்.

 ராமானுஜர் அவர் வந்ததை அறிந்து மகிழ்ச்சியுடன் சென்று சந்தித்து பேசினார். நீண்ட நேரமாக பரமனின் புகழ் பேசிக் கொண்டிருந்தனர். ராமானுஜர் அவரிடம் சில சந்தேகங்களைச் சொன்னார். அந்த ஆன்மிக சந்தேகங்களுக்குரிய பதிலை பெருமாளிடம் கேட்டுச் சொல்லுங்களேன் என திருக்கச்சிநம்பியிடம் அவர் கூறினார். 

நம்பியும் கோயிலுக்குச் சென்று, பெருமாளிடம் பேசிக் கொண்டிருந்த போது, ராமானுஜர் கேட்ட கேள்விகளை அடுக்கினார். பெருமாளும் பதில் சொன்னார். நம்பி மறுநாள் ராமானுஜரை அழைத்து, ராமானுஜரே! தங்கள் கேள்விக்கு பேரருளாளன் பதில் சொன்னார். அது மட்டுமல்ல, இதை உடனடியாக உங்களிடம் சொல்லியாக வேண்டும் என்றும் கட்டளையிட்டிருக்கிறார், என்றார்.

ராமானுஜர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. என்ன... பெருமாள் என் பெயரைச் சொல்லி, என்னிடமே சொல்லச் சொன்னாரா? நான் செய்த பாக்கியம் தான் என்னே! சொல்லுங்கள் சுவாமி! அதைக் கேட்க நான் ஆவலாயிருக்கிறேன், என்றார்.

திருக்கச்சி நம்பி, பெருமாள் சொன்னதையெல்லாம் ஒவ்வொன்றாய் சொல்ல, ராமானுஜர் பரவசத்தின் உச்சிக்கே போய்விட்டார்.பேரருளாளா! என் சந்தேகம் தீர்ந்தது, சந்தேகம் தீர்ந்தது, என ஆவேசமாய் கத்தினார். தன்னை மறந்து ஆடினார். அப்படி என்ன தான் சொல்லியனுப்பினார் பெருமாள்?

ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ

தொடரும்......