பெரியநம்பி மனைவியிடம், என் பிரியமானவளே! ஆண்டவன் எதையும் காரணமின்றி செய்வதில்லை. ஸ்ரீரங்கநாதன் நம்மை இவ்வளவு நாள் தான் இங்கிருக்க வேண்டும் என விதித்திருக்கிறான். அதை யாரால் மாற்ற முடியும்? 

இறைவனுக்கு ஒரு குணம் உண்டு. அதாவது, அவன் ஒருவனை ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு இடம் மாற்ற வேண்டும் என நினைத்தால், அவனுக்கு பிரியமில்லாத சொற்களை காதில் விழ வைத்து விடுவான். அதை அவனே மற்றவர்கள் மூலமாகப் பேசுவான். இதற்காக நாம் கோபம் கொள்வது முறையல்ல. எல்லாம் அவன் செயல்.

 நாம், இங்கிருந்து புறப்பட்டுச் செல்வோம். ராமானுஜனுக்கு இது தெரிய வேண்டாம். பக்கத்து வீட்டில் தகவல் சொல்லிவிட்டு அமைதியாய் கிளம்பு. தஞ்சமாம்பாள் சொன்ன வார்த்தைகளை மனதில் கொள்ளாதே, என்றார். அந்த அம்மையார் கணவர் பேச்சுக்கு மறுசொல் பேசாதவர். உடனே புறப்பட்டு விட்டார். 

இதற்கிடையே, ராமானுஜர் ஆழ்வார்களின் நாலாயிர திவ்வியபிரபந்தத்தில் முழுமையாக பயிற்சி முடிந்திருந்தார். இதற்கு நன்றி தெரிவிப்பதற்காக, குருவின் வீட்டிற்கு பழம், வெற்றிலை, புதுத்துணி உள்ளிட்ட 16 பொருட்களுடன் அவர் அங்கே சென்றார். அங்கே யாருமில்லை. பக்கத்து வீட்டில் விசாரித்தார். 

ராமானுஜா! அவர்கள் ஸ்ரீரங்கம் கிளம்பிப் போய்விட்டார்கள். என்னிடம் சொல்லி விட்டு சென்றார்கள், என்றார். ராமானுஜருக்கு கண்ணீர் முட்டியது. ஐயோ! என்ன பாவம் செய்தேன் நான்! ஆச்சாரியார் நம்மிடம் சொல்லாமல் கொள்ளாமல் போகுமளவு நான் செய்த தவறு கொடியதாக இருந்துள்ளதே! அவர் மனம் புண்படும்படி நான் நடந்து விட்டேனோ? எதற்கும் தஞ்சமாம்பாளிடம் கேட்பபோம். அவளிடமுமா சொல்லாமல் போயிருப்பார்கள்? என மனதில் நினைத்தவர், பதைபதைப்புடன் வீட்டுக்கு ஓடி வந்தார்.

தஞ்சா...தஞ்சா... அவசரமாக அழைத்த அவரிடம், என்ன...எதற்காக வாசலில் இருந்தே கத்திக் கொண்டு வருகிறீர்கள்? என்றாள் அந்த புண்ணியவதி. தஞ்சா...ஆச்சாரியாரும், அவரது மனைவியும் ஸ்ரீரங்கம் கிளம்பி போய் விட்டார்களாம். உன்னிடம் ஏதாவது சொன்னார்களா? என்றவரிடம், அடேங்கப்பா! உங்களுக்கு கிடைத்தவர் சரியான ஆச்சாரியர் தான்! இதற்கே அந்த பெரிய மனிதருக்கு கோபம் வந்து விட்டதா? குரு என்றால் கோபம் கொள்ளாதவராக இருக்க வேண்டும் என்பது கூட அந்த மகானுக்கு தெரியாதோ? என்றாள் மொட்டையாக.

 ராமானுஜருக்கு இப்போது புரிந்து விட்டது. தன் குரு இங்கிருந்து கிளம்பக் காரணம் தன் மனைவி தான் என்பதைப் புரிந்து கொண்டார். அவர் கோபத்துடன், அடியே! ஆச்சாரியருக்கு கோபம் வரும் வகையில் என்ன செய்து தொலைத்தாய்? என்றார். அவள் நடந்ததைச் சொன்னாள். அடிப்பாவி! ஒரு சொட்டு தண்ணீர்...அதுவும் கயிறில் இருந்து தெறித்து விழுந்தது...இதனால் என்னடி குடிமுழுகிவிடும்! இதற்காக பதிபக்தியில் சிறந்த அந்த அம்மையாரை இகழ்ந்திருக்கிறாயே. 

ஆச்சாரியர் அதனால் தானே கோபித்துக் கொண்டு போயுள்ளார். நீண்ட நாளைக்குப் பிறகு எனக்கு ஒரு குருவை அந்த வரதராஜனே அமர்த்திக் கொடுத்தானடி. அவன் எனக்கு தந்த தங்கத்தினும் மேலான மேதாவியை என்னிடமிருந்து பிரித்து விட்டாயேடி. பிசாசினும் கொடியவளே! இனிமேல் உன் முகத்தில் விழிக்கமாட்டேன், என்று கத்தித் தீர்த்தவர், வேகமாக வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு நடந்தார்.

கோயிலுக்குள் சென்று, வரதராஜா! நீ இப்படி செய்யலாமா? வேண்டாமப்பா...வேண்டாம். இந்த சம்சார பந்தம் வேண்டாம். குடும்பம் வேண்டாம். இனி, உன் சேவை மட்டுமே எனக்குப் போதும், என்றவர், அந்தப் பெருமாளின் காலடியில் விழுந்து கண்ணீர் உகுத்தார். ராமானுஜர் வீட்டில் இருந்து வெளியேறிய சமயம் பார்த்து, அவரது வீட்டுக்கு ஒரு ஏழை பிராமணர் வந்தார்.

 வீட்டுக்குள்ளிருந்த தஞ்சமாம்பாளிடம், அம்மா! பசிக்கிறது. ஏதாவது இருந்தால் கொடுங்கள் தாயே, என்றார். அவள் ஏற்கனவே கணவர் திட்டித்தீர்த்த கோபத்தில் இருந்தாள். யாரோ ஒருவருக்காக, தன்னை பேயே, பிசாசே என திட்டி விட்டாரே. தன்னை விட அவர்கள் தானே உசத்தியாக போய் விட்டார்கள் அந்த மனிதருக்கு...என்ற ஆத்திரத்தில் இருந்தவள், உள்ளிருந்தபடியே, ஓய்! வேறு எங்காவது போய் பிச்சை கேளும். 

இங்கே நீர் வருவீர் என தெரிந்து வடித்தா வைத்திருக்கிறேன். நேரம் காலம் தெரியாமல் இங்கு வந்து உயிரை வாங்குகிறீரே, என்றாள். அவர் வருத்தத்துடன் அங்கிருந்து அகன்று, வரதராஜப் பெருமாள் கோயிலை நோக்கி நடந்து கொண்டிருந்தார். ராமானுஜர் அங்கிருந்து புறப்பட்டு வெளியே வந்தார். எதிரில் பிராமணர் வந்தார். 

சுவாமி! தாங்கள் வருத்தத்துடன் வருகிறீர்களே, பசியால் மிகவும் களைத்துள்ளது போல் தோன்றுகிறது. வீட்டில் ஏதாவது கேட்டு வாங்கியிருக்கலாமே, என்றார். நான் உமது வீட்டுக்குத்தான் போனேன். அம்மையார் ஒன்றுமில்லை என சொல்லி திட்டி அனுப்பி விட்டாள், என்றார். ராமானுஜரின் வருத்தம் இன்னும் அதிகமாயிற்று. 

சுவாமி! வருந்தாதீர்கள். நான் தங்களிடம் ஒரு கடிதம் தருகிறேன். அத்துடன் பழம், பூ, புதுத்துணியும் தருகிறேன். அவற்றை என் மனைவியிடம் கொடுங்கள். நான் சொல்வதைப் போல் அவளிடம் சொல்லுங்கள். அதைக்கேட்டு, அவள் உங்களுக்கு ராஜ உபசாரம் செய்வாள், என்றார். பிராமணருக்கு ஏதும் புரியவில்லை. கடிதத்தையும், பொருட்களையும் வாங்கிக் கொண்டார்.

ஸ்ரீ மதே ராமானுஜாய நமஹ

தொடரும் .......