ஒரு வழியாக கோவிந்தனின் மனதை மாற்றிய பெரிய திருமலைநம்பி, அவரை அழைத்துக்கொண்டு ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்தார். ராமானுஜரின் சீடராகிவிட்டார் கோவிந்தன். கோவிந்தன் தனது அருகில் இருந்ததால் ராமானுஜருக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. காலப்போக்கில் ஸ்ரீமன் நாராயணனையே கோவிந்தன் வழிபட ஆரம்பித்தார். 

பெரிய நம்பியை தனது குருவாக ஏற்றுக்கொண்ட ராமானுஜர் அவரிடம் பல நூல்கள், சாஸ்திர சம்பிரதாயங்கள் பற்றி கேட்டுத்தெரிந்து கொண்டார். கவனமுடன் அவற்றைப்படித்தார். சில சமயங்களில் தனது சீடரின் அபரிமிதமான அறிவைக்கண்ட பெரிய நம்பி, தனது மகன் புண்டரீகாட்சரை ராமானுஜரின் சீடராக்கினார். 

ஒரு முறை ராமானுஜரிடம் பெரிய நம்பி,சீடனே! ஸ்ரீரங்கத்திலிருந்து நான் கற்றுத்தந்த விஷயங்களை மட்டுமே தெரிந்துகொண்டாய். உனது ஆன்மிக அறிவுக்கு இது மட்டும் போதாது. இங்கிருந்து சில மைல் தூரத்தில் திருக்கோஷ்டியூர் என்ற தலம் இருக்கிறது. அந்த தலத்தில் திருக்கோஷ்டியூர் நம்பி வசிக்கிறார். அவர் மிகப்பெரிய அறிஞர். தூய்மையானவர். 

அவரைப்போன்ற வைணவரை உலகில் வேறு எங்குமே காண இயலாது. திரு எட்டெழுத்து என்ற மந்திரத்தை அவர் அறிந்திருக்கிறார். அதற்குரிய பொருள் அவருக்கு மட்டுமே தெரியும். மற்றவர்கள் திரு எட்டெழுத்து மந்திரம் பற்றி தெரிந்திருந்தாலும் கூட அவரளவுக்கு கற்றுத்தருவார்களா என்பது சந்தேகமே. எனவே நீ அங்கு சென்று அவரிடம் திருமந்திரத்தை பொருளுடன் படித்து வா. இவ்விஷயத்தில் எவ்வித தாமதமும் வேண்டாம்,என்றார். ராமானுஜர் சற்றும் தாமதிக்கவில்லை. உடனடியாக திருக்கோஷ்டியூர் கிளம்பி விட்டார்.

நம்பியின் இல்லத்திற்கு சென்று அவரது பாதங்களில் பணிந்தார். திரு எட்டெழுத்து மந்திரத்தை பயில வேண்டும் என்ற தன் ஆர்வத்தை தெரிவித்தார். நம்பியோ அவரது கோரிக்கையை கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. இன்னொரு முறை இங்கு வா. அப்போது பார்த்து கொள்ளலாம், என சொல்லி விட்டார்.

 ராமானுஜருக்கு பதில் சொல்ல முடியவில்லை. அவ்வளவு பெரிய மகானை வற்புறுத்தும் சக்தியும் அவரிடம் இல்லை. ஆழ்ந்த வருத்தத்துடன் ஸ்ரீரங்கம் திரும்பி விட்டார். சில நாட்கள் கழித்து திருக்கோஷ்டியூர் நம்பி ஸ்ரீரங்கத்திற்கு வந்தார். ரங்கநாதப்பெருமானை சேவித்தார்.

 அப்போது பெருமான் நம்பியிடம், நம்பியே! ராமானுஜன் மிகவும் புத்திசாலி. அவனுக்கு நீ திரு எட்டெழுத்து மந்திரத்தை கற்றுக்கொடுப்பாயாக, என்றார். நம்பி அப்போதும் ஒப்புக்கொள்ளவில்லை. ரங்கநாதா! திரு எட்டெழுத்து மந்திரம் என்பது சாதாரணமானதல்ல. 

நீயே ஒரு முறை தவம் செய்யாதவனுக்கும், சரியான வழிபாடு செய்யாதவனுக்கும் இந்த மந்திரத்தை கற்றுக்கொடுக்க கூடாது என உத்தரவு போட்டிருக்கிறாய். இப்போது, அந்த உத்தரவை நீயே மீறச் சொல்கிறாய். மனிதன் குறிப்பிட்ட காலமாவது தவம் செய்திருக்க வேண்டும். தவம் செய்யாதவனின் மனது சுத்தமாக இராது.

 அது மட்டுமல்ல! இந்த மந்திரத்தை யார் ஒருவன் கற்றுக்கொள்கிறானோ, அவன் மனத்தூய்மை இல்லாதவனாக இருந்தால், இம்மந்திரத்தின் சக்தியை தாங்கி கொள்ள மாட்டான். இதையெல்லாம் நீ அறியாதவனா என்ன? என சொன்னார். ரங்கநாதன் கலகலவென சிரித்தார். நம்பியே! ராமானுஜனுடைய மனசுத்தம் பற்றி நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவன் சாதாரணமானவன் அல்ல. 

இந்த உலகத்தை பாதுகாக்க வந்தவன். நீயே இதை அறிவாய். அவ்வாறு அறியும் காலம் வந்த பிறகு நீயே கற்றுத்தருவாய், என கூறி விட்டார். அதன் பிறகு பெருமானும், நம்பியும் பேசிக்கொள்ள வில்லை. திருக்கோஷ்டியூர் நம்பிசேவையை முடித்து விட்டு ஊர் திரும்பி விட்டார்.

ராமானுஜருக்கு எப்படியேனும் திருக்கோஷ்டியூர் நம்பியிடம் திரு எட்டெழுத்து மந்திரத்தை பயின்றாக வேண்டும் என்ற வைராக்கியம் ஏற்பட்டது. மீண்டும் மீண்டும் அவர் திருக்கோஷ்டியூருக்கு வந்து போனார். ஸ்ரீரங்கத்திலிருந்து பதினேழு முறை நடந்தே திருக்கோஷ்டியூர் வந்து நம்பியை தரிசித்தும் கூட அவர் கண்டுகொள்ளவே இல்லை.

 நாராயணனே சிபாரிசு செய்தும் கேட்காத அவர், ராமானுஜர் சொல்லியா கேட்கப்போகிறார்? இப்படியே ஆண்டுகளும் புரண்டு கொண்டிருந்தன. திருக்கோஷ்டியூருக்கு பதினெட்டாவது முறையாக ராமானுஜர் வந்தார். அப்போதும் நம்பி அவரை தனது சீடனாக ஏற்கவில்லை. மந்திரத்தின் பொருளை கற்றுக்கொடுக்க மறுத்து விட்டார்.

 ராமானுஜருக்கு கண்ணீர் முட்டியது. இறைவா! என் மனதில் உண்மையிலேயே ஏதோ மாசு இருக்கிறது. அதன் காரணமாகத்தான் மந்திரத்தின் பொருளை கற்றுக் கொடுக்க நம்பி மறுக்கிறார். நாம் இத்தனை முறை இங்கு வந்தும் பலனேதும் இல்லை. என்று தான் நம்பியின் மனம் கனியப்போகிறதோ? என புலம்பி அழுதார். 

திருக்கோஷ்டியூர் வாசிகள் சிலர் ராமானுஜர் அழுவதை கவனித்தனர். அந்த இளைஞரின் மீது இரக்கம் கொண்டனர். நடந்த விஷயத்தை திருக்கோஷ்டியூர் நம்பிகளின் காதுக்கு கொண்டு சென்றனர். ராமானுஜரை வரவழைத்தார். மனம் பதைக்க ராமானுஜர் நம்பியின் முன் நின்று கொண்டிருந்தார். 

என்ன நடக்கப்போகிறதோ என்ற ஆதங்கம் மனத் துடிப்பை அதிகமாக்கியது. சற்று நேரம் கழித்து, திருக்கோஷ்டியூர் நம்பி, ராமானுஜர் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்தார். அவரைக்கண்டதும் வேகமாக எழுந்தார் ராமானுஜர். 

நம்பி என்ன சொல்லப்போகிறாரோ என்ற ஆர்வத்துடனும், அதே நேரம் கவலையுடனும் அவரது முகத்தையே ஏறிட்டு பார்த்துகொண்டிருந்தார்.

ஸ்ரீ மதே ராமானுஜாய நமஹ

தொடரும்.......