நம்மாழ்வார் , ஆழ்வார்களின் தலைவராகப் போற்றப்படுகின்றார். திருநகரி நகரத்தில் உடைய நங்கைக்கும் காரிமாறனுக்கும் புத்திரனாக  வைகாசி மாதம் விசாக நக்ஷத்திரத்தில் அவதரித்த இவர் , விக்ஷ்வக்ஸேனரின் மறு அவதாரம். இவரின் லக்னம் ஸ்ரீ ராமரின் ஜென்ம லக்னமான கடகம்.

நம்மாழ்வார் அவதரிப்பதற்கு முன்பு வரை திருநகரி என்று அழைக்கப்பட்ட இவ்வூர், ஆழ்வாரின் அவதாரத்திற்குப் பின் ஆழ்வார் திருநகரி என்று அழைக்கப்படுவது ஆழ்வாரின் மகிமையை பறைசாற்றுவதாக உள்ளது. ஸ்வாமி நம்மாழ்வார் அவதரிப்பதற்கு முன்னமே திருநகரியில் புளிய மரமாக அனந்தாழ்வான் அவதரித்தார்.

நம்மாழ்வார் பிறந்த பொழுது  அழவும் இன்றி, பால் பருகவும் இல்லாமல் அசைவற்று ஒரு பிண்டம் போல் இருந்தார். திருக்குருகூர் ஆதிப்பிரானிடம் இவர் பெற்றோர்கள் வேண்ட, ஸ்வாமி தானே மெள்ள தவழ்ந்து ஆதிப்பிரான் ஸன்னதியில் உள்ள , அனந்தாழ்வான் புளிய மரமாக அவதரித்த மரத்தின் அடியில் உள்ள ஒரு பொந்துக்குள், பத்மாஸனத்தில் அமர்ந்து கொண்டார். இவ்வாறாக சுமார் 16 ஆண்டுகள் இவ்விடத்திலே ஆழ்வார் வாசம் செய்தார்.

இவர் காலத்திலே வாழ்ந்த ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் அவர்கள் வட தேஸத்திலே இருந்த பொழுது, தெற்கிலிருந்து வானத்தில் ஒரு ஒளி வட்டம் தென்பட அதனைத் தொடர்ந்து அவர் தெற்கு நோக்கி வந்து, திருநகரியிலே புளிய மரத்தடியில் இருக்கும் நம்மாழ்வாரைக் காண்கிறார். கண்கள் மூடிய நிலையில் இருந்த ஆழ்வாரைக் கண்டதும், அவர் பெரிய ஞானியாக இருப்பார் என்ற எண்ணத்துடன், ஒரு பெரிய கல்லை எடுத்து வந்து நம்மாழ்வார் அருகில் “தொப்பென்று ” போடுகிறார். 

சப்தத்தை கேட்ட ஆழ்வார் சற்றே கண் திறந்து மதுரகவிகளைப் பார்க்கிறார். நம்மாழ்வாரின் கண்களிலே ஒரு தேஜஸுடன் ஒளி வீசுவதைக் கண்டு, மதுரகவிகள், ஆழ்வாரிடம் “செத்ததின் வயிற்ற சிறியது பிறந்தால் , எத்தை தின்று எங்கே கிடக்கும்” என்று கேட்க, ஸ்வாமி நம்மாழ்வாரும் முதன் முதலாக தன் திருவாயிலிருந்து அவர் கேட்ட கேள்விக்கு பதிலாக ” அத்தைத் தின்று அங்கேயே கிடக்கும் ” என்று அருளுகிறார்.

 மதுரகவி ஆழ்வாரும், தான் முன்னமே நினைத்தபடி நம்மாழ்வார் பெரிய ஞானியாக இருப்பதை உணர்ந்து , அவரிடம் தன்னை அவர்தம் சிஷ்யராக ஏற்றுக் கொள்ளும்படி வேண்ட, ஆழ்வாரும் அதற்கு சம்மதிக்கிறார். அன்று முதல் மதுரகவி ஆழ்வார் தனக்கு நம்மாழ்வாரை தெய்வமாக வரிந்து அவரைத் தவிர ” தெய்வமற்று அறியாதவராக ” இருந்தார்.

வட மொழியில் அமைந்த நான்கு வேதங்களையும் தமிழ் படுத்த வேண்டி, அவற்றைத் தான் சொல்லச் சொல்ல, அதனை ஏடுபடுத்த  மதுரகவி ஆழ்வாரை பணிக்கிறார். அதன்படி முதல் முதலாக நம்மாழ்வாரின் ஈரச் சொல் வார்த்தையாக அருளப்பெற்ற முதல் பாசுரம் ” பொய் நின்ற ஞானமும், பொல்லா ஒழுக்கும் ” என்று தொடங்கும் திருவிருத்த பாசுரங்களாக நூறு பாசுரங்களை அருளிச் செய்தார்.
 
பின் ஆழ்வார் திருவாசிரியத்தின் ஏழு பாசுரங்களையும், என்பத்தேழு பாசுரங்களுடன் கூடிய பெரிய திருவந்தாதியையும், முற்றாக ஆயிரத்து நூற்று இரண்டு பாசுரங்களுடன் திருவாய் மொழியையும் அருளிச் செய்து இவ்வுலகோர் உய்ய வழி அமைத்துக் கொடுத்தார்.ஆழ்வாரின் கடைசி பாசுரமான ” அவா அறச் சூழ் * அரியை அயனை அரனை அலற்றி ” பாசுரத்தை முடிக்கும் பொழுது, எம்பெருமான் அவருக்குக் காட்சி அருளி, தன்னுடன் வைகுண்டத்திற்குச் அழைத்துச் சென்றார்.

நம்மாழ்வார் தனது பாசுரங்களில் 36 திவ்ய தேஸ எம்பெருமான்களை மங்களா ஸாஸனம் செய்துள்ளார். இத் திவ்ய தேஸ எம்பெருமான்கள் அனைவரும் இவர் அமர்ந்திருந்த புளிய மரத்தடிக்கே வந்து இவரிடம் தங்களைப் பற்றிய பாசுரங்களை பெற்றுச் சென்றனர்.

இப்படியாக உலகமும், உலகோர்களும் உய்ய வழிகாட்டிய ஆழ்வார்களின் தலைவரான இவருக்கு ஒரு சிறிய வருத்தமும் உண்டு என்று பெரியோர் கூறுவர். அதாவது ஸ்வாமி நம்மாழ்வார் அவதரித்தது கலியுகம் பிறந்து சரியாக 43 வது நாளன்று. இன்னும் சிறிது காலத்திற்கு முன்பே – 43 நாள்களுக்கு முன்பாவது –  அவதரித்திருந்தால் பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் அவதரித்து வாழ்ந்த யுகத்திலே தாமும் பிறந்திருக்கலாம் என்றும், ஆனால் அது முடியாமல் போய் விட்டதே என்ற வருத்தம் கண்ணன் பால் மிகுந்த ஈடுபாடு கொண்ட அவருக்கு உண்டு என்று கூறுவர் பூருவாச்சாரியர்கள்.

நாலாயிரத் திவ்ய ப்ரபந்தம் இன்று உலகோர்களால் ஸேவிக்கப் படுவதற்குக் காரணமும் இவரே. ஆம். நாதமுனிகள் இவரிடம்
” திருவாய்மொழி  ” ப்ரபந்த பாசுரங்களை அருள வேண்டும் போது, ஆழ்வார் நாதமுனிகளிடம் மற்ற ஆழ்வார்களும் அருளிச்செய்த திவ்யப் ப்ரபந்த பாசுரங்களையும் கொடுத்து அருளினார்.

நம்மாழ்வார் திருவடிகளே சரணம்

தொடரும்...