ஓம் நமோ நாராயணாய

          ஆழ்வார்கள் அருளிய நாலாயிர திவ்யபிரபந்தத்தை நாடி நமக்கு நல்கிய நாதமுனிகள் நமக்கு குலதெய்வம்.

         வைஷ்ணவ திவ்ய தேசங்களை தரிசிக்க முதலில் செல்லவேண்டிய கோவில் காட்டுமன்னார்குடி வீரநாராயணப் பெருமாள் கோவில். இது வைஷ்ணவ திவ்ய தேசம் அல்ல. ஆனால் அதனினும் பெருமை மிக்கது.நாலாயிரத் திவ்ய பிரபந்தங்கள் கண்டெடுக்கப்பட்ட தலம் இது. எனவே முதலில் இந்த தலத்தை தரிசித்துவிடுவது சிறந்தது.

        ஆழ்வார்கள் மகாவிஷ்ணுவைப் பற்றி பாடிய பாடல்களின் தொகுப்பே நாலாயிர திவ்யப் பிரபந்தம். சிதம்பரத்துக்கு அருகிலுள்ள காட்டுமன்னார்குடி (காட்டுமன்னார் கோவில்) குப்பங்குழியில் அவதரித்த நாதமுனிகள் இந்த நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாடல்கள் அனைத்தையும் நம்மாழ்வாரின் திருவருளால் மீட்டு வழங்கினார்.

         இவரை முதல்வராகக் கொண்டே வைணவ ஆச்சார்யர்களின் பரம்பரை துவங்குகிறது. இந்த ஊரின் பெயர் வீரநாரயணபுர சதுர்வேதிமங்கம் என்று கல்வெட்டுகளில் உள்ளது. இதன் அருகில் தான் தமிழகத்திலேயே மிகப் பெரிய ஏரியான வீராணம் ஏரி இருக்கிறது. வீரநாராயண ஏரி’ என்பதே நாளடைவில் ‘வீராணம் ஏரி’ என்று மருவிட்டது.

         மூலவர் ஸ்ரீ வீரநாராயணப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் சங்கு, சக்கரம்
ஏந்தி ஸ்ரீதேவி, பூதேவி சமேதராகக் காட்சி தருகிறார்.

நாதமுனிகளின் பேரனும் பகவத் இராமாநுஜரின் குருவுமானவர்.

ஆளவந்தார்:

ஆசார்ய பரம்பரை

    ஸ்ரீவைணவ ஆசார்ய பரம்பரை, பெருமாள், பிராட்டி, விஷ்வக்சேனர், நம்மாழ்வார் ஆகியோரைத் தொடர்ந்து வருவது. முதல் மூவர் பரமபதத்தில் உள்ளவர்கள்.இவ்வுலகில், நம்மாழ்வார் ‘ஆழ்வார்’.ஆகவே, நம்மாழ்வாரை யோக சமாதியில் நேரே தரிசித்து உபதேசம் பெற்ற நாதமுனிகள் முதலாசார்யர் எனக் கொள்வது வைணவ மரபாகும்.

நாதமுனிகள் (திருவரங்கநாதன்) அவதாரம்

       நாதமுனிகள் கிபி 824 ம் வருடத்தில் கடலூர் மாவட்டத்தில் வீரநாராயணபுரம் என்னும் இன்றைய காட்டுமன்னார்கோயில் பகுதியில் சோபக்ருத ஆண்டு ; ஆனி மாதம், அனுச நட்சத்திரம் ; பௌர்ணமி திதி புதன் கிழமையன்று சேனை முதலியாரின் படைத்தலைவர் கஜாநனர் அம்சமாக திருவரங்கநாதன் என்னும் இயற்பெயருடன் பிறந்தவர்.

நாதமுனிகள் யோகவித்தை, தேவ கான இசை ஆகியவற்றில் சிறந்து விளங்கியதால் இவரை திருவரங்கநாதமுனிகள் என்று அழைத்தனர். அதுவே பிற்காலத்தில் மருவி நாதமுனிகள் ஆயிற்று.

நாதமுனிகள் யாத்திரை எம்பிரான் மீண்டும் வீரநாராயணபுரம் வருமாறு அழைப்பு

 தம் தந்தை ஈச்வரபட்டரரோடும் குமாரர் ஈச்வர முனிகளோடும் குடும்பத்தோடு வடநாட்டு யாத்திரை சென்றார் இவர். பல வைணவத் திருத்தலங்களைப் பார்த்துப் பாடிப் பரவசமடைந்து ஸ்ரீகோவர்த்தனபுரம் என்னும் கிராமத்தில் ‘யமுனைத் துறைவன்‘ பகவான் திருத்தொண்டால் மகிழ்து சில ஆண்டுகள் தங்கியிருந்தார்.ஒரு நாள், காட்டுமன்னனார் (வீரநாராயணபுரம்) கோயிலில் திருவருள் புரியும் எம்பிரான் நாதமுனிகள் கனவில் தோன்றி மீண்டும் வீரநாராயணபுரத்திற்கே வருமாறு அழைத்தார்.

     இறைவனின் திருவுள்ளப்படி, வீரநாராயணபுரம் திரும்பிய நாதமுனிகள் காட்டுமன்னனார் கோயிலில் மலர், திருவிளக்கு கைங்கரியம், கோயில் நந்தவனப் பராமரிப்பு, பிரசாதம் சமைத்தல், இறைவனை அலங்கரித்தல் என்று இறைத் தொண்டு செய்து வந்தார். அவ்வாறு செய்து வருகையில் ஒருநாள், திருக்குடந்தை ஆராவமுதன் (சாரங்கபாணி) கோயிலுக்கு புனிதயாத்திரை வந்த சில வைணவர்கள்,

ஆராவமுதே! அடியேனுடலம் நின்பால் அன்பாயே
 நீராய் அலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே!
 சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த்திருக் குடந்தை
 ஏரார்கோலம் திகழக்கிடந்தாய்! கண்டேன் எம்மானே!
……………………………….திருவாய்மொழி 5-8-1

என்னும் பாடலில் தொடங்கி,

உழலையென்பின் பேய்ச்சி முலையூடு அவளை உயிருண்டான்
கழல்களவையே சரணாகக் கொண்ட குருகூர்ச் சடகோபன்
குழலின் மலியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்
மழலைத் தீரவல்லார் காமர்மானேய நோக்கியர்க்கே
……………………………திருவாய்மொழி 5-8-10

என்னும் பாடல் முடிய பத்து பாடல்களையும் பாடினர்.

    அவற்றைக் கேட்ட திருவரங்க நாதமுனிகள், அப்பாடல்களில் தன்னை மறந்தார். அவர்களிடம், ”நீங்கள் கடைசியாகப் பாடிய பாட்டில், ஓராயிரத்துள் இப்பத்தும் என்று வருகிறதே, அப்படியென்றால், உங்களுக்கு அந்த ஆயிரம் பாடல்களும் தெரியுமா?” என்று வினவினார்.அவர்கள், எங்களுக்கு இந்த பத்து பாடல்கள் மட்டுமே தெரியும்” என்று பதிலளித்தனர்.

நாதமுனிகள்_திருக்குருகூர்_விஜயம்

    அப்பாடலில் ”குருகூர்ச்சடகோபன்” என்று வருவதால், அவர் திருக்குருகூர் சென்று விசாரித்தால் அவற்றைப் பற்றி அறிய இயலும் என்று திருக்குருகூர் சென்றார்.

அங்கு எவரும் இதைப்பற்றி அறியவில்லை. இறுதியில், அவர் மதுரகவியாழ்வாரின் சீடனான பராங்குசதாசரை சந்தித்து அவரிடம் இதைப்பற்றி விசாரிக்கையில், அவர், ” திருவாய்மொழியும், பிரபந்த பாடல்களும் சில காலம் முன்னமேயே மறைந்துவிட்டன, தம் குருவான மதுரகவியாழ்வார் தமக்களித்த ”கண்ணிநுண்சிறுத்தாம்பு” என்னும் பிரபந்தம் மட்டும் தம்மிடம் இருப்பதாகவும் அந்த பாசுரங்களை திருப்புளியாழ்வார் முன் பக்தியுடன் அமர்ந்து பன்னீராயிரம் முறை (12,000 முறை) ஓதினால் நம்மாழ்வார் நம்முன் தோன்றி, வேண்டுவன அருளுவார்” என்று பதிலளித்தார்.

    அதைக்கேட்ட நாதமுனிகள், மிகுந்த உவகையுடன், பராங்குசதாசரிடம், கண்ணிநுண்சிறுத்தாம்பு பாடல்களை உபதேசமாகப் பெற்று, நேரே ஆழ்வாரின் திருப்புளியமரத்திற்குச் சென்று நம்மாழ்வாரின் திருவடி முன் அமர்ந்து தியானம் புரிந்தார்.பன்னீராயிரம் முறை கண்ணிநுண் சிறுத்தாம்பு பாடல்களை ஒருமுகமாய் ஓதினார்.

நம்மாழ்வார் தரிசனம் நாதமுனிகளுக்கு திவ்யப் பிரபந்தத்தை அளித்தல்

    இதனால் அகம் மகிழ்ந்த நம்மாழ்வார், அசரீரீயாய்த் தோன்றி நாதமுனிகளின் வேண்டுதலை வினவினார். நாதமுனிகளும், திருவாய்மொழியுடன் மற்ற பிரபந்த பாடல்களையும் அடியேனுக்கு அருளுமாறு வேண்டினார்.”

    நம்மாழ்வார், நாதமுனிகளின் முன் தோன்றி, பிரபந்தத்தின் பாடல்களுடன், அவற்றின் பொருளையும், அஷ்டாங்க யோக இரகசியங்களையும் அருளினார்.

 அவற்றைப் பெற்றபின்பும் நாதமுனிகள் யோகசமாதியிலேயே நிலைத்திருந்தார். மீண்டும் காட்டு மன்னனார் பெருமாள், அவரை திரும்ப வருமாறு அழைக்கவே மீண்டும் வீரநாராயணபுரம் புறப்பட்டார்.

 நாலாயிர_திவ்ய_பிரபந்தம்

    ஆயிரம் பாடல்களைத் தேடிவந்த இவருக்கு மற்ற ஆழ்வார்கள் ‌அனைவரும் பாடிய பாடல்களும் கிடைத்தது. இப்பாடல்களை திவ்யப் பிரபந்தமாக நாதமுனிகள் தொகுத்து முறைப்படுத்தி மேலையகத்தாழ்வார், கீழையகத்தாழ்வார் என்ற இரு அக்காள் மகன்களை (மருமக்களை) திருவாய்மொழி திவ்யப் பிரபந்தப் பிரச்சாரத்தில் நாதமுனிகள் ஈடுபடுத்தினார். இவர்களிருவரும் தேவகான இசைப்படி திவ்யப் பிரபந்தங்களை இறைவன் முன் பாடி அபிநயித்து மக்களிடம் அவற்றைப் பொருளுடன் பரப்பி வந்தனர்.

***திருக்குடந்தை ஆராவமுதன் (சாரங்கபாணி) திவ்ய தேசம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த திவ்ய தேசத்திலிருந்து நாலாயிர திவ்ய பிரபந்தம் உலகிற்கு கிடைக்கும் வழியை நாதமுனிகள் பெற்றார்.
 பின்னர் ,மணவாள மாமுனிகள், நாதமுனிகள் தொகுத்த ஆழ்வார்களின் திவ்யப் பிரபந்தத்தோடு, இராமானுச நூற்றந்தாதியும் சேர்த்து நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என அருளினார்.

நாலாயிர_திவ்யபிரபந்தம்:-

முதல்_ஆயிரம்-947

பெரியாழ்வார்: திருபல்லாண்டு -12
பெரியாழ்வார் : பெரியாழ்வார் திருமொழி -461
ஆண்டாள்: திருப்பவை -30 (வேதங்களுக்கு வித்து)
ஆண்டாள்: நாச்சியார் திருமொழி -143
குலசேகர ஆழ்வார்: பெருமாள் திருமொழி -105
திருமழிசை ஆழ்வார்: திருச்சந்த விருத்தம் -120
தொண்டரடிபொடி ஆழ்வார்: திருமாலை -45
தொண்டரடிபொடி ஆழ்வார்: திருப்பள்ளி எழுச்சி -10
திருபாணாழ்வார்: அமலனாதிபிரான் -10
மதுரகவி ஆழ்வார்: கண்ணிநுண் சிறுதாம்பு -11

இரண்டாம்_ஆயிரம்-1134

திருமங்கை ஆழ்வார்: பெரிய திருமொழி -1084
திருமங்கை ஆழ்வார்: திருக்குறுந்தாண்டகம் -20
திருமங்கை ஆழ்வார்: திருநெடுந்தாண்டகம் -30

மூன்றாம்_ஆயிரம்-709

பொய்கை ஆழ்வார்: முதல் திருவந்தாதி -100
பூதத் ஆழ்வார்: இரண்டாம் திருவந்தாதி -100
பேயாழ்வார்: மூன்றாம் திருவந்தாதி -100
திருமழிசை ஆழ்வார்: நான்முகன் திருவந்தாதி -96
நம்மாழ்வார்: திரு விருத்தம் (ரிக் வேதசாரம்)-100
நம்மாழ்வார்: திரு வாசிரியம் (யஜுர் வேதசாரம்)-7
நம்மாழ்வார்: பெரிய திருவந்தாதி (அதர்வண வேதசாரம்)-87
திருமங்கை ஆழ்வார்: திருவெழு கூற்றருக்கை -1
திருமங்கை ஆழ்வார்: சிறிய திருமடல் -40
திருமங்கை ஆழ்வார்: பெரிய திருமடல் -78

நான்காம்_ஆயிரம்-1210

நம்மாழ்வார்: திருவாய் மொழி (சாம வேதசாரம்)-1102
திருவரங்கத்தமுதனார்: ராமானுஜ நூற்றந்தாதி(பிரபந்த-காயத்ரி)-108

அரையர்கள்

    நாலாயிரம் பாசுரங்களை ராகத்துடனும் தாளத்துடனும் அபிநயத்துடனும் பாடிய இவர்களின் வழித்தோன்றல்களே “அரையர்கள்” என அழைக்கப்பட்டனர். “அரையர் ” என்ற சொல்லுக்கு “தலைவர்” என்று பொருள். அவர்கள் செய்யும் திவயப்பிரபந்த சேவையே “அரையர்சேவை” என்று அழைக்கப்படுகிறது.

ஸ்ரீமந் நாராயணனை திவ்யப்பிரபந்தப் பாசுரங்களைக் கொண்டு அபிநயத்துடன் பாடுவதில் தலைசிறந்தவர்கள் என்பதைக் குறிக்கும் பொருட்டு “தலைவர்கள்” என்ற பொருள்படும்படி “அரையர்க்ள்” எனபட்டனர். ”

நாலாயிரத்தை மீட்ட நாதமுனிகள் !

       3776 பாடல்களையும் ஆயிரம் ஆயிரமாய்ப் பிரித்த நாதமுனிகள் அவற்றுள் பண்ணுடன் பாடும்படி அமைந்த இசைப்பாக்களை 3 தொகுப்புகளாகவும், பண் அல்லாத இயற்பாக்களை தனித்தொகுப்பாகவும் பிரித்தார்.

பாடல்களைத் தொகுத்ததோடு மட்டுமின்றி இப்பாடல்கள் காலத்தால் அழியாது இருக்கும் பொருட்டு இப்பாடல்களை பண் மற்றும் தாளத்துடன் தனது மருமக்களுக்கு கற்பித்தார்.

      இவ்விருவரே மேலை அகத்து ஆழ்வான் என்றும் கீழைஅகத்து ஆழ்வான் என்னும் பெயர் பெற்றவர்கள். இவர்களின் வழி வந்தோரே இன்றைய அரையர்கள்.

நாதமுனிகள் அருளிச்செய்த பெரியாழ்வார் தனியன்

      நாதமுனிகள், திவ்ய பிரபந்த வரிசையில், முதல் பாசுரத்தை அருளிய பெரியாழ்வார், மற்றும் தனக்கு திவ்ய பிரபந்தத்தை அளித்த-திவ்ய பிரபந்தத்தை அருளிய மதுரகவியாழ்வார் ஆகியோர் பாடல்களுக்குத் தனியன்கள் பாடியுள்ளார்.

குருமுக மநதீத்ய ப்ராஹ வேதா நஸேஷான்
நரபதி – பரிக்லுப்தம் ஸுல்க மாதாதுகாம:
ஸ்வஸுர மமவரவந்த்யம் ரங்கநாதஸ்ய ஸாக்ஷாத்
த்விஜகுல திலகம் தம் விஷ்ணுசித்தம் நமாமி.

    குருவின் மூலம் கற்றுக் கொள்ளாமல் இருந்தாலும் அனைத்து வேதங்களையும் குறைவின்றி அறிந்து, மக்கள் தலைவனான பாண்டியன் கட்டிவைத்த பொற்கிழியை அடைந்த, தேவர்களால் வணங்கப்பெறும் திருவரங்கனுக்கு மாமனாரான, வேதியர் குலத் திலகமான, விஷ்ணுசித்தராம் பெரியாழ்வாரை போற்றுகிறேன்.     

நாதமுனிகளின்_சீடர்கள்

***உய்யக்கொண்டார் (திருவெள்ளறை புண்டரிகாட்சன்)
***குருகைக் காவலப்பன்
*கீழையகத்தாழவான்
*மேலையகத்தாழ்வான்
*திருகண்ணமங்கையாண்டான்
*பிள்ளை கருணாகரதாசர்
*நம்பி கருணாகரதாசர்
*ஏறுதிருவுடையார்
*வானமாமலை தெய்வநாயக ஆண்டான்
*உருப்பட்டூர் ஆச்சான் பிள்ளை
*சோகத்தூர் ஆழ்வான் .

    இவர்களில் இருவர் மிக முக்கியமானவர். 1) புண்டரீகாட்சர் என்ற உய்யக் கொண்டார் 2) குருகைக்காவலப்பர்.

    குருகைக்காவலர் எனக்கு யோகத்தையே உபதேசியும்” என்று வாங்கிக் கொண்டார். அவரிடம், “”என் பேரன் யமுனைத்துறைவன் (ஆளவந்தார்) வருவான். அவனுக்கு யோக வித்தையை நீ உபதேசிக்க வேண்டும்” என்று கூறியனுப்பினார் நாதமுனிகள்.

    புண்டரீகாட்சரை அழைத்து “யோகமா, வேதாந்தமா? எது உமக்கு வேண்டும்?” என்று நாதமுனிகள் கேட்டார். மக்களை அறியாமைப் படுகுழியிலிருந்து விடுவித்து இறைவன் திருவடியில் சேர்ப்பிக்கும் திருவாய்மொழி திவ்யப் பிரபந்த ஞானமே வேண்டும்” என்று கேட்டார்.

    ஆகா! மக்களை உய்விக்கவந்த “உய்யக் கொண்டாரே’ என்று நாதமுனிகள் அழைக்க, புண்டரீகாட்சர் ‘உய்யக் கொண்டார்‘ ஆனார், அவரிடம் “ரகசியம் வெளியிடாதீர்” என்று கூறி, என் அந்திம தசைக்குப் பிறகு, பிறக்கப் போகும் என் பேரன் யமுனைத்துறைவனிடம் வேதாந்த என்றதையும், பவிஷ்யதாசார்ய விக்ரஹத்தையும் ஒப்படைக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

    உய்யக்கொண்டாரும் (ஆளவந்தார் தக்க நேரத்தில் பிறக்காததால்) தனது சீடரான மணக்கால் நம்பியிடம் அப்பொறுப்பை ஒப்படைத்தார். மணக்கால் நம்பி ஆளவந்தாருக்கு உபதேசம் செய்து தன் பரமகுருவின் கட்டளையை நிறைவேற்றினார்

நாதமுனிகள் பக்திப் பிரேமை

    ஒரு சமயம் வீரநாராயணபுரம் அருகில் இருந்த காட்டில் வேட்டையாடி விட்டு அரசன், அரசி ,அமைச்சர் வேலையாட்களுடன் நாதமுனிகளைப் பார்க்க வந்தபோது நாதமுனிகள் சமாதியில் இருந்தார். அவர் பெண்ணிடம் தான் வந்ததாகச் சொல்லி விட்டு அரசன் சென்றான். யோகநிலை விட்டு ஸ்ரீமந்நாதமுனிகள் எழுந்ததும் அவர் பெண், அரசன் வந்ததை விவரித்தாள்.

 கையில் வில், அம்பு, தலையில் கொண்டையிட்டு இரு ஆடவர், ஓரிளம்பெண், கூட ஒரு குரங்கு என்று சொல்ல, ஸ்ரீராமனே தம்பி இலக்குவன், சீதாபிராட்டி , ஆஞ்சநேயருடன் வந்திருக்கிறார் என்று பக்திப் பிரேமையால் அவர்கள் போன திசையில் ஓடினார். குரங்குக் காலடித் தடம் கண்டாராம். அவ்விடம் “குரங்கடி’ எனப் பெயர் பெற்று இன்றும் இருக்கிறது.

    எங்கும் ஸ்ரீராமரைக் காணாமல் பல இடங்களிலும் அலைந்து பரமபதித்து விட்டார். “வைகுந்தம் சென்றேனும் அவர்களைக் கண்டு வருவேன்’ என்றே மூச்சை விட்டாராம்.அப்போது அவர் வயது 93, (917 ல், தாது ஆண்டு, மாசி மாதம், சுக்லபட்ச ஏகாதசி அன்று திருநாடு அலங்கரித்தார்). இவர் யோகசீடர் குருகைக்காவலப்பர் அந்த இடத்திலேயே தம் 70 ம் ஆண்டு கடைசி தினம் வரை யோகத்தில் இருந்தார்.

நாதமுனிகள் இயற்றிய நூல்கள்

    யோக மார்க்கத்தை பிரதானமாக ஸ்ரீமந் நாதமுனிகள் நியாயதத்வம், புருஷநிர்ணயம் மற்றும் யோகரஹஸ்யம் என்று மூன்று நூல்களை இயற்றினார்.

கம்ப இராமாயண அரங்கேற்றத்தில் நாதமுனிகள் தலைமை ஏற்றல் இசையில் சிறந்தும் சோழமன்னனின் அன்புக்கும் பாத்திரமானவரான ஸ்ரீமந் நாதமுனிகளின் தலைமையில் கம்பர் ஸ்ரீராமாயணத்தை ஸ்ரீரங்கத்தில் தாயார் சன்னதி எதிரிலுள்ள மணடபத்தில் அரங்கேற்றினார்.

ஆளவந்தார்_அவதாரம்

         நாதமுனிகள், தம் குமாரர் ஈச்வரமுனிகளிடம் “உனக்கு ஒரு மகன் பிறப்பான். என் பேரனான அவனுக்கு ‘யமுனைத் துறைவன்‘ எனப் பெயர் வை” என்றும் உணர்த்தி வைத்தார்.

ஆச்சாரிய பரம்பரையில் நாதமுனிகளுக்குப் பின்னர் பெரும் புகழ் பெற்றவர் அவருடைய பேரனான யமுனைத்துறைவர்(யாமுனமுனிகள் என்ற ஆளவந்தார்) . தனக்கு நம்மாழ்வார் மூலமாகக் கிடைத்த உபதேசங்களை எல்லாம் ஆளவந்தாருக்குத் தக்க காலம் வரும் போது உபதேசிக்கும் படி தன் சீடரான உய்யக்கொண்டாரிடம் சொல்லி வைத்தார் நாதமுனிகள்.

      உய்யக்கொண்டாரும் தனது சீடரான மணக்கால் நம்பியிடம் அப்பொறுப்பை ஒப்படைத்தார். மணக்கால் நம்பி ஆளவந்தாருக்கு உபதேசம் செய்து தன் பரமகுருவின் கட்டளையை நிறைவேற்றினார்.

       ***பெருமாள் கோவில்களில், பன்னிரு ஆழ்வார்களையும், ஆச்சாரியர்கள் வரிசையில் குறிப்பாக நாதமுனிகள், ஆளவந்தார், இராமாநுஜர், மணவாளமுனிகளையும் காணலாம்.

ஆனி அனுஷத்தில் வந்த திருவரங்கநாதா
நம்மாழ்வாரைக் கண்ட நாயகனே
ஆழ்வார்கள் அமுத மொழிகளை
வாங்கித் தந்த வள்ளலே போற்றி

குருவே வைணவ குலத் திலகமே
குருகூர் சடகோபன் அருள் பெற்றவரே
குவலயம் காக்க வந்த முதல்வனே
இருள் நீக்க ஒளி தந்த மாணிக்கமே

குணக் குன்றாய் விளங்கும் குருவருளே
குலத் தலைவர் உடையவரைக் காட்டிய
ஆதி ஆச்சாரியனே அருட்கடலே
குணவானே நாதமுனியே போற்றி போற்றி

  ஆளவந்தார் நாதமுனிகளின் பேரனும் பகவத் இராமாநுஜரின் குருவுமானவர் .

ஶ்ரீ நாதமுனிகள் திருவடிகளே சரணம்