திருமங்கையாழ்வார் - Thirumangai Alvar

  திருமங்கை ஆழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் இளையவர் மற்றும் இறுதியானவர். சோழ நாட்டில் உள்ள திருவாலிதிருநகரி என்னும் ஊருக்கு அருகில் உள்ள திருக்குரையலூரில், திருமாலின் சார்ங்கம்   என்ற வில்லின்  அம்சமாகக்  கார்த்திகை  நட்சத்திரத்தில் பிறந்தவர்   திருமங்கை ஆழ்வார்.  இவரது இயற்பெயர்  #நீலன்; 
 "கலியன்"  என்றும்  கூறுவர். 
            இவர்  பிறப்பால் பிராமணரும் அல்ல ;  பிறப்பால் வைணவரும் அல்ல .
சத்திரிய குலத்தில் பிறந்து, சோழ மன்னரின் சேனாதிபதியாக அமர்ந்து பல போர்களில் வெற்றி பெற்று பரகாலன் (எதிரிகளின் எமன்) என்ற பெயர் பெற்றவர். நால்வகைப் படைகளுக்கும்  தலைமையேற்று பகைவர்களை வென்று, 
சோழ மன்னருக்குபெரும் வெற்றிகளை தேடித்தந்தாரா.  
       சோழ மன்னரும்  அகமகிழ்ந்து தனது சேனாதிபதியான  நீலனை #திருவாலி நாட்டிற்க்கு மன்னனாக்கி #திருமங்கை என்னும் ஊரை தலைநகராக தந்தார்.  நீலன் என்ற இயற்பெயரைக் கொண்டவர், அதுமுதல் #திருமங்கை_மன்னன் என ஆனார்.  திருவெள்ளக்குளத்தில் ஒரு வைணவ வைத்தியனின் வளர்ப்பு மகளான  குமுதவல்லி என்ற  அந்தணக் குலப் பெண்ணை விரும்பினார்.
       தானொரு வைணவனுக்குத்தான் வாழ்க்கைப்படுவேன் என்ற  குமுதவல்லியின்  உறுதியை அறிந்து,  தானும்  வைணவரானார் திருமங்கை மன்னர்.  திருநறையூர் நம்பியிடம் சென்று என்னைப்  பரம
வைணவனாக்கிவிடுங்கள்! என்று வேண்டிக் கொள்ள, நம்பியிடமிருந்து வைணவர்கள் தீட்சையில் பெறும் பஞ்ச சம்ஸ்காரங்களான -
சங்கு சக்கர முத்திரை, தாச நாமம், திருமந்திரம், நெற்றிக்கு திருமண் ஸ்ரீசூர்ணம், திருவாராதனை நியமங்கள் போன்றவற்றைப் பெற்றார்  மன்னர்.
            திரு வெள்ளக் குளத்துக்கு வந்து இப்போது நான் பரம வைணவனாகிவிட்டேன்; 
என்னை மணம் செய்வாயா? எனக் குமுதவல்லியிடம் கேட்டார்.   இதுவரைப்  போரில் நீங்கள்  பலரைக் கொன்ற பாபம் தீர, ஒரு வருஷம் தினம்தோறும் ஆயிரம் பேருக்கு ஆன்னதானம் செய்யவேண்டும்!  அத்தோடு கோயில்  திருப்பணிகளும்  செய்ய வேண்டும் என்றாள்   குமுதவல்லி. விரும்பினதை அடைந்தே தீரும் இயல்புடைய நீலனும்   சம்மதம் தெரிவிக்க, அவர்களது  திருமணம் சோழ மன்னரின் முன்னிலையில்  நடைபெற்றது .

           தீவிர திருமால்  பக்தையான தன்  மனைவியின்  அறிவுரையின்  பேரில்   போர்க்களத்தில்  தான் கொன்ற உயிர்களுக்காக  மனம்  வருந்தி,  அதற்குப்  பரிகாரம்  செய்ய  ஆரம்பித்தார்!  நீலன். அவளின் விருப்பத்தின்படி திருமால் அடியார்களுக்கு தினமும் அன்னம் இடுவதையும், திருக்கோயில் கைங்கரியங்களில் ஈடுபடுவதையும் செய்துவரலானார். 

         ஶ்ரீரங்கம் கோயிலுக்குச்  சுற்றுச் சுவரைக்  கட்டி வைத்தவர்  திருமங்கை மன்னனே. இதனாலெல்லாம்  செலவு கட்டுக்கடங்காமல் போனது!  மன்னருக்கு. தன்னை முழுமையாகத்  திருமாலின் சேவையிலேயே ஈடுபடுத்திக் கொண்டு தன் செல்வங்களையும், அரசு செல்வங்களையும் முழுக்க இறைப்பணிக்கே செலவிட்டு வறியவரானார்  திருமங்கையாழ்வார்.    எனவே செல்வந்தர்களிடமிருந்து பணத்தைப் பறித்து ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய ஆரம்பித்தார்  நீலன்.
            
இந்த  முரட்டுப் பக்தனைத்  திருமால்  சந்திக்க  விரும்பி,  புதுமணத் தம்பதிகள் போல மகாலட்சுமியோடு  திருவாலிக்கு அருகே திருமணங் கொல்லை என்னும் இடமருகே வந்தார். திருமங்கை மன்னன்,   அத்தம்பதியை சூழ்ந்து  எல்லா நகைகளையும்  கழட்டுமாறு  மிரட்டினார்  நீலன்.  எல்லா நகைகளையும் கழற்றிக் கொடுத்தத்  திருமால், கால் விரலில் இருந்த   ஆபரணத்தை மட்டும் கொடுக்கவில்லை.  இதையும் விடமாட்டேன் என்ற சொல்லி குனிந்து வாயால் கடித்து  அந்த  கால் மெட்டியை எடுக்க முனைந்தார் திருமங்கை மன்னர். 

        ''சரியான கலியனப்பா நீ' என்று பகவான் அவரை அழைத்தார்.  (கலியன் =பலமுடையவன்).
பகவானின் நகைகளை மூட்டை கட்டி  அதை எடுத்துச் செல்ல  திருமங்கைமன்னர். முயன்றபோது  அவரால்  அதை அசைக்க இயலவில்லை. என்ன இது?  என நீலன் கோபிக்கத்  திருமால் தனது சுயவடிவைக் காட்டி,  இது உனது பாபமூட்டை என்று கூறிவிட்டு, அவரது காதில் அஷ்டாக்ஷரம் எட்டு எழுத்துக்கள் கொண்ட ஓம் நமோ நாராயணாய என்னும் மந்திரத்தை ஓதினார்  நாராயணர்.  திருமங்கை மன்னரின் அஞ்ஞான இருள் அகன்றது! அவர் அதுமுதல்  ஆழ்வாரானார்.

         வந்திருப்பது நாராயணன் என்பதை அறிந்த ஆழ்வார் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டார்.  அவர் இழந்தச்  செல்வங்களையும்,  நாட்டையும்  திருப்பிக்  கொடுத்தார் திருமால். திருமங்கை மன்னனும்   மகாவிஷ்ணுவிற்குச் சிறப்பாக  ஆலயம்  கட்டி முடித்தார்.
         பெருமாளின் 108 திருப்பதிகளில் இவர் தனியாக சென்று 46 கோயில்களையும், மற்ற ஆழ்வார்களுடன் சேர்ந்து 36 கோயில்களையும் என மொத்தம் 82 கோயில்களை மங்களாசாசனம் செய்துள்ளார். 

தன்னைத்  திருமால் ஆட்கொண்ட பொழுது   திருமங்கையாழ்வார் பாடிய பாசுரம் இது _

"வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால் 
பெருந்துயர் இடும்பையில் பிறந்து 
கூடினேன் கூடி இளையவர் தம்மோடு 
அவர்தரும் கலவியே கருதி 
ஓடினேன் ஓடி உய்வதோர் பொருளால் 
உணர்வெனும் பெரும்பதம் தெரிந்து 
நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன் 
நாராயணா என்னும் நாமமே".
        __திருமங்கை ஆழ்வார் பாசுரம்.

        __இது கிட்டடத்தட்ட 1200 ஆண்டுகளுக்குமுன்பு இம்மண்ணில் நிகழ்ந்த உண்மை வரலாறு.

திருமங்கையாழ்வாரின் இலக்கியப்
பணிகள்
         பன்னிரு  ஆழ்வார்களில்   திருமங்கையாழ்வார்  தான்  அதிக பெருமாள் திருத்தலங்களை மங்களாசாசனம் செய்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் அருளியவை

1.பெரிய திருமொழி (1084 பாசுரங்கள்)

2. திருக்குறுந்தாண்டகம் (20 பாசுரங்கள்)

3.திருநெடுந்தாண்டகம் (30 பாசுரங்கள்)

4. திரு எழு கூற்றிருக்கை ( 1 பாசுரம்)

5. சிறிய திருமடல் (40 பாசுரங்கள்)

6. பெரிய திருமடல் (78 பாசுரங்கள்)__ என   ஆறு திவ்வியப் பிரபந்தங்களில் 1253 பாசுரங்கள்  அருளியுள்ளார்!  திருமங்கை  ஆழ்வார்;  இவற்றுள் பல யாப்பு வடிவங்களயும்  பயன்படுத்திப்  பாடிள்ளார்.
         நம் பாரதத்தில் உள்ள வைணவத் தலங்களில்  86 வைணவத் தலங்களைத் தன் பாட்டில் பட்டியலிட்டவர்  திருமங்கையாழ்வார்.  அவர்  108 திவ்விய தேசங்களில் 86 திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்துள்ளார். அவை__

 1. திருவரங்கம் (ஶ்ரீரங்கம்)
 2. திருக்கோழி(உறையூர்)
 3. திருக்கரம்பனூர்
 4. திருவெள்ளறை
 5. திருஅன்பில்
 6. திருப்பேர் நகர்(கோவிலடி)
 7. திருக்கண்டியூர்
 8. திருக்கூடலூர்
 9. திருகவித்தலம்(கபிஸ்தலம்)
10.திருப்புள்ளம்பூதங்குடி
11.திருக்குடந்தை (கும்பகோணம்)
12.திரு ஆதனூர்
13.திரு விண்ணகர்
14.திருநறையூர்(நாச்சியார் கோயில்)
15.திருச்சேறை
16.திருக்கண்ணமங்கை
17.திருக்கண்ணபுரம்
18.திருக்கண்ணங்குடி
19.திருநாகை(நாகப்பட்டினம்)
20.திருத்தஞ்சை மாமணிக்கோயில்
21.திருநந்திபுர விண்ணகரம்(நாதன் கோயில்)
22.திருவெள்ளியங்குடி
23.திருவழுந்தூர்(தேரழுந்தூர்)
24.திருச்சிறுபுலியூர்
25.திருத்தலைச்சங்க நாண்மதியம்(தலைச்சங்காடு)
26.திருஇந்தளூர்
27.திருக்காவளம்பாடி(திருநாங்கூர்)
28.திருசீர்காழி
29.திருஅரிமேய விண்ணகரம்(திருநாங்கூர்)
30.திருவண்புருஷோத்தமம்(திருநாங்கூர்)
31.திருசெம்பொன்செய்கோயில்
(திருநாங்கூர்)
32. திருமணிமாடக்கோயில் (திருநாங்கூர்)
33.திருவைகுந்த விண்ணகரம் (திருநாங்கூர்)
34. திருவாலியும் திருநகரியும்
35. திருத்தேவனார் தொகை (கீழச்சாலை)
36. திருத்தெற்றியம்பலம் (திருநாங்கூர்)
37. திருமணிக்கூடம்(திருநாங்கூர்)
38. திருவெள்ளக்குளம்(அண்ணன் கோயில்)
39. திரு பார்த்தன்பள்ளி (திருநாங்கூர்)
40. திருசித்ரக்கூடம்(சிதம்பரம்)
41. திருவஹிந்த்ரபுரம்
42. திருக்கோவலூர்
43. திருக்கச்சி(காஞ்சிபுரம்)
44. அஷ்டபுஜம்
45. திருத்தண்கா(தூப்புல்)
46. திருவேளுக்கை(வேளிங்க பட்டரை)
47. திருநீரகம்
48. திருப்பாடகம்
49. திரு நிலாத்திங்கள் துண்டம் (ஏகாம்பரநாதர் திருக்கோயில்)
50. திருஊரகம்(உலகளந்த பெருமாள்)
51. திருவெஃகா
52. திருக்காரகம்
53. திருக்கார்வானம்
54. திருக்கள்வனூர்(காமாட்சி அம்மன் திருக்கோயில்)
55. திருப்பவளவண்ணம்
56. திருப்பரமேஸ்வர விண்ணகரம்(வைகுண்ட பெருமாள்)
57. திருப்புட்குழி
58. திருநின்றவூர்( திண்ணனூர்)
59. திருஎவ்வுள்(திருவள்ளூர்)
60. திருவல்லிக்கேணி
61. திருநீர்மலை
62. திரு இடவெந்தை(திருவடந்தை)
63. திருக்கடல்மல்லை
64. திருக்கடிகை(சோளிங்கர்)
65. திருவயோத்தி(அயோத்தி)
66. திருநைமிசாரண்யம்
67. திருப்பிருதி( ஜோஷிமட்)
68. திருவதரியாச்ரமம்(பத்ரிநாத்)
69. திருச்சாளக்ராமம்(ஸாளக்ராம்)
70. திருவடமதுரை(மதுராபுரி)
71. திருவாய்ப்பாடி(கோகுலம்)
72. திருத்வாரகை(த்வாரகா)
73. திருச்சிங்கவேள்குன்றம் (அஹோபிலம்)
74. திருவேங்கடம் (திருமலைதிருப்பதி)
75. திருநாவாய்
76. திருமூழிக்களம்
77. திருவல்லவாழ் (திருவல்லா)
78. திருப்புலியூர் (குட்டநாடு)
79. திருக்குறுங்குடி
80. திருத்தண்கால் (திருத்தண்காலூர்)
81. திருக்கூடல்(கூடலழகர்)
82. திருமாலிருஞ்சோலை (அழகர் கோயில்)
83. திருமோகூர்
84. திருக்கோட்டியூர் (கோஷ்டிபுரம்)
85. திருப்புல்லாணி
86. திருமெய்யம்

திருப்புல்லாணி பற்றிய திருமங்கையாழ்வார் பாசுரம்

" வேதமும் வேள்வியும் விண்ணும் இருசுடரும்
ஆதியும் ஆனான் அருள் தந்தவர் நமக்கு!
போதலரும் புன்னைசூழ்  புல்லாணி கைதொழுதேன்
ஓதமும் நானும் உறங்கா திருந்தேனே". 

__ வேதம்,  யாகம், வானம்,  சூரியன்,  சந்திரன் ஆகிய  அனைத்திற்கும்  ஆதியாகத் திகழ்பவன்  திருமால்.  மலர்கள் நிறைந்தப்  புன்னை மரங்களால் சூழப்பட்ட  திருப்புல்லாணியில்  அருளும்  பெருமானைக்  கைகுவித்து வணங்கினேன்!  ஆனாலும்  என்னையும்,  இந்தப்  பரந்தக் கடலையும்  கண்ணுறக்கம்  செய்து விட்டானே!  இவன் அருள் செய்த  தன்மையை  என்னவென்று  சொல்வது?
  __ எப்பொழுதும்  தன்நினைப்பாகவே இருக்கும்படி  திருமால்,  தன்னை  ஆக்கிவிட்டதாகத்  திருமங்கையாழ்வார்  திருபுல்லாணியில்  கோயில் கொண்ட  திருமாலை  நினைத்துப் பாடுகிறார்.
           ஶ்ரீராமர்  இலங்கைக்குப்  பாலம் கட்டும் முன்னர்,  இத்தலத்தில்  தர்ப்பைப் புற்களைப் பரப்பி, அதன்மீது படுத்திருந்து மூன்று நாட்கள் உணவு உண்ணாமலும், கண்ணுறங்காமலும், தம்பி இலட்சுமணன்,  தனக்குக்  காவலிருக்கக்,  கடலரசனை நோக்கித்  தவமிருந்தாராம். எனவே புல்லையே  தலைக்கு அணையாகக் கொண்டு  ஶ்ரீராமர் தவமிருந்த இடமாதலால்  இத்தலம் "திருப்புல்லணை" என ஆகி பின்னர்  திருப்புல்லாணி எனப் பெயர் பெற்றது.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!