ஸ்வாமி இராமாநுஜர் 10

ஸ்ரீபெரும்புதூர் சேர்ந்த  கேசவசோமாயாஜி என்பவருக்கும், பெரிய திருமலை நம்பியின் மூத்த சகோதரியுமான காந்திமதிக்கும் புத்திரனாக இராமானுஜர் (1017-1137), சித்திரை மாதம், திருவாதிரை நக்ஷத்திரத்திலே அவதரித்தார். இளம் வயதிலேயே குருவிடம், குரு உபதேஸங்களையும், வேத சாஸ்திரங்களையும் ஐயம் திரிபுற கற்று, எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தினார். அவரின் 16 வது வயதிலே தஞ்சமாம்பாள் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இராமானுசர்  இந்து தத்துவப் பிரிவுகளில் ஒன்றான வேதாந்தத்தின் விளக்கங்களில் ஒன்றான விசிஷ்டாத்துவைதத்தின் முன்னோடியாக விளங்கியவர். அண்மைக் காலத்தில் அறிஞர்கள், இவரது பிறப்பு இன்னும் 20 - 60 ஆண்டுகள் வரை பிந்தியதாக இருக்கும் எனக் கருதுகிறார்கள். இவரது இறப்பும் 20 ஆண்டுகள் வரை பிந்தியே நிகழ்ந்திருக்க வேண்டுமென்பதும் சிலரது கருத்து. இவர் விசிட்டாத்துவைத தத்துவ இயலை நாடளாவிய முறையில் பரப்பிய மெய்யியலாளர். 
பிரம்ம சூத்திரத்திற்கு ஸ்ரீபாஷ்யம் என்ற ஓர் உயர்தர உரையை இயற்றி, ஆதி சங்கரரின் அத்வைதத் தத்துவத்திற்கு மாற்று சொன்ன ஆன்மீகவாதி. பாரததேசத்தின், சரித்திரப் பிரசித்தி பெற்று உலகளவில் புகழடைந்த, மூன்று முக்கிய குருமார்களில் ஒருவர். மற்ற இருவரில் ஒருவர் ஆதி சங்கரர். மற்றவர் துவைத சமயப்பிரிவை நிலைநாட்டிய மத்வர். இராமானுசரைப் பின்பற்றியவர்கள் வைஷ்ணவர் அல்லது வைணவர் எனப்படுவர்.
இராமானுசர் திருவாய்மொழியின் செவிலித்தாய் எனப் போற்றப்படுபவர். தமிழ்நெறி போற்றும் வைணவர்.
இவ்வுலகில் மனிதனாக பிறந்த ஒவ்வொருவர்குள்ளும் இறைசக்தி உள்ளது. அது எல்லோருக்கும் வெளிப்படுவது இல்லை என்றாலும் ஒரு சிலருக்கு அவ்வப்போது இந்த பூமியில் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றது என்பதையும் மறுக்க முடியாது. அந்த வகையில் ஸ்ரீராமானுஜர் இவ்வுலகில் செய்த மிகப் பெரும் தியாகம் என்ன தெரியுமா? அவரைப் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இப்பதிவை தொடர்ந்து படியுங்கள்.

காஞ்சி ஸ்ரீ.தேவராஜ ஸ்வாமிக்கு நித்ய ஆலவட்ட கைங்கர்யம் பண்ணிக்கொண்டிருந்த திருக்கச்சி நம்பிகள், தினமும் பூவிருந்தவல்லியிலிருந்து, காஞ்சிபுரத்திற்கு, ஸ்ரீபெரும்பூதூர் வழியாகச் சென்று வந்து கொண்டிருந்தார். இதனை க் கண்ட இராமாநுஜருக்கு, திருக்கச்சிநம்பிகள் மீது மிகுந்த பற்றும்,பக்தியும் ஏற்பட்டது.
 ஒரு நாள் திருக்கச்சி நம்பிகளை அடி பணிந்து, தம் இல்லத்திற்கு அழைத்துச் சென்று, அவரை நன்கு உபசரித்து அனுப்பினார். இவ்வாறாக தினமும் அவர்கள் நட்பு வளர்ந்து கொண்டு வந்தது. இராமாநுஜரின் முகப் பொலிவு, அறிவு, ஆழ்ந்த ஞானம், அதீத பண்பு முதலியன திருக்கச்சி நம்பிகளை மிகவும் கவர்ந்து, அவரிடம் இவருக்கு ஒரு தெய்வீகப் பற்று ஏற்பட்டது. மிகப் பல ஆன்மீக விஷயங்களை இருவரும் அளவளாவி வந்தனர்.
யாதவப் பிரகாசர் என்னும் வித்வானிடம், இராமாநுஜரும், அவர் சிற்றன்னையின் மகனுமான கோவிந்தனும் அத்வைத வேதாந்த பாடங்களை கற்று வந்தனர். மிகவும் சிரத்தையுடன் பாடங்களைக் கற்று வந்த இராமாநுஜர் , தனக்குத் தோன்றும் பல விஷயங்கள் பற்றி யாதவப் பிரகாசரிடம் எதிர் கேள்விகள் கேட்க, இதனைக் கண்டு மகிழ்ச்சியடைய வேண்டிய யாதவப் பிரகாசர், அதற்குப் பதிலாக அவரிடம் பகைமை எண்ணம் கொள்ளலானார். 
அதன் காரணமாக இராமாநுஜரை வஞ்சனையால் மாய்த்துவிட முடிவு செய்தார். இதனை முன்னிட்டு தன்னுடைய சீடர்கள் பலருடன் இராமாநுஜரையும் அழைத்துக் கொண்டு, காசி யாத்திரை புறப்பட்டார். அங்கு இராமாநுஜர் தனிமையில் இருக்கும் பொழுது அவரைக் கொல்ல சதி செய்தார். 
இதனை அறிந்து கொண்ட கோவிந்தர், இராமாநுஜரிடம் விவரமாக எடுத்துக் கூறி, அங்கிருந்து அவரைத் தப்பி ஓடும்படி வேண்டிக்  கொண்டார். அங்கிருந்து தப்பி வெளியேறிய இராமாநுஜர், காஞ்சி பேரருளாளன் க்ருபையால், வழி காட்டப்பட்டு காஞ்சி நகரை வந்தடைந்தார். காஞ்சிபுரத்திலே இருந்து கொண்டு, அங்குள்ள சாலைக் கிணற்றில் தீர்த்தம் எடுத்து, தேவப் பெருமாளுக்கு தீர்த்த கைங்கர்யம் செய்து கொண்டு வந்தார்.
பின் இவரை ஸ்ரீரங்கத்தில் இருக்கும் ஆளவந்தாரிடம் அழைத்துச்  செல்வதற்காக காஞ்சி வந்திருந்த பெரிய நம்பியுடன், இவரும் ஸ்ரீரங்கம் நோக்கிப் புறப்பட்டார். ஸ்ரீரங்கத்தை நெருங்கும் தருவாயில், ஆளவந்தார் பரமபதித்து விட்ட செய்தியினைக் கேள்விப் பட்டு, ஆளவந்தாருடன் தனக்கு அளவளாவ கொடுத்து வைக்கவில்லையே என்று மிக்க துயரமுற்று கதறினார். ஓரளவிற்கு மனதை தேற்றிக் கொண்டு, அவரின் திருமேனியையாவது தரிசிக்கலாம் என்ற எண்ணத்துடன் அவரின் பூத உடல் இருந்த இடம் வந்தடைந்தார். 
ஆளவந்தாரின் திருமேனியை காணும் போது, அவரின் ஒரு கையில் மூன்று விரல்கள் மடக்கப்பட்டு இருந்த நிலையைக் கண்டு, அவரின் திருவுள்ளப் படி நிறைவேறாத அவர் தம் மூன்று விருப்பங்களினால் தான் அவரின் மூன்று விரல்களும் மடங்கிய நிலையில் இருப்பதை உணர்ந்து கொண்டு, அதனைப் பற்றி அங்கிருந்தவர்களிடம் வினவ அவர்களும் ஆளவந்தாரின்
மூன்று விருப்பங்களையும் கூறினர். 
அவை :-
ஸம்பிரதாயத்திற்கு, வியாஸரும் , பராசர பட்டரும் ஆற்றியுள்ள கைங்கர்யத்திற்கு, உபகாரமாக அவர்களின் பெயர்களை
வருங்காலத்தில் பிறக்கப் போகும் பிள்ளைகளுக்கு சூட்ட வேண்டும்.
1.ஸ்வாமி நம்மாழ்வார் அருளிச்செயலான திருவாய் மொழிக்கு நல்ல உரை எழுதப்பட வேண்டும்.
2.வியாசரின் ப்ரம்மஸூத்ரத்திற்கு ஒரு பாஷ்யம் இயற்றப்பட வேண்டும்.
3.ஆளவந்தாரின் மேற்படியான விருப்பங்களை தான் நிறைவேற்றி  வைப்பதாக இராமாநுஜர் சபதமெடுக்க, உடனேயே ஆளவந்தாரின் மடங்கிய மூன்று விரல்களும் விரிந்தன.

இராமாநுஜருக்கு ஆறு ஆச்சாரியர்கள். அவர்களில் பெரிய நம்பிகளிடம் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து கொண்டார். பெரிய திருமலை நம்பியிடம் ( அவரின் மாமாவும் ஆவார் ) இராமாயணம், திருக்கோஷ்டியுர் நம்பியிடம் திருமந்த்ரார்த்தம்,
திருமாலையாண்டானிடம் திருவாய் மொழி, திருவரங்கப் பெருமாள் அரையரிடம் ( இவர் ஆளவந்தாரின் பேரன் ) அருளிச் செயலின் மற்ற மூன்று ஆயிரங்கள், இயல், கலை, திருக்கச்சி நம்பிகளிடம் தேவப் பெருமாளின் ஆறு வார்த்தை அர்த்தம் ஆகியவைகளை கற்றுக் கொண்டார்.
திருக்கச்சி நம்பிகளிடம் மிகுந்த ஈடுபாடும் அன்பும் கொண்ட இராமாநுஜர் ஒரு நாள், அவரை தன் அகத்திற்கு விருந்துண்ண அழைத்திருந்தார். அவர் புசித்த பின் பாகவத சேஷம் உண்ண வேண்டும் என்பது இவர் விருப்பம். திருக்கச்சி நம்பிகள் இல்லத்திற்கு வந்த சமயம் , இராமாநுஜர் வெளியில் சென்று இருந்தார். 
ஆனால் வேறு பகவத் விஷயம் காரணமாக, அவசரமாக செல்ல வேண்டியிருந்ததால், இராமநுஜர் வரும் வரை காத்திருக்காமல் தனக்கு, அமுது சாதிக்க தஞ்சமாம்பாளை வேண்ட, அவரும், நம்பியை அமரச் செய்து அங்கு அவருக்கு உணவிட்டு, அவர் சென்ற பின் , மீதமிருந்த அன்னங்களை வெளியில் எறிந்துவிட்டு, இல்லம் முழுவதும் சுத்தி செய்து, கழுவி, இராமாநுஜருக்காக மீண்டும் சமைத்துக் கொண்டிருந்தார்.
இல்லம் திரும்பிய இராமாநுஜர் நடந்தவைகளை கேள்விப்பட்டு, தம் மனையாள் நடந்து கொண்ட விதம் பற்றியும், தமக்கு பாகவத சேஷம் கிடைக்கவில்லையே என்றும் மிகுந்த வருத்தமுற்றார். பின் திருக்கச்சி நம்பிகளை சந்தித்து அவர் பாதம் பணிந்து மன்னிக்க வேண்டினார்.
 இது போலவே பிறிதொரு சமயம், பெரிய நம்பிகளின் மனிவியுடன் கிணற்றில் நீர் எடுக்கும் போது வாக்குவாதம் ஏற்பட்டு, தம் குலத்தை விட பெரிய நம்பியின் மனைவியின் குலம் தாழ்ந்தது என்று தஞ்சமாம்பாள் கூறினார். 
இதனால் மன உளைச்சலடைந்த பெரிய நம்பியின் மனைவி நடந்த சம்பவங்களை அவரிடம் தனிமையில் கூற, பெரிய நம்பியும் இதனைக் கேள்விப்பட்டால் இராமாநுஜரின் மனம் மிகுந்த வருத்தமடையும் என்று எண்ணி அவரிடம் சொல்லிக் கொள்ளாமல், மனைவியுடன் ஸ்ரீரங்கம் திரும்பி விட்டார்.

இவர்களை காணாது தவித்த இராமநுஜர் பின் தம் மனைவியின் மூலம் நடந்தவைகளைக் கேள்வியுற்று, ஆச்சார்யருக்கு நேர்ந்த அபசாரத்தினால் மிகுந்த மன வேதனை அடைந்து இல்லறத்தைத் துறந்து துறவறம் மேற்கொள்ள முடிவெடுத்தார்.
தாம் துறவறம் மேற்கொள்ளப் போவதை திருக்கச்சி நம்பிகளிடம் சொல்லி, காஞ்சி தேவப் பெருமாள் கோயில் திருக்குளத்திலே தீர்த்தமாடி, தேவப் பெருமாள் துணையுடன், ஆளவந்தாரை ஆச்சார்யராக மனதில் நினைத்துக் கொண்டு, காஷாயம் தரித்தும், திரிதண்டத்தை கையில் பிடித்துக் கொண்டும் ஸன்யாஸத்தை ஏற்றுக் கொண்டார். 
அவருடன் எப்பொழுதும் அவரது சீடர்களாக அவரின் சகோதரி கமலாம்பாளின் புதல்வரான முதலியாண்டானும், கூரத்தாழ்வானும் இருந்தனர். இராமாநுஜரின் திரிதண்டமாக முதலியாண்டானையும், பவித்திரமாக கூரத்தாழ்வனையும் முன்னோர்கள் கூறுவர்.
ஆளவந்தாரின் மறைவிற்குப் பிறகு ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தின் மூலத் தூணாகிய திருவரங்கத்தில் , சம்பிரதாயத்தை நிர்வகிக்கக் கூடியவர் இல்லாத காரணத்தினால், பெரிய நம்பிகளும், திருவரங்கப் பெருமாள் அரையர் முதலானோர் இராமாநுஜரை திருவரங்கம் அழைத்து வர பெரு முயற்சிசெய்தனர். பெரிய நம்பிகள்,  பண் இசையில் திவ்யப் பிரபந்தத்தை இசைக்க வல்ல திருவரங்கப் பெருமாள் அரையரை காஞ்சிக்கு அனுப்பி எப்பாடு பட்டாகிலும் இராமாநுஜரை திருவரங்கம் அழைத்துவர வேண்டினார்.
 அரையரும் காஞ்சி தேவப் பெருமாள் ஸன்னதியில் பன்னுடன் திவ்யப் ப்ரபந்தத்தை இசைக்க , உள்ளம் மகிழ்வுற்ற காஞ்சி எம்பெருமான் அவருக்கு வரமளிக்க, அவ் வரத்தின் மூலம் பேரருளாளனின் ஒப்புதலுடன் இராமாநுஜரை திருவரங்கத்திற்கு அழைத்து வந்தார். அவருடன் அவர் சீடர்களான முதலியாண்டான் மற்றும் கூரத்தாழ்வானும் திருவரங்கம் வந்தனர்.
திருவரங்கம் வந்து சேர்ந்த இராமாநுஜர் பெரிய பெருமாள் கோயில் கைங்கர்யத்தை ஏற்றுக் கொண்டு, பல நிர்வாக சீர்திருத்தங்களை நடைமுறை படுத்தினார். இன் நடைமுறைகளே ஸ்ரீரங்கம் திருக் கோயிலில் இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அதீத சக்தி வாய்ந்த இந்த 8 எழுத்து மந்திரத்தை இவ்வுலகிற்கு கூறியவர் ஸ்ரீ ராமானுஜர்.என்ன மந்திரம் அது நீங்களும் கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!
திருக்கோஷ்டியூர் நம்பிகளிடத்திலே திருமந்திரத்தையும் அதன் விசேஷார்த்தங்களையும் அறிந்து வர  வேண்டி, இராமாநுஜர் பதினெட்டு தடவைகள் திருவரங்கத்திலே இருந்து திருக்கோஷ்டியூர் சென்று வந்தார். ஒவ்வொரு முறையும் மனம் தளராமல் சென்று, பதினெட்டாவது முறை சென்ற போது முற்றாக மந்த்ரார்த்தங்களை கற்றுக் கொண்டார் –  இவற்றை முதலியாண்டான், கூரத்தாழ்வான் தவிர வேறு எவரிடமும் தெரிவிக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன்.
இவர் இவ்வளவு சிறப்புகள் பெற என்ன காரணம் தெரியுமா? பல அலைச்சல்களுக்கு பிறகு, பல அவமானங்களுக்கு பிறகு திருகோஷ்டியூர் நம்பி என்கிற குருவால் உபதேசம் பெற்றவர் ஸ்ரீ ராமானுஜர். அவருடைய குருவானவர் இந்த மந்திர உபதேசத்தை வேறு யாரிடமும் கூறக்கூடாது என்று கூறியுள்ளார்.
 ஆனால் இவ்வுலகம் பயனடைய வேண்டி தான் தன்னால் கருதாது தான் நரகம் சென்றாலும் பரவாயில்லை என்று அந்த மந்திரத்தை பக்தர்கள் அனைவருக்கும் தன்னுடைய உரத்த குரலில் பகிரங்கப்படுத்தினார். அது என்ன மந்திரம் தெரியுமா?

மந்த்ரார்த்த உபதேஸங்களை கற்றுக் கொண்டு திரும்பிய இராமாநுஜரின் மனம் வேறு விதமாக சிந்தித்தது. தாம் பட்ட கஷ்டம் இனி யாருக்குமே வேண்டாம் என்றும்,  மறுபிறவி வேண்டாமென்று ஆச்சாரியனை அனுகும் மக்களுக்கும், தாம் கற்றுக் கொண்ட திருமந்திரத்தை மற்ற எளியவர்களுக்கும் கூறினால் அதன் பயனாக எல்லா மக்களுக்கும் நல்வழி அருள் கிடைக்குமே என்று சிந்தித்தார்.
திருக்கோஷ்டியூர் மக்களுக்கெல்லாம் தம் எண்ணத்தை கூறி, ஆன்ம நலம் வேண்டுபவர் எல்லோரையும் திருக்கோயிலுக்கு திரண்டு வரச்  சொன்னார். அவர்களிடத்திலே திருமந்திரத்தையும், மந்த்ரார்த்தங்களையும் உபதேசித்தார்.
இவ்வுலகில் சக்தி வாய்ந்த மந்திரங்களில் ஒன்றான எட்டெழுத்து மந்திரம் ஆக இருக்கும், ‘ஓம் நமோ நாராயணாய’ என்னும் திருமாலின் ஷக்தி மந்திரம் ஆகும். ‘ஓம் நமோ நாராயணாய’ என்று எவர் ஒருவர் உச்சரித்தாலும் அவருக்கு வரும் இன்னல்கள் யாவும் மலை போல் வந்தாலும் பனி போல் விலகும் என்பது நம்பிக்கை. இம்மந்திரத்தை பக்தர்களுக்கு தன் குருவையும் மீறி வெளி உலகிற்கு கூறியதால் அவர் நரகம் செல்வார் என்று சாபங்கள் உண்டானது. 
இந் நிகழ்வினைக் கேள்விப்பட்ட திருக்கோஷ்டியூர் நம்பி, மிகுந்த கோபமுற்று, ஆச்சாரிய நிபந்தனையை மீறியவனுக்கு நரகம் தான் கிடைக்குமென்று இராமாநுஜரிடம் கூற, அவரும் ஆச்சாரிய நிபந்தனைகளை மீறி எளிய மக்களுக்கு உபதேசித்ததின் மூலம் அவர்களின் ஆன்மாக்கள் நலம் உய்ந்து, மிக்க பயனடைவார்கள்.
என்றும், இதன் காரணமாகவே, தான் அவர்களுக்கு உபதேஸம் அருளியதாகவும், இதனால் தான் நரகம் போக நேரிட்டாலும் தனக்கு மகிழ்ச்சியே என்றும் பதிலுரைத்தார். இராமாநுஜரின் இந்த பதிலால் தனக்கு இப்படி ஒரு கருணை உள்ளம் உள்ள ஒருவர் சீடனாக அமைந்தது கண்டு  மகிழ்வுற்று, அவரை வாரி அனைத்து ஆசிர்வதித்தார்.
ஆளவந்தாருக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டி, கூரத்தாழ்வான் உதவியுடன் ஸ்ரீ பாஷ்யத்தை பட்டோலைப் படுத்தினார். நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கு உரை எழுத திருக்குருகைப்பிரான் பிள்ளையைப் பணித்தார்.
 ஸ்ரீரங்கனாதனின் அருளால் கூரத்தாழ்வானுக்குப் பிறந்த இரண்டு குழந்தைகளில் ஒருத்தருக்கு பராசர பட்டர் என்றும், மற்றொருவருக்கு வேத வியாஸ பட்டர் என்றும் திருநாமமிட்டு மூன்றுவாக்குறுதிகளையும்
நிறைவேற்றினார்.
இச்சமயத்திலே சோழ மன்னனான கிருமி கண்ட சோழன், சிவனுக்கு மேல் தெய்வமில்லை என்று இராமாநுஜரிடம் கையொப்பம் பெற அவரை அரசபைக்கு அழைத்து வர ஆள் அனுப்பினார். ஆனால் கூரத்தாழ்வான், இராமாநுஜரைப் போல் காவி வஸ்திரம் தரித்துக் கொண்டு அரசவை செல்ல, இராமாநுஜரோ , கூரத்தாழ்வானின் வெள்ளையுடையுடன் அங்கிருந்து தப்பி, மைசூர் சென்றடந்தார். 
அந்நாட்டை ஆண்டு கொண்டிருந்த பிட்டி தேவன் என்பவனின் மகளின் தீராத நோயைக் குணப்படுத்தி அவனை ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தை தொடர வைத்தார். 
பின்னர் தில்லி சுல்தானின்
மகளிடம் இருந்த திருநாராயணபுரத்து இராமப் பிரியனின் விக்ரஹத்தைப் பெற வேண்டி தில்லி சென்றார். சுல்தானால் களவாடப்பட்ட ,பல விக்கிரஹங்களில் ஒன்றாக அங்கிருந்த
திருநாராயணபுரத்து இராமப் பிரயனும் அங்கிருந்தார். 
சுல்தானும் எந்த விரஹம் இராமப் பிரியன் என்று தெரியாது என்று கூறி, உம்மால் முடிந்தால் அவ் விக்ரஹத்தை கண்டுபிடித்து எடுத்துச் செல்லலாம் என்றான். 
உடனே இராமாநுஜரும் அங்கிருந்தபடியே  ” வாரும் செல்வப் பிள்ளாய் ”  என்று அழைக்க, இராமப் பிரியனின் திரு விக்ரஹம் தானே நேராக இராமாநுஜரிடம் நகர்ந்து வர, அவரையும் பெற்றுக் கொண்டு திருநாராயணபுரம் வந்தார். 

அன்று முதல் இராமப் பிரியன் ” செல்வப் பிள்ளை ” என்றே அழைக்கப்படலானார். மைசூர் ராஜ்ஜியத்திலே தங்கியிருந்த பொழுது, தொண்டனூர் ஏரியைக் கட்டி நிர்மாணித்தார்.
இராமாநுஜருக்கு ஆயிரக் கணக்கில் சிஸ்யர்கள் குவிந்தனர். ஆங்காங்கேயுள்ள திவ்ய தேஸங்களின் நிர்வாகப் பொருப்பை அங்குள்ள தம் சிஸ்யர்களிடம் அளித்து ஸ்ரீ வைஷ்ணவ ஸம்பிரயதாயம் தழைதோங்கச் செய்ய 74 ஸிம்மாசனாதியதிகளை நியமித்தார். இன்று நம் ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரயதாயம் இவ்வளவு எழுச்சியுடன் இருப்பதற்கு ஸ்வாமி இராமாநுஜரே காரணமாவார்.
ஸ்ரீ ராமானுஜருக்கு பெருமாளே சீடனாக பணிபுரிந்த காலங்களும் உண்டு. இதனை மெய்ப்பிக்கும் வண்ணம் திருக்குருங்குடி அழகிய நம்பி பெருமாள் கோவிலில் காதுகளில் பூவும், நெற்றியில் திருநாமம் அணிந்து பக்தர்களுக்கு இன்றும் அருள் பாலிக்கின்றார்.
 இக்கோவிலில் இருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் திருப்பரிவட்டப்பாறை அமைந்து இருக்கும். திருவனந்தபுரம் கோவிலிலிருந்து கருடன் இப்பாறையில் ராமானுஜரை கொண்டு வந்து கிடத்தியதாக புராணங்கள் கூறுகிறது.
திருவனந்தபுரத்தில் பூஜை முறைகளை சீர்திருத்த நினைத்த ஸ்ரீ ராமானுஜரை பெருமாள் கருடனை அனுப்பி இவ்வாறு செய்ததாகக் குறிப்பிடப்படுகிறது. ரங்கநாதர் கோவில் பூஜை முறைகள் இன்றும் அவருடைய அம்சம் நிறைந்து இருக்கும். உங்களுக்கு உண்மையான குரு கிடைக்க இங்கு வந்து வழிபட்டு செல்லலாம். 
குரு சிஷ்யனுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தி அன்று அவரை வழிபடுபவர்களுக்கு சிறந்த குருமார்களை அமைவார்கள். வாழ்க்கையில் சிறந்த கல்வி பெற்று அறிவாற்றலுடன் திகழ நாளை ஸ்ரீ ராமானுஜரையும், ரங்கநாதப் பெருமாளையும் தவறாமல் வழிபடுங்கள்.
ஜாதி, மத ஏற்றத்தாழ்வுகளை கலைய மேலக்கோட்டை திருநாராயணபுரத்தில் ஒதுக்கப்பட்ட மக்களை கோவிலுக்குள் நுழைய புரட்சி செய்தார். ஹரியும், சிவனும் ஒன்று என்பதை இவ்வுலகிற்கு அறிவுறுத்தினார். இவரின் பெருமைகளை சொல்லும் பொழுதே நமக்கு மெய் சிலிர்க்கும்.
இவ்வாறாக எல்லா ஏற்பாடுகளையும் செய்து வைத்துவிட்டு, தம்முடைய  கடைசி காலம் வரை வைணவ குலத்திற்கு தொண்டுகள் செய்தே மோட்சம் பெற்றார். 120 வயதில் வைகுந்த பதவியை அடைந்தார்.
ஸ்வாமி எம்பெருமானாரைப் பற்றி குறிப்பிடும்போது இங்கு
முதலியாண்டானையும், கூரத்தாழ்வானையும் பற்றி குறிப்பிடாமல் இருக்க முடியாது. 
ஸ்வாமி எம்பெருமானார் ஸன்யாஸ்ரமத்தை ஏற்றுக் கொள்ளும் பொழுது அவர், முதலியாண்டானையும், கூரத்தாழ்வானையும் மட்டும் துறக்கவில்லை என்று கூறி ஸன்யாசத்தை ஏற்றுக் கொண்டார். 
குருபரம்பரை ப்ரபாவம் கூறுவதாவது-  ஸ்வாமி எம்பெருமானார் முதலியாண்டானை த்ரிதண்டமாகவும், கூரத்தாழ்வானை பவித்திரமாகவும் கருதினார் என்பதாகும். அந்தளவிற்கு யதிராஜருடன் ஐக்கியமானவர்கள் இவ்விருவரும். 
கோடிக்கணக்கான மனிதர்களில் ஒரு சிலர் மட்டுமே தெய்வமாகவே போற்றப்படுகிறார்கள். அந்த வரிசையில் ஸ்ரீராமானுஜர் 1017ஆம் ஆண்டு சென்னை ஸ்ரீபெரும்புதூரில் பிறந்தவராவார். வளர்பிறை பஞ்சமி திதி, திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த இவர் தனது 120 ஆவது வயதில் உயிர் நீத்தார். எனினும் மறுநாளே அவ்வுடல் மேலெழுந்து வந்தது அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது.
 தியானத்தில் அமர்ந்த அவருடைய திருமேனிக்கு சித்திரை மற்றும் ஐப்பசி மாதங்களில் குங்குமப்பூ, பச்சை கற்பூரம் கொண்டு செய்யப்பட்ட தைலம் பூசப்படுகிறது. ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதர் கோவிலில் இவருக்கு முதல் வழிபாடு நடந்த பிறகே ரங்கநாதருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அத்தகைய சிறப்புகள் வாய்ந்த ஸ்ரீ ராமானுஜர் பக்தர்கள் வேண்டிய வரங்களை வாரி
வழங்க கூடியவராக இருக்கிறார்.
*#எம்பெருமானார்_வாழி_திருநாமம்* (சித்திரை – திருவாதிரை)
அத்திகிரி அருளாளர் அடிபணிந்தோன் வாழியே
அருட்கச்சி நம்பியுரை ஆறுபெற்றோன் வாழியே
பத்தியுடன் பாடியத்தைப் பகர்ந்திட்டான் வாழியே
பதின்மர்கலை உட்பொருளைப் பரிந்துகற்றான் வாழியே
சுத்தமகிழ் மாறனடி தொழுதுய்ந்தோன் வாழியே
தொல் பெரிய நம்பி சரண் தோன்றினான் வாழியே
சித்திரையில் ஆதிரை நாள் சிறக்க வந்தோன் வாழியே
சீர் பெரும்பூதூர் முனிவன் திருவடிகள் வாழியே
எண்டிசையெண் இளையாழ்வார் எதிராசன் வாழியே
எழுபத்து நால்வருக்கும் எண்ணான்குரைத்தான் வாழியே
பண்டை மறையைத் தெரிந்த பாடியத்தோன் வாழியே
பரகாலன் அடியிணையைப் பரவுமவன் வாழியே
தண்டமிழ் நூல் நம்மாழ்வார் சரணானான் வாழியே
தாரணியும் விண்ணுலகும் தானுடையோன் வாழியே
தெண்டிரை சூழ்பூதூர் எம்பெருமானார் வாழியே
சித்திரையில் செய்யதிருவாதிரையோன் வாழியே
*#மாமுனிகள்_ஆர்த்தி_ப்ரபந்தத்தில்_அருளியன*:
சீராருமெதிராசர் திருவடிகள் வாழி
திருவரையிற்சாத்திய செந்துவராடை வாழி
ஏராரும் செய்யவடிவெப்பொழுதும் வாழி
இலங்கிய முன்னூல்வாழி இணைத் தோள்கள் வாழி
சோராத துய்யசெய்ய முகச்சோதி வாழி
தூமுறுவல் வாழி துணை மலர்க் கண்கள் வாழி
ஈராறு திருநாமம் அணிந்த எழில் வாழி
இனிதிருப்போடு எழில் ஞானமுத்திரை வாழியே
அறுசமயச் செடியதனை அடியறுத்தான் வாழியே
அடர்ந்து வரும் குதிருட்டிகளை அறத்துறந்தான் வாழியே
செறுகலியைச் சிறிதுமறத் தீர்த்துவிட்டான் வாழியே
தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்திவைத்தான் வாழியே
மறை அதனில் பொருளனைத்தும் வாய் மொழிந்தோன் வாழியே
மாறனுரைசெய்த தமிழ்மறை வளர்த்தோன் வாழியே
அறமிகு நற்பெரும்பூதூர் அவதரித்தான் வாழியே
அழகாருமெதிராசர் அடியிணைகள் வாழியே
*#திருநாள்பாட்டு_திருநக்ஷத்ர_தினங்களில்_சேவிக்கப்படுவது*
சங்கர பாற்கர யாதவ பாட்டப் பிரபாகரர் தங்கள்மதம்
சாய்வுற வாதியர் மாய்குவர் என்று சதுமறை வாழ்ந்திடுநாள்
வெங்கலி இங்கினி வீறு நமக்கிலை என்று மிகத் தளர் நாள்
மேதினி நம் சுமை ஆறுமெனத்துயர்விட்டு விளங்கிய நாள்
மங்கையராளி பராங்குச முன்னவர் வாழ்வு முளைத்திடு நாள்
மன்னியதென்னரங்காபுரி மாமலை மற்றும் உவந்திடு நாள்
செங்கயல் வாவிகள் சூழ் வயல் நாளும் சிறந்த பெரும்பூதூர்ச்
சீமானிளையாழ்வார் வந்தருளிய நாள் திருவாதிரை நாளே.

ஶ்ரீராமாநுஜர் திருவடிகளே சரணம்

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!