எம்பார் 11

முந்தைய பதிவில் எம்பெருமானரைப் பற்றி அனுபவித்தோம் . இப்பொழுது ஓராண்  வழி ஆச்சார்யர்களில் அடுத்த ஆச்சார்யன் விஷயமாகக் காண்போம் .

திருநக்ஷத்ரம்: தை புனர்பூசம் 
திரு அவதாரத்தலம்: மதுரமங்கலம்
ஆச்சார்யன்: பெரிய திருமலை நம்பிகள்
சிஷ்யர்கள்: பராசர பட்டர் , வேத வ்யாஶ  பட்டர்
திருநாட்டுக்கு எழுந்தருளிய இடம்: திருவரங்கம்
அருளிச்செய்தவை: விஞ்ஞான ஸ்துதி , எம்பெருமானார் வடிவழகு பாசுரம்
மதுரமங்கலத்தில் கமலநயன பட்டர் ஸ்ரீதேவி அம்மாள் தம்பதியினருக்கு திருக்குமாரராய் திருஅவதாரம் செய்தவர் கோவிந்தப்பெருமாள். இவர் கோவிந்த  தாஸர், கோவிந்த  பட்டர்  மற்றும் ராமானுஜ பதச்சாயையார் என்றும் அழைக்கப் படுகிறார். நாளடைவில் இவர் எம்பார் என்று மிகவும் பிரசித்தமாய் அறியப்பட்டார்.இவர் எம்பெருமானாரின் சிரத்தியார் (சிறிய தாயார்) திருமகனாவார். 

இவர்  யாதவப்ரகாசரின் வாரணாஸி யாத்திரையில் இளையாழ்வாரின் உயிருக்கு ஏற்பட்ட ஆபத்திலிருந்து அவரைக் காப்பதில் முக்கியமான பங்கு வகித்தார். எம்பெருமானாரைக் காப்பாற்றிய பின்பு, இவர் தம் குருவான யாதவப்ரகாஶருடன் வாரணாசி யாத்திரையைத் தொடர்ந்தார் . இந்த யாத்திரையில் இவர் பரமசிவனாரின் பக்தராகி காளஹஸ்தியோடே இருந்து விட்டார்.
இவரைத் திருத்திப் பணிகொள்ளத் திருவுள்ளம் கொண்ட எம்பெருமானார், அப்பணியை செவ்வனே செய்து முடிக்கப் பெரிய திருமலை நம்பிகளை ப்ரார்த்தித்தார். 
பெரிய திருமலை நம்பிகளும் உடனே உகந்து , காளஹஸ்திக்குச் சென்று, கோவிந்தப்பெருமாள் நந்தவனத்திற்குப் பூக்களைப் பறிக்க வரும் வேளையிலே , “தேவன் எம்பெருமானுக்கல்லால் பூவும் பூசனையும் தகுமே ” (அதாவது ஸ்ரீமன் நாராயணனே பூக்களைக்கொண்டு ஆராதிக்கத்தக்கவன் தவிர வேறாரும் அல்லன்) என்னும் திருவாய்மொழிப் பாசுரத்தை அனுசந்தித்தார் .
 இதை கேட்ட கணமே, கோவிந்தப்பெருமாள்  தமது தவறை உணர்ந்து , பரமசிவனாரிடத்தே தாம் வைத்த பற்றையும் துறந்து, பெரிய திருமலை நம்பிகளை சரண் புகுந்தார். பெரிய திருமலை நம்பிகள் தானும் இவருக்கு பஞ்சசம்ஸ்காரங்களைச் செய்து வைத்து இவருக்கு அர்த்தங்களை உபதேசித்தார். கோவிந்தப்பெருமாளும் தேவுமற்றறியாதவராய் பெரிய திருமலை நம்பிகள் திருவடிகளே எல்லாமாகக் கொண்டு , பெரிய திருமலை நம்பிகளிடத்தே இருந்து வந்தார் .

ஸ்ரீமத் ராமாயணத்தை பெரிய நம்பிகளிடமிருந்து கற்பதற்காக எம்பெருமானார் திருவேங்கடம் (கீழ் திருப்பதி ) அடைகிறார் . அந்த சமயத்தில் நடந்த சிலவற்றை கொண்டு நாம் எம்பாரின் வைபவங்களை அறியலாம். அவற்றைச் சுருக்கமாகக் காண்போம்
ஒரு சமயம், கோவிந்தப்பெருமாள் தனது ஆசார்யனான பெரிய திருமலை நம்பிகளுக்குப் படுக்கை தயாரித்து அதில் தான் முதலில் படுத்துப் பார்க்கிறார். இதைக் கண்ட எம்பெருமானார் இதைப்  பெரிய திருமலை நம்பிகளிடத்தே தெரிவிக்க , அவரும் இது பற்றி கோவிந்தப்பெருமாளிடம் விசாரிக்கிறார்.
 அதற்கு கோவிந்தப்பெருமாள், இவ்வாறு 
செய்வதால் தமக்கு நரகம் வாய்க்கும் என்றாலும் ,ஆச்சார்யன் படுப்பதற்குப் படுக்கை பாங்காக இருக்கிறதா என்பதை அறியவே தாம் இவ்வாறு செய்வதால், தமக்கு நரகம் வாய்க்கும் என்ற கவலை இல்லை என்றும்  ஆச்சார்யன் திருமேனியை பற்றியே தாம் கவலை கொள்வதாகவும் சாதித்தார். மணவாளமாமுநிகள்  தனது உபதேச ரத்தினமாலையில் “தேசாரும் சிச்சன் அவன் சீர் வடிவை ஆசையுடன் நோக்குமவன் ” என்று ஸாதிப்பதையும், எம்பாரின் இந்த வைபவத்தையும் நாம் சேர்த்து அனுபவிக்கலாமே !
ஒரு முறை கோவிந்தப்பெருமாள் ஒரு பாம்பின் வாயில் ஏதோ செய்து விட்டுத்  தேக சுத்திக்காக குளித்து விட்டு வருவதை கண்ட எம்பெருமானார், இதை பற்றி கோவிந்தப்பெருமாளிடம் விசாரிக்க , கோவிந்தப்பெருமாள் தாமும், அந்தப்  பாம்பின் வாயில் முள் சிக்கி இருந்ததையும் அதை தாம் நீக்கியதையும் கூறினார். இதை கேட்ட எம்பெருமானார் , இவரின் ஜீவ காருண்யத்தை எண்ணிப் பூரித்தார்.

திருவேங்கடத்திலிருந்து எம்பெருமானார் கிளம்பும் தருவாயில், பெரிய நம்பிகள் எம்பெருமானார்க்கு தாம் ஏதேனும்  தர விழைவதாகக் கூறினார். எம்பெருமானார் தானும் , கோவிந்தப்பெருமாளைக் கேட்டார். நம்பிகளும் மகிழ்ந்து, கோவிந்தப் பெருமாளிடம் எம்பெருமானாரைத் தாமாக கொள்ளும் படிக்கு அறிவுறுத்தி அனுப்பிவைக்கிறார்.
 கோவிந்தப்பெருமாள் எம்பெருமானாரோடே காஞ்சி வரை வந்து, ஆச்சார்யனைப் பிரிந்த துயர் தாளாது திருமேனி வெளுத்திருந்தார். இதைக் கண்ட எம்பெருமானார், இவரைப் பெரிய திருமலை நம்பிகளை ஸேவிக்க அனுப்ப, வந்த கோவிந்தப்பெருமாளுக்கு  “விற்ற பசுவிற்கு புல்  இடுவாருண்டோ ” என்று திருமுகம் காட்டாமலேயே பெரிய திருமலை நம்பிகள் அனுப்பி  விட்டார். தனது ஆசார்யனின் திருவுள்ளம் அறிந்த கோவிந்தப்பெருமாள் , நம்பிகளின் திருமாளிகை வாசலிலிருந்தே தெண்டன் ஸமர்பித்து விட்டு எம்பெருமானாரிடம் திரும்பினார்.
எம்பெருமானார் திருவரங்கத்திற்குத்  திரும்பிய பின் , கோவிந்தப்பெருமாளின் திருத்தாயார் வேண்ட, எம்பெருமானார் கோவிந்தப்பெருமாளின் திருமணத்தைச் செய்துவைக்கிறார் . கோவிந்தப்பெருமாள் தனது இல்லற வாழ்கையில் ஈடு படாதிருந்தார்.
எம்பெருமானார் இவரை ஏகாந்தத்தில் ஈடுபடும்படிக்கு அறிவுறுத்த, இவர் எம்பெருமானாரிடத்தே வந்து தாம் எல்லா இடங்களிலும் பெருமாளைப் காண்பதால் தன்னால் ஏகாந்தத்தில் இருத்தல் இயலவில்லை என்று கூறினார். இதைக் கேட்ட எம்பெருமானார் இவரின் நிலையை அறிந்து இவர்க்குத்  துறவறம் அளித்து , எம்பார் என்னும் திருநாமத்தைச் சாற்றித் தம்மோடே இருக்கும் படிக்கு ஆணையிட்டார்.
ஒரு முறை ஸ்ரீவைஷ்ணவர்கள் எம்பாரின் ஞானம் பக்தி வைராக்கியம் உள்ளிட்ட குணங்களைக் கொண்டாட, எம்பாரும் “உகக்கும்” என்று ஆமோதித்தார். இதைக் கண்ட எம்பெருமானார் இவரை அழைத்து “நைச்யானுஸந்தானம் இன்றி இவற்றை ஏற்பது ஸ்ரீவைஷ்ணவ லக்ஷணம் அல்லவே? ” என்று கேட்க, எம்பார் அதற்கு, கீழ் நிலையில் இருந்த தம்மைத் திருத்திப்பணிகொண்டது தேவரீர் ஆகையால் இப்பெருமைகள் யாவும் தேவரீரையே சாரும் என்று சாதித்தார். இதை எம்பெருமானாரும் ஆமோதித்து எம்பாரின் ஆச்சார்ய பக்தியைக் கொண்டாடினார் .
கூரத்தாழ்வானின் மனைவியாரான ஆண்டாள், பெரிய பெருமாள் கிருபையோடு அனுப்பிவைத்த பிரசாதத்தால் , இரண்டு திருக்குமாரர்களை ஈன்றெடுக்க , எம்பெருமானார் எம்பாரோடே  அக்குழந்தைகளின் நாம கரணத்திற்கு (பெயர் இடும் வைபவத்திற்கு) கூரேஶரின் திருமாளிகைக்கு வருகை தந்தார். எம்பெருமானார், குழந்தைகளை எடுத்துகொண்டு வரும்படிக்கு எம்பாரைப் பணிக்க , எம்பார் குழந்தைகளை எடுத்து வரும்போது அவர்களின் ரக்ஷைக்கு வேண்டி த்வயானுஸந்தானம் செய்தார்.

குழந்தைகளைக் கண்டவுடன், அவர்கள் எம்பாரிடமிருந்து த்வய மஹாமந்திரத்தை உபதேசிக்க பெற்றார்கள், என்று உணர்ந்த எம்பெருமானார் , எம்பாரையே அவர்களுக்கு ஆசார்யனாய் இருக்கும் படி நியமித்தார். இதனைத் தொடர்ந்து பராஶர பாட்டரும் வேத  வ்யாஶ   பட்டரும்  எம்பாரின் ஶிஷ்யர்கள் ஆனார்கள்.
மண்ணுலக விஷயங்களில் எப்போதும்  வெறுப்பு கொண்டிருந்த எம்பார் பகவத் விஷயங்களில் பெரும் ஈடுபாட்டை கொண்டிருந்தார். பகவத் விஷயத்தை கொண்டாடி மகிழும் ரஸிகராகவும் எம்பார் எழுந்தருளி இருந்தார் . எம்பாரின் பகவத் அனுபவங்களைப் பற்றி வியாக்யானங்களில் பல இடங்களில் கோடிட்டு காட்டப் பட்டுள்ளது . அவற்றில் சிலவற்றை நாம் இப்போது கண்டு அனுபவிப்போம்:
பெரியாழ்வார் திருமொழின் இறுதிப் பாசுரத்தில் , “சாயை போலப் பாட வல்லார் தாமும் அணுக்கர்களே ” என்பதற்கு ஸ்ரீவைஷ்ணவர்கள் அர்த்தம் ஸாதிக்கும்படி கேட்க , அதற்கு எம்பார் இந்தப் பாசுரத்திற்கு தான் எம்பெருமானாரிடம் அர்த்தம் கேட்டதில்லை என்று ஸாதிக்கிறார்.
 ஆயினும் எம்பெருமானாரின் பாதுகைகளைத்  தமது திருமுடி மேல் வைத்து ஒரு கணம் த்யானித்த பின் அக்கணமே எம்பெருமானார் இதற்கான விளக்கத்தை தமக்கு உணர்த்தியதாகவும், இது “பாடவல்லார் – சாயை போல – தாமும் அணுக்கர்களே ” , அதாவது எவர் ஒருவர் இப்பாசுரங்களைப் பாடுகிறார்களோ அவர் எம்பெருமானின் நிழல் போன்று அவரை விட்டுப் பிரியாமல் இருப்பார், என்று புரிந்து கொள்ளப்பட வேண்டியது என்றும் ஸாதித்தார் .
கண்ணன் எவ்வாறு அனைவரையும் அச்சுறுத்துகிறான் என்று விளக்கும் பெரியாழ்வார் திருமொழியின் 2.1 பதிகத்திற்கு அபிநயம் காட்டுகையில் உய்ந்தபிள்ளை அரையர் , கண்ணன் தன்  திருக்கண்களை அச்சுறுத்தும் விதத்தில் வைத்து கோப குமார்களை (ஆயர் பிள்ளைகளை) அச்சுறுத்துகிறார் என்று காட்டுகிறார். 
இதைப் பின்னே இருந்து கவனித்து வந்த எம்பார் , திருவாழியாழ்வானையும் திருச்சங்காழ்வானையும் தோளில் வைத்துக் காட்டி கண்ணன் ஆயர் சிறுவர்களை அச்சுறுத்துகிறார் என்று காட்ட, அதைப் புரிந்துகொண்ட அரையர் எம்பார் காட்டிய படி அடுத்த முறை அபிநயம் காட்டினார். இதை கண்ட எம்பெருமானார் , எம்பாராலேயே இவ்வாறாக அர்த்தங்கள் தர இயலும் என்பதால் , ” கோவிந்தப்பெருமாளே இருந்தீரோ?”  என்று கேட்டார்.
கண்ணனிடத்தே நம்மாழ்வார் , திருவாய்மொழியில் “மின்னிடை மடவார்கள் ” (6.2) பதிகத்தில், அனுபவித்த விஶ்லேஷத்தை , ஒரு  ஸந்யாஸியாய் இருந்தும் எம்பாரால் உணர முடிந்தது . இப்பதிகத்திற்கு அனைத்து ஸ்ரீவைஷ்ணவர்களும் ஆச்சர்யித்து  உகக்கும் வண்ணம் எம்பார் விளக்கமும் ஸாதித்தார். இது “பரமாத்மநி ரக்த: அபரமாத்மநி  நிரக்த: ” என்னும் ஸ்ரீவைஷ்ணவ லக்ஷணத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது . அதாவது “எம்பெருமான் விஷயத்தில் பெருத்த ஈடுபாடோடே இருத்தல் , எம்பெருமானை தவிர்த்த விஷயங்களில் ஈடுபாடின்றி இருத்தல்”.

திருவாய்மொழியின் 10.8.3 பாசுரத்தின் வ்யாக்யானத்தில் மிக ஆச்சர்யமான நிகழ்வு காட்டப்படுகிறது. திருவாய்மொழியில் ஆழ்ந்து மடத்தில் நடந்து கொண்டிருக்கையில் எம்பெருமானார் திடீரென்று திரும்பி பார்க்கிறார் . இதைக்  கதவுகளின் பின்நின்று கண்ட எம்பார் , இப்பாசுரத்தில் “மடித்தேன்” என்பதை பற்றி எம்பெருமானார் சிந்தித்து கொண்டிருக்கிறாரோ என்று கேட்க எம்பெருமானாரும் அதை ஆமோதித்தார் . எம்பெருமானாரின் செய்கைகளைக் கொண்டே அவரின் திருவுள்ளத்தை அறியக்கூடியவர் எம்பார் . 
தனது சரம தசையில் எம்பார் பட்டரை  அழைத்து, சச்சம்பிரதாயத்தைத் திருவரங்கத்தே இருந்து  நிர்வகித்து வரும்படியும், எம்பெருமானார் திருவடிகளையே தஞ்சமாக நினைத்து வரும்படியும்  உபதேஶிக்கிறார் . எம்பெருமானார் த்யானத்தில் ஆழ்ந்து தமது சரம திருமேனியைத் துறந்து, எம்பார், நித்ய விபூதியில் எம்பெருமானாரோடே இருக்கத் திருநாட்டுக்கு எழுந்தருளினார்.
நாமும் எம்பார் திருவடித்தாமரைகளிலே “நம் ஆச்சார்யனிடத்திலும் எம்பெருமானாரிடத்திலும் பற்றுடையோர் ஆவோம்” என்று பிரார்த்திப்போம்.
#எம்பாரின்_தனியன்:
ராமானுஜ பதச்சாயா கோவிந்தாஹ்வநபாயிநீ |
ததாயத்த ஸ்வரூபா ஸா ஜீயாந் மத் விஶ்ரமஸ்தலீ ||
#எம்பாரின்_வாழி_திருநாமம்:
பூவளரும் திருமகளார் பொலிவுற்றோன் வாழியே
பொய்கை முதல் பதின்மர் கலைப் பொருளுரைப்போன் வாழியே
மாவளரும் பூதூரான் மலர் பதத்தோன் வாழியே
மகரத்தில் புனர்பூசம் வந்துதித்தோன் வாழியே
தேவுமெப்பொருளும் படைக்கத் திருந்தினான் வாழியே
திருமலைநம்பிக் கடிமை செய்யுமவன் வாழியே
பாவையர்கள் கலவியிருள் பகலென்றான் வாழியே
பட்டர்தொழும் எம்பார் பொற்பதமிரண்டும் வாழியே

ஶ்ரீ எம்பார் திருவடிகளே சரணம்

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!