வடக்குத் திருவீதிப் பிள்ளை 16

முந்தைய பதிவில் நம்பிள்ளையை அனுபவித்தோம். இப்பொழுது ஓராண் வழி ஆசார்யர்களில் அடுத்த ஆசார்யனான வடக்குத் திருவீதிப் பிள்ளையைப் பற்றி அனுபவிப்போம்.

திருநக்ஷத்ரம்: ஆனி ஸ்வாதி

அவதார ஸ்தலம்: ஸ்ரீரங்கம்

ஆசார்யன்: நம்பிள்ளை

சிஷ்யர்கள்: பிள்ளை லோகாசார்யர், அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் மற்றும் பலர்.

பரமதித்த இடம்: திருவரங்கம்

அருளிச்செய்தது: ஈடு 36000 படி

ஸ்ரீ க்ருஷ்ண பாதர் என்று அவருடைய இயற்பெயர். இவருக்கு வடக்குத் திருவீதிப் பிள்ளை என்ற திருநாமமே ப்ரஸித்தமாக உள்ளது. நம்பிள்ளையின் முக்கியமான சிஷ்யர்களுள் இவரும் ஒருவர்.

வடக்குத் திருவீதிப் பிள்ளை முழுமையாக ஆசார்ய நிஷ்டையோடு இருந்தார். க்ருஹஸ்தாஶ்ரமத்திற்கு வந்த பின்னரும் அவர் குழந்தை பிறக்க வேண்டும் என்ற ஆர்வமே இல்லாமல் இருந்தார். இதைக் கண்டு மிகவும் வருத்தமடைந்த அவருடைய திருத்தாயார், நம்பிள்ளையிடம் அவருடைய இருப்பைப் பற்றிக் கூறினார். 

இதைக் கேட்டவுடன் நம்பிள்ளை வடக்கு திருவீதிப் பிள்ளையையும் அவருடைய பார்யாளையும் கூப்பிட்டு, தன்னுடைய க்ருபையினால் அவர்களை கடாக்ஷித்து, வடக்குத் திருவீதிப் பிள்ளையை பார்யாளுடன் ஏகாந்தத்தில் இருக்குமாறு நியமித்தார்.

 ஆச்சார்ய நியமனத்தின் படி நடந்ததால் அவர்கள் இருவரும் ஒரு குழந்தையை ஈன்றெடுத்தார்கள். நம்பிள்ளையினுடைய (லோகாசார்யன்) க்ருபா கடாக்ஷத்தில் பிறந்ததால், வடக்குத் திருவீதிப் பிள்ளை அந்தக் குழந்தைக்கு பிள்ளை லோகாசார்யன் என்ற திருநாமத்தைச் சூட்டினார்.

 இதைக் கேட்டவுடன் நம்பிள்ளை “அழகிய மணவாளன்” என்ற திருநாமத்தைச் சூட்ட வேண்டும் என்று தான் ஆசைப்பட்டதாகக் கூறினார். இதைக் கேட்ட நம்பெருமாள், வடக்குத் திருவீதிப் பிள்ளையை கடாக்ஷிக்க, அவர்கள் இருவரும் மற்றொரு குழந்தையை ஈன்றெடுத்தார்கள். 

அழகிய மணவாளனுடைய (நம்பெருமாள்) க்ருபா கடாக்ஷத்தால் பிறந்ததால் அந்தக் குழந்தைக்கு அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் என்ற திருநாமத்தைச் சூட்டினார்கள். இப்படித்தான் வடக்குத் திருவீதிப் பிள்ளை இரண்டு ரத்தினங்களை நமது ஸம்ப்ரதாயத்திற்குக் கொடுத்தார். இவரைப் பெரியாழ்வாரோடு ஒப்பிடலாம்:

பெரியாழ்வார், வடக்குத் திருவீதிப் பிள்ளை இருவரின் திருநக்ஷத்ரமும் ஆனி ஸ்வாதி.

ஆழ்வார் எம்பெருமான் கடாக்ஷத்தினால் திருப்பல்லாண்டு மற்றும் பெரியாழ்வார் திருமொழி அருளிச்செய்தார்.
 நம்பிள்ளை கடாக்ஷத்தினால் வடக்குத் திருவீதிப் பிள்ளை 36000 படி வ்யாக்யானம் அருளிச்செய்தார்.

ஆழ்வார் ஆண்டாளை இந்த ஸம்ப்ரதாயத்திற்காகக் கொடுத்தார், அவளை க்ருஷ்ணானுபவத்தை ஊட்டியே வளர்த்தார். வடக்குத் திருவீதிப் பிள்ளை பிள்ளை லோகாசார்யர் மற்றும் அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரை இந்த ஸம்ப்ரதாயத்திற்காகக்  கொடுத்தார். அவர்களை பகவத் அனுபவத்தை ஊட்டியே வளர்த்தார்.

வடக்குத் திருவீதிப் பிள்ளை நம்பிள்ளையிடம் திருவாய்மொழி காலக்ஷேபம் கேட்கும்பொழுது, பகல் நேரத்தில் ஆச்சார்யனோடு இருந்து கொண்டு கேட்பார், இரவு நேரத்தில் அதை ஒலைச்சுவடியில் ஏடுபடுத்துவார். இப்படித்தான் நம்பிள்ளைக்குத் தெரியாமல் இவர் ஈடு 36000 படி வ்யாக்யானத்தை எழுதி முடித்தார்.

 ஒருநாள் வடக்குத் திருவீதிப் பிள்ளை ததியாராதனத்திற்காக நம்பிள்ளையை தன் திருமாளிகைக்கு அழைத்தார். நம்பிள்ளையும் அதை ஏற்றுக்கொண்டு அவர் திருமாளிகைக்கு எழுந்தருளினார். நம்பிள்ளை திருவாராதனத்தைத் தொடங்கியபொழுது, கோயிலாழ்வாரில் ஒலைச்சுவடியில் வ்யாக்யானம் இருப்பதைக் கண்டார். ஆர்வத்தோடு அதை எடுத்து சிலவற்றைப் படித்து, இது என்ன என்று வடக்குத் திருவீதிப் பிள்ளையிடம் கேட்டார்.

 வடக்குத் திருவீதிப் பிள்ளை நம்பிள்ளையுடைய காலக்ஷேபத்தை தினமும் ஏடுபடுத்துவதாகக் கூறினார். உடனே நம்பிள்ளை வடக்குத் திருவீதிப் பிள்ளையை திருவாராதனம் பண்ணச் சொல்லிவிட்டு, அவர் அந்த ஏட்டில் இருக்கும் வ்யாக்யானங்களை படிக்க ஆரம்பித்தார். “என்னுடைய அனுமதி இல்லாமல் ஏன் எழுதினீர்? பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானத்திற்குப் போட்டியாக இயற்றுகிறீரா?” என்று நம்பிள்ளை கேட்டார். 

இதைக் கேட்டவுடன் மிகவும் வருத்தமுற்றார் வடக்குத் திருவீதிப் பிள்ளை. உடனே நம்பிள்ளையின் திருவடித்தாமரைகளில் விழுந்து, பிற்காலத்தில் பார்த்துக்கொள்வதற்கு உதவியாக இருக்கும் என்பதற்காகத் தான் எழுதினதாக விவரித்தார். அதைக் கேட்டவுடன் ஸமாதானமடைந்த நம்பிள்ளை, அந்த வ்யாக்யானத்தை மிகவும் கொண்டாடினார்.

 வடக்குத் திருவீதிப் பிள்ளை ஒரு அவதார விசேஷமாக இருப்பதாலேயே அவரால் ஒரு வார்தையைக் கூட விடாமல் இதை இயற்ற முடிந்தது என்று நம்பிள்ளை கூறினார். இந்த வ்யாக்யானத்தைத் தன்னுடைய சிஷ்யரான ஈயுண்ணி மாதவப் பெருமாளிடம் (நஞ்சீயருடைய பூர்வாச்ரம திருநாமத்தை உடையவர்) கொடுப்பதாகவும் அவருடைய சிஷ்யர்கள் மூலமாக மாமுனிகளைச் சென்றடைந்து தகுந்த காலத்தில் மாமுனிகளால் இந்த உலகோருக்கு வெளியிடப்படும் என்றும் கூறினார்.

எம்பெருமானின் பரம க்ருபையால் நம்பிள்ளை மாமுனிகளுடைய அவதாரத்தை முன்பே கண்டு அதை ஈயுண்ணி மாதவப் பெருமாளிடம் கூறினார்.

நம்பிள்ளை பரமபதித்த பிறகு வடக்குத் திருவீதிப் பிள்ளை தர்ஸன ப்ரவர்த்தகரானார். ஸம்ப்ரதாயத்தில் அனைத்து அர்த்த விசேஷங்களையும் பிள்ளை லோகாசார்யருக்கும், அழகிய மணவாள பெருமாள் நாயனாருக்கும் கற்றுக்கொடுத்தார். பிள்ளை லோகாசார்யர் ஸ்ரீவசனபூஷண திவ்ய சாஸ்த்ரத்தில் வடக்குத் திருவீதிப் பிள்ளை கூறிய சில உபதேசங்களை உதாகரித்துள்ளார்:

ஸூத்ரம் 77 ல், அஹங்காரத்தை நீக்கிப் பார்த்தால், ஆத்மாவை அடியேன் என்றே அறிய முடியும் என்கிறார். யதீந்த்ர ப்ரவண ப்ரபாவத்தில், இதை வடக்குத் திருவீதிப் பிள்ளை விளக்கியுள்ளது காட்டப்பட்டுள்ளது.

ஸூத்ரம் 443 ல், “ஒரு ஜீவாத்மா தன்னுடைய ஸ்வாதந்த்ரியத்தால் ஈஶ்வரனின் அபிமானத்தை இழந்து இந்த ஸம்ஸாரத்தில் அநாதி காலமாக இருக்கிறான். ஸதாசார்யனின் அபிமானத்தைப் பெறுவதன் மூலமே அவன் இந்த ஸம்ஸாரத்தில் இருந்து விடுபட முடியும் என்று வடக்குத் திருவீதிப் பிள்ளை எப்பொழுதுமே கூறுவார்” என்று பிள்ளை லோகாசாரியர் கூறினார்.

தன்னுடைய ஆச்சார்யனான நம்பிள்ளையை நினைத்துக் கொண்டே, வடக்குத் திருவீதிப் பிள்ளை இந்தச் சரம திருமேனியை விட்டுத் திருநாடலங்கரித்தார்.

நாமும் எம்பெருமானார் மீதும், நமது ஆச்சார்யன் மீதும் பற்று வளர வடக்குத் திருவீதிப் பிள்ளை திருவடித்தாமரைகளை வணங்குவோம்.

*#வடக்குத்_திருவீதி_பிள்ளையினுடைய_தனியன்*:

ஸ்ரீ க்ருஷ்ண பாத பாதாப்ஜே நமாமி ஶிரஸா ஸதா|
யத் ப்ரஸாதப் ப்ரபாவேந ஸர்வ ஸித்திரபூந்மம ||

மிதுநே ஸ்வாதிஸம்பூதம் கலிவைரி பதாஶ்ரிதம்|
உதக்ப்ரதோளீ நிலயம் க்ருஷ்ணபாதமஹம் பஜே||

*#வடக்குத்_திருவீதி_பிள்ளையினுடைய_வாழி_திருநாமம்*:

ஆனிதனிற் சோதிநன்னா ளவதரித்தான் வாழியே
ஆழ்வார்கள் கலைப்பொருளை ஆய்ந்துரைப்போன் வாழியே
தானுகந்த நம்பிள்ளை தாள்தொழுவோன் வாழியே
சடகோபன் தமிழ்க்கீடு சாற்றினான் வாழியே
நானிலத்தில் பாடியத்தை நடத்தினான் வாழியே
நல்லவுலகாரியனை நமக்களித்தான் வாழியே
ஈனமற எமையாளும் இறைவனார் வாழியே
எங்கள் வடவீதிப்பிள்ளை இணையடிகள் வாழியே

ஶ்ரீ_வடக்குத்_திருவீதி_பிள்ளை_திருவடிகளே_சரணம்

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!