முந்தைய பதிவில் வடக்குத் திருவீதிப் பிள்ளையை அனுபவித்தோம். இப்பொழுது ஓராண் வழி ஆசார்யர்களில் அடுத்த ஆசார்யனான பிள்ளை லோகாசாரியரைப் பற்றி அனுபவிப்போம் .
திருநக்ஷத்ரம்: ஐப்பசி திருவோணம்
அவதார ஸ்தலம்: திருவரங்கம்
ஆச்சார்யன்: வடக்குத்திருவீதிப்பிள்ளை
சிஷ்யர்கள்: கூரகுலோத்தம தாஸர், விளாஞ்சோலைப் பிள்ளை ,திருவாய்மொழிப் பிள்ளை, மணப்பாக்கத்து நம்பி ,கோட்டூர் அண்ணர், திருப்புட்குழி ஜீயர், திருக்கண்ணங்குடி பிள்ளை, கொல்லி காவல தாஸர் மற்றும் பலர்.
பரமதித்த இடம்: ஜ்யோதிஷ்குடி (மதுரை அருகிலே)
அருளிச்செய்தது:
யாத்ருச்சிக படி, சிரிய:பதி படி, முமுக்ஷுப்படி, பரந்த படி, தனி ப்ரணவம், தனி த்வயம், தனி சரமம், அர்த்த பஞ்சகம், தத்வ த்ரயம், தத்வ சேகரம், ஸார ஸங்க்ரஹம், அர்ச்சிராதி , ப்ரமேய சேகரம் , ஸம்ஸார ஸாம்ராஜ்யம், ப்ரபன்ன பரித்ராணம், நவரத்ன மாலை, நவ வித ஸம்பந்தம், ஸ்ரீ வசன பூஷணம் மற்றும் பல
நாம் முன்னரே வடக்குத் திருவீதிப் பிள்ளை வைபவத்தில் கண்டது போல, நம்பிள்ளையின் திருவருளால் வடக்குத் திருவீதிப் பிள்ளைக்குத் திருவரங்கத்திலே திருக்குமாரராய் தோன்றியவர் பிள்ளை லோகாசாரியர். அயோத்தியில் பெருமாளும் இளையபெருமாளும் போல கோகுலத்தில் கண்ணனும் நம்பி மூத்த பிரானும் போல திருவரங்கத்தில் பிள்ளை லோகாசாரியரும் அவரது திருத்தம்பியார் அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரும் வளர்ந்து வந்தனர் .
இவ்விருவரும் நம்பிள்ளை, பெரியவாச்சான் பிள்ளை, வடக்குத் திருவீதிப் பிள்ளை போன்ற பெரியவர்களின் திருவருட்பார்வைக்கும் வழிகாட்டுதலுக்கும் ஒரே சமயத்தில் பாத்திரமாகும் பேற்றை பெற்றிருந்தனர். ஸத் ஸம்ப்ரதாயத்தைத் தங்களது திருதகப்பனாரான வடக்குத் திருவீதிப் பிள்ளை திருவடிகளிலே பயின்றனர். மேலும் இவ்விரு ஆச்சார்ய சிங்கங்களின் தனிச்சிறப்பு யாதெனில் இவ்விருவரும் தங்கள் வாழ்நாளில் நைஷ்டிக ப்ரஹ்மசர்யம் அனுட்டிக்கபோவதாய் சபதம் மேற்கொண்டு அதன் படி நடந்தும் காட்டினர் .
ஸம்ஸாரத்திலிருந்து பெரும் துயர் அனுபவிக்கும் ஜீவாத்மாக்களின் மீது தாம் கொண்ட பெரும் கருணையாலும் ஸ்வப்னத்தில் பெரியபெருமாள் இட்ட கட்டளையின் பேரிலும், பிள்ளை லோகாசாரியர், ஸத் ஸம்ப்ரதாயத்தின் பொருட்களை விளக்கும் பல க்ரந்தங்களைப் பெரும்பாலும் ஆச்சார்யன் சிஷ்யனுக்கு உபதேசிக்கும் பாங்கிலே வெளியிட்டார் .
பிள்ளை லோகாசாரியர் ஸம்ப்ரரதாய ப்ரவர்த்தகர் ஆகித் தன் சிஷ்யர்களுக்கு ஸம்ப்ரதாயத்தை திருவரங்கத்திலிருந்து உபதேசித்து வந்தார். மணப்பாக்கத்து நம்பி எனும் ஸ்ரீ வைஷ்ணவர் தேவப் பெருமாளிடம் சென்று புக , தேவப்பெருமாள் தாமும் அவருக்கு ஸம்பிரதாயத்தின் மிக உயர்ந்த அர்த்தங்களைக் கற்பித்து வந்தார்.
இவ்வாறிருக்க ஓர் நாள், பாதியிலேயே உபதேசங்களை நிறுத்தி , மணப்பாக்கத்து நம்பியை திருவரங்கத்திற்குச் செல்லுமாறும் தாம் அவருக்கு திருவரங்கத்திலே உபதேசங்களைத் தொடருவதாகவும் தேவப் பெருமாள் ஸாதித்தார். இதனைத் தொடர்ந்து நம்பி, திருவரங்கம் நோக்கி பயணித்து காட்டழகிய சிங்கர் ஸன்னிதிக்கு வந்து சேர அங்கே பிள்ளை லோகாசாரியர் கோஷ்டியை கண்டார் .
ஒரு தூணிற்குப் பின்னே நின்று , பிள்ளை லோகாசாரியரின் உபதேசங்களைக் கேட்ட நம்பி, அவை தேவாதிராஜன் தமக்கு அளித்தவையாகவும் அவற்றின் தொடர்ச்சியாகவும் இருப்பதை கண்டு வியப்புற்று, மறைந்திருந்த இடத்திலிருந்தும் வெளியே வந்து பிள்ளை லோகாசாரியரின் திருவடிகளில் தெண்டனிட்டு “அவரோ நீர்” என்று கேட்க, பிள்ளை லோகாசாரியர் “ஆவது எது ? ” (அதாவது, ஆமாம் இப்பொழுது அதற்கு செய்யவேண்டியது என்ன ? ) என்று ஸாதித்தார். இதிலிருந்து நாம் உணர வேண்டியது யாதெனில்
தேவாதிராஜனே அன்றி பிள்ளைலோகாசாரியர் வேறாரும் இல்லை என்பதாம்.
யதீந்த்ர ப்ரவண பிரபாவத்திலே, பிள்ளைலோகாசாரியர் தேவப் பெருமாளே என்று எடுத்துக் காட்டும் வேறொரு நிகழ்ச்சியும் காட்டப்பட்டுள்ளது. ஜ்யோதிஷ்குடியில் தனது அந்திமதசையில் பிள்ளை லோகாசாரியர், நாலூர் பிள்ளையிடம், திருவாய்மொழிப் பிள்ளைக்குத் (திருமலை ஆழ்வார்) திருவாய்மொழி வ்யாக்யானங்களை உபதேசிக்குமாறு உத்தரவிடுகிறார்.
திருமலை ஆழ்வார் தேவப் பெருமாள் மங்களாசாஸனத்திற்கு எழுந்தருளுகையில், தேவப் பெருமாள் அருகிருந்த நாலூர் பிள்ளையிடம் “நாம் முன்னரே ஜ்யோதிஷ்குடியில் உமக்கு ஆணையிட்டாற்போலே நீர் திருமலை ஆழ்வாருக்கு அருளிச் செயல்களின் அனைத்து அர்த்தங்களையும் உபதேசிக்க வேண்டும்” என்று நேரே ஸாதித்தார் .
நித்ய பகவத் கைங்கர்யமாகிற மோக்ஷத்திலேயே கண்ணுடயவர்களான முமுக்ஷுக்களின் உஜ்ஜீவனம் பொருட்டு பிள்ளை லோகாசாரியர் பல க்ரந்தங்களை ஸாதித்துள்ளார். ரஹஸ்ய த்ரயம் , தத்வ த்ரயம் , திருவாய்மொழியின் ஆழ் பொருள்கள் போன்ற ஸம்ப்ரதாயத்தின் முக்கியமான அர்த்தங்களை எடுத்துரைக்கும் 18 க்ரந்தங்களை பிள்ளை லோகாசாரியர் ப்ரஸாதித்தார் . இவற்றில் கீழ் வருமவை மிக முக்கியமானவை .
முமுக்ஷுப்படி – இந்த க்ரந்தத்தில் ரஹஸ்ய த்ரயம் மிக அருமையாக விளக்கப்பட்டுள்ளது . இந்த க்ரந்தத்திற்கான விரிவான வியாக்யானத்தை பொய் இல்லாத மணவாள மாமுநிகள் ஸாதித்துள்ளார். ஒரு ஸ்ரீவைஷ்ணவன் திருமந்த்ரம் , த்வய மஹா மந்த்ரம் மற்றும் சரம ஶ்லோகம் போன்றவற்றின் பெருமைகளை எதனை இன்றி அறிய முடியாதோ அப்படியாகப்பட்ட அடிப்படை க்ரந்தம் இதுவேயாம் .
தத்வ த்ரயம் – இது குட்டி பாஷ்யம் என்றும் அறியப்படுகிறது. பிள்ளை லோகசாரியர் மிக்க மேதாவிகளுக்கே உரிய பாங்கில், ஸ்ரீ பாஷ்யத்தைக் கொண்டு சித், அசித் மற்றும் ஈஸ்வரன் என்ற மூன்று தத்துவங்களையும் விரிவாக இதில் விளக்கியுள்ளார் . மன்னுபுகழ் சேர் மணவாளமாமுநிவன் வியாக்யானம் தனைக் கொண்டு அன்றி இதனை நாம் முழுமையாக புரிந்து கொள்ள இயலாது .
ஸ்ரீ வசன பூஷண திவ்ய சாஸ்த்ரம் – ஆழ்வார் ஆசார்யர்களின் சொற்களைக் கொண்டே ஸாதிக்கப்பட்டது இந்த க்ரந்தம். ஸத் ஸம்ப்ரதாயத்தின் ஆழ் பொருளெல்லாம் விளக்கும் பிள்ளை உலகாரியரின், மிக உயர்ந்த கிரந்தம் இதுவேயாம். இதுவே நமது ஸத் ஸம்ப்ரதாயத்தின் ஆழமான பொருட்களை விளக்கக்கூடிய க்ரந்தம். இதற்கு மிக அறிய விளக்கங்களை மணவாளமாமுநிகள் தனது வியாக்யானங்களில் ஸாதித்துள்ளார். திருநாராயணபுரத்து ஆயி என்னும் ஆச்சார்யரும் இதற்கு வியாக்யானம் ஸாதித்துள்ளார் .
நம் ஸத் ஸம்ப்ரதாயத்தின் பெருமைகளை உணரவேண்டும் ஆகில், ஸ்ரீ வைஷ்ணவர்கள் தங்களது வாழ்நாளில் ஒரு முறையேனும் இந்த க்ரந்தங்களை காலக்ஷேபமாய் கேட்க வேண்டும்.
பிள்ளை லோகாசாரியரின் பெருமை யாதெனில்,இவ்வனைத்து க்ரந்தங்களும் எளிய தமிழில், மணிப்ரவாள நடையில் ஆசையுடையோர் அனைவருக்கும் புரியும் வண்ணம் இவரால் ஸாதிக்கப்பட்டவை ஆகும். ஸத் ஸம்ப்ரதாயத்தின் அர்த்தங்களைப் புரிந்துக் கொள்வதில் முமுக்ஷுக்கள் படும் கஷ்டங்களைக் கண்டு பொறுக்க மாட்டாமல் தனது பெரும் கருணையால் தன் ஆச்சார்யர்களிடமிருந்து தாம் கேட்டவை அனைத்தையும் கொண்டே இக்ரந்தங்களை இவர் ஸாதித்துள்ளார் .
இவற்றில் காணப்படும் தேர்ந்த அர்த்தங்களை நாம் ஈடு 36000 படி மற்றும் ஏனைய பூர்வாசார்யர்களின் (இவருக்கு முன்னே எழுந்தருளி இருந்த)
வியாக்யானங்களில் காணலாம். நம் பால் இவர் கொண்ட பேரிரக்கத்தால், தாம் தமது பூர்வர்களிடமிருந்து கேட்டவை அனைத்தையும் திரட்டி, எளிமையாகவும் சுருக்கமாகவும் தமது க்ரந்தங்களின் மூலம் நமக்கு அளித்துள்ளார் .
இதிலிருந்து நாம் அறிந்து கொண்டாடவேண்டியது யாதெனில், பிள்ளை உலகாரியனே பிரமாண ரக்ஷணம் என்றழைக்கப்படும் ஸத் ஸம்ப்ரரதாய விஷயங்களைப் பேணிக் காத்தல் என்னும் அரும் பணியை செய்த ஆசார்யன் ஆவார்.
ப்ரமாண ரக்ஷணம் செய்ததோடன்றி ப்ரமேய ரக்ஷணமும் செய்து கொடுத்த வள்ளல் இவரே. திருவரங்கத்தில் அனைத்தும் நலமாக நடந்து வந்துக்கொண்டிருக்கும் வேளையிலே தான் திடீரென்று துலுக்கர்களின் படையெடுப்பு செய்தி காட்டுத்தீ போல் பரவியது.
கோயில்களிலே இருக்கும் செல்வங்களை சூறையாடும் துலுக்க மன்னர்களின் போக்கை அறிந்தவர் அனைவரும் இச்செய்தியை அறிந்து துன்புற்று நிற்க,அக்காலத்தின்
ஸம்ப்ரதாய ப்ரவர்த்தகராய் எழுந்தருளி இருந்த பிள்ளை உலகாரியர் அரங்கனை காக்கும் திருப்பணியில் ஈடுபட்டார். பெரிய பெருமாள் திரு முன்பே கல் சுவுரொன்றை ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கொண்டு எழுப்பிவிட்டு , இவர் உத்ஸவ பேரரான நம்பெருமளுடன் தெற்கு நோக்கிப் புறப்பட்டு விட்டார்.
தனது முதிர்ச்சியையும் பொருட்படுத்தாது நம்பெருமாளுடன் இவர் பயணமானார்.காடுகள் வழியாக நம்பெருமாள் எழுந்தருளிச்செல்லும் போது சில திருடர்கள் நம்பெருமாளின் திருவாபரணங்களை திருடினர். சற்றே முன்னே சென்றுகொண்டிருந்த பிள்ளை லோகாசாரியர் இதனைச் செவியுற்று வந்து திருடர்களுக்கு நன்மையை போதித்து அவர்களைத் திருத்திப் பணிகொள்ள, அவர்களும் சரணடைந்து பெருமாளின் திருவாபரணங்களை
மீளவும் ஸமர்ப்பித்தனர்.
மதுரையில் ஆனை மலைக்குப் பின்புறம் உள்ள ஜ்யோதிஷ்குடி என்ற சிறு க்ராமத்தைச் சென்றடையும் நேரத்தில், வயோதிகத்தால் திருநோவு சாற்றிக் கொண்ட பிள்ளைலோகாசாரியர், திருநாட்டிற்கு எழுந்தருளத் திருவுள்ளம் கொண்டார்.அச்சமயம் பிள்ளை லோகாசாரியர் தனது சீடர்களில் ஒருவரான திருமலை ஆழ்வாரை நினைத்து, அவரே தமக்கடுத்து ஸம்ப்ரதாய தலைவர் ஆகவேண்டும் என்று திருவுள்ளம் கொண்டார்.
கூர குலோத்தம தாஸர் மற்றும் ஏனைய சிஷ்யர்களை அழைத்து, திருமலை ஆழ்வாரை அவரது அரசாங்க பணியிலிருந்து விடுவித்து தரிஸன ப்ரவர்த்தகர் ஆகும் படிக்குத் திருத்திப் பணிகொள்ளுமாறு நியமித்தார். இறுதியாய் தனது சரம திருமேனியை துறந்து இன்பமிகு விண்ணாடு என்று போற்றப்படும் பரமபதத்தை அலங்கரித்தார்.
பிள்ளை உலகாரியன் மற்றும் சீர் வசன பூஷண சாஸ்த்ரத்தைக் கொண்டாடத் திருவுள்ளம் கொண்டு விஸதவாக் சிகாமணியான மணவாளமாமுநிகள் உபதேச ரத்தின மாலையை அருளினார்.
இதில் மணவாளமாமுநிகள் ஆழ்வார்கள் திருவவதார விஷயமாகவும், ஆச்சார்யர்கள் திருவவதார விஷயமாகவும், ஆசை உடையோருக்கெல்லாம் ஸத் ஸம்ப்ரதாயத்தைத் திறந்து வைத்த எம்பெருமானாரின் பேரிரக்கத்தின் விஷயமாகவும் , திருவாய்மொழி வ்யாக்யானங்களின் திருவவதார விஷயமாகவும் விளக்கினார்.
பின்னர், பிள்ளை உலகாரியரின் திருவவதாரம் விஷயமாய் ஸாதிக்கத் துவங்கி, சீர் வசன பூஷணத்தின் பெருமைகள் மற்றும் அது கொண்டுள்ள சீரிய அர்த்தங்களின் பெருமைகள் தனை விளக்கி, இறுதியாய், அவ்வர்த்தங்கள் காட்டும் பாங்கிலே நாம் வாழ வேண்டும் என்றும் அவ்வாறாக வாழ்ந்தோமே ஆனால், எந்தை எதிராசரின் (எம்பெருமானாரின்) இன்னருளுக்கு இலக்காகுவோம் என்றும் உபதேசிக்கிறார்.
மேலும் பூர்வாசார்யர்களின் ஞானம் அனுஷ்டானம் மீது நம்பிக்கை வைக்காது , நம் புரிதலை கொண்டும் நம் மனதில் தோன்றும் எண்ணங்களைக் கொண்டும் தர்க்கத்தைக் கொண்டும் நாமாகவே இவை தான் அர்த்தங்கள் என்று உரைக்க முற்பட்டால், நாம் மூர்க்கர் என்று ஆவோம் என்று ஸாதிக்கிறார்.
மூர்க்கர் போன்ற அப சப்தங்களை ஒரு போதும் உபயோகிக்காத அழகிய மணவாளமாமுநிகளே இவ்வாறாக ஸாதித்துள்ளார் என்றால், பூர்வர்களின் நிலைக்கு மாறாக நடப்பது அத்தனை பெரிய குற்றம் என்பதை எடுத்துக் காட்டவே ஆகும். இதுவே ஸ்ரீ வசன பூஷணத்தின் ஸாரம் என்றும் பெரிய ஜீயர் தனது அரிய உபதேச ரத்தின மாலை பிரபந்தத்தில் எடுத்துக் காட்டுகிறார் .
பிள்ளை லோகாசாரியரின் பெருமைகளை போற்றும் விதத்தில் நிகமாந்த மஹா தேசிகன் என்றும் அறியப்பட்டவரான வேதாந்தாசாரியர் லோகாசார்ய பஞ்சாஸத் என்னும் பிரபந்தத்தை ஸாதித்துள்ளார். பிள்ளை உலகாரியனைக் காட்டிலும் குறைந்த பட்சம் 50 ஆண்டுகள் இளையவரான வேதாந்தாசாரியார், பிள்ளை லோகாசாரியர்பால் கொண்டுள்ள பெரும் மதிப்பை இந்த ப்ரபந்தத்தைக் கொண்டு நாம் அறியலாம். இந்த ப்ரபந்தம் இன்றளுவும் திருநாராயணபுரத்தில் தொடர்ந்து அனுசந்திக்கப்பட்டு வருகிறது .
ப்ரமாண ப்ரமேயங்களின் ரக்ஷணத்தைச் செய்தருளிய பிள்ளை லோகாசாரியரின் அளவிலா பெருமைகளில் சிலவற்றை மேலே அனுபவித்தோம். ஸ்ரீ வைஷ்ணவராய் இருக்கும் ஒருவர் உபகார ஸ்ம்ருதி என்று அழைக்கப்படும் விசுவாசத்துடன் பிள்ளை லோகாசாரியர் இடத்தில் இருத்தல் வேண்டும். பிள்ளை உலகாரியன் இல்லையேல், நம்பெருமாளையோ எம்பெருமானார் தரிசனத்தின் ஆழ்பொருள்களையோ
நாம் காணவே முடியாது .
எம்பெருமானார் திருவடிகளிலும் நம் ஆச்சார்யன் திருவடிகளிலும் மாறாத பக்தி ஏற்பட நாம் பிள்ளை லோகாசாரியர் திருவடிகளை வணங்குவோம்.
பிள்ளை லோகாசாரியர் திருவடிகளே சரணம் .
#பிள்ளைலோகாசாரியரின்_தனியன்:
லோகாசார்யாய குரவே க்ருஷ்ண பாதஸ்ய ஸூநவே
ஸம்ஸார போகி ஸந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம:
#பிள்ளைலோகாசாரியார்_மற்றும்_அவர்_கோஷ்டிக்கு_மங்களாசாசனம்
வாழி உலகாசிரியன் வாழி
அவன் மன்னுகுலம் வாழி
முடும்பை என்னும் மாநகரம் வாழி
மனம் சூழ்ந்த பேரின்ப மால்மிகு
நல்லார் இனம் சூழ்ந்து இருக்கும் இருப்பு .
*#பிள்ளைலோகாசாரியரின்_வாழி_திருநாமம்*:
அத்திகிரி அருளாளர் அனுமதியோன் வாழியே
ஐப்பசியில் திருவோணத்தவதரித்தான் வாழியே
முத்திநெறி மறைத்தமிழால் மொழிந்தருள்வோன் வாழியே
மூதரிய மணவாளன் முன்புதித்தான் வாழியே
நித்தியம் நம்பிள்ளைபதம் நெஞ்சில் வைப்போன் வாழியே
நீள் வசன பூடணத்தில் நியமித்தான் வாழியே
உத்தமமாம் முடும்பை நகர் உதித்தவள்ளல் வாழியே
உலகாரியன் பதங்கள் ஊழிதொறும் வாழியே.
நமது அடுத்த பதிவில் மணவாளமாமுநிகளின் ஆசார்யரான திருவாய்மொழிப் பிள்ளை விஷயமாக அனுபவிப்போம் .
#ஶ்ரீ_பிள்ளைலோகாசாரியார்_திருவடிகளே_சரணம்