நமது கடந்த பதிவில் திருவாய்மொழிப் பிள்ளையின் வைபவங்களை அனுபவித்து மகிழ்ந்தோம் . இப்பொழுது ஓராண் வழி குருபரம்பரையில் அடுத்த ஆச்சார்யனான ஸ்ரீ மணவாள மாமுனிகளின் வைபவங்களை அனுபவிப்போம்.
திருநக்ஷத்ரம் : ஐப்பசியில் திருமூலம்
அவதார ஸ்தலம் : ஆழ்வார்திருநகரி
ஆச்சார்யன் : திருவாய்மொழிப் பிள்ளை
சிஷ்யர்கள் :
அஷ்ட திக் கஜங்கள் :
பொன்னடிக்கால் ஜீயர் ,கோயில் அண்ணன் , பத்தங்கி பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர், திருவேங்கட ஜீயர், எறும்பியப்பா , அப்பிள்ளை , அப்பிள்ளார் , பிரதிவாதி பயங்கரம் அண்ணா. நவ ரத்னங்கள் : ஸேனை முதலியாண்டான் நாயனார், சடகோப தாஸர் (நாலூர் சிற்றாத்தான்), கந்தாடை போரேற்று நாயன், ஏட்டூர் சிங்கராசாரியார், கந்தாடை அண்ணப்பன், கந்தாடை திருகோபுரத்து நாயனார், கந்தாடை நாரணப்பை , கந்தாடை தோழப்பரப்பை, கந்தாடை அழைத்து வாழ்வித்த பெருமாள். மணவாள மாமுநிகளுக்கு பல திருவம்சங்களிலிருந்தும், திருமாளிகையிலிருந்தும் மற்றும் திவ்ய தேசங்களிலிருந்தும் மேலும் பல சிஷ்யர்கள் இருந்தார்கள்.
பரமபதித்த இடம் : திருவரங்கம்
அருளிச் செய்தவை :
தேவராஜ மங்களம், யதிராஜ விம்ஸதி, உபதேச ரத்தின மாலை, திருவாய்மொழி நூற்றந்தாதி , ஆர்த்தி பிரபந்தம். வ்யாக்யானங்கள் : முமுக்ஷுப்படி, தத்வத்ரயம், ஸ்ரீ வசனபூஷணம் , ஆச்சார்ய ஹ்ருதயம் , பெரியாழ்வார் திருமொழி (பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானங்களிலிருந்து கரையானுக்கு இரையான பகுதிக்கு மட்டும் ) , இராமானுச நூற்றந்தாதி . ப்ரமாண திரட்டு (ஒரு கிரந்தத்தைச் சார்ந்த அனைத்து ஶ்லோகங்கள் மற்றும் சாஸ்த்ர வாக்கியங்களைத் திரட்டுதல்) : ஈடு 36000 படி, ஞான ஸாரம், ப்ரமேய ஸாரம் , தத்வ த்ரயம் , ஸ்ரீ வசன பூஷணம்.
ஆழ்வார்திருநகரியிலே திகழக்கிடந்தான் திருநாவீறுடையபிரான் ஸ்ரீரங்க நாச்சியார் தம்பதிக்கு, ஆதிசேஷன் திருவவதாரமாகவும் அனைத்துலகும் வாழப்பிறந்த யதிராஜர் புனரவதாரமாகவும் ஜனித்த வள்ளல் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார். அழகிய மணவாள மாமுனிகள், ரம்யாஜாமாத்ரூ முனி, காந்தோபயந்த்ரூ முனி, ரம்யாஜாமாத்ரூ யோகி, வரவரமுனி, யதீந்த்ர ப்ரவணர், இராமானுசன் பொன்னடி, ஸௌம்யஜாமாத்ரூ யோகீந்த்ரர் , பெரிய ஜீயர், ஸுந்தரஜாமாத்ரூ முனி, மற்றும் பல திருநாமங்களால் இவர் அறியப்படுகிறார் .
*#அவதார_வைபவம்_சுருக்கமாக*
பெரிய பெருமாள் திருவருளால் ஆழ்வார்திருநகரியிலே ஆதிசேஷனே வரயோகியாய் திருவவதாரம் செய்தருளினார்.இவரது தாயாரின் ஊரான சிக்கில் கிடாரத்திலே இவரது தந்தையார் இடத்திலே வேதாத்தியயனம் செய்து ஸாமான்ய சாஸ்திரங்களையும் கற்றுத் தேறுகிறார். நாளடைவிலே திருமணமும் செய்து வைக்கப்படுகிறார்.
திருவாய்மொழிப் பிள்ளையின் வைபவங்களைச் செவியுற்று ஆழ்வார்திருநகரிக்குத் திரும்பிய இவர், திருவாய்மொழிப் பிள்ளையின் திருவடிகளைத் தஞ்சம் அடைகிறார். இதை நாம் முந்தைய பதிவிலேயே வாசித்து இன்புற்றோம்.
இவருக்கு ஓர் திருமகனார் பிறக்க , அவருக்குத் திருநாமம் சாற்றி அருளவேண்டும் என்று திருவாய்மொழிப் பிள்ளையை ப்ரார்த்திக்கிறார். திருவாய்மொழிப் பிள்ளை , இராமானுச நூற்றந்தாதியிலே இராமானுச என்று 108 முறை வருவதால், அந்தத் திருநாமமே உகந்ததென்று ஸாதித்தருளி, இவரது திருக்குமாரருக்கு “எம்மையன் இராமானுசன் ” என்று திருநாமம் சாற்றி அருளுகிறார்.
திருவாய்மொழிப் பிள்ளை இன்பமிகு விண்ணாடு (பரமபதம்) எய்தியபின், இவரே ஸத் ஸம்பிரதாய ப்ரவர்த்தகர் ஆகிறார்.
அருளிச்செயலிலே குறிப்பாக திருவாய்மொழியிலே மற்றும் ஈடு 36000 படியிலே தேர்ந்தவர் ஆகும் இவர், அவைகளுக்கான ப்ரமாணங்களையும் திரட்டி அவற்றை பதிவும் செய்கிறார்.
இவரது வைபவங்களைக் கேட்டறிந்த அழகிய வரதர் என்னுமவர் இவரின் முதல் சீடராய் வந்தடைகிறார். அழகிய வரதர் ஆச்சார்யனுக்கு அடிமை செய்யும் பொருட்டு துறவு புகுகிறார். அவருக்கு மணவாள மாமுனிகள் “வானமாமலை ஜீயர்” (அழகிய வரதரின் ஊர் வானமாமலை ஆதலால்) என்றும் பொன்னடிக்கால் ஜீயர் (இவர் அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரை வந்தடைந்தாரோ மணவாள மாமுனிகளின் சீடர்கள் எண்ணிக்கை பெருகிற்று ஆதலால் செம்பொற்கழலடி செல்வா பலதேவா என்னுமாப்போலே) என்றும் திருநாமம் சாற்றியருளினார் .
ஆச்சார்யனின் திருவுள்ளத்தை நினைவு கூர்ந்த இவர், ஆழ்வாரிடம் நியமனம் பெற்றுக்கொண்டு திருவரங்கத்திற்குத் தர்ஶன ப்ரவர்த்தகராய் எழுந்தருளுகிறார்.
திருவரங்கம் செல்லும் வழியிலே ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார்க்கும், மாலிரும்சோலை அழகர்க்கும் மங்களாசாஸனம் செய்தார்.
திருவரங்கம் சென்றடைந்த பின், காவேரி கரையிலே மணவாள மாமுனிகள் நித்யகர்மாவை அனுஷ்டிக்கிறார்.
அச்சமயம் திருவரங்கத்திலே எழுந்தருளியிருந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் கோஷ்டியாய் பெரிய ஜீயரை எதிர்கொண்டு அழைத்து ஆண்டாள், உடையவர், நம்மாழ்வார், ப்ரணவாகார விமானம், ஸேனை முதல்வர், கருட பகவான், பெரிய பிராட்டியார், பெரிய பெருமாளை முறையே ஸேவை செய்து வைத்தனர்.
உடையவரை வரவேற்றார் போலே வரயோகியையும் வரவேற்று இவருக்குத் தீர்த்த ப்ரஸாதங்கள் மற்றும் ஸ்ரீசடகோபம் அருளினார் திருவரங்கநகரப்பன் .
இதனைத் தொடர்ந்து இவர் பிள்ளை உலகாரியன் திருமாளிகைக்குச் சென்று பிள்ளை உலகாரியனையும் அவர் திருத்தம்பியார் அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரையும் அவர்கள் ஸம்ப்ரதாயத்திற்காக ஆற்றிய கைங்கர்யங்களை எண்ணி கொண்டாடி மகிழ்ந்தார்.
திருவரங்கத்திலே சிலகாலம் கழித்துக்கொண்டு எழுந்தருளி இருந்த இவரை, நம்பெருமாள் திருவரங்கம் திருப்பதியை இருப்பாகக் கொள்ளும்படிக்கும் ஆழமான ஸம்பிரதாய அர்த்தங்களை அடியார்களுக்கு அளித்தருளும் படியும் நியமிக்க மிக்க மகிழ்ந்த அழகிய மணவாளப் பெருமாள் நாயனார், துலுக்கர்கள் படை எடுப்பால் தொலைந்த கிரந்தங்களைச் சேகரிக்க துவங்குகிறார் .
உத்தம நம்பியின் கைங்கர்யங்களிலே இருக்கும் குறைகளை இவரிடத்தில் விண்ணப்பம் செய்த பொன்னடிக்கால் ஜீயர் ஸ்வாமியை, உத்தம நம்பியை திருத்திப் பணிக்கொள்ளுமாறு நியமனம் செய்கிறார்.
திருவேங்கடத்திற்கு (திருமலை திருப்பதி) மங்களாசாஸனம் செய்ய திருவுள்ளம் கொண்ட இவர், பொன்னடிக்கால் ஜீயரோடு திருவேங்கட யாத்திரை மேற்கொள்கிறார். செல்லும் வழியிலே திருக்கோவலூர் மற்றும் திருக்கடிகை (சோழசிம்மபுரம்/சோளிங்கர்) கை தொழுகிறார். திருமலையிலே, எம்பெருமானாரால் ஸ்தாபிக்கப்பட்ட திருவேங்கடம் கோயில் பெரிய கேள்வி அப்பன் ஜீயர் ஸ்வாமி ஒரு கனவு காண்கிறார்.
அந்த கனவிலே ஒரு க்ருஹஸ்தர் பெரிய பெருமாளை போன்று திருமலை அளவுக்கு நீண்டு படுத்துக்கொண்டு இருக்க அவரது திருவடிவாரத்தில் ஒரு ஸந்நியாசி இருந்து பணிவிடை செய்து கொண்டிருக்கிறார். அந்தக் கனவிலே இவர்கள் யாரென்று ஸ்ரீவைஷ்ணவர்களை வினவ, கிடப்பவர் ஈட்டுப் பெருக்கரான அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் என்றும் அவர் திருவடிகளில் இருப்பவர் அவரது ப்ராண ஸுக்ருதான (மூச்சுக்காற்று) பொன்னடிக்கால் ஜீயர் என்றும் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து திருவேங்கடம் கோயில் பெரிய கேள்வி அப்பன் ஜீயர் சுவாமி தானும் கண் விழித்துக்கொண்டு இவ்விருவரும் விரைவில் அப்பனுக்குப் பல்லாண்டு பாட வரவிருப்பதை அறிந்து, வரவேற்பதற்குத் தக்க சிறப்பான ஏற்பாடுகளைச் செய்தார். அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் தானும் முறையே திருமலை ஆழ்வார் (திருவேங்கடமாமலை), கோவிந்தராஜன் மற்றும் ந்ருஸிம்ஹனைத் தொழுது திருவேங்கடம் வந்தடைந்தார்.
திருவேங்கடம் கோயில் பெரிய கேள்வி அப்பன் ஜீயர் இவ்விருவரையும் திருவேங்கடமுடையானிடம் அழைத்துச் செல்ல, இவர்களைக் கண்டு போர உகந்த திருவேங்கடமுடையான் தீர்த்தம் ஸ்ரீ சடகோபம் மற்றும் பிரஸாதங்களை தந்தருளினார். இதனை பெற்றுக் கொண்டு அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் , திருவேங்கடமுடையானிடம் பிரியா விடை பெற்று கிளம்பினார்.
இவர் காஞ்சிக்கு எழுந்தருளி, தேவப்பெருமாளை மங்களாசாஸனம் செய்தார். தேவப்பெருமாள் இவரை எம்பெருமானார் என்று கொண்டாடி பிரஸாதம் ஸ்ரீ சடகோபம் உள்ளிட்டவைகளைத் தருகிறார்
பின்னர் ஸ்ரீபெரும்புதூர் சென்று எம்பெருமானாரின் வடிவழகில் மூழ்கி எம்பெருமானாருக்கு மங்களாசாஸனம் செய்கிறார்.
காஞ்சிக்குத் திரும்பிய இவர், கிடாம்பி ஆச்சான் திருவம்சத்தில் தோன்றியவரான கிடாம்பி நாயனாரை அடைந்து ஸ்ரீ பாஷ்யம் காலக்ஷேபம் கேட்கத் தொடங்குகிறார். இந்த வேளையிலே இவரை சிலர் தர்க்க வாதத்துக்கு அழைக்க, ஆச்சார்யன் தன்னை பகவத் விஷயத்தில் மட்டும் ஈடுபடச் சொன்னதைச் சுட்டிக் காட்டி , மறுத்துவிடுகிறார். பின் , சில நலன் விரும்பிகள் பணிக்க, வாதம் செய்து வாதிகளுக்கு தக்க விளக்கங்களைக் கொடுக்க, அவர்களும் இவரின் மேன்மை கண்டு கொண்டாடிச் செல்கிறார்கள்.
இவரது புத்திக் கூர்மையைக் கண்டு வியந்த கிடாம்பி நாயனார் இவரை, இவரின் உண்மையான ஸ்வரூபத்தை காட்டும் படி பணிக்க, ஆச்சார்யன் சொல் கேட்டு நடக்கத் திருவுள்ளம் கொண்டமையால் தனது ஆதிசேஷ ஸ்வரூபத்தை வெளிக்காட்டுகிறார். இதனைக் கண்டு கிடாம்பி நாயனார் தானும் பரவஶித்து இவர் பால் மேலும் பரிவு காட்டத் துவங்குகிறார். ஸ்ரீ பாஷ்ய காலக்ஷேபங்களை நன்கு கேட்டறிந்த அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் ஆச்சார்யனிடம் விடை பெற்றுக் கொண்டு திருவரங்கத்திற்குத் திரும்புகிறார்.
திருவரங்கம் திரும்பிய அழகிய மணவாள பெருமாள் நாயனாரை கண்டு திருவுள்ளம் பூரித்த அரங்கன், இவரைத் திருவரங்கத்திலேயே இனி எழுந்தருளி இருக்கும் படியும், இனி மேலும் யாத்திரைகளை மேற்கொள்ள வேண்டாம் என்றும் நியமித்தார்.
இந்தத் தருவாயில், இவரின் சில உறவினர்கள் சில ஆலோசங்களை இவரிடம் தெரிவிக்க, இவைகள் காலக்ஷேப கைங்கர்யங்களுக்கு இடையூறுகளாக இருந்தமையால், ஆழ்வார்திருநகரியில் இவருடன் திருவாய்மொழிப் பிள்ளையின் திருவடிகளில் ஸத்விஷயம் பயின்றவரான சடகோப யதியிடம் ஸன்யாஸம் பெற்றுக்கொள்கிறார்.
பிறகு இதை பெரிய பெருமாளிடம் தெரிவிக்க, பெரிய பெருமாள் பிற்காலத்தில் தனது ஆச்சார்யன் திருநாமத்தையே தான் கொள்ள வேண்டும் என்ற ஆசையினால், அழகிய மணவாள முனி என்ற திருநாமத்தையே இவருக்குச் சாற்றி, காலக்ஷேபம் ஸாதித்துக் கொண்டு தங்குவதற்கு பல்லவராயன் மடத்தையும் அளித்தருளினார். உத்தம நம்பி தலைமையில் அணைத்து ஸ்ரீவைஷ்ணவர்களும் பல்லவராயன் மடத்திற்கு எழுந்தருளி “மணவாள மாமுனியே இன்னுமொரு நூற்றண்டிரும்” என்று இவருக்குப் பல்லாண்டு பாடினர் .
பொன்னடிக்கால் ஜீயர் சுவாமி தலைமையில் சீடர்கள் மடத்தை புதுப்பிக்க, பிள்ளை உலகாரியன் திருமாளிகையிலிருந்து மண் கொணரப்பட்டுத் திருமலை ஆழ்வார் என்ற ஒரு அழகான மண்டபம் கட்டப் படுகிறது. அல்லும் நன்பகலும் இந்த மண்டபத்தில் எழுந்தருளி இருந்து மணவாள மாமுனிகள் தானும் ஈடு, மற்ற ப்ரபந்தங்களின் உரைகள், எம்பெருமானாரின் வைபவம், ஸ்ரீ வசன பூஷண திவ்ய சாஸ்திரம் உள்ளிட்டவைகளைச் சீடர்களுக்கும் அபிமானிகளுக்கும் காலக்ஷேபம் செய்து காலத்தைக் கழிக்கிறார்.
இவரது வைபவங்கள் காட்டுத்தீ
எனப்பரவ, பலர் இவரது திருவடிகளை வந்தடைகின்றனர் . திருமஞ்சனம் அப்பா , அவரின் திருகுமாரத்தியான ஆய்ச்சி, பட்டர்பிரான் ஜீயர் போன்றோர் இவரின் சீடர்கள் ஆகிறார்கள்.
திருவரங்கத்திற்கு அருகாமையில் உள்ள வள்ளுவ ராஜேந்திரம் என்னும் ஊரிலிருந்து சிங்கரையர் என்னும் ஒரு ஸ்வாமி பெரிய ஜீயரான மணவாள மாமுனிகளின் மடத்திற்கு தனது நிலங்களில் விளைந்த காய்களை ஸமர்ப்பிக்க, இதனால் திருவுள்ளம் உகந்த பெரிய பெருமாள் தானும் சிங்கரையர் கனவில் வந்து தோன்றி மணவாள மாமுனிகள் தனது திருவனந்தாழ்வானே அன்றி வேறாரும் அல்லர் என்பதை உணர்த்தினார்.
பெரிய பெருமாள் திருவுள்ளப்படி பெரிய ஜீயரைத் தஞ்சமாகப் புகச் சிங்கரையர் திருவரங்கம் சென்றடைந்து கோயில் கந்தாடை அண்ணன் திருமாளிகையில் தங்கி அவரிடம் இவற்றை தெரிவித்தார். இதையே நினைத்துக் கொண்டு திருக்கண்வளர்ந்த கோயில் அண்ணன் கனவிலே எம்பெருமானார் முதலியாண்டானோடே தோன்றி, தாமே மணவாள மாமுனிகள் என்று உணர்த்தி மேலும் அண்ணனையும் உத்தம நம்பியையும் செல்வ மணவாள மாமுனிகளிடம் தஞ்சம் புக உத்தரவிட்டார்.
கனவிலிருந்து விழித்த கோயில் கந்தாடை அண்ணன் தானும் தமது பரிவாரத்துடன் , பொன்னடிக்கால் ஜீயர் புருஷகாரத்தோடு (பரிந்துரை) மணவாள மாமுனிகளின் திருவடிகளை அடைய , மணவாள மாமுனிகள் தானும் போர உகந்து இவர்களை ஏற்று பஞ்ச ஸம்ஸ்காரம் செய்துவைக்கிறார்.
ஆய்ச்சியாரின் திருமகனாரான அப்பாய்ச்சியாரண்ணா மணவாள மாமுனிகளை ஆஸ்ரயிக்க வேண்டும் என்று திருவுள்ளம் கொள்ள, மணவாள மாமுனிகள் தனது ப்ராண ஸுஹ்ருதான பொன்னடிக்கால் ஜீயரை தனது ஸிம்மாசனத்தில் அமர்த்தி தனது திருவாழி திருச்சங்குகளையும் அளித்து அப்பாய்ச்சியாரண்ணாவிற்கு பஞ்ச ஸம்ஸ்காரம் செய்விக்கச் சொன்னார். முதலில் மறுக்க முற்பட்டாலும் ஆச்சார்யன் திருவுள்ளத்தை ஏற்றாக வேண்டியபடியால் பொன்னடிக்கால் ஜீயர் தானும் அப்பாய்ச்சியாரண்ணாவிற்கு பஞ்ச ஸம்ஸ்காரம் செய்கிறார்.
மணவாள மாமுனிகளின் பூர்வாஸ்ரம திருக்குமாரரான எம்மையன் இராமானுசன் ஆழ்வார் திருநகரியில் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் (மணவாள மாமுனிகள் பால் இவர் கொண்ட ஈடுபாட்டினால் பின்னாட்களில் ஜீயர் நாயனார் என்று வழங்கப்படுகிறார்) மற்றும் பெரியாழ்வார் அய்யன் என்னும் இரண்டு திருகுமாரர்களைப் பெற்றெடுத்தார்.
நம்மாழ்வாருக்கு மங்களாசாஸனம் செய்யத் திருவுளம் கொண்ட பெரிய ஜீயர் , பெரிய பெருமாளின் உத்தரவு பெற்றுக் கொண்டு தாமிரபரணி ஆற்றங்கரையை அடைந்து தனது நித்ய கர்மங்களைச் செய்து பின்னர் முறையே பவிஷ்யதாசார்யனையும், திருவாய்மொழிப் பிள்ளையையும் மற்றும் அவரது திருவாராதனப் பெருமாளான இனவாயர் தலைவனையும் , நம்மாழ்வாரையும் பொலிந்து நின்ற பிரானையும் மங்களாசாஸனம் செய்தார்.
பின்னர் ஆச்சார்ய ஹ்ருதயத்தின் ஒரு சூர்ணிகையில் சந்தேகம் ஏற்பட அதற்குத் தெளிவு வேண்டி, மணவாள மாமுனிகள் திருவாய்மொழிப் பிள்ளையுடன் பயின்ற திருநாராயணபுரத்து ஆயியை காணப் புறப்படுகிறார். இந்நிலையில் இவரைக் காண திருவுள்ளம் கொண்ட ஆயி திருநாராயணபுரத்திலிருந்து புறப்பட்டுவர இருவரும் ஆழ்வார்திருநகரியின் எல்லையில் சந்திக்கின்றனர்.
ஆயியை கண்டதும் இவர் ஒரு தனியன் ஸாதித்து அவரைக் கொண்டாட அவரோ இவரை எம்பெருமானாரோ அல்ல காரிமாறனோ அல்ல பொலிந்து நின்ற பிரானோ என்று பாடி பரவஶித்தார் . சிலகாலம் கழித்து ஆயி திருநாராயணபுரத்திற்கு மீளப் பெரிய ஜீயர் தானும் ஆழ்வார்திருநகரியில் எழுந்தருளி இருந்தார்.
இதனிடையே மணவாள மாமுனிகளின் பெருமையைக் கண்டு பொறாமை கொண்ட சிலர் இவரது மடத்திற்குத் தீ வைக்க, ஒரு பாம்பின் உருக்கொண்டு மடத்தை விட்டு வெளியேறி ஸ்ரீ வைஷ்ணவர்கள் நடுவே நின்று கொண்டு நடப்பதைக் கண்டார் பெரிய ஜீயர். இதனை அறிந்து குற்றவாளிகளைத் தண்டிக்க முயன்ற அரசனைக் தடுத்து தன்பால் குற்றம் செய்தவர்களைக் காத்தருளினார் மாமுனிகள்.
இவ்வாறாக இவரின் பெரும் கருணையை உணர்ந்த அவர்களும் தமது குற்றத்தை உணர்ந்து, பெரிய ஜீயர் திருவடிகளைத் தஞ்சம் அடைந்தார்கள். லோக குருவான பெரிய ஜீயரின் வைபவங்களை கண்டு உருகிய அரசனும் பெரிய ஜீயரிடத்தில் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து ஆழ்வார் ஆதிநாதன் ஸந்நிதிக்கும் திருக்குறுங்குடி ஸந்நிதிகளுக்கும் பல தொண்டுகளை ஜீயர் திருவுள்ள இசைவிற்குச் செய்தார் .
மாமுனிகள் திருவரங்கம் திருப்பதிக்குத் திரும்பி மீண்டும் தனது கைங்கர்யங்களைத் தொடர்ந்தார். இந்நிலையில் எறும்பி என்னும் கிராமத்திலிருந்து எறும்பியப்பா என்னுமவர் கோயில் கந்தாடை அண்ணனுடன் வந்து பெரிய ஜீயரைச் ஸேவித்துப் பின் ததியாராதனையில் பிரஸாதம் பெற்றுக் கொள்ளாது தனது கிராமத்திற்குத் திரும்பி விட்டார்.
இதனால் எறும்பியப்பாவின் திருவாராதன பெருமாளான சக்கரவர்த்தித் திருமகனார் இவர் திருவாராதனம் செய்ய முயலுகையில் திருக்காப்பை நீக்காமலேயே இருந்து விட்டார்.
பின்னர் பெருமாள் எறும்பியப்பாவிடம் தனது இளையபெருமாளான செல்வ மணவாள மாமுனிகளிடம் எறும்பியப்பா அபசாரபட்டதாகவும், பெரிய ஜீயரிடத்தில் பிரஸாதம் பெற்றாலே அன்றித் தான் திருக்காப்பை நீக்கப் போவதில்லை என்றும் ஸாதிக்க, திருவரங்கம் விரைந்த எறும்பியப்பா கோயில் கந்தாடை அண்ணன் புருஷகாரத்துடன் பெரிய ஜீயரைத் தஞ்சம் அடைந்தார். பின்னர் எறும்பிக்கு மீண்ட எறும்பியப்பாவிற்கு தனது கோயிலாழ்வாரின் திருக்காப்பை நீக்கி எம்பெருமான் அருள் புரிந்தார்.
பின்னர் திருவரங்கத்தில் பெரிய ஜீயரிடம் இருந்த இவர்க்கு, தனது தகப்பனாரின் அழைப்பின் பெயரில் மாமுனிகள் இவர்க்கு எறும்பிக்கு விடை கொடுக்க, ஆச்சார்யனை பிரிந்த துயர் தாளாது பூர்வ தினசர்யை உத்தர தினசர்யை என்று மணவாள மாமுனிகளின் அன்றாடச் செயல்களை அனுபவிக்கும் இரண்டு பகுதிகளைக் கொண்ட ப்ரபந்தத்தை இவர் அனுகிரஹித்தார்.
இளம் வயதிலேயே பாண்டித்ய பேரறிவாற்றலை வெளிப்படுத்திய கந்தாடை நாயனை ஜீயர் தானும் பாராட்டினார் .அப்பிள்ளை மற்றும் அப்பிள்ளார் பொன்னடிக்கால் ஜீயர் புருஷகாரத்தோடே பெரிய ஜீயர் திருவடிகளை தஞ்சம் அடைந்தனர்.
ஒருநாள், திருவரங்கத்தில் கைங்கர்யங்களில் முக்கியமான பங்கு வகித்துப் பெரிய பெருமாளிடம் திருவாலவட்டம் வீசித் தொண்டாற்றிவந்த உத்தம நம்பி , மணவாள மாமுனிகள் திருவரங்கன் மங்களாசாஸனத்திற்கு வந்த வேளையிலே அவரை விரைவாகக் கிளம்பச் சொல்ல மணவாள மாமுனிகளும் அவ்வாறே செய்தார்.
இதனைத் தொடர்ந்து உத்தம நம்பி சற்றே கண் அயர்ந்த வேளையிலே பெரிய பெருமாள் தானும் அவரது கனவில் தோன்றி தனது திருவனந்தாழ்வானும் மணவாள மாமுனிகளும் வேறல்ல என்பதை உணர்த்தத் தான் செய்த அபசாரத்தை பொருத்தருளும்படி பெரிய ஜீயர் மடத்திற்கு விரைந்து பெரிய ஜீயரை பிரார்த்திக்கலானார் உத்தம நம்பி. அன்று தொட்டுப் பேரன்போடு பெரிய ஜீயர் திருவடிவாரங்களில் தொண்டாற்றி வந்தார் உத்தம நம்பி.
சடகோபக் கொற்றி என்னும் அம்மையார் ஆய்ச்சியாரிடம் அருளிச் செயல்களைக் கற்றுக் கொண்டு வந்தார். ஒரு பகல் பொழுதில் மணவாள மாமுனிகள் எழுந்தருளியிருந்த அறையின் சாவி துவாரம் வழியாக உள்ளே பார்க்க முயன்ற சடகோபக் கொற்றி , மணவாள மாமுனிகள் தனது ஆதிஶேஷ ஸ்வரூபத்துடன் உள்ளே இருப்பதைக் கண்டு திகைத்தார். வெளியிலே கேட்ட சத்தத்தைத் தொடர்ந்து காரணத்தை விசாரித்த மணவாள மாமுனிகளிடம் தான் கண்டதை அம்மையார் கூற, புன்முறுவலுடன் கண்டதை ரகசியமாக வைத்துக் கொள்ளும்படி பெரிய ஜீயர் அறிவுறுத்தினார்.
ரஹஸ்ய கிரந்தங்களுக்கு உரை எழுதத் திருவுள்ளம் கொண்ட மணவாள மாமுனிகள் முமுக்ஷுப்படி, தத்வ த்ரயம் மற்றும் ஸ்ரீ வசனபூஷணத்திற்கு வேதம், வேதாந்தம், புராணங்கள், அருளிச் செயல் போன்றவைகளைக் கொண்டு பரக்க உரை எழுதினார். இவற்றைத் தொடர்ந்து இராமானுச நூற்றந்தாதி, ஞான ஸாரம் மற்றும் ஆச்சார்யனேயே அனைத்துமாய் உணர்த்தக்கூடிய ப்ரமேய ஸாரம் உள்ளிட்டவைகளுக்கு உரை அருளிச்செயதார் .
திருவாய்மொழியின் சொற்களையும் பொருளையும் தொகுத்துச் சுருங்க அளிக்கும்படிக்குச் சில ஸ்ரீவைஷ்ணவர்கள் பெரிய ஜீயரை ப்ரார்த்திக்கத் திருவாய்மொழி நூற்றந்தாதி என்னும் வெண்பா அமைப்பிலுள்ள நூறு பாசுரங்களை சாதித்தார். வெண்பா என்பது கற்க எளிமையாக இருப்பினும் அமைக்கக் கடினமான ஒன்று.
அதிலும் இந்தத் திருவாய்மொழி நூற்றந்தாதியில் ஒரு பதிகத்தின் முதல் மற்றும் இறுதிச் சொற்களே பாசுரத்தின் முதல் மற்றும் இறுதிச் சொற்களாய் வைத்து, முதல் இரண்டு வரிகளில் பதிகத்தின் பொருளையும் அடுத்த இரண்டு வரிகளில் நம்மாழ்வார் விஷயமான கொண்டாட்டத்தையும் வைத்து அமைத்துள்ளார்.
பூர்வர்கள் ஸாதித்த விஷயங்கள் அனைத்தையும் பதிவிட்டுச் ஸாதிக்கும் படி சில ஸ்ரீவைஷ்ணவர்கள் ப்ரார்த்திக்க, மாமுனிகள் தானும் ஆழ்வார்கள் திருநக்ஷத்ரம் மற்றும் திருவவதார ஸ்தலங்கள், திருவாய்மொழியின் ஏற்றம், திருவாய்மொழி வ்யாக்யானங்களின் ஏற்றம், அவைகளைச் ஸாதித்தவர்களின் விவரங்கள், பிள்ளை உலகாரியனின் திருவவதாரம் மற்றும் ஏற்றம், சீர் வசனபூஷணத்தின் ஏற்றம் , ஆச்சார்யனுக்கு ஆற்றும் தொண்டின் ஏற்றம் போன்றவற்றை எடுத்துரைக்கக் கூடிய ப்ரபந்தமான உபதேச ரத்தின மாலையைச் ஸாதித்தார்.
மாயவாதிகள் சிலர் இவரை வாதத்திற்கு அழைக்க, வாதம் செய்வதில்லை என்ற தனது கோட்பாட்டில் இருந்து கொண்டு அந்த அழைப்பை மறுத்து தனது சீடரான வேடலைப்பையை வாதத்திற்கு அனுப்பி வெற்றி பெறச் செய்தார் . ஆயினும் அதனைத் தொடர்ந்து வேடலைப்பை தனது ஊருக்கு விடைபெற்றுக் கொண்டார்.
இதனிடையே காஞ்சிபுரத்திலிருந்து பெரும் வித்வானான பிரதிவாதி பயங்கரம் அண்ணா திருவேங்கடமுடையான் மீது தான் கொண்ட பெரும் அன்பினால் தனது தேவிகளோடே அப்பன் பொன் மலையை வந்து அடைந்து திருமலையிலே தீர்த்தம் சுமந்து கைங்கர்யம் செய்து வந்தார்.
இவ்வாறிருக்க திருவரங்கத்திலிருந்து ஒரு அடியார் திருவேங்கடம் வந்தடைந்து பிரதிவாதி பயங்கரம் அண்ணாவைச் சந்தித்து, இவர் அப்பனுக்கு தீர்த்தம் எழுந்தருளப்பண்ணும் வேளையிலே திருவரங்கத்தில் நடக்கும் விசேஷங்களைக் கேட்க , மணவாள மாமுனிகள் எழுந்தருளியிருந்து காலக்ஷேபம் ஸாதிக்கும் வைபவத்தை விரிவாகக் கூறுகிறார்.
மணவாள மாமுனிகளின் வைபவத்தைக் கேட்டு மெய்மறந்து தீர்த்தம் கொண்டு வரும் வேளையிலே காலதாமதம் ஆக, தீர்த்தப் பரிமளம் சேர்ப்பதற்கு முன்னராகவே தீர்த்தம் ஸமர்ப்பிக்கப்பட்டு விடுகிறது. பரிமளமின்றி தீர்த்தம் கொண்டு செல்லப்பட்டதை உணர்ந்து பரிமளங்களை எடுத்துக் கொண்டு ஸந்நிதிக்கு விரைந்த வேளையிலே அப்பன் தானும் என்றைக்கும் இல்லாது இன்று தீர்த்தம் நன்றாகவே மணந்தது என்று திருவாய்மலர்ந்தருள, இதனால் பெரிய ஜீயர் வைபவத்தை உணர்ந்த அண்ணா தானும் அப்பனிடம் விடைபெற்றுக்கொண்டு பெரிய ஜீயரை அடைய பெரிய கோயில் சென்றார்.
பெரிய ஜீயர் மடத்தில் பிரதிவாதி பயங்கரம் அண்ணா நுழையும் வேளையிலே, பெரிய ஜீயர் திருவாய்மொழியில் “ஒன்றும் தேவும்” பதிக்கத்திற்குக் காலக்ஷேபம் அருளிக் கொண்டிருக்க , பெரிய ஜீயர் அனைத்து சாஸ்த்ரார்த்தங்களைக் கொண்டு விளக்குவதைக் கண்டு அண்ணா ப்ரமிக்கலானார் . இதனைத் தொடர்ந்து 3 வது பாசுரத்தின் அர்த்தம் பெற வேண்டுமானால் அதற்கு ஓராண் வழி ஆச்சார்ய சம்பந்தம் மூலமாக ஆழ்வார் சம்பந்தம் வேண்டும் என்று காலக்ஷேபத்தை நிறுத்தி விடுகிறார் மணவாள மாமுனிகள்.
இதனைத் தொடர்ந்து அண்ணா பெரிய பெருமாளை மங்களாசாஸனம் செய்யச் சென்ற வேளையிலே அர்ச்சக முகமாய் பெரிய பெருமாள் அண்ணாவை மணவாள மாமுனிகளை ஆஷ்ரயிக்கும் படி நியமிக்க அவ்வாறே பொன்னடிக்கால் ஜீயர் புருஷகாரத்தோடே ஆஷ்ரயித்து மணவாள மாமுனிகளோடே சில காலம் திருவரங்கம் திருப்பதியில் அண்ணா எழுந்தருளியிருந்தார்.
மீண்டும் மணவாள மாமுனிகள் திருவேங்கடத்தானுக்குப் பல்லாண்டு பாட யாத்திரை மேற்கொண்டார். திருவேங்கடம் அடையும் வழியிலே காஞ்சிபுரம் சென்று தேவப் பெருமாளுக்குப் பல்லாண்டு பாடிப் பின் சில காலங்கள் அங்கேயே எழுந்தருளி இருந்து அடியார்களைத் திருத்தி பணிகொண்டார்.
பின் அப்பாச்சியாரண்ணாவைத் தன் பிரதிநிதியாய் காஞ்சியிலே எழுந்தருளியிருந்து அடியார்களைத் திருத்திப் பணிகொள்ள நியமித்தார். பிறகு திருக்கடிகை, எறும்பி, திருப்புட்குழி வழியாகத் திருவேங்கடத்தை வந்தடைந்தார் .
திருவேங்கடமுடையானை மங்களாசாஸனம் செய்துவிட்டு பின்னர் எம்பெருமானாரால் ஸ்தாபிக்கப்பட்ட திருவேங்கடம் கோயில் பெரிய கேள்வி அப்பன் ஜீயருக்கு துணையாய் திருவேங்கடம் கோயில் சிறிய கேள்வி அப்பன் எனும் ஒரு ஜீயர் ஸ்வாமியை நியமித்தார், பிறகு திருவேங்கடத்திலிருந்து திருஎவ்வுளூர் சென்று வீரராகவனையும், திருவல்லிக்கேணி சென்று வேங்கட கிருஷ்ணனையும் மற்ற எம்பெருமான்களையும் மங்களாசாஸனம் செய்தார் .
பின்னர் மதுராந்தகத்திலே பெரிய நம்பிகள் இளையாழ்வார்க்கு பஞ்ச ஸம்ஸ்காரம் செய்த இடத்தைச் சேவித்துத் திருவாலி-திருநகரியைச் சென்றடைந்தார். அங்கே மங்கைவேந்தனான திருமங்கை ஆழ்வாரின் வடிவழகில் மயங்கி ஆழ்வார்க்கு வடிவழகு பாசுரம் சமர்ப்பித்து அங்கிருந்த எம்பெருமான்களுக்கு மங்களாசாஸனம் செய்தார். பின் திருக்கண்ணபுரம் சென்று ஸர்வாங்க ஸுந்தரனான அவ்வூர் எம்பெருமானைக் கைதொழுது அங்கு மங்கைவேந்தனுக்கு ஒரு ஸந்நிதியை அமைத்துவிட்டுத் திருவரங்கத்திற்கு திரும்பினார்.
தாம் முன்னரே பணித்த படிக்கு அப்பாச்சியார் அண்ணாவைக் காஞ்சிபுரம் செல்லப் பணிக்க , தனது பிரிவால் துன்புறுதலை உணர்ந்து மணவாள மாமுனிகள், தனது சொம்பு ராமானுஜத்தைக் கொண்டு தனது இரண்டு திருமேனிகளை செய்து அதில் ஒன்றை அப்பாச்சியார் அண்ணாவிடமும் ஒன்றைப் பொன்னடிக்கால் ஜீயரிடம் கொடுத்தருளினார்.
இந்தத் திருமேனிகளை இன்றளவும் சிங்கபெருமாள் கோயில் முதலியாண்டான் திருமாளிகையிலும், நாங்குநேரி வானமாமலை மடத்திலும் நாம் சேவிக்கலாம். மேலும் தனது பெருமாளான “என்னைத் தீமனம் கெடுத்தாய்” – அவரையும் அப்பாச்சியார் அண்ணாவிற்கு அருளினார். இந்த எம்பெருமானையும் நாம் சிங்கப்பெருமாள் கோயிலிலே இன்றளவும் சேவிக்கலாம் .
மணவாள மாமுனிகள் பிரதிவாதி பயங்கரம் அண்ணாவை ஸ்ரீ பாஷ்ய ஆச்சார்யனாகவும், கோயில் கந்தாடை அண்ணன் மற்றும் ஸுத்த ஸத்வம் அண்ணனை பகவத் விஷய ஆச்சார்யனாகவும் நியமித்தார். மேலும் கந்தாடை நாயனை ஈடு 36000படிக்கு அரும்பதம் ஸாதிக்குமாறு நியமித்தார்.
மணவாள மாமுனிகளிடமிருந்து திருவாய்மொழியின் விஶேஷ அர்த்தங்களைத் தான் எவ்வித இடையூறுகளும் இன்றிக் கேட்க வேண்டும் என்ற ஏக்கமும் , மணவாள மாமுனிகளைத் தனக்கு ஆச்சார்யனாகப் பெற வேண்டும் என்ற திருவுள்ளமும் பெரிய பெருமாளுக்கு ஏற்பட்டது.
ஒரு பவித்ரோத்ஸவ சாற்றுமறை நன்னாளிலே, மங்களாசாஸனம் செய்யத் திருப்பவித்ரோத்ஸவ மண்டபத்திற்கு எழுந்தருளிய மணவாள மாமுனிகளை அங்கே எழுதருளியிருந்த நம்பெருமாள் அனைத்து கைங்கர்யபரர்கள் , ஜீயர் ஸ்வாமிகள் போன்றோர் முன்னிலையில் , ஈடு 36000த்தின் வ்யாக்யானங்களைக் கொண்டு நம்மாழ்வாரின் திருவாய்மொழியின் அர்த்தங்களைத் தனக்குக் காலக்ஷேபம் செய்ய வேண்டும் என்று நியமித்தார்.
இந்தக் காலக்ஷேபம் எந்த விதமான இடையூறுகளும் இடைஞ்சல்களும் இன்றி நடக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டார். இதனை மணவாள மாமுனிகள் பெருமிதத்தோடும் , இப்பணிக்குத் தன்னைப் பெரிய பெருமாள் தேர்ந்தெடுத்ததை மிக நைச்யத்தோடும் (தன்னடக்கத்தோடும்) ஏற்று மகிழ்ந்தார்.
இதனைத் தொடர்ந்து ,அடுத்த நாள் மணவாளமாமுனிகள் பெரிய பெருமாள் ஸந்நிதி துவாரபாலகர்களுக்கு வெளியில் அமைந்த பெரிய திருமண்டபத்திற்கு எழுந்தருளுகையில், நம்பெருமாள் தனது தேவிமார்களோடும், ஸேனை முதல்வரோடும், கருடனோடும், திருவானந்தாழ்வானோடும் மற்றுமான ஆழ்வார் ஆச்சார்யர்கள் பரிவாரங்களோடும் காத்துக் கொண்டிருந்தார்.
இதனைக் கண்டு நெகிழ்ந்த பெரிய ஜீயர் காலக்ஷேபத்தை ஈடு 36000 படி வ்யாக்யானத்தை 6000 படி , 9000 படி , 24000 படி, 12000 படி உள்ளிட்ட மற்ற வ்யாக்யானங்களோடு தொடங்குகிறார். பாசுரங்களுக்குப் பதபதார்த்தம் (சொல்) இது என்றும், ஸ்ருதி, ஸ்ரீபாஷ்யம், ஸ்ருதப்ரகாஷிகை, ஸ்ரீ கீதாபாஷ்யம், ஸ்ரீ பாஞ்சராத்ரம், ஸ்ரீ ராமாயணம், ஸ்ரீ விஷ்ணு புராணம் போன்றவைகளின் அடிப்படையில் அர்த்தம் இது என்றும் மிக விஶதமாக நெய்யிடை நல்லதோர் சோறாய் சமைத்து சுமார் 10 மாத காலம் ஸாதித்து வந்தார்.
இறுதியிலே சாற்றுமறைக்கான தினம் ஆனி திருமூலத்தன்று அமைகிறது. இதனைத் தொடர்ந்து நம்பெருமாள் அரங்கநாயகம் என்ற சிறு பிள்ளையின் வடிவில், மண்டபத்தில் உள்ளோர் தடுத்தும், பெரிய ஜீயர் திருமுன்பே வந்து தோன்றி “ஸ்ரீசைலேஸ தயாபாத்ரம் ” என்று ஸாதித்து மேலும் ஸாதிக்குமாறு கேட்க “தீபக்த்யாதி குணார்ணவம்” என்றும் மேலும் ஸாதிக்கப் பணிக்கும் பொழுது “யதீந்திர ப்ரவணம் வந்தே ரம்யஜாமாதரம் முனிம் ” என்று முடித்து ஓடி சென்றுவிட்டார்.
இந்த தனியன் ஸ்லோகத்தை ஓலைப்படுத்தி அச்சிறுவனை மீண்டும் வாசிக்கக் கூறுகையில், அச்சிறுவனால் அதைப் படிக்க இயலாமையைக் கண்டு அனைவரும் முன்னர் வந்த சிறுவன் நம்பெருமாளே அன்றி ஸாதாரண பாலகன் அல்லன் என்று உணர்ந்தனர்.
நம்பெருமாள் இவ்வாறாக ஆச்சார்யனுக்குத் தனியன் ஸமர்பித்ததனைத் தொடர்ந்து அந்தத் தனியனை பட்டோலைப் படுத்தி பெரிய பெருமாள் திருமுன்பே ஸமர்ப்பிக்கையிலே, எம்பெருமான் அனைத்து திவ்யதேச விலக்ஷணர்களினாலும் அருளிச்செயல் தொடங்குவதற்கு முன்னரும் அருளிச்செயல் ஸாதித்த பின்னரும் இந்தத் தனியன் அனுஸந்திக்க படவேண்டியது என்று நியமிக்க ஸேனை முதல்வரிடமிருந்து அனைத்து திவ்ய தேச விலக்ஷணர்களுக்கும் ஸ்ரீமுகம் அனுப்பப்பட்டது .
இந்த வேளையிலே , ஸ்ரீ வைஷ்ணவர்களின் ஆணைக்கிணங்க மணவாள மாமுனிகளைக் கொண்டாடும் ஒரு வாழி திருநாமத்தை அப்பிள்ளை ஸாதித்தார். மணவாள மாமுனிகளின் ஒப்பற்ற இந்த வைபவம் காட்டு தீ போல் அனைத்து திக்குகளிலும் பரந்தது .
மணவாள மாமுனிகளின் பெருமைகளை நமக்கு உணர்த்தும் வகையில் திருவேங்கடமுடையான், திருமாலிரும்சோலை அழகர் மற்றும் பத்ரீ நாராயணன் தானும் இந்தத் தனியனை வெளியிட்டு இதனை அனுஸந்திக்க நியமிக்கிறார்கள்.
மணவாள மாமுனிகளின் திருவுள்ளத்தில் வட நாட்டு திவ்யதேசங்களின் நினைவு வர, இவரின் சார்பில் இவரது சிஷ்யர்கள் யாத்திரையை மேற்கொள்கின்றனர்.
தனது திவ்ய பாதுகைகளை மணவாள மாமுனிகள் எறும்பியப்பாவிற்கு தந்து அருளுகிறார்.
பின்னர் தனது திருவாராதன பெருமாளான அரங்கநகரப்பனைப் பொன்னடிக்கால் ஜீயரிடம் அளித்து, வானமாமலையில் ஒரு மடத்தை நிறுவி அங்கே தெய்வநாயகனுக்குக் கைங்கர்யம் செய்து வருமாறு பணிக்கிறார்.
மணவாளமாமுனிகள் பாண்டியநாட்டு யாத்திரையை மேற்கொள்கிறார் இம்முறை அவ்வூர்களை ஆண்டு வந்த சிற்றரசனான மஹாபலி வாணநாத ராயன் இவரைத் தஞ்சம் அடைந்து , பெரிய ஜீயரின் திருவுள்ளப்படிப் பல திவ்யதேச கைங்கர்யங்களைச் செவ்வனே செய்து வருகிறான்.
மதுரைக்கு செல்லும் வழியிலே ஒரு புளியமரத்தின் அடியில் தங்கி ஒய்வு எடுக்கிறார். பின் மணவாள மாமுனிகள் புறப்படும் வேளையிலே அடியார்கள் வேண்ட, அதை உகந்து தானும் அம்மரத்தை தொட்டு அதற்குப் பெரிய வீடளிக்கிறார். பின் எம்பெருமான்களுக்கு பல்லாண்டு பாடிவிட்டு திருவரங்கம் மீளுகிறார்.
தன் சீடர்கள் மூலமாக பல கைங்கர்யங்களைத் தானும் செய்து முடிக்கிறார். மேலும் திருமாலிரும்சோலை அழகருக்குக் கைங்கர்யம் செய்ய ஒரு ஜீயரை நியமித்து அங்கு அனுப்பிவைக்கிறார்.
பெரியவாச்சான் பிள்ளை, அருளிச் செயலுக்குச் செய்த வ்யாக்யானங்களிலிருந்து பெரியாழ்வார் திருமொழியின் சில பகுதிகள் காணாமல் போக, அவற்றுக்குச் சரியாகத் தொலைந்த வார்த்தைகள் வரை வ்யாக்யானம் செய்து அருளுகிறார்.
நாளடைவில் மணவாள மாமுனிகள் நோவு ஸாற்றிக்கொள்கிறார் (உடல் நலம் குன்றி விடுகிறது) ஆயினும் எழுதிக் கொண்டு வருகிறார். ஆச்சார்ய ஹ்ருதயத்திற்கு உரை எழுதுகையில் தன்னை மிகவும் வருத்திக் கொண்டு எழுதுகிறார். இவ்வாறு தன்னை வருத்திக் கொள்வதற்குக் காரணம் என்ன என்று சிஷ்யர்கள் வினவியதற்கு, இதனை வரும் ஸந்ததியினர் அறிவதற்காகத் தாம் மேற்கொள்வதாகச் ஸாதித்தார்.
மணவாளமாமுனிகளுக்கு தனது திருமேனியை விடுத்து திருநாட்டிற்கு எழுந்தருளவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கிநிற்க , எம்பெருமானாரிடம் தன்னை சேர்த்துக் கொள்ளும்படி ப்ரார்த்தித்து உருகி ஆர்த்தி ப்ரபந்தத்தை அருளிச் செய்தார். ஏராரும் எதிராசனாக உதித்திருந்தும் இதனைச் செய்ததற்குக் காரணம் இவ்வாறே தான் நாம் அனைவரும் கேட்கவேண்டும் என்பதை நமக்கு உணர்த்தும் பொருட்டேயாம்.
இறுதியில் லீலா விபூதியை விட்டு புறப்படத் தான் திருவுள்ளம் பூண்டார் பெரிய ஜீயர்.
ஓர் முறை அருளிச் செயல்களைக் கேட்டு அனுபவிக்கவேண்டும் என்று இவர் திருவுள்ளம் கொள்ள அதனை பக்தியோடும் பெருத்த மையலினோடும் அடியார்கள் செய்து வைத்தனர். இதனைத் தொடர்ந்து விசேஷமான ததீயாராதனையும் செய்து வைத்து அனைவரிடமும் அபராத க்ஷாமணம் கேட்டு நிற்க, சூழ்ந்த அடியார்கள் செல்வ மணவாள மாமுனிகளைக் குற்றொமொன்றும் இல்லாதவர் என்று கொண்டாடினர். இதனைத் தொடர்ந்து அனைவருக்கும் பெரிய பெருமாளின் கைங்கர்யங்களைச் செவ்வனே அன்புடனும் கவனத்துடனும் செய்து கொண்டுவருமாறு நியமித்தார்.
இதனை அடுத்து “பிள்ளை திருவடிகளே சரணம்” என்றும் “வாழி உலகாசிரியன் ” என்றும் “எம்பெருமானார் திருவடிகளே சரணம் ” என்றும் அனுஸந்தித்து , எம்பெருமானைக் காணவேண்டும் என்ற மையல் பெருகத் தனது நலமுடைய கருணை விழிகளை மலரத் திறந்து எழுந்தருளியிருக்க, அம்மாத்திரமே எம்பெருமான் கருடன் மீது ஸேவை ஸாதித்துப் பெரிய ஜீயரை தன்னடிச்சோதியில் சேர்த்துக் கொண்டான்.
கூடி இருந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் அனைவரும் துயரம் தாளாது வேரற்ற மரம் போல் சாய்ந்து விழுந்தனர். பெரிய ஜீயர் திருநாட்டிற்கு எழுந்தருளிய பிறகு அவர் பிரிவைத் தானும் தாளமுடியாத படியினால் லட்சுமிநாதனான பெரிய பெருமாளும் போகத்தை மறுத்துவிட்டார். பின்னர் ஸ்ரீவைஷ்ணவர்கள் தங்களைத் தாமே தேற்றிக் கொண்டு, பெரிய பெருமாளின் ஆணைக்கு இணங்க, ஆச்சார்யனின் சரம கைங்கர்யங்களைப் பெரிய பெருமாளின் ப்ரம்மோத்ஸவத்தை காட்டிலும் சிறப்பாகச் செய்வித்தனர்.
வடநாட்டு யாத்திரையிலிந்து திரும்பிய பொன்னடிக்கால் ஜீயர் தாமும் ஆச்சார்யனின் சரம கைங்கர்யங்களைச் செவ்வனே செய்து முடிக்கிறார்.
*#மணவாளமாமுனிகளின்_உபதேசங்கள்* (ஞான அனுஷ்டான பூர்த்தி)
ஒரு முறை இரண்டு ஸ்ரீவைஷ்ணவர்கள் தங்களிடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். அதே சமயம் இரண்டு நாய்களும் தங்களுக்குள் சண்டையிட்டு கொண்டிருந்தன . இந்நிலையில் மணவாள மாமுனிகள் அவ்விரு நாய்களையும் கண்டு “நீங்கள் இருவரும் இந்த ஸ்ரீ வைஷ்ணவர்கள் போல் ஸ்ரீ வசனபூஷணம் கற்றிருக்கிறீர்களோ, இத்தனைச் செருக்குடன் இருக்க ?” என்று கேட்க, அம்மாத்திரத்திலேயே அவ்விருவரும் தங்கள் பிழையை உணர்ந்து மணவாள மாமுனிகள் பொன்னடியில் மன்னிப்பு வேண்டி அன்று தொடங்கி ஸாத்விகர்களாய் இருந்தனர்.
ஒருமுறை வட தேசத்திலிருந்து ஒருவர் இவரிடம் சில பணத்தை ஸமர்ப்பிக்க, அது நேரான வழியில் ஸம்பாதித்ததல்ல என்பதை புரிந்துக்கொண்ட பெரிய ஜீயர், அதனை திருப்பித்தந்து விடுகிறார். பொருள் மீது அறவே ஆசை இன்றி, ஸ்ரீவைஷ்ணவர்கள் கொடுக்கும் ஸமர்பணைகளையே கைங்கர்யத்திற்கும் ஏற்றுக்கொண்டார்.
ஒருமுறை ஒரு வயதான மூதாட்டி இவரது மடத்திற்கு வந்து தான் ஓரிரவு தங்குவதற்கு அனுமதி வேண்ட, அதை மறுத்த ஜீயர் தானும், “கிழட்டு அணிலும் மரம் ஏறும்” என்று ஸாதித்தார். அதாவது வயதான பெண்மணி தங்கினாலும் , வெளியிலுள்ளோர் மணவாள மாமுனிகளின் வைராக்கியத்தைச் சந்தேகப் பட நேரும் என்பதால் , அது போன்ற அபசாரங்களுக்கு சிறிதும் இடம் கொடுக்காது வந்தார் மணவாளமாமுனிகள்.
ஒரு ஸ்ரீ வைஷ்ணவ அம்மங்கார், தளிகைக்கு காய்களைத் திருத்தி கைங்கர்யம் செய்து கொண்டிருந்தார். இதனை அவர் பக்தி பாவம் இன்றி செய்வதை உணர்ந்த பெரிய ஜீயர், கைங்கர்யத்தில் ஈடுபடுவோர் முழு பாவத்துடன் ஈடுபடவேண்டும் என்பதால் தண்டனையாக அவரை 6 மாத காலம், கைங்கர்யத்தை விட்டு விலக்கினார் .
வரம்தரும்பிள்ளை என்ற அடியவர், மணவாள மாமுனிகளைத் தனியாக வந்து வணங்கினார். இதனைத் தொடர்ந்து பெரிய ஜீயர் எம்பெருமானிடத்திலோ ஆச்சார்யனிடத்திலோ ஸ்ரீ வைஷ்ணவர்கள் தனியே செல்லக் கூடாது என்றும் கூடி இருந்தே குளிர்தல் வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
பாகவத அபசாரம் கொடுமைமிகவாய்ந்தது என்பதை அறிவுறுத்தும் மணவாள மாமுனிகள் ஸ்ரீவைஷ்ணவர்கள் பரஸ்பரம் மரியாதை வைத்துக்கொள்வதை கண்காணித்து வந்தார்.
அர்ச்சகர் ஒருவர், மாமுனிகளின் சீடர்கள் தம்மை மதிப்பதில்லை என்று மணவாள மாமுனிகளிடம் தெரிவிக்க, அர்ச்சகரை எம்பெருமானும் பிராட்டியாராகவும் காணுமாறு தன சிஷ்யர்களுக்கு அறிவுறுத்தினார்.
செல்வந்தரான ஒரு ஸ்ரீவைஷ்ணவர், மணவாளமாமுனிகளிடத்தே ஸ்ரீவைஷ்ணவ லக்ஷணங்கள் யாவை என்று கேட்க, இதனை தொடர்ந்து பெரிய ஜீயர் அவற்றை நன்கு விளக்கினார். அவை இங்கே சுருங்க காண்போம், அதாவது உண்மையான ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு,
1.எம்பெருமானின் திருவடிகளை தஞ்சமடைதல் மட்டும் போறாது.
2.எம்பெருமானின் தீயிற் பொலிகின்ற செஞ்சுடராழி திருச்சக்கரத்தின் லாஞ்சனம் மட்டும் பெற்றுக்கொண்டால் போறாது.
3.ஆச்சார்யனிடத்தே பாரதந்த்ரனாய் இருத்தல் மாத்திரம் போறாது
4.பாகவதர்களுக்கு அடிமை செய்தல் மாத்திரம் போதாது
இந்த குணங்களோடு
5.சரியான நேரத்தில் எம்பெருமான் திருவுள்ளம் உகக்கும் கைங்கர்யங்களை செய்து வருதல் வேண்டும்.
ஸ்ரீவைஷ்ணவர்கள் திருவுள்ளபடி வந்து தங்கி தங்களுக்குப் பிடித்தவைகளைச் செய்வதற்குப் பாங்காக இல்லத்தை வைத்திருத்தல் வேண்டும்.
பெரியாழ்வார் “என்தம்மைவிற்கவும் பெறுவார்களே ” என்று ஸாதித்ததற்கு அனுகூலமாக, ஸ்ரீவைஷ்ணவர்கள் நம்மை விற்பதற்கும் நாம் தயாராக இருத்தல் வேண்டும்.
பாகவத சேஷத்வத்தை வளர்த்துக்கொள்வோம் ஆகில், எம்பெருமான் நமக்கு அனைத்து ஸம்பிரதாய அர்த்தங்களும் விளங்குமாறு அருளிவிடுகிறார். நிஷ்டையில் இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள், தனித்து எதையும் பயிலவேண்டியது இல்லை ஏனென்றால்,அவர்கள் இருப்பதே சரம நிஷ்டையில் தான் என்பதால்.
கடைபிடிக்காது உபதேசம் செய்தல் வீணான செயல். அவ்வாறு செய்தல் பதிவ்ரதையின் கடமைகளை தாஸி அறிவுறுத்துதல் போன்றுபொருந்தாத ஒன்று.
ஸ்ரீவைஷ்ணவர்களை வணங்குவதை விட உயர்ந்ததோர் தொண்டும் அல்ல அவர்களைப் பழிப்பதை விட கொடூரமான பாவமும் அல்ல.
இவ்வாறு ஜீயர் தம் அறிவுரைகளைப் பெற்ற அந்த ஸ்ரீவைஷ்ணவர் மணவாள மாமுனிகளிடத்தே பெருத்த பக்தி கொண்டு தன கிராமம் திரும்பியும் இவரை வணங்கிக் கொண்டே இருந்தார்.
*#செல்வ_மணவாளமாமுனிகளின்_ஒப்பற்ற_நிலை*
எல்லையற்ற பெருமைகளின் உறைவிடமான நம் பெரிய ஜீயர் வைபவத்தை முழுவதாகக் கூறி முடிக்கவல்லார் யார்? சுருங்க கண்டோம் என்ற திருப்தி அடைவோம்.
பெரியபெருமாள் இவரை ஆச்சார்யனாக ஏற்க, ஓராண் வழி ஆச்சார்ய குருபரம்பரையின் இறுதி ஆச்சார்யனாக எழுந்தருளி இருந்து குருபரம்பரா ஹாரத்தை பூர்த்தி செய்கிறார் .
பெரிய பெருமாள் இவரின் சீடர் ஆன படியால், இவர்க்கு தனது சேஷ பர்யங்கத்தைச் ஸமர்ப்பித்தார். இன்றும் மணவாள மாமுனிகள் சேஷ பீடத்திலேயே எழுந்தருளி இருப்பதை நாம் ஸேவிக்கலாம். இதை மற்ற ஆழ்வார் ஆச்சார்யர்களிடத்தே காண இயலாது.
தனது ஆச்சார்யனுக்குப் பெரிய பெருமாள் தானே தனியன் செய்து, மேலும் அனைத்து கோயில்கள், மடங்கள், திருமாளிகைகள் போன்ற இடங்களில் அருளிச்செயல் ஸேவிப்பதற்கு முன்னும் பின்னும் இதனைச் ஸேவிக்க உத்தரவும் இட்டார்.
ஆழ்வார்திருநகரியிலே அழகு திகழ்ந்திடும் ஐப்பசியில் திருமூலத்தன்று ஆழ்வார் மணவாள மாமுனிகளுக்குத் தன்னுடைய பல்லக்கு, திருக்குடை, திருவாலவட்டம், வாத்தியங்கள் போன்றவற்றை அனுப்பிப் பின் இவரைத் தனது ஸந்நிதிக்கு வரவழைக்கிறார். இதன் பின்னரே ஆழ்வார் திருமண் காப்பு அணிந்து கொண்டு பெரிய ஜீயருக்கு பிரஸாதங்களை அளிக்கிறார்.
மணவாளமாமுனிகளுக்கு இன்றும் திருவத்யயனம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒருவருக்குச் சீடர்களோ திருக்குமாரர்களோ தாங்கள் இருக்கும் வரை திருவத்யயனம் செய்து வைப்பார்கள். இவர் விஷயத்திலோ பெரிய பெருமாளே சீடனான படியால், இன்றைக்கும் தானே தனது அர்ச்சக பரிசாரகர்கள், வட்டில், குடை போன்ற விருதுகளை அனுப்பி திருவத்யயன உத்ஸவத்தைச் சிறப்பாக நடத்திவைக்கிறார். இது பெரிய ஜீயருக்கே உரிய தனிப்பெருமை.
தனக்கென்று எவ்வித கோலாகலங்களோ உத்ஸவங்களோ விரும்பாத பெரிய ஜீயர், திருவரங்கம் திருப்பதியிலும் ஆழ்வார்திருநகரியிலும் தனது திருமேனி மிகச் சிறியதாக இருக்க வேண்டும் என்றே நிர்ணயித்து நம் கவனம் யாதும் எம்பெருமானிடத்திலும் ஆழ்வார் இடத்திலுமே இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
யாரையும் கடிந்து பேசாத மென்மையான திருவுள்ளம் கொண்டவர் அழகிய மணவாள மாமுனிகள். சில இடங்களில் பூருவாசார்ய வ்யாக்யானங்களில் முன்னிற்குப் பின் முரணாக சில வார்த்தைகள் காணப்பட்டாலும், அதனைப் பெரிது படுத்தாது குற்றம் காணாது எழுந்தருளி இருந்தார்.
அருளிச் செயலிலேயே ஈடுபட்டிருந்த பெரிய ஜீயர், அருளிச் செயல்களையே கொண்டு வேதாந்த அர்த்தங்களை விளக்குவார். இவர் வந்து நம்மை கடாக்ஷிக்காது போயிருந்தால் ஆற்றில் கரைத்த புளியை போலே நம் ஸம்ப்ரதாயம் வீணாகி இருக்கும் .
பல தலைமுறைகள் பெற்ற பேற்றைப் பெற, பெரிய ஜீயர் அனைத்து வ்யாக்யானங்களையும் திரட்டித் தாமே பட்டோலைப் படுத்தினார்.
தன்னை நிந்தித்தோரிடமும் அபார கருணை காட்டுமவர் நம் பெரிய ஜீயர். அனைவரிடமும் மிருதுவாய் பேசுமவராம்.
மணவாள மாமுனிகளின் திருவடிகளைத் தஞ்சம் புகுவோம் ஆகில், விரஜை நதியைக் கடக்க உதவும் அமானவன் , நம் கையைப் பிடித்து ஸம்ஸாரத்திலிருந்து விடுதலை அளித்தல் திண்ணம்.
இராமன் பெரிய பெருமாளை வணங்குவது போல், தானே எம்பெருமானாராய் இருந்தும் நாம் அறிந்து அதன் படி நடக்கவேண்டும் என்பதற்காகத் தானே எம்பெருமானர் மீது பெருத்த மையல் கொண்டு எழுந்தருளி இருந்தார். இவரைப் போல் வேறொருவர் எம்பெருமானாராய் கொண்டாடுதல் அரிது. பூருவர்கள் ஸாதித்த நேர் தன்னின் படி வாழ்ந்த இவரின் வாழ்க்கையே நம் அனைவர்க்கும் உதாரணமாம்.
ஒருவர் எழுந்தருளி இருந்த காலத்திலேயே பல சீடர்கள் அவரைப் பல்வகையால் கொண்டாடுதல் என்பது இவர் விஷயத்தில் மாத்திரமே நடந்தது. வேறாருக்குமின்றி மணவாள மாமுனிகளுக்கே ஸுப்ரபாதம், மங்களம், கண்ணி நுண் சிறுத்தாம்பு, அமலனாதிபிரான், பூர்வ தினசர்யை ,உத்தர தினசர்யை, வரவரமுனி ஸதகம், வரவரமுனி அஷ்டகம் இன்னும் எவ்வளவோ துதிகள் பாடப் பட்டன. இது போன்ற ஒரு கொண்டாட்டத்தை வேறொருவரிடத்தில் காண்பதரிது.
*#மணவாளமாமுனிகளின்_தனியன்*:
ஸ்ரீசைலேச தயா பாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம் |
யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம் ||
திருவாய்மொழிப்பிள்ளையின் திருவருளுக்கு இலக்க்கானவரை, ஞானம் பக்தி வைராக்யம் போன்றவைகளின் கடலை, எம்பெருமானார் மீது பெருத்த மையல் உடையவரான அழகிய மணவாளமாமுனிகளை அடியேன் (அரங்கநகரப்பன்) வணங்குகிறேன் .
*#மணவாளமாமுனிகளின்_வாழிதிருநாமம்*:
இப்புவியில் அரங்கேசர்க்கு ஈடளித்தான் வாழியே
எழில் திருவாய்மொழிப்பிள்ளை இணையடியோன் வாழியே
ஐப்பசியில் திருமூலத்தவதரித்தான் வாழியே
அரவரசப்பெருஞ்சோதி அனந்தனென்றும் வாழியே
எப்புவியும் ஸ்ரீசைலம் ஏத்தவந்தோன் வாழியே
ஏராரு மெதிராச ரெனவுதித்தான் வாழியே
முப்புரிநூல் மணிவடமும் முக்கோல்தரித்தான் வாழியே
மூதரிய மணவாளமாமுனிவன் வாழியே
(*#திருநாள்பாட்டு_திருநக்ஷத்ர_தினங்களில்_சேவிக்கப்படுவது*)
செந்தமிழ்வேதியர் சிந்தைதெளிந்து சிறந்து மகிழ்ந்திடு நாள்
சீருலகாரியர் செய்தருள் நற்கலை தேசுபொலிந்திடு நாள்
மந்த மதிப் புவி மானிடர் தங்களை வானிலுயர்த்திடு நாள்
மாசறு ஞானியர் சேர் எதிராசர் தம் வாழ்வு முளைத்திடு நாள்
கந்த மலர்ப் பொழில் சூழ் குருகாதிபன் கலைகள் விளங்கிடு நாள்
காரமர் மேனி அரங்க நகர்க்கிறை கண்கள் களித்திடு நாள்
அந்தமில் சீர் மணவாளமுனிப் பரன் அவதாரம் செய்திடு நாள்
அழகு திகழ்ந்திடும் ஐப்பசியில் திருமூலமதெனு நாளே
இத்தோடு ஓராண் வழி ஆச்சார்யர்கள் வைபவத்தை அனுபவித்து முடித்து விட்டோம். முடித்தல் ஆவது இனிமையாய் முடியவேண்டுமாம். இதனாலேயே ஓராண் வழி ஆச்சார்ய குருபரம்பரை மணவாள மாமுனிகளிடத்தே முடிந்ததென்பர் நல்லோர். மணவாள மாமுனிகளின் வைபவத்தை விட இனியதொன்று இரண்டு விபூதிகளிலும் இல்லை என்பதைக் கற்றோர்களும் கற்க விரும்புவர்களும் கொண்டாடி ஏற்றுக்கொள்வர்.
நம் அனைவருக்கும் மூலமாகத் திகழுவது ஐப்பசியில் திருமூலமே. இதனை அனைத்து திவ்யதேசங்களிலும் (திருவரங்கம், திருவேங்கடம், திருக்கச்சி, திருநாராயணபுரம், திருமாலிரும்சோலை, ஆழ்வார்திருநகரி, வானமாமலை முதிலியன) அடியார்கள் பெருத்த பக்தியோடு கொண்டாடி வருகிறார்கள் . அரங்கனுக்கே ஆச்சார்யனான இவரின் உத்ஸவங்களில் பங்கு கொண்டு இவரின் அருள் விழிக்கு இலக்காகி எம்பெருமானார் அருளுக்கு சதிராக வாழ்ந்திடுவோம்.
ஶ்ரீ அழகிய மணவாள மாமுனிகள் திருவடிகளே சரணம்
இன்றுடன் ஶ்ரீவைஷ்ணவ குருபரம்பரை வைபவம் முற்றும்
#mahavishnuinfo