பெரிய நம்பி 9

முந்தைய பதிவில்  ஆளவந்தாரை அநுபவித்தோம். இப்பொழுது ஓராண் வழி ஆசார்யர்களில் அடுத்த ஆசார்யனைப் பற்றிக் காண்போம்.
திருநக்ஷத்ரம்: மார்கழி கேட்டை
அவதார ஸ்தலம்: ஸ்ரீரங்கம்
ஆசார்யன்: ஆளவந்தார்
சிஷ்யர்கள்: எம்பெருமானார், மலை குனிய நின்றார், ஆரியூரில் ஸ்ரீ ஶடகோப தாஸர், அணி அரங்கத்தமுதனார் பிள்ளை, திருவாய்க்குலமுடையார் பட்டர் மற்றும் பலர்.
பரமபதித்த இடம்: சோழ தேசத்தில் உள்ள பசியது (பசுபதி?) கோவில்
பெரிய நம்பி திருவரங்கத்தில் அவதரித்தார். அவருக்கு மஹா பூர்ணர், பராங்குஶ தாஸர் மற்றும் பூர்ணாசார்யர் என்ற திருநாமங்களும் உண்டு. இவரது குமாரர் திருநாமம் புண்டரிகாக்ஷர், புதல்வி அத்துழாய். 
ஆளவந்தாரின் முக்கியமான சிஷ்யர்களுள் இவரும் ஒருவராக இருந்தார். ராமானுஜரை திருவரங்கத்திற்கு அழைத்து வருவதற்கு இவரே கருவியாக இருந்தார். ஆளவந்தர் காலத்திற்கு பிறகு, ஸ்ரீவைஷ்ணவர்கள் அனைவரும் ராமானுஜரை திருவரங்கத்திற்க்கு அழைத்து வருமாறு இவரிடம் விண்ணப்பம் செய்தனர்.
 அதனால் அவர் குடும்பத்துடன் காஞ்சிபுரத்திற்கு புறப்பட்டார். தற்செயலாக அதே நேரத்தில் ராமானுஜரும் பெரிய நம்பியை சேவிப்பதற்காக காஞ்சிபுரத்திலிருந்து புறப்பட்டார். இவர்கள் இருவரும் மதுராந்தகத்தில் சந்தித்தனர். பெரிய நம்பி ராமானுஜருக்கு அங்கேயே பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து வைத்தார். 
அவர் ராமானுஜருக்கு ஸம்ப்ரதாய அர்த்தங்களை கற்றுக்கொடுப்பதற்காக காஞ்சிபுரம் சென்றார். ராமானுஜருடைய தர்ம பத்தினியினால் சில முரண்பாடுகள் ஏற்பட்டதால், காஞ்சிபுரத்தை விட்டு அவர் குடும்பத்துடன் மீண்டும் திருவரங்கத்திற்கு எழுந்தருளினார்.
பெரிய நம்பியினுடைய வாழ்க்கையில் நடந்த பல ஸம்பவங்கள் நமது பூர்வாசர்யர்களுடைய ஸ்ரீஸூக்தியில் காட்டப்பட்டுள்ளது. அவற்றுள் சிலவற்றை நாம் கீழே அனுபவிப்போம்.
பெரிய நம்பி ஆத்ம குணம் நிறைந்தவர் மற்றும் ராமானுஜர் மீது மிகவும் பற்று வைத்திருந்தார். அவருடைய திருக்குமாரத்திக்கு லௌகிக விஷயத்தில் ஏதேனும் உதவி வேண்டுமனால் கூட அதை ராமானுஜரிடம் தான் கேட்கச்சொல்வார்.
ஒரு நாள் அத்துழாய், அதிகாலையில்
தீர்த்தமாட நதிக்குச் செல்லும் போது,
துணைக்கு தன்னுடன் வரும்படி தன்
மாமியாரை அழைத்தார்.
ஆனால் அவரோ " உன் சீதன
வெள்ளாட்டியை துணைக்கு அழைத்துக்
கொண்டு போ " என்று சொல்ல, அத்துழாய் பெரிய நம்பியிடம் சென்று மாமியார் சொன்னதை வருத்தத்துடன் கூற, அவர் இதனை உடையவரிடம் கேட்குமாறு சொல்லியனுப்பினார்.
அத்துழாயும் உடையவரை சந்தித்து தன்
தந்தையிடம் சொன்னதையும் அதனை அவர் உடையவரிடம் சொல்லும்படி கூறியதையும் சொல்ல, உடையவரும், முதலியாண்டானை அழைத்து, அத்துழாய்க்கு துணையாக " சீதன
வெள்ளாட்டியாகச் " செல்லுமாறு
பணித்தார்.
ஒருநாள் ராமானுஜர் அவருடைய சிஷ்யர்களுடன் நடந்து வரும்பொழுது பெரிய நம்பி அவரை அப்படியே ஸாஷ்டங்கமாக விழுந்து ஸேவித்தார். ராமானுஜர் அதை எற்றுக்கொள்ளவில்லை, ஏனெனில் அதை ஒப்புக்கோண்டால் தன்னுடைய ஆசார்யரிடமிடருந்து ப்ரணாமத்தை எற்றுக்கொண்டதாக ஆகிவிடும். 

பிறகு பெரிய நம்பியிடம் ஏன் ஸேவித்தீர் என்று கேட்ட பொழுது “ஆளவந்தார் தன்னுடைய சிஷ்யர்களுடன் வருவது போல் இருந்தது என்று கூறினார்”. வார்த்தா மாலையில் ஒரு முக்கியமான வரி ஒன்று உள்ளது, அது என்னவென்றால் “ஆசார்யர்கள் தங்களுடைய சிஷ்யர்கள் மேல் மிகவும் மரியாதை வைத்திருப்பார்கள்”, இதன்படியே வாழ்ந்தவர் பெரிய நம்பி.
மாறநேரி நம்பி (மிகப்பெரிய ஸ்ரீவைஷ்ணவர், ஆளவந்தாருடைய சிஷ்யர் மற்றும் நான்காவது வர்ணத்தில் அவதரித்தவர்) பரமபதித்த போது பெரியநம்பி அவருக்கு அந்திம சரம கைங்கர்யங்களை செய்தார். சில ஸ்ரீவைஷ்ணவர்கள் அதை ஒப்புக்கொள்ளாமல் ராமானுஜரிடம் சென்று இதைக் குறையாகக் கூறினார்கள். 
ராமானுஜரும் அந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் அறிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக பெரிய நம்பியிடம் கேட்டபோது, ஆழ்வார் திருவுள்ளத்தின் படியும், ஆழ்வார் திருவாய்மொழியில் பயிலும் சுடரொளி (3.7) மற்றும் நெடுமாற்கடிமை (8.10) பதிகத்தில் அருளிசெய்தபடியும் தான் அதைச் செய்ததாக அவர் கூறினார். இந்த ஐதீஹ்யத்தை அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் ஆசார்ய ஹ்ருதயத்தில் காட்டியுள்ளார். குருபரம்பரா ப்ரபாவத்திலும் இந்தச் சரித்திரம் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
வைஷ்ணவ சம்பிரதாயத்தில் உயர்ந்தவர்,தாழ்ந்தவர் பாகுபாடு கிடையாது.ஆளவந்தாரின் சீடர்களாக
பெரிய நம்பியும்,மாறநேய நம்பியும் இருந்தனர்.மாறநேய நம்பியின் ஜாதி
பட்டியல் பிரிவிலும்,பெரிய-நம்பியின் ஜாதி உயர்வாயும் இருந்தன.
மாறநேயர்க்கு பெரிய நம்பி
அந்திம கிரியைகளைச் செய்தார்.இதனால் ஏனையோர் கோபம் கொண்டு,பெரிய நம்பியை ஜாதியை விட்டு ஒதுக்கி வைத்தனர்.இதன் காரணமாய் அவர் வீட்டு வாசலின் முன்பு முட்களைப் போட்டு நம்பி வெளியே வராதபடி செய்தார்கள்.
அந்த சமயத்தில் ஸ்ரீ ரங்கம் கோவிலில்
தேரோட்டம் நடைபெறுகிறது.
தேர் வர ஆரம்பிக்கிறது. இவர் வீட்டைத் தாண்டித்தான் செல்லவேண்டும்.இவரது வீட்டு வாசலில் முட்களைக் கொட்டி வைத்திருப்பதால் நம்பி வெளியே வர முடியவில்லை.ஆனால்  பெரிய நம்பியின் பெண் அத்துழாய் முட்களை விலக்கி வெளியே வந்து திருத்தேர் முன்பாக விழுந்து நமஸ்கரிக்கிறாள்.
திருஆணை,நின் ஆணை,கண்டாய் நில் என்கிறாள்.தேரை நிறுத்துங்கள்
என்று கூறி, ரங்கநாதா! இஃதென்ன நியாயம்?நீ எப்படிப்பட்டவன் !உனக்கு இந்த வித்தியாசம் எல்லாம் உண்டோ?
தாழ்ந்த ஜாதியில் பிறந்த திருப்பாணாழ்வாரைக் கோவில் அர்ச்சகர் மேல் ஏற்றி வரச் செய்து உன் பக்கத்தில் அமர்த்திக் கொண்டாய்.ஆனால் எமது தந்தையான பெரிய நம்பி   மாறநேயர் நம்பிக்கு அந்திம கிரியை செய்தது  சரி என்றால் இத்தேர் நகரக் கூடாது இது உன் மேல்  ஆணை என்று சொல்கிறாள்.
தேரும் நகராமல் நின்று விடுகிறது.யாவரும் எம் முயற்சி செய்யினும் தேர் நகரவில்லை.தலைமை அர்ச்சகர் வீட்டிலிருந்த பெரிய நம்பியை கையோடு அழைத்து வரச் செய்து,தேரினுள் பெருமாள் அருகே
உட்கார வைத்ததும் தான் தேரே நகர்கிறது.

உயர்வும்,தாழ்வும் தெய்வத்திற்கு இல்லையென்பதும்,தூய அன்பொன்றே ஸ்திரமென்பதும் ஊர்ஜிதமாகிறது.
ஒருநாள் பெரிய பெருமாளுக்கு ஏதொ ஒரு ஆபத்து வரப்போகிறது என்று தெரிந்தவுடன், பெரிய நம்பியை பெரிய கோயிலை ப்ரதக்ஷிணம் செய்து ரக்ஷையிடப் ப்ரார்த்தித்தார்கள். பெரிய நம்பி கூரத்தாழ்வானிடம் விண்ணப்பம் செய்து அவரையும் தன்னுடன் வருமாறு அழைத்தார், ஏனென்றால் கூரத்தாழ்வான் மட்டுமே பாரதந்த்ரியத்தை முழுமையாக உணர்ந்து நடப்பவர். இதைத் திருவாய்மொழி (7.10.5) ஈடு வ்யாக்யானத்தில் நம்பிள்ளை காட்டியுள்ளார்.
பெரிய நம்பியின் காலத்திலே
சோழ தேஸத்தை ஆண்டு
கொண்டிருந்தவன், அதி தீவிர சைவனான
கிருமி கண்ட சோழன். இவன் நாலூரான்
என்பவனின் தூண்டுதலால், சைவ
சமயத்தை சாராத பலரிடமும், சிவனுக்கு
மேம்பட்ட தெய்வம் எதுவும் இல்லை என்று மிரட்டி, கையொப்பம் பெற்று வருமாறு தனது வீரர்களுக்கு உத்தரவிட்டிருந்தான்.
அவ்வாறு கையொப்பம் பெற
இராமாநுஜரையும் பணிக்க
விரும்பினான்.இதனை அறிந்து கொண்ட
கூரத்தாழ்வான், இராமானுஜருக்கு எந்தத்
தீங்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற
எண்ணத்துடன், தான் இராமாநுஜரைப்
போல காவி வஸ்திரம் அணிந்து கொண்டு, தன்னுடன் பெரிய நம்பியையும் அழைத்துக்
கொண்டு, அரண்மனைக்குச் சென்றார்.
அரசனின் ஆணைக்கு இணங்கி,
கையொப்பமிட மறுத்த கூரத்தாழ்வான்,
பெரிய நம்பி இருவரின் கண்களையும்
பிடுங்க ஆணையிட, ஆனால் கூரத்தாழ்வான் தம் கண்களை தாமே பிடுங்கிக் கொள்ள, பெரிய நம்பியின் கண்கள் மட்டும் பிடுங்கப்
பட்டன. வயது முதிர்ச்சியின் காரணமாக
வேதனை தாளமாட்டாமல் பெரிய நம்பிகள் கீழே சாய்ந்து அவ்விடத்திலிருந்தே
திருநாட்டுக்கு எழுந்தருளினார்.
 அவர் பரமபதிக்கும் பொழுது ஒரு முக்கியமான ஒரு விஷயத்தை நமக்குக் காட்டிக்கொடுத்தார். ஆழ்வானும் அத்துழாயும் (பெரிய நம்பியின் திருக்குமாரத்தி) ஸ்ரீரங்கம் இன்னும் சிறுது தூரம் தான் உள்ளது, அது வரை அவருடைய மூச்சை நிறுத்தி வைத்துக்கொள்ளுமாறு பெரிய நம்பியிடம் கேட்டுக்கொண்டனர். பெரிய நம்பி உடனேயே நின்று அந்த இடத்திலேயே பரமபதித்தார்.
ஏனென்றால் யாரெனும் இந்த ஸம்பவத்தைக் கேட்டால், திருவரங்கத்தில் (அல்லது எதேனும் ஒரு திவ்ய தேசத்தில்) வந்து தான் பரமபதிக்க வேண்டும் என்று நினைத்து விடுவார்கள். அது நமது ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தின் பெருமையை குறைத்துவிடும் என்று கூறினார்.
 ஆழ்வார் “வைகுந்தம் ஆகும் தம்மூரெல்லாம்” – ஸ்ரீவைஷ்ணவர்கள் இருக்கும் இடமே ஸ்ரீவைகுந்தம் என்று கூறினார். எனவே நாம் எங்கிருந்தாலும் எம்பெருமானையே சார்ந்து இருக்க வேண்டும். பலர் திவ்யதேசத்தில் இருந்தும் கூட அதன் பெருமையை அறியாமல் இருப்பார்கள். ஆனால் சிலர் திவ்ய தேசத்தை விட்டுத் தொலைவான இடத்தில் இருந்தாலும் எம்பெருமனையே நினைத்துக் கொண்டிருப்பார்கள் (சாண்டிலினி-கருடன் கதையை நினைவில் கொள்க) .

இதன் மூலம் நாம் பெரிய நம்பியின் மேன்மையைத் தெரிந்து கொள்கிறோம். அவர் எம்பெருமானை மட்டுமே சார்ந்து இருந்தார். நம்மாழ்வார் மற்றும் அவர் அருளிச்செய்த திருவாய்மொழியின் மீது பெரிய நம்பி வைத்திருந்த பற்றினால் அவருக்குப் பராங்குஶ தாஸர் என்று மற்றொறு திருநாமமும் உண்டு. பெரிய நம்பி ச்ரிய:பதியினுடைய கல்யாண குணானுபவத்தில் மூழ்கிக்கிடப்பதையும், அதிலே அவர் முழுமையாக திருப்தி அடைந்ததையும் அவருடைய தனியனில்  காணலாம்.
*#பெரிய_நம்பியின்_தனியன்*:
கமலாபதி கல்யாண குணாம்ருத நிஷேவயா
பூர்ண காமாய ஸததம் பூர்ணாய மஹதே நம:
*#பெரிய_நம்பியின்_வாழி_திருநாமம்*:
அம்புவியில் பதின்மர்கலை ஆய்ந்துரைப்போன் வாழியே
ஆளவந்தார் தாளிணையை அடைந்துய்ந்தோன் வாழியே
உம்பர் தொழும் அரங்கேசர்க்கு உகப்புடையோன் வாழியே
ஓங்கு தனுக் கேட்டைதனில் உதித்த பிரான் வாழியே
வம்பவிழ்தார் வரதருரை வாழி செய்தான் வாழியே
மாறனேர் நம்பிக்கு வாழ்வளித்தான் வாழியே
எம்பெருமானார் முனிவர்க்கு இதமுரைத்தான் வாழியே
எழில் பெரிய நம்பி சரண் இனிதூழி வாழியே
பெரிய நம்பி திருவடிகளே சரணம்

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!