பகவான் புகழ் பாட

 
ஒருமுறை பராசர பட்டர் எனும் பக்தர் ஸ்ரீரங்கத்து அரங்கநாதனின் முன்னே நின்றார். என்னையும் என்னுடைய அழகையும் பாடிவிடுவீரோ நீர்? என அரங்கன் கேட்க... முதலில், உம்முடைய ஆதிசேஷனைப்போல எனக்கு ஆயிரம் நாக்குகளைத் தாருங்கள், பார்க்கலாம் என்றாராம் பராசரர். அட... ஆயிரம் நாக்குகள் இருந்தால்தான் பாடுவீரோ? என்று சிரித்த அரங்கன், கருணையும் வாஞ்சையும் மேலிட... பராசரபட்டருக்கு ஆயிரம் நாக்குகளை வழங்கினான். ஆனந்தத்தில் கைகள் குவித்து, சிரம் தாழ்த்தி நமஸ்கரித்தார் பராசரர். மன்னிக்கவும் ரங்கா ! உன்னை என்னால் பாட முடியாது! என்று சொல்லிவிட்டு அமைதியாகிவிட்டார். ஆச்சரியம் தாங்கவில்லை அரங்கனுக்கு! பின்னே... பாடு என்று உத்தரவு போட்டாகிவிட்டது. பராசரர் கேட்டபடி, ஆயிரம் நாக்குகளையும் அவருக்கு வழங்கியாகிவிட்டது. அப்படியும் பாட முடியாது என்று மறுத்தால், அரங்கனுக்கு ஆச்சரியம் எழத்தானே செய்யும்? என்ன விளையாடுகிறாயா? ஆயிரம் நாக்குகள் கேட்டாய்; கொடுத்தேன். பிறகென்ன... பாடவேண்டியதுதானே? முடியாது என்கிறாயே ! என்றான் அரங்கன்.

பராசர பட்டர், மீண்டும் கைகளைக் குவித்துக்கொண்டார்; மொத்த உடலையும் இன்னும் குறுக்கிக்கொண்டார்; முதுகை வளைத்து இன்னும் கூனாக்கிக்கொண்டு, அரங்கா... உன் ஒளி பொருந்திய அழகை என்னால் பாடமுடியாது என்று சொல்வதற்கே, எனக்கு ஆயிரம் நாக்குகள் தேவையாக இருக்கும்போது, பரஞ் சோதியாகத் திகழும் உன்னையும் உனது பேரழகையும் பாடுவதற்கு, எனக்கு இன்னும் எத்தனை எத்தனை நாக்குகள் தேவையோ?! என்று சொல்லிப் புகழ்ந்தாராம் பராசரர். பகவானின் பேரழகுத் திருமேனியை விவரிப்பதற்கு எப்படியெல்லாம் சிந்தித்து, அவனுடன் இரண்டறக் கலந்திருக்கின்றனர் அடியவர்கள்! அப்பேர்பட்டவனது திருநாமத்தைச் சொல்வது, எத்தனை வல்லமையை நமக்கு வழங்கும் என்பதை இதன்மூலம் உணரலாம்.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!