பெருமாள் ஆலயம் சென்றால் முதலில் அவரது திரு வடியைத்தான் தரிசிக்க வேண்டும். அதன் பிறகு அங்க தரிசனம் செய்து பெருமாளின் முகத்தைக் காண வேண்டும். பெருமாளின் திரு மந்திரங்களிலும் அவரது திருவடியின் சிறப்பே சொல்லப்பட்டுள்ளது.

“ஸ்ரீமத் நாராயண சரணௌ சரணம் பிர பத்யே” என்பது ஒரு மந்திரம். “சரணௌ” என்றால் இரண்டு திருவடிகள். “பிரபத்யே” என்றால் சரணடைதல் என்று பொருளாகின்றது. நாராயணனின் இரண்டு திருவடிகளில் சரணடைகின்றோம் என்பது மந்திரத்தின் அர்த்தமாகும். இங்ஙனமாய் ஆர்தமார்த்தமாக எவரொரு வர் பெருமாளிடம் சரணடைகின்றாரோ அவருக்கு எந்தத் துன்பமும் வாழ்க்கையில் இல்லை.

மகாபலிச் சக்கரவர்த்திக்கு பிறருக்கு அள்ளிக் கொடுப்பது வாக்குத் தவறாமை ஆகிய நற்குணங்கள் வாய்ந்திருந்தன. ஆயினும் இவை அவனுள் கர்வத்தை உருவாக்கியது. மகாபலி செய்த புண்ணிய காரியங்களுக்கு அவன் சொர்க்கத்தில் வாழ வேண்டியவனே ஆனாலும், அவனுடைய ஆணவம் அதற்குத் தடையாக இருந்தது. நல்லவனாகிய மகாபலி சொர்க்கத்தில் வாழ வேண்டுமென திருவுளம் கொண்டார் பெருமாள்.

எனவே குள்ள வடிவில் அந்தணர் உருவெடுத்து மகாபலியிடம் வந்தார். மூன்று அடி நிலம் கேட்டார். அப்போதும் அவன் ஆணவத்துடன் ராஜ்யத்தையே வேண்டுமானாலும் தருகிறேன் என்றான். உடனே பெருமாள் த்ரிவிக்கிரமனாக வடிவெடுத்து இரண்டடிகளால் மண்ணுலகையும் விண்ணுலகையும் அளந்து மூன்றாவது அடிக்கு இடம் எங்கே என்றார். மகாபலி தன் தலையில் மூன்றாவது அடியை வைத்திடுமாறு வேண்டி நின்றான். அப்பொழுதே அவனது அகந்தையும் அகன்றது. பெருமாள் அவனது தலைமீது திருவடி பதிந்தார். மகாபலிக்கு வைகுண்ட பதவி கிடைத்தது.

இத் திருவடிகளையே ஆண்டாள் ' அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி ' என போற்றி பாடுகிறாள்.  மேலும் ஓங்கி உலகளந்த என்றும் அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த என்று துதித்து போற்றி பாடியுள்ளாள்