ஆழி - எனும் சொல் பல்பொருள் ஒரு மொழி ஆகும். இதற்கு : கடல்; கடற்கரை; அரசனின் ஆணைச் சக்கரம் ; மோதிரம்; சக்கரம்; வட்டம்; கட்டளை என பல அர்த்தங்கள் உண்டு. ஆழி என்பதற்கு ’பரந்து விரிந்த’ ’அளவிடமுடியாத’ என்பது முதன்மை பொருள். இதனாலேயே கடலுக்கு ஆழி எனப் பெயர் வந்தது.
நமது வாழ்க்கை எளிமையானது .. பரம்பொருளான ஸ்ரீமன் நாரணனை மட்டுமே சுற்றி வருவது. எம்பெருமானே ஆழிப்பிரான் -எம்பெருமான்
திருவவதரிக்கும்போதே கையுந்திருவாழியுமாய்த் திருவவதரித்து, பிறகு பாரதப்போரில் ‘ஆயுதமெடேன்’ என்று சொல்லிவைத்தும் ஆச்ரிதபக்ஷபாதத்தாலே ஆயுதமெடுத்தும் காரியம் செய்தருளினவன். இதோ இங்கே ஸ்வாமி நம்மாழ்வாரின் திருவாய்மொழி பாசுரத்திலே ரசமான ஒன்று
ஆளும் பரமனைக் கண்ணனை ஆழிப் பிரான்றன்னை,
தோளுமோர் நான்குடைத் தூமணி வண்ணனெம்மான் தன்னை
தாளும் தடக்கையும் கூப்பிப் பணியும் அவர்க்கண்டீர்,
நாளும் பிறப்பிடை தோறு எம்மையாளுடை நாதரே.
ஆள்கின்ற பரம புருஷனாகவும் ஸ்ரீகிருஷ்ணனாகவும் திருவாழியாழ்வானையுடைய உபகாரகனாயும், ஒப்பற்ற நான்கு புஜங்களையுடையவனாயும் பரிசுத்தமான நீலமணி போன்ற நிறத்தை உடையவனாயுமிருக்கின்ற எம்பெருமானை, தாளும் தடக்கையும் கூப்பி வணங்குகின்றவர்கள் - எல்லா ஜென்மங்களிலும், தினந்தோறும் எங்களை ஆட்கொள்ளும் அடிகளாவர் என திருமாலடியார் தம் சிறப்பை உரைக்கின்றார் நம்மாழ்வார்.