வைஷ்ணவம் - ஓர் அறிமுகம்

 வைணவ சமயம் (Vaishnavism) திருமாலை (விஷ்ணுவை) முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயமாகும். இச்சமயம் வைணவம் என்றும் வைஷ்ணவம் என்றும் அழைக்கப்படுகிறது. இச்சமயம் இந்து சமயத்தின் ஆறு உட்பிரிவுகளுள் ஒன்றாகும். உலகில் தீமைகள் ஓங்கும் போது இறைவன் அவதாரம் எடுத்து அவற்றை அழிப்பார்.



வைணவக் கடவுளான திருமாலின் எண்ணற்ற அவதாரங்களில் குறிப்பிடத்தக்க மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனன், பரசுராமன், இராமன், பலராமன், கிருஷ்ணன், கல்கி என்ற பத்து அவதாரங்கள் தசவதாரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. 


இந்த சமயத்தின் முக்கிய நூல்கள் வேதம், உபனிஷத்து, பகவத் கீதை, பஞ்சரந்தர ஆகமம், மகாபாரதம்,இராமாயணம், பாகவத, விஷ்ணு, கருட , நாரதிய, பத்ம , வராஹ புராணங்கள் ஆகும்.

இராமானுஜர் பரப்பிய விசிஷ்டாத்வைதம் என்ற தத்துவத்தில் ஆதி பரம்பொருள் நாராயணன் என்ற திருமாலே. அவன்தான் உபநிடதங்கள் கூறும் பிரம்மம். அவன் குணம் என்ற குன்றேறித் தாண்டியவன் என்று உபநிடதங்கள் கூறுவதன் உட்பொருள் அவனிடம் எல்லா நல்ல குணங்களும் இருக்கின்றன என்பதாம். அறம், ஞானம், சக்தி, அன்பு இவை யாவும் முடிவிலாத அளவுக்கு அவனிடம் உள்ளன. அவன் உயிரினங்களிடம் வைத்திருக்கும் அபார கருணையினால் அவ்வப்பொழுது அவதரித்து இடர் போக்கி தன்னுடன் சேர்ந்துகொள்ள வழி வகுக்கிறான். பிரம்மமும் ஜீவனும் உயிரும் உடலும் போல. ஜீவர்களனைவரும், மற்றும் பிரபஞ்சமனைத்தும் பிரம்மத்தின் உடலாகும்.

இதற்கு பிரமாணம் பிருஹதாரண்யக உபநிஷத்து (3-7-22):

யோ விஞ்ஞானே திஷ்டன், விஞ்ஞானாதந்தர:, யம் விஞ்ஞானம் ந வேத யஸ்ய விஞ்ஞானம் சரீரம் யோ விஞ்ஞானமந்தரோ யமயதி ஏஷ ஆத்மா அந்தர்யாம்யம்ருத:.

இதன் பொருள்: எவன் அறிவுக்குள் உறைபவனோ, அறிவுக்குள் அறிவாக இருப்பவனோ, எவனை அறிவும் அறியமுடியாதோ, எவனுக்கு அறிவே உடலோ, எவன் அறிவையும் உள்ளிருந்து ஆட்டிவைப்பவனோ அவன்தான் இவ்வான்மா, அழியாமல் உள்ளுறைபவன்.


உயிரும் உடலும் வெவ்வேறானதால் பிரம்மத்திற்கு தன்னுள் வேற்றுமை (ஸ்வகத பேதம்) உண்டு. ஆனால் வேறு வேற்றுமைகள் கிடையா. பிரம்மத்திற்கு சமானமான வேறு உண்மைகள் இல்லை. அதனால் பிரம்மத்தினிடத்தில் ஸஜாதீய பேதம் என்று கூறப்படும் பகுப்புக்குள்ளிட்ட வேற்றுமை கிடையாது. பகுப்புக்கும் பகுப்புக்கும் உள்ள வேற்றுமையும் (விஜாதீய பேதம்) கிடையாது; ஏனென்றால் வேறு ஒரு பகுப்பு அறவே இல்லை. இதனால் இதுவும் ஒருவித அத்வைதம் (இரண்டற்றது) தான். பிரம்மத்தினிடம் குணம் என்ற தன்மை உள்ளதா இல்லையா என்ற ஒரு ஆழமான பிரச்சினையின் இருவேறு விடைகள் தான் இதை அத்வைதக் கோட்பாட்டிலிருந்து வேறுபடுத்துகிறது. அதனால் இராமானுஜரின் இக்கோட்பாட்டிற்கு விசிஷ்டாத்வைதம் (விசிஷ்டமான அத்வைதம்) என்று பெயர். விசிஷ்டம் என்றால் சிறப்புற்ற என்று பொருள்.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!