மகாலட்சுமி தாயார் ஒரு பெண். அந்தத் தாயாரின் பிறப்பின் பெருமை அதாவது அவர் தோற்றம், அவதாரப் பெருமை, மகிமை என்ன தெரியுமா? 

பாற்கடலில் அவதாரம் செய்தார் மகாலட்சுமி. அம்ருதத்தை பெறுவதற்காக பெருமாள் பாற்கடலை கடைந்தார் என்று சொல்வதை விட மகாலட்சுமியை பெறவே அவர் பாற்கடலை கடைந்தார் என்று சொல்வது தான் சரி. அம்ருதம் சக்கை மாதிரி. தாயார் தான் சாரம். தாயார் தோன்றினார், எல்லாரும் பார்த்துக் கொண்டே இருக்கும்போது அவர் பெருமாளின் திருமார்பில் போய் நிலையாக தங்கிவிட்டார். தாயாரின் பிறப்பின் பெருமை அத்தகையது! 

ஜனகர் யாகத்துக்காக நிலத்தை உழும்போது நிலத்தில் கிடைத்தவள் தாயார் சீதாப்பிராட்டி. பெருமாளுடைய அவதாரத்தைக் காட்டிலும் தாயாருடைய அவதாரம் மிகச் சிறந்ததாகும். பெருமாளாவது சில சமயம் தேவகி கௌசல்யா இவர்களின் பிரார்த்தனைக்கு இணங்க அவர்களின் கர்ப்பத்தில் வாசம் செய்தார். ஆனால் தாயார் அப்படி இல்லை. அயோனிஜையாகப் பிறந்தாள். அது தான் தாயாரின் மிகப் பெரிய ஏற்றம். பிருகு மகரிஷி பிரார்த்தித்தார் என்று குடந்தையில் பொற்றாமரை குளத்தில் அவதரித்தார். அதே மாதிரி பிருகு மகரிஷி பிரார்த்தனைக்கு இணங்க காஞ்சியில் பொற்றாமரை குளத்தில் பெருந்தேவி தாயாராக அவதரித்தார். 

திருத்தங்கா என்ற தூப்பிலிலும் லக்ஷ்மி சரஸ் என்ற குளத்தில் தான் அவதாரம் செய்தார். பாற்கடலில் இருந்தும் குளங்களிலும் இருந்தும் யாக பூமியில் இருந்தும் தான் தாயார் அவதாரம் செய்துள்ளார்.