ஸ்ரீ வைஷ்ணவர்கள் பலரின்  மனதில் உள்ள கேள்விகள் பிள்ளையார் பூஜை செய்வது பற்றினவையே. 
 
• பல வருஷங்களாக பண்ண வழக்கம். ஸ்ரீவைஷ்ணவ லக்ஷணம் புரிந்த பின்னர் திடீரென்று நிறுத்தலாமா ?  
• ஸ்ரீவைஷ்ணவன் பிள்ளையார் பூஜை பண்ணலாமா? கூடாதா ?
• செய்யவில்லை என்றால் பிள்ளையார் தண்டிக்கமாட்டாரா?
• மற்றவர்கள் பூஜை செய்ய ஆசைப்பட்டால் நாம் என்ன செய்வது ?  
• ஸ்ரீவைஷ்ணவ  அறிகுறியான  ஸமாச்ரயணம் (பஞ்ச ஸம்ஸ்காரம்)  ஆகிவிட்டது ஆனால் பரந்யாசம்(சரணாகதி) செய்யவில்லை என்றால் பிள்ளையார் பூஜை பண்ணலாமா ? 

ஸ்ரீவைஷ்ணவன் என்பவன்  ஸ்ரீமன்நாராயணன் ஒருவனையே பூஜிப்பவன்.  ஸ்ரீவைஷ்ணவன் பெருமாளை தவிர மற்ற தெய்வங்கள் அதாவது அன்ய தேவதாந்திரம் (பிள்ளையார், சிவன், முருகன், அம்மன், ஐயப்பன், சாய்பாபா மற்றும் பல) பூஜையை  தவிர்க்க வேண்டியது  அவன் ஸ்வரூப லக்ஷணம்.
மற்ற தெய்வங்களை பூஜிக்க வேண்டாம் என்பதால் தூஷிக்கலாம், குறை கூறலாம்  என்று அர்த்தம் இல்லை.  

மற்ற தெய்வங்கள் அனைவரும் பெருமாள் ஷிருஷ்டியில், பெருமாளால்  ஒரு பங்கு அளிக்கப்பட்டு இருக்கிறார்கள்.  மற்ற தெய்வங்கள் அனைவருக்கும் ஒரு வரையறைபட்ட (limited) அதிகாரம் பெருமாளால் கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவதாந்திரங்களை பூஜிப்பவர்களுக்கு, அந்த வரையறை பட்ட பலன்கள், தேவதாந்திரத்தால்  அனுகிரஹமாக அளிக்கப்படுகின்றன. 

அப்படி என்றால் ஸ்ரீவைஷ்ணவன் தேவதாந்திரத்திடம் எப்படி இருக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. 

இந்த கேள்வி பல ஆண்டுகளுக்கு முன்னர் கூரத்தாழ்வான் என்னும் ஆச்சார்யரிடம் அவர் சிஷ்யர்களால் கேட்கப்பட்டது. அதற்கு கூரத்தாழ்வான்  "தேவதாந்திரம் ஸ்ரீவைஷ்ணவனிடம் எப்படி இருக்க வேண்டும் என்றல்லவா கேள்வி இருக்க வேண்டும்."  என்று  கேள்வியை மாற்றினார்.  

தேவர்கள் ஒரு ஸ்ரீவைஷ்ணவனை பார்த்தால் கை கூப்பி பூஜிக்கிறார்கள். அசுரர்கள் ஸ்ரீவைஷ்ணவனை பார்த்து பயம் கொள்கின்றனர். இதற்கு பல உதாரணங்களை வேதமே கூறுகின்றது.  அப்படி இருக்க ஸ்ரீவைஷ்ணவன்  தேவதாந்திரங்கள் தண்டனை தருவார்களோ என்று ஏன் பயம் கொள்ள வேண்டும்.

Sri APN Swamy மேலும் சில ஒரு உதாரணம் கொண்டு  விளக்கினார்.

ராஜசுந்தரம் என்று ஒருவர். அவருக்கு ஒரு அலுவலகத்தில் ஒரு கோப்பில் கையெழுத்து வாங்க வேண்டும். தினமும் ராஜசுந்தரம், அந்த அலுவலகம் சென்று அங்குள்ள accountant, clerk,அலுவலக சிறுவனிடம்(Office boy) கெஞ்சி, கூத்தாடி, லஞ்சம் கொடுத்து எப்படியாவது கையெழுத்து பெற நினைத்தார். பல மாதங்கள் கழிந்தன கையெழுத்து கிடைக்கவில்லை ஆனால் கொடுத்த லஞ்சம் அதிகம்.  இப்படி இருக்க ஒருநாள்,  ராஜசுந்தரம் இன்று என்ன ஆகுமோ என்று அலுவலகம் சென்றார்.   அலுவலகத்தின் வாசலில் அன்று தன் பால்ய ஸ்நேகிதனை கண்டார்.  இருவருக்கும் ஒரே சந்தோசம். குசலம் விசாரித்தனர். கை குலுக்கி, கட்டிப்பிடித்து கொண்டனர். தோளில் கை மேல் கை போட்டு அந்த நண்பன், ராஜசுந்தரத்தை தன் அறைக்கு அழைத்து சென்று உபசரித்தான். அப்பொழுது தான் தெரிந்தது, அந்த நண்பன் அந்த அலுவலகத்தின் MD என்று.   

MD, ராஜசுந்தரம் கோப்பில் கையெழுத்து வாங்க வந்ததை அறிந்து, அலுவலக சிறுவனை அழைத்து "இவன் என் நண்பன். மிகவும் வேண்டியவன். கோப்பில் கையெழுத்து பெற என்ன செய்ய வேண்டுமோ, சீக்கிரம் செய்ய ஏற்பாடு செய். இனிமேல் அவர் அலுவலகம் வரும்பொழுது, நான் இல்லையென்றால்  நன்றாக கவனி."  என்று கட்டளை இட்டார். 

MD யார் என்று தெரிந்த பின்னர், தனக்கும் MDக்கும் இருக்கும் நெருக்கம் அறிந்த பின்னர் ராஜசுந்தரம் மறுபடியும் அந்த அலுவலக சிறுவனுக்கு லஞ்சம் கொடுப்பாரா?  அப்படியே கொடுத்தாலும் அந்த அலுவலக சிறுவன் வாங்குவானா?   முன் வாங்கின லஞ்சம் பற்றி MDயிடம்  கூறவேண்டாம் என்று கூறி மேலும் ராஜமரியாதை செய்ய மாட்டானோ ?  

பழையதை மறக்காது பெரியவனாக இருந்தும்  எளிமையாக தன் நண்பன் (MD) இருப்பதை பார்த்து ராஜசுந்தரம் நெகிழ்ந்தார். ராஜசுந்தரம்  அந்த அலுவலகம் சென்ற பொழுதெல்லாம், அலுவலக சிறுவன் அசடு வழிந்துக்கொண்டு Salute செய்தான். 

நாம்  பல பாபம் பண்ணியிருந்தாலும், நமக்கும் பெருமாளுக்கும் இருக்கும் நெடுநாளைய  பந்தம் அறிந்து அவனிடம் நாம் சென்றால் எளிமையாக,சௌலப்பியதுடன் அன்புடன் நம்மை பெருமாள் ஏற்கிறான், ரக்ஷிக்கிறான்.  

நாம் உடல் நிலை சரி இல்லை என்றால் specialist doctorரிடம்  செல்கிறோம்.  மருத்துவர் மருந்து கொடுத்து 15 நாட்கள் கழித்து வர சொல்லுகிறார்.  5 நாட்களில், பொறுமை இல்லாமல் யாரோ சொல்லுவதை கேட்டு வேற வைத்தியம் செய்வது நம் மடமையே.  Over the counter medicine போல ஆபத்தானது.  ஸமாச்ரயணம் (பஞ்ச ஸம்ஸ்காரம்)  செய்துகொண்ட  ஸ்ரீவைஷ்ணவன், அன்ய தேவதாந்திரம் பூஜை செய்வது அப்படியே.  

ஒரு காரியம் நடக்க சில சமயம் Agent மூலம் செல்வது வழக்கம். ஏஜென்ட் மூலம் சென்றால் Agent commission பெறுவான், ஆனால் நம் காரியம் நடக்கும் என்பது நிச்சயம் இல்லை.  மற்ற தெய்வத்தை நாடி பெருமாளை நாடுவது அது போன்றதே. 

மனைவி கணவனிடம் பதிவிரதா தர்மம் கடைபிடிப்பது போல, நம் அழகிய மணவாளன்  ஒருவனுக்கே நம்மை  அர்ப்பணிப்போம்.

ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு மற்ற தெய்வ ஆராதனம் இல்லை. ஸ்ரீவைஷ்ணவர்கள் அல்லாதவர்கள் மற்ற தெய்வ ஆராதனம் செய்வதை ஸ்ரீவைஷ்ணவர்களாகிய நாம் அங்கிகரிப்போம்.

நான்கு கைகளுடன்,  நான்கு வித ஐஸ்வர்யங்களை கொடுக்க நாராயணன் நமக்காக இருக்கிறான்.

ஸ்ரீவைஷ்ணவர்களாகிய நாம் பெருமாளை விட்டு வேறு ஒருவரிடம் செல்வது சரியா?  நமக்கு  தகுமோ? அவன் மனம் என்ன பாடு படும் ? 
ஸ்ரீவைஷ்ணவர்களாகிய நாம், நம் ஆதிபிரான்  நிற்க மற்றை தெய்வம் நாட வேண்டுமோ?

அடியேன்,