பெரியாழ்வார் திருமொழி 1.1

 வண்ண மாடங்கள் சூழ் திருக்கோட்டியூர் - பெரியாழ்வார் திருமொழி 1.1

பெரியாழ்வார் திருமொழியின் முதல் பத்தின் முதல் திருமொழி இந்த 'வண்ண மாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்' என்று தொடங்கும் பத்துப் பாடல்கள்.


இந்தப் பத்துப் பாசுரங்களில் திருவாய்ப்பாடியில் எம்பெருமான் கண்ணன் பிறந்த போது பொங்கிப் பெருகும் மகிழ்ச்சியால் ஆயர்கள் செய்த செயல்களை எல்லாம் கூறுகிறார். இந்தப் பதிகம் திருக்கோட்டியூர் திவ்யதலத்திற்கு உரியது. திருக்கோட்டியூர் எம்பெருமானே ஆயர்பாடியில் பிறந்ததாகச் சொல்கிறார்.

***

பெரியாழ்வார் திருமொழி 1.1:

பாசுரம் 1 

வண்ண மாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
எண்ணெய் சுண்ணம் எதிர் எதிர் தூவிட
கண்ணன் முற்றம் கலந்தளறாயிற்றே


அழகு பொருந்திய மாடங்கள் நிறைந்த திருக்கோட்டியூரில் வாழும் கண்ணன் கேசவன் நம்பி திருவாய்ப்பாடியிலே நந்தகோபரின் இனிய இல்லத்திலே பிறந்த போது, அவன் பிறந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் முகத்தால் ஆயர்கள் ஒருவர் மீது பூசிய நறுமண எண்ணெயாலும் ஒருவர் மீது ஒருவர் தூவிய வண்ண வண்ணச் சுண்ணப் பொடிகளாலும் கண்ணனின் வீட்டுத் திருமுற்றம் எண்ணெயும் சுண்ணமும் கலந்து சேறானது.

***

இந்தப் பாசுரத்தில் கண்ணனை அறிமுகம் செய்யும் போது கண்ணன், கேசவன், நம்பி என்ற மூன்று பெயர்களைச் சொல்கிறார். அழகிய கண்களை உடையவன், கண்ணைப் போன்றவன், கண்களுக்கு விருந்தானவன், அழகிய திருமுடிக்கற்றைகளை உடையவன், கேசியை அழித்தவன், நற்குணங்களால் நிறைந்தவன், அழகன் போன்ற எல்லா பொருளையும் ஒரே நேரத்தில் அழகுபடச் சொல்லிச் செல்கிறார். கண்ணன் அவதரித்ததால் நந்தகோபருடைய இல்லை இனிய இல்லமானது. கண்ணன் பிறந்த பின்னர் நந்தகோபர் தன் இல்லத்தின் தலைவனாக கண்ணனைக் கொண்டான் என்பதால் நந்தகோபர் திருமாளிகையின் திருமுற்றத்தை கண்ணன் முற்றம் என்றார். செம்புலப்பெயல்நீர் என்பார் தமிழ்ப்புலவர். அதே போல் இங்கே எண்ணெயும் சுண்ணமும் கலந்து சேறாகிக் கிடக்கிறது. ஆழ்வாருடைய காலத்திலும் கண்ணனுடைய காலத்திலும் மகிழ்ச்சியைத் தெரிவிக்க எண்ணையை ஒருவர் மீது ஒருவர் பூசிக்கொண்டும் வண்ணச் சுண்ணப்பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவிக்கொண்டும் மகிழ்ந்திருக்கிறார்கள். இன்றைக்கும் ஹோலிப் பண்டிகையில் வண்ணப்பொடிகளைத் தூவியும் நீரில் கரைத்துத் தெளித்தும் மகிழ்கிறார்களே.

-------------------

பாசுரம் 2. 

ஓடுவார் விழுவார் உகந்து ஆலிப்பார்
நாடுவார் நம்பிரான் எங்குற்றான் என்பார்
பாடுவார்களும் பல்பறை கொட்ட நின்று
ஆடுவார்களும் ஆயிற்று ஆய்ப்பாடியே


திருவாய்ப்பாடியிலிருக்கும் மக்கள் எல்லோரும் தங்கள் தலைவரான நந்தகோபருக்குத் திருக்குமரன் பிறந்ததைக் கேள்விப்பட்டு மகிழ்ச்சி பெருகி தாம் செய்வது என்ன என்றே புரியாமல் சிலர் ஓடினார்கள்; சிலர் எண்ணெயும் சுண்ணமும் கலந்த திருமுற்றத்துச் சேற்றில் வழுக்கி விழுந்தார்கள்; சிலர் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக உரக்கக் கூவினார்கள்; ஒருவரை மற்றவர் கட்டித் தழுவினார்கள்; நம் தலைவனான கண்ணன் எங்கே இருக்கிறான் என்று கூறிக் கொண்டு அவனை தேடினார்கள் சிலர்; சிலர் இனிய குரலில் பாடினார்கள்; சிலர் பலவிதமான பறைகளை இசைத்து ஆடினார்கள். இப்படி கண்ணன் பிறந்த நேரத்தில் பெரும் திருவிழாவைப் போலிருந்தது திருவாய்ப்பாடி.


***

இந்தப் பாசுரத்தில் கண்ணனின் திருவவதாரத்தை ஆய்ப்பாடியில் வாழ்ந்த ஐந்து லட்சம் ஆயர்கள் எப்படி குதூகலமாகவும் கோலாகலமாகவும் கொண்டாடினார்கள் என்பதைச் சொல்கிறார் பட்டர்பிரான். கிருஷ்ண ஜனனத்தால் மகிழ்ச்சியுறாதவர்கள் எவருமில்லை திருவாய்ப்பாடியிலே. ஆலிப்பார் என்பதற்கு உரக்கக் கூவுதல், ஆலிங்கனம் (கட்டித் தழுவுதல்) என்று இரு பொருளைச் சொல்கின்றனர் பெரியோர்.

-----

பாசுரம் 3. 

பேணிச் சீருடைப் பிள்ளை பிறந்தினில்
காணத் தாம் புகுவார் புக்குப் போதுவார்
ஆணொப்பார் இவன் நேரில்லை காண்
திருவோணத்தான் உலகாளும் என்பார்களே


எல்லா சீர்களையும் உடைய இந்த சிறு பிள்ளை கம்சனைப் போன்றவர்களிடம் இருந்து மறைந்து வளர்வதற்காக அந்தப் பெருமைகளை எல்லாம் பேணி/மறைத்து நந்தகோபர் இல்லத்தில் பிறந்தான். அப்போது அவனைக் காண்பதற்காக எல்லா ஆயர்களும் ஆய்ச்சியர்களும் திருமாளிகைக்குள் புகுவார்கள்களும் உள்ளே புகுந்து அவனைக் கண்டு வெளியே வருபவர்களுமாக இருக்கிறார்கள். புகுபவர்களும் புக்குப் போதுபவர்களும் ஒருவருக்கொருவர் கண்ணனின் பெருமைகளைப் பேசிக் கொள்கிறார்கள். 'இவனைப் போன்ற அழகுடைய ஆண்மகன் வேறு யாரும் இல்லை. இவன் திருவோணத்தானாகிய திருமாலால் அளக்கப்பட்ட மூவுலகங்களையும் ஆள்வான்' என்று சொல்கிறார்கள்.

***

இந்தப் பாசுரத்தில் கண்ணனின் பெருமைகளை திருவாய்ப்பாடி வாழ் மக்கள் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டதைச் சொல்கிறார். பேணிச் சீருடை என்ற சொற்றொடருக்கு 'பேணுவதற்கு உரிய சீர்களை உடைய' என்று பொருள் கொண்டாலும் பொருத்தமே. திருவோணத்தான் உலகாளும் என்ற சொற்றொடருக்கு 'திருவோணத்தானாகிய திருமாலின் உலகங்களை ஆளுவான்' என்று பொருள் கொண்டாலும் சரி தான்; 'இவன் திருவோணத்தானாகிய திருமாலே. இவன் உலகங்களை எல்லாம் ஆளுவான்' என்று பொருள் கொண்டாலும் சரியே.

-------
பாசுரம் 4. 

உறியை முற்றத்து உருட்டி நின்றாடுவார்
நறுநெய் பால் தயிர் நன்றாகத் தூவுவார்
செறி மென் கூந்தல் அவிழத் திளைத்து எங்கும்
அறிவழிந்தனர் ஆய்ப்பாடி ஆயரே

பால் தயிர் நெய் முதலானவை வைத்திருந்த உறிகளை எடுத்து வந்து கண்ணனின் திருமாளிகை முற்றத்தில் உருட்டி உருட்டி தங்கள் மனம் போன படி ஆடுகின்றார்கள் சிலர். நறுமணம் மிக்க நெய், பால், தயிர் மூன்றையும் எல்லா இடங்களிலும் தூவுகின்றார்கள் சிலர். நெருக்கமாக வளர்ந்து மென்மையாக இருக்கும் கூந்தல் அவிழ்ந்ததும் தெரியாமல் மனம் ஆழ்ந்து திளைத்து ஆடுகின்றார்கள் சிலர். இப்படி நல்லது கெட்டது பிரித்தறியும் அறிவினை கண்ணன் பிறந்த மகிழ்ச்சியில் இழந்து திருவாய்ப்பாடி முழுவதும் ஆடிக் கொண்டிருக்கிறார்கள் இந்த ஆயர்கள்.

***

நெய், பால், தயிர் போன்றவற்றை மகிழ்ச்சியின் மிகுதியால் முற்றமெங்கும் தூவினார்கள் என்பதொரு பொருள். கண்ணனுக்கு நன்மை உண்டாகும் பொருட்டு (நன்று ஆக) எல்லாவற்றையும் எல்லோருக்கும் தானமாகக் கொடுத்தார்கள் என்று இன்னொரு பொருளைச் சொல்கிறார்கள் பெரியவர்கள்.
------------
பாசுரம் 5. 

கொண்ட தாள் உறி கோலக் கொடு மழு
தண்டினர் பறி ஓலைச் சயனத்தர்
விண்ட முல்லை அரும்பன்ன பல்லினர்
அண்டர் மிண்டிப் புகுந்து நெய்யாடினார்


இந்த இடையர்கள் தாங்கி வந்த உறிகள் அவர்கள் கால்களைத் தொடுமளவிற்கு இருக்கின்றன. அவர்களது ஆயுதங்களான அழகிய கூர்மையான மழுவையும் மாடு மேய்க்கும் கோல்களையும் ஏந்தி வந்திருக்கின்றனர். பனைமரத்திலிருந்து பறித்து எடுத்த ஓலையால் செய்த பாயை இரவில் படுக்கப் பயன்படுத்திவிட்டு அதனையும் எடுத்துக் கொண்டு வந்திருக்கின்றனர். பறித்தெடுத்த முல்லை அரும்பு போன்ற வெண்மையான பற்களைக் கொண்டிருக்கின்றனர். அப்படிப்பட்ட இடையர்கள் நெருக்கமாகக் கூடி கண்ணன் பிறந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் முகமாக நெய்யால் ஆடினார்கள்.

***

மாடு மேய்க்கப் போன இடத்தில் பால் கறக்க நேர்ந்ததால் அந்த பாலை இட்டு வைத்த உறியையும் தாங்கி வந்திருக்கின்றனர். அந்த உறிகளைக் காவடி போல் ஏந்தி வந்தார்கள் போலும். அப்படி ஏந்தி வந்த உறிக்காவடி அவர்களது தாள்களை/கால்களைத் தொடுமளவிற்கு இருக்கின்றன. இலை தழைகளைப் பறித்து மாடுகளுக்கு இடுவதற்காக சிறிய மழுவாயுதத்தைத் தாங்கி வருகிறார்கள். மாடுகளை மேய்க்கும் கோல்களையும் தாங்கி வருகின்றார்கள். எந்த வித கெட்ட பழக்கங்களும் இல்லாததால் அவர்களது பற்கள் வெண்மையான முல்லை அரும்புகளைப் போல் இருக்கின்றன. கண்ணன் பிறந்த மகிழ்ச்சியில் எண்ணெய் தேய்த்து நீராடியதை நெய்யாடினார் என்று சொல்வதாகக் கூறினாலும் பொருத்தமே.

இராக்காவல் முடிந்து வந்தார்கள் என்பது பெரியோர்கள் சொன்ன பொருள். அதிகாலையில் மாடு மேய்க்கச் செல்பவர்கள் கண்ணன் பிறந்த செய்தியைக் கேட்டு வந்து மகிழ்ந்து நெய்யாடினார்கள் என்றாலும் பொருத்தமே.

இங்கே அண்டர் என்று சொன்னது அண்டத்தில் வாழும் தேவர்களை என்றொரு கருத்தும் இருக்கிறது. ஆனால் இங்கே விளக்கியிருக்கும் செயல்களைச் செய்பவர்கள் இடையர்களாக இருக்கவே வாய்ப்புள்ளதாலும் முன்பின் வரும் பாசுரங்கள் இடைச்சேரியைப் பற்றியே பேசுவதாலும் அண்டர் என்றது ஆயர்களையே எனலாம்.

-------
பாசுரம் 6. 

கையும் காலும் நிமிர்த்துக் கடார நீர்
பையவாட்டிப் பசுஞ்சிறு மஞ்சளால்
ஐய நா வழித்தாளுக்கு அங்காந்திட
வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே


கண்ணனாகிய குழந்தையின் கையையும் காலையும் நீட்டி நிமிர்த்து, பெரிய பானையிலே நறுமணப்பொருட்களுடன் காய்ச்சப்பட்ட வெந்நீரைக் கொண்டு மென்மையாக குழந்தையை நீராட்டி, மென்மையான சிறிய மஞ்சள் கிழங்காலே குழந்தையின் நாக்கை வழிக்கும் போது அப்போது அங்காந்த (திறந்த, ஆ காட்டிய) திருவாயின் உள்ளே வையம் ஏழும் கண்டாள் யசோதைப் பிராட்டியார். ஆகா. என்ன விந்தை!

***

இன்றைக்கும் சிறு குழந்தையைக் குளிப்பாட்டும் போது தாய்மார்கள் கால்களை நீட்டி அமர்ந்து குழந்தையை முழந்தாள் மூட்டின் மேல் வைத்துக் குளிப்பாட்டுகிறார்கள். அப்போது குழந்தைக்கு சிறிதும் அதிர்ச்சி ஏற்படாத வண்ணம் சிறிதே வெம்மையான நீரை பையப் பைய ஊற்றி நீராட்டுகிறார்கள். அன்றைக்கும் அசோதைப் பிராட்டியார் தன் சிறு குழந்தையாம் இளஞ்சிங்கத்தை அப்படித் தான் நீராட்டியிருக்கிறாள். குழந்தையின் கையும் காலும் நன்கு செயல்படுவதற்காக அவற்றை நீட்டி நிமிர்த்துவதும் இன்றைக்கும் தாய்மார்கள் செய்வதே (சில இல்லங்களில் பாட்டிமார்கள் செய்கிறார்கள்). அப்படி கையும் காலும் நீட்டி நிமிர்த்திய பின் கடார நீரால் கண்ணக் குழந்தையை நீராட்டி அவனது நாக்கை வழிப்பதற்காக வாயை திறந்த போது அங்கே ஏழுலகையும் கண்டு வியந்து போனாள். ஐய என்ற சொல்லால் அந்த வியப்பைக் குறிக்கிறார் ஆழ்வார்.

மண்ணெடுத்து உண்டதால் அண்ணனால் தடுக்கப் பட்டு அன்னையால் ஆராயப்படும் போது வாயுள் ஏழுலகம் காட்டினான் என்றே இதுவரை படித்தும் கேட்டும் இருக்கிறோம். ஆழ்வார் அந்த நிகழ்வை இன்னும் விரைவாக்கி பிறந்த சில நாட்களிலேயே நடப்பதாகக் கூறுகிறார்.

-----
பாசுரம் 7. 

வாயுள் வையகம் கண்ட மடநல்லார்
ஆயர் புத்திரன் அல்லன் அருந்தெய்வம்
பாய சீருடைப் பண்புடைப் பாலகன்
மாயனென்று மகிழ்ந்தனர் மாதரே


கண்ணனின் திருவாயுனுள் எல்லா உலகங்களையும் கண்ட யசோதைப் பிராட்டியும் மற்ற ஆய்ச்சியர்களும் மிகவும் வியந்து 'ஆயர்களின் பிள்ளை இல்லை இவன். பெறுதற்கரிய தெய்வமே இவன். பரந்த புகழையும் சிறந்த பண்புகளையும் உடைய இந்த பாலகன் எல்லா உலகங்களையும் மயக்கும் அந்த மாயனே' என்று ஒருவருக்கொருவர் சொல்லி மகிழ்ந்தனர்.

***

கண்ணனுடைய திருவருளால் தெய்வீகக் கண் பெற்ற யசோதைப் பிராட்டியார் கண்ணனின் திருவாயுனுள் ஏழுகலங்களையும் கண்டு வியந்து மற்ற ஆய்ச்சியர்களையும் அழைத்துக் காண்பித்தாள். கண்ணன் அவர்களுக்கும் திருவருள் செய்து தெய்வீகக் கண்களைக் கொடுக்க அவர்களும் அவன் திருவாயுனுள் உலகங்களைக் கண்டு வியந்தனர். வியந்து 'இவன் இடைப்பிள்ளை இல்லை; ஏழுலகங்களையும் மயக்கும் மாயனே' என்று சொல்லி மகிழ்ந்தனர்.
---------

பாசுரம் 8. 

பத்து நாளும் கடந்த இரண்டாம் நாள்
எத்திசையும் சயமரம் கோடித்து
மத்தமாமலை தாங்கிய மைந்தனை
உத்தானம் செய்து உகந்தனர் ஆயரே


கண்ணன் பிறந்து பன்னிரண்டாம் நாள் அந்தக் குழந்தைக்கு பெயர்சூட்டு விழா நடக்கிறது. அந்தத் திருவிழாவிற்காக எல்லா திசைகளிலும் கொடிகளும் தோரணங்களும் தாங்கிய வெற்றித் தூண்கள் நடப்பட்டிருக்கின்றன. அந்தத் திருவிழாவில் யானைகள் நிறைந்த கோவர்ந்தன மலையைத் தாங்கிய மைந்தனாம் கோபாலனை கைத்தலங்களில் வைத்துக்கொண்டு மகிழ்ந்தனர் ஆயர்கள்.

***

குழந்தை பிறந்து பத்தாம் நாளிலோ பன்னிரண்டாம் நாளிலோ ஏதோ ஒரு நல்ல நாளில் பெயர் சூட வேண்டும் என்று சொல்கின்றன சாத்திரங்கள். அதனை ஒட்டி பன்னிரண்டாம் நாள் அன்று எல்லாத் திசைகளிலும் தோரணங்களையும் கொடிகளையும் நாட்டிக் கொண்டாடுகின்றனர் ஆயர்கள்.

இங்கே ஆயர்கள் என்றது ஆண் பெண் இருபாலரையும்.

தங்கள் கைகளில் வைத்துக் கொண்டாடினர் என்று சொன்னாலும் தகும். உத்தானம் என்று சொன்னதால் தலை மேல் குழந்தையைத் தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடினர் என்றாலும் சரியே.

கோவர்த்தன மலையைத் தூக்கிய நிகழ்ச்சி பிற்காலத்தில் நடந்திருந்தாலும் அந்த நிகழ்ச்சி நடந்ததற்கு பின்னர் வாழ்ந்தவர் ஆழ்வார் என்பதால் அதனை இங்கே நினைத்துக் கொண்டார் என்பதில் குறையில்லை. திருவாய்ப்பாடியில் நடந்ததை திருக்கோட்டியூருக்குக் கொண்டு வந்ததைப் போல் பின்னர் நடந்ததை முன்னரே நினைத்துக் கொண்டார் போலும்.
---
பாசுரம் 9. 

கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்
எடுத்துக் கொள்ளில் மருங்கை இறுத்திடும்
ஒடுக்கிப் புல்கில் உதரத்தே பாய்ந்திடும்
மிடுக்கிலாமையால் நான் மெலிந்தேன் நங்காய்


'கண்ணனைத் தொட்டிலில் உறங்குவதற்காக இட்டால் அந்தத் தொட்டில் கிழிந்து போகும்படி உதைக்கிறான். கையில் எடுத்துக் கொண்டாலோ இடுப்பை முறிக்கும் அளவிற்கு ஆடுகிறான். இறுக்கி அணைத்துக் கொண்டால் வயிற்றின் மேல் பாய்கிறான். தேவையான வலிமை இல்லாததால் நான் மிகவும் மெலிந்தேன் பெண்ணே' என்று யசோதைப் பிராட்டியார் தோழியிடம் முறையிடுகிறார்.

***

இங்கே மிடுக்கிலாமையால் என்றது யசோதையாகிய தன்னை என்றும் கிருஷ்ணக் குழந்தையை என்றும் இருவிதமாகப் பெரியோர்கள் பொருள் சொல்லியிருக்கிறார்கள். பிறந்து பன்னிரண்டே நாட்கள் பிஞ்சினைப் பற்றி கூறுவதால் குழந்தையின் மென்மையை மிடுக்கிலாமை என்றார். சிறிதே வளர்ந்த குழந்தையைப் பற்றி யசோதையார் கூறினார் என்றால் அது தன்னைக் கூறினார் என்னிலும் தகும். இன்றைக்கும் தமது குழவியரைப் பற்றி தாயர் இந்தக் குறையைக் கூறி மெச்சிக் கொள்வதைக் கேட்கிறோமே.

-----

பாசுரம் 10. 

செந்நெலார் வயல்சூழ் திருக்கோட்டியூர்
மன்னு நாரணன் நம்பி பிறந்தமை
மின்னு நூல் விட்டுசித்தன் விரித்தயிப்
பன்னுபாடவல்லார்க்கு இல்லை பாவமே

செந்நெல் ஆர்க்கும் வயல்கள் சூழ்ந்த திருக்கோட்டியூரில் நிலைத்து வாழும் எல்லா கல்யாண குணங்களும் நிரம்பிய நாராயணன் திருவாய்ப்பாடியில் பிறந்த சரிதத்தை திருமார்பில் முப்புரி நூல் மின்னும்படியாகத் திகழும் விஷ்ணுசித்தர் விவரித்துச் சொன்ன இந்தப் பாடல்களை மீண்டும் மீண்டும் பாடுபவர்களுக்கு இறைவனைச் சிந்திக்கவும் அடையவும் தடையாக நிற்கும் பாவங்கள் நீங்கும்.

***

செந்நெல் ஆர்க்கும் என்றதனால் இம்மைப்பயன்கள் குறைவின்றி விளங்குவதைக் காட்டினார். மன்னு என்று என்றும் நிலைத்து வாழ்வதைக் கூறியதால் அர்ச்சாவதாரத்தின் குறைவில்லாப் பெருங்குணத்தைக் காட்டினார். நாரணன் என்று சொன்னதால் எவ்விடத்தும் எவ்வுயிரிலும் வாழ்பவன் என்பதையும் எவ்விடமும் எவ்வுயிரும் தன்னுள் கொண்டவன் என்பதையும் கூறினார். நம்பி என்றதால் அர்ச்சாவதாரத்தில் மிக வெளிப்படையாக நிற்கும் பெருங்குணமான சௌலப்யத்தை / நீர்மையைக் காட்டினார். இல்லை பாவமே என்றதனால் கைங்கர்ய விரோதிகளான பாவங்கள் நீங்கினபடியைக் கூறினார்.
--------------

ஆடியோ தொகுத்து வழங்கியவர் 
ரேவதி ஜெயராமன்
மலேசியா

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!