ஸ்ரீமத் ராமானுஜரது திருநாம வைபவங்கள் மிகவும் சிறப்புடையன. 12 திருநாமங்களின் சிறப்புகளைக் காண்போம்:

01.இளையாழ்வார்:

 இளையாழ்வார் (ராமானுஜன்):   ராமானுஜரின் தாய்மாமாவான பெரிய திருமலை நம்பி குழந்தையின் லட்சணங்களைக் கண்டு இவர் ஸ்ரீ ராமனுக்கு எப்படி தம்பி  லக்குவனோ அதுபோன்று உலகம் உய்யப் பிறந்த உத்தம புருஷன் என எண்ணி "இளையாழ்வார்' என்று நாம கரணம் சூட்டினார்.   

02.யதிராஜர்:

 (துறவிகளின் அரசர்):   பகவத் ராமானுஜர் இல்லறவாழ்வைத் துறந்து சந்நியாசம் மேற்கொண்டார். காஞ்சி வரதராஜரே அவரை "வாரும் யதிராஜரே!' (யதி- துறவி, ராஜர்- அரசர்,  துறவிகளின் அரசர்) என்று அழைத்து மகிழ்ந்தார். 

03.உடையவர்:

 காஞ்சியிலிருந்து திருவரங்கம் வந்து திருவரங்கன் திருவடி தொழுதார். அப்போது, திருவரங்கன் திருவாய் மலர்ந்து கண்குளிர நோக்கி "வாரீர் எம் உடையவரே! இனி உபய விபூதி ஐஸ்வர்யமும் உமக்கே! இனி, நீர்! இங்கு நித்ய வாசம் செய்து கொண்டு நம் காரியத்தையும் ஸ்ரீ ரங்க ஸ்ரீயையும் வளர்த்து வாரும். உம்முடைய திருவடி மற்றும் திருமுடி சம்பந்தப்பட்ட அனைவருக்கும் மோட்சம் தந்தோம்' என்றார். அன்று முதல் பகவத் ராமானுஜர் உடையவர் என்று அழைக்கப்பட்டார். 

04.எம்பெருமானார்:

 ராமானுஜர் ஆசாரியரான திருக்கோஷ்டியூர் நம்பியிடம் 17 முறை சென்றார். 18 -ஆவது முறை "ஓம் நமோ நாராயணா'"என்ற திருமந்திரத்தின் பொருளை மற்ற யாருக்கும் இப்பொருளை வெளிப்படுத்தக் கூடாது என்று ஸ்ரீ ராமனுஜரிடம் சத்ய நம்பி சங்கல்பம் பெற்று ராமானுஜருக்கு ரகசியமாக ஒரு மந்திரத்தை உபதேசித்தார். 

திரு மந்திரத்தின் பொருளை பெற்ற ராமானுஜர் மிக்க உவகை கொண்டு யான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறட்டும் என்று எல்லோருக்கும் வாரி வழங்கினார்.  தனக்கு நரகம் கிடைத்தாலும் பரவாயில்லை என்று எண்ணினார். இதை பார்த்த திருக்கோஷ்டியூர் நம்பிகள்,  அடியேனுக்கு இப்படி ஒரு நல்ல எண்ணம் இதுவரை தோன்றவில்லையே என்று திகைத்தார். 

ராமனுஜரின் விரிந்த உள்ளத்தை எண்ணி,  அவரை வாரியணைத்து உச்சி முகர்ந்து , "வாரீர் எம்பெருமானாரே'என்றவாறு "அவரே நீர்?'என்று வினவினார். 

05.ஸ்ரீ பாஷ்யக்காரர்:

 ஸ்ரீமத் நாதமுனிகளின் திருப்பேரனார் ஸ்ரீஆளவந்தாரின் மூன்று மனோரதங்களில் ஒன்று ஸ்ரீ வேதவியாசர் அருளிச் செய்த பிரம்ம சூத்திரத்திற்கு விசிஷ்டாத்வைத சித்தாந்த முறையில் உரை செய்வது இதற்கு ஸ்ரீ போதாயன மஹரிஷி அருளிய போதாயன விருத்தி கிரந்தம், காஷ்மீர் தேசத்திலுள்ள ஸ்ரீசாரதா பீடத்தில் இருந்தது. 

வட தேச யாத்திரை சென்ற பகவத் ராமானுஜர் போதாயன விருத்தி கிரந்தத்தை பல சிரமங்களுக்கிடையே பெற்றார்,  ஸ்ரீரங்கம் திரும்பியதும் பகவத் ஸ்ரீராமானுஜர் பிரம்ம சூத்திரங்களுக்கு கூரத்தாழ்வான் உதவியுடன் பாஷ்யம் (விளக்க உரை) எழுதி கிடாம்பியாச்சான் என்பவரை தன் சீடராக நியமித்து காஷ்மீர் தேசத்திலுள்ள ஸ்ரீசாரதா பீடத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீசரஸ்வதிதேவியின் திருவடிகளில் சமர்ப்பித்து அங்கீகாரம் பெற ஏற்பாடு செய்தார்.

  ஸ்ரீ சரஸ்வதி தேவியும் மிக உகந்து விளக்க உரையை அங்கீகரிக்கும் பொருட்டு தன் முடி மேல் தாங்கி பகவத் ராமனுஜரை பாராட்டி ஸ்ரீ பாஷ்யக்காரர்”என்ற திருநாமம் சூட்டி தன்னிடம் உள்ள ஹயக்ரீவர்”விக்கிரகத்தையும் கொடுத்து கெளரவித்தாள். 

06.திருப்பாவைஜீயர் 

 திருப்பாவையில் பக்தி கொண்ட ராமானுஜர் மார்கழி மாதத்தில் ஒரு நாள் திருப்பாவையை பாடிக்கொண்டே வீதியில் வலம் வரும் போது தன் ஆசாரிய ஸ்ரீ பெரிய நம்பியின் வீட்டின் முன் வரும்போது அவருடைய பெண் அத்துழாயை பார்த்து மூர்ச்சித்து விழுந்தார். 

திடுக்கிட்ட அத்துழாய் தன் அப்பாவிடம் இதை கூறினாள். ராமனுஜரின் திருப்பாவையின் பிரேமையை மெச்சிய ஸ்ரீ பெரியநம்பிகள் "திருப்பாவை ஜீயரே' என்று விளித்து அகம் மகிழ்ந்தார். அன்று முதல் ராமானுஜர் திருப்பாவை ஜீயர் ஆனார். 

07.நம்கோயிலண்ணர்

   பகவத் ராமானுஜர் நாச்சியார் திருமொழி பாசுரங்களுக்கு வியாக்யானம் செய்த பொழுது "நாறு நறும் பொழில் மாலிருந்சோலை நம்பிக்கு'  என்ற பாசுரத்தின் பொருளை விளக்கினார். அதில், கோதை ஸ்ரீ ரங்கநாதன் தனக்கு மணாளனாக அமைந்தால் திருமாலிருஞ்சோலை ஸ்ரீ அழகர் பெருமாளுக்கு 100 தடா வெண்ணெயும் 100 தடா அக்காரஅடிசிலும் செய்து சமர்ப்பிப்பதாக வேண்டியிருந்தாள். 

ஆனால் சமர்பிக்கவில்லை; ராமானுஜர் அதை நிறைவேற்றினார். பின்பு ஸ்ரீ வில்லிபுத்தூர் சென்றார். கோயிலுக்குள் நுழைந்தபோது அர்ச்சா வடிவில் இருந்து ஆண்டாள், "என் கோயில் அண்ணாவே வாரும்' என்று அழைத்தார். தன்னை "அண்ணா' என்று அழைத்த ஆண்டாளுக்கு ஒரு சிம்மாசனம் சமர்ப்பித்தார் ராமானுஜர்.

 இன்றளவும் அர்த்த மண்டபத்தில் வைக்கப்பட்ட அந்த சிம்மாசனத்தில்தான் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரங்க மன்னார், ஸ்ரீ கருடர் எழுந்தருளி இருக்கின்றனர். ஆண்டாளின் அவதாரம் பகவத் ராமானுஜர் அவதாரத்திற்கு முன்னமே நிகழ்ந்தாலும், ஆண்டாளின் வாழித் திருநாமத்தில் வணங்குகிறோம். 

08.லட்சுமணமுனி

   திருக்கோட்டியூர் நம்பிகள் சில முக்கிய அர்த்த விசேஷங்களை பகவத் ராமனுஜருக்கு சொல்லும் படி திருவரங்கப் பெருமாள் அரையரிடம் வேண்டிக்கொண்டார். ராமனுஜரும் ஆசாரியரான திருவரங்கப்பெருமாள் அரையருக்கு பக்குவமாக பாலமுது காய்ச்சி கொடுத்து மேலும் பல தொண்டினை செய்து அவருக்கு உகப்பாக நடந்து கொண்டார். 

ஆறு மாத காலம் தொண்டு செய்து ஸ்ரீ ஆளவந்தார் அருளிய ஸ்தோத்திர ரத்னம் மற்றும் சதுஸ்லோகி ஆகியவற்றின் ஆழ்பொருளை அறிந்து கொண்டார். திருவரங்கப்பெருமாள் அரையர், எப்படி லட்சுமணன் அண்ணன் ஸ்ரீ ராமபிரானுக்கு சிறந்த தொண்டனாக தன்னலம் கருதாது இரவு பகல் பாராது செயல்பட்டாரோ, அது போல் நம் ராமனுஜரின் செயல்களும் உள்ளது என்ற நிலையால் "லட்சுமணமுனி'என்று திருநாமம் சூட்டி மகிழ்ந்தார். 

09.சடகோபன் பொன்னடி

 நம்மாழ்வரித்தும் அவர் அருளிச் செய்த திருவாய்மொழியிலும் ராமனுஜருக்கு அளவற்ற ஈடுபாடு. மாறன் அடி பணிந்து உய்ந்தவன் தம்மை "சடகோபன் பொன்னடி' என்றே அழைக்குமாறு வேண்டினார். 

10.குணம் திகழ் கொண்டல்

  திருவாய்மொழியின் மணம் தரும் இசை மன்னும் இடம் தோறும் புக்கு நிற்கும் "குணம் திகழ் கொண்டல்' என்று ராமானுஜ நூற்றந்தாதி எழுதிய திருவரங்கத்தமுதனார் ராமானுஜரை கொண்டாடுகிறார்.

11.ஜெகதாச்சாரியார்

  ராமானுஜர் காட்டிக் கொடுத்த பக்தி மார்க்கம் அனைவரும் அவரவர் தகுதிக்கும் அறிவுத்திறனுக்கும் தருந்தவாறு பின்பற்றக்கூடியதாக இருக்கிறது பண்டிதரும், பாரரும், பெண்களும், பாலகரும் பின்பற்றக்கூடியது. 

இதனால் இவர் எல்லாக்காலத்து மக்களுக்கும் பயன்படக்கூடிய பக்தி மார்க்கத்தைக் காட்டியருளியதால் உலகத்துக்கு வழிகாட்டி என்ற முறையில் "ஜெகதாசாரியார்' என்று போற்றப்படுகிறார். 

12.தேசிகேந்திரர்

  திருமலை வெங்கடேசப்பெருமாளால் ராமானுஜருக்கு வழங்கப்பட்டது. உலக மக்களை நல்வழி படுத்துபவர் என்பதால் "தேசிகேந்திரர்' எனப்படுகிறார்.

சொல்லுவோம் அவன் நாமங்களே

ஸ்ரீமதே ராமானுஜாய நமக