ஒரு பூரண மனித ஆயுளைப் பூர்த்தி செய்த மகான் ஸ்ரீராமானுஜர். அவ்வாறு 120 ஆண்டுகள் வாழ்ந்து ஆன்மிக சமுதாயக் கடமையாற்றிய அப்பெருமகனாரின் வாழ்க்கையை 20 வாக்கியங்களில் காண்போம்
ஸ்ரீராமானுஜரைப் பற்றிய ஒவ்வொரு வாக்கியமும் உடையவாராகவே முடிவது சிறப்புக்குரியது.
ஸ்ரீமதே ராமானுஜாய நம :
1. ஸ்ரீ பெரும்பூதூரை பிறப்பிடமாக உடையவர்.
2. ஆஸுரிகேசவாசார்யர் மற்றும் காந்திமதிதேவியை பெற்றோர்களாக உடையவர்.
3. சித்திரையில் ஆதிரை நாளில் அவதரித்த பெருமையை உடையவர்.
4. திருமலை நம்பியை மாதுலராக உடையவர்.
5. மாதுலரால் சூட்டப்பட்ட லக்ஷ்மணன் என்ற பெயரை உடையவர்.
6. பிற்காலத்தில் சூட்டப்பட்ட இளையாழ்வான், ராமானுஜர் என்ற பெயர்களை உடையவர்.
7. பதினாறு வயதிற்குள் நன்கு கசடறக்கற்றுக்கொண்ட வேத, வேதாங்க, சாஸ்திர கல்வியை உடையவர்.
8. நல்லார் பரவும் ராமானுஜன், கற்றார் காமுறு சீலன் என்று போற்றப்பட்ட பெருமையை உடையவர்.
9. வேதாந்த சாஸ்திரத்தை போதித்த யாதவபிரகாசரை குருவாக உடையவர்.
10. அனந்தனாம் ஆதிசேஷனின் அவதாரமாகப் போற்றப்படும் பெருமையை உடையவர்.
11. தன் சிறிய தாயாரின் மகன் கோவிந்தனை சிஷ்யனாக ஏற்று, எம்பார் என்னும் ஆசார்யனாக்கிய பெருமையை உடையவர்.
12. அன்பினால் பகை வென்ற அருஞ்செயல் வீரத்தை உடையவர்.
13. வேதாந்தம் பயிலும்போதே குருவுடன் வாதம் செய்து ப்ரம்மத்தின் உண்மை நிலையை உணர்த்தும் உபநிஷத் வாக்கியங்களுக்கு சரியான முறையில் அர்த்தம்
செய்த பெருமையை உடையவர்.
14. பூலகில் வைகுந்தம் காட்டிய வித்தகர் என்ற பெருமையை உடையவர்.
15. பூரண ஞானப் பொலிவை புறத்தே பொசிந்து காட்டும் வடிவழகை உடையவர்.
16. மண்ணுலகில் சாதனைகள் பல புரிந்த சரித்திரச் சான்றோன் என்ற புகழ் உடையவர்.
17. மேதா விலாஸத்தையும், தீக்ஷ்ணமான புத்தியையும் உடையவர்.
18. வாக்சாதூர்யம் உடையவர்.
19. வேதாந்த விஷய ஞானத்தில் தனக்குப் போட்டியாக அவதரித்தவன் என்றும், அத்வைத சித்தாந்தத்தை அசைக்கக்கூடியவன் என்றும், சாஸ்திர ஞானத்தில் தன்னையும் விஞ்சக்கூடியவன் என்றும், யாதவ பிரகாசரை அஞ்சச் செய்த பெருமை உடையவர்.
20. தன்னைக் கொல்லச் செய்த சூழ்ச்சியை அறிந்து நடுக்காட்டில் தப்பி வந்து தேவப் பெருமாளால் (காஞ்சி வரதர்) காஞ்சியில் சேர்க்கப்பட்ட அற்புதத்தை உடையவர்.