“வாழ்வில் திருப்பம் நிச்சயம்” என்று திருப்பதி தல தரிசனத்தைச் சொல்வார்கள். கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான திருமாலின் அற்புதமான திருத்தலம் இது. அவர், இந்தத் தலத்துக்கு வந்து அருள்பாலிப்பதும் கூட ஓர் உன்னதமான நிகழ்வுதான்!
🛕 திருப்பதி ஏழுமலையான் கோவில் / வெங்கடேஸ்வரா கோவில் நாட்டிலுள்ள மிகப்பழமையான புகழ் பெற்ற ஆன்மீக யாத்திரை ஸ்தலமாகும். இது திருவேங்கட மலையின் 7வது சிகரத்தில் வீற்றுள்ளது. புஷ்கரணி ஆற்றின் தெற்கே அமைந்துள்ள இந்த கோவில் முழுக்க முழுக்க பாரம்பரிய கோவிற்கலை கட்டுமான அம்சங்களுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
🛕 2.2 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த கோவிலின் உள்ளே 8 அடி உயர வெங்கடேஸ்வரர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஆனந்த நிலைய திவ்ய விமானம் எனும் தங்க பீடத்தின் மீது இந்த சிலை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த விக்கிரகத்தின் கண்களில் ஜொலிக்கும் மாணிக்க ரத்தினக்கற்கள் பொதிக்கப்பட்டுள்ளன.
🛕 கற்பூரம் மற்றும் குங்குமம் போன்றவையும் இவற்றோடு சேர்த்து பொதிக்கப்பட்டிருக்கிறது. ஏழுமலையானின் திருமேனிக்குப் பச்சைக் கற்பூரம் சாத்துகிறார்கள். பச்சைக் கற்பூரம் ஒரு வகை ரசாயனம் கலந்தது என்பதை அறிவோம். சாதாரண கற்களில் இதைத் தடவி வந்தால், காலப்போக்கில் அந்தக் கல்லில் வெடிப்பு விழும். ஆனால், ஏழுமலையானுக்கு வருடத்தில் 365 நாட்களும் பச்சைக் கற்பூரம் தடவுகிறார்கள்; எந்த பாதிப்பும் ஏற்பட்டதில்லை!
🛕 கடல் மட்டத்திலிருந்து சுமார் 3000 அடி உயரத்தில் இருப்பதால், எப்போதும் குளிர் நிறைந்திருக்கும் திருப்பதியில், அதற்கு நேர்மாறாக கருவறையில் ஓர் இயற்கை அற்புதம் உண்டு. “அதிகாலை குளிர்ந்த நீரால் அபிஷேகிக்கும்போதும் பெருமாளுக்கு வியர்க்குமாம். பீதாம்பரத்தால் அந்த வியர்வையை ஒற்றி எடுப்பார்கள். ஏழுமலையானின் திருமேனி எப்போதும் 110 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்துடன் இருக்கும்” என்கிறார்கள்.
🛕 அதுபோன்று ஒவ்வொரு வியாழக்கிழமையும், “ஏழுமலையானுக்கு அபிஷேகம் செய்வதற்கு முன்னதாக நகைகளைக் களைவார்கள். அப்போது ஏழுமலையானின் ஆபரணங்கள் கதகதப்புடன் இருப்பதை” உணரமுடியுமாம்!
🛕 திருப்பதி ஆலயத்திலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் சிலா தோரணம் என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இங்கு மட்டுமே காணப்படும் இந்தப் பாறைகளின் வயது 250 கோடி வருடம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஏழுமலையானின் திருமேனியும், இந்தப் பாறைகளும் ஒரே விதமானவை.
Tirupati Steps Route
🛕 திருமலைக்கு, திருப்பதி மலை அடிவாரத்தில் இருந்து நடந்து செல்ல இரண்டு விதமான பாதைகள் உள்ளன. அலிபிரி– அதாவது கீழ்த் திருப்பதிக்கு அருகில் உள்ள இந்த பாதையே நீண்ட நெடுநாட்களாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. “அகோபில மடத்தின் முதலாவது ஜீயர் சுவாமிகளான ஸ்ரீஆதிவண் சடகோப யதீந்த்ர மகா தேசிகன் என்னும் ஜீயர் ஸ்வாமிகளே திருமலைக்கு படிக்கட்டுகளை முதன் முதலில் அமைத்தவர்”.
ஸ்ரீவாரிமெட்டு வழி: திருப்பதிக்கு 20 கி.மீ தொலைவில் ஸ்ரீநிவாச மங்காபுரத்துக்கு அருகில் உள்ளது. பழங்காலத்தில் பெருமளவில் பயன்பாட்டில் இருந்து, சமீப வருடங்களில் திருப்பதி தேவஸ்தானத்தால் சீரமைக்கப்பட்டது. இந்த வழியை ஆந்திராவைச் சேர்ந்தவர்கள், கீழ் திருப்பதிக்கு அருகில் உள்ள ஊர்களில் உள்ளவர்கள் தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
🛕 ஐதீக ஆசாரங்களின்படி “வராஹ ஸ்வாமியை வணங்கிவிட்டு அதன் பின்னரே ஸ்ரீ வெங்கடேஸ்வரை தரிசிக்க வேண்டும்” எனும் நெறி கடைபிடிக்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
🛕 கிருஷ்ணாவதாரத்தை முடித்து பெருமாள் வைகுண்டத்தில் தங்கியிருந்தார். பூலோகத்தில் கலியுகம் தொடங்கி அநியாயங்கள் பெருகின. மீண்டும் இறைவன் பூமியில் அவதாரம் செய்ய வேண்டி, காஷ்யப முனிவர் தலைமையில் முனிவர்கள் யாகம் தொடங்கினர்.
🛕 யாகத்தை காண வந்த நாரதர், யாகத்தின் பலனை யாருக்குத் தரப் போகிறீர்கள்? என்று முனிவர்களைக் கேட்டார். பலனை சாந்தமான மூர்த்திக்கு தருவதென்று முடிவு செய்தனர். மும்மூர்த்திகளில் சாந்தமானவரை தேடி பிருகு வைகுண்டம் சென்றார். “திருமால், பிருகுமுனிவரை கண்டு கொள்ளாமல் இருக்கவே, அவர் மார்பில் எட்டி உதைத்தார். திருமால் கோபம் கொள்ளாமல் உதைத்த பாதத்தை தடவி கொடுத்தார். பொறுமையும், அமைதியும் நிறைந்த திருமாலுக்கே யாகபலனைத் தருவதென” முனிவர்கள் முடிவெடுத்தனர்.
🛕 மார்பில் உதைத்த பிருகு முனிவரைத் தண்டிக்கும்படி லட்சுமி சொல்ல, திருமால் மறுத்துவிட்டார். லட்சுமி கோபம் கொண்டு பாற்கடலில் இருந்து கிளம்பி, பூலோகத்தை அடைந்து தவத்தில் ஆழ்ந்தாள்.
🛕 திருமாலும் திருமகளைத் தேடி பூவுலகத்தைச் சுற்றி அலைந்து வேங்கடமலையில் வந்து ஒரு புற்றில் கண்மூடி அமர்ந்தார். அவருக்கு பசித்தது. இதுபற்றி, நாரதர் தவத்தில் இருந்த லட்சுமியிடம் சொன்னார். லட்சுமி வருத்தமடைந்தாள். நாரதர் அவளிடம் திருமாலின் பசியைப் போக்க உபாயம் சொன்னார்.
🛕 அதன்படி பிரம்மாவும், சிவனும் பசுவாகவும் கன்றாகவும் மாற, லட்சுமி தாயார் அவற்றின் எஜமானி போல் வேடமணிந்து, அப்போது அப்பகுதியை ஆட்சிசெய்த மன்னனிடம் விற்கச்சென்றாள். மன்னன் வாங்கிய பசு மேய்ச்சலுக்குச் செல்லும்போது திருமால் இருந்த புற்றுக்குச் சென்று பால் சொரிந்தது. பசுவினை மேய்த்த இடையன் பசுவின் பின்னால் சென்று புற்றில் பால் சொரிவதைக் கண்டான்.
🛕 கோடரியால் பசுவை அடிக்க முயன்றான். கோடரி தவறி புற்றுக்குள் இருந்த பெருமாளின் தலையில் பட்டு ரத்தம் சிந்தியது. தன் காயம் தீர மூலிகை தேடிச் சென்ற பெருமாள், ஆஸ்ரமம் ஒன்றினைக் கண்டார். அது வராஹ மூர்த்தியின் ஆஸ்ரமம்.
🛕 அங்கிருந்த வகுளாதேவி (முற்பிறவியில் கண்ணனின் அன்னை யசோதையாக பிறந்தவள்) தன் பிள்ளையான திருமாலின் முகத்தைக் கண்டவுடன் பாசத்தில் மூழ்கினாள். “திருமாலும் அன்புடன் வகுளாதேவியை அம்மா என்று அழைத்தார்”.
🛕 வகுளாதேவி தன் பிள்ளைக்கு சீனிவாசன் (செல்வம் பொருந்தியவன்) என்று பெயரிட்டாள். தன் பிள்ளையின் காயம் தீர மருந்திட்டு, பசிபோக்கிட கனிகளைத் தந்தாள். இந்நிலையில், சந்திரிகிரி என்ற பகுதியை ஆகாசராஜன் என்பவன் ஆண்டு வந்தான். பிள்ளை வரம் வேண்டி தன் குலகுரு சுகமாமுனிவரின் ஆலோசனைப்படி புத்திர காமேஷ்டி யாகம் செய்ய நல்ல நேரம் குறித்தான்.
🛕 யாகம் செய்யும் இடத்தை செம்மைப்படுத்தும் போது, பூமியில் புதைந்திருந்த பெட்டிக்குள் இருந்த தாமரையில், படுத்த நிலையில் ஒரு பெண் குழந்தை கிடைத்தது. தாமரைக்கு பத்மம் என்று பெயர் உண்டு. எனவே குழந்தைக்கு பத்மாவதி என்று பெயரிட்டான்.
🛕 “ராமாவதாரத்தின் போது வேதவதி என்னும் பக்தை, ராமனை மணாளனாக பெற வேண்டி தவம் செய்தாள். ராமனும் அவளிடம், பின்னாளில் அவளை மணம் செய்து கொள்வதாக வாக்குறுதி தந்தார். அதன்படியே வேதவதி பத்மாவதியாகப் பிறந்தாள்”. பிறந்து ஆகாச ராஜனின் மகளாக வளர்ந்து வந்தாள்.
🛕 சீனிவாசப் பெருமாளுக்கும், பத்மாவதிக்கும் திருமணம் இனிதே நடந்தது. அதன்பின் சீனிவாசப்பெருமாள் கலியுகம் முடியும் வரை திருமலையில் சிலாரூபமாக பக்தர்களுக்கு அருள் தரும் விதமாக திருமலையில் எழுந்தருளினார்.
🛕 சோழமன்னன் தொண்டைமான், தேவலோக சிற்பியான விஸ்வகர்மாவின் உதவியுடன் பெருமாளுக்கு கோயில் ஒன்றை எழுப்பினார். பத்மாவதி அலமேலுமங்காபுரத்தில் அருளாட்சி செய்கிறாள். சீனிவாசப் பெருமாள் தினமும் திருச்சானூர் வந்து தங்கிவிட்டு காலையில் திருமலைக்கு திரும்பி விடுவதாக ஐதீகம் நிலவுகிறது.
Tirumala 7 Hills Names in Tamil
- சேஷாத்திரி
- நீலாத்திரி
- கருடாத்திரி
- அஞ்சனாத்திரி
- வ்ருஷபாத்ரி
- நாராயணாத்ரி
- வேங்கடாத்ரி
🛕 ஆகிய ஏழுமலைகளுக்கும் அதிபதி என்பதால் பெருமாளுக்கு ஏழுமலையான் என்றொரு திருநாமம். சித்தூர் மாவட்டத்தில், கிழக்குத்தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது திருப்பதி. இந்த நகரத்தை ஒட்டியுள்ள திருவேங்கட மலையின் மீதுதான் ஏழுமலையான் கோவில் கொண்டிருக்கிறான்.